சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று கடலுக்கடியில் ஒளிந்து கொண்டபோது திருமால் பெரிய மீனாக உருவம் தாங்கி கடலுக்கடியில் சென்று அவனை சம்ஹாரம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின் அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி பெரிய கொக்கு வடிவமெடுத்து மீனின் கண்களை பிடுங்கி மீனின் செருக்கை அடக்கினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும் அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காணலாம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.