சிவ வடிவம் – 30. சரபேஸ்வர மூர்த்தி (சிம்ஹக்னமூர்த்தி)

இரண்ய கசிபு என்னும் அசுரன் சிவபெருமானிடம் அளவில்லா பக்தி கொண்டவன். அவன் ஒரு முறை அசுர குருவான சுக்ராச்சாரியாரின் யோசனைப்படி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். தவத்தில் மெச்சிய சிவபெருமான் அவனுக்கு காட்சிக் கொடுத்து என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அவன் ஐம்பூதங்களாலும் எந்த விதமான கருவிகளாலும் வானவர்கள் மனிதர்கள் பறவைகள் விலங்குகளாலும் இரவிலும் பகலிலும் வானத்திலும் நிலத்திலும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் என மேற்சொன்ன எவற்றினாலும் நான் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் கேட்டான். அவனின் தவத்தின் பலனாக சிவனும் அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்து அருளினார். இரண்ய கசிபு தான் பெற்ற வரத்தினால் மூவுலகினரையும் அச்சுறுத்தினான். தேவகன்னிகளை விசிறி வீசவும் இந்திரன் நான்முகன் போன்றோர் தினசரி வந்து தன்னை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் தன்னைத் தவிர மற்றவர்களை வணங்கக் கூடாது என்றும் ஆணையிட்டான். திருமாலை வெற்றி கொள்ள அவரை மூன்று லோகத்திலும் தேடிக் கொண்டிருந்தான். திருமாலோ அவனை அழிக்கும் காலம் வரும்வரையில் தனது மாயையினால் தன்னை மறைந்து நின்றார். அவனுக்கு பயந்து அனைவரும் இரண்யாய நமஹ என்று கூறினர்கள்.

இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதன் மட்டும் ஸ்ரீ நாராயணாய நமஹ என்றான். இதனால் ஆத்திரமடைந்த இரண்யன் பிரகலாதனுக்கு பலவித தொல்லைகளையும் கொலை முயற்சியும் செய்தான். அனைத்திலுமே நாராயணன் பிரகலாதனை காத்தருளினார். பிரகலாதன் சதாசர்வ காலமும் நாராயணனை பூஜிப்பதால் ஆத்திரம் அடைந்த இரண்யன் ஒருநாள் எங்கே இருக்கிறான் உன் நாராயணன்? என்றுக் கேட்டார். இதோ தூணில் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார் என்றான். இதோ இந்தத் தூணில் இருக்கிறாரா உன் நாராயணன் என்றபடியே தூணைப் பிளந்தான். பிளந்த தூணின் உள்ளிருந்து திருமால் நரசிம்ம அவதாரமெடுத்து தோன்றினார். பகலும் இல்லாமல் இரவும் இல்லாமல் சூரியன் மறையும் அந்தி நேரத்தில் மனிதனும் இல்லாமல் மிருகமும் அல்ல நரசிம்மமாகத் தோன்றி இரண்யனைக் கொன்றார். மேலும் நாராயண அவதாரமெடுத்த திருமால் அந்த நரசிம்ம ஆக்ரோசத்திலேயே இருந்தபடியால் இதனைக் கண்ட அனைவரும் பயந்தனர். அனைவரும் சிவனை பிரார்த்தனை செய்ய சிவபெருமான் இரு தலை இரு சிறகுகள் கூர்மையான நகம் எட்டுக் கால்கள் நீண்டவாலுடன் பேரிரைச்சலை உண்டு பண்ணியபடி சரப அவதாரம் எடுத்து நரசிம்மரை அணுகினார். இடிமுழக்கம் போல் கத்தியபடி நரசிம்மரின் மார்பின் மீது அமர்ந்தார். சிவனின் அருள் பட்டதும் நரசிம்மரிடம் இருந்த ஆக்ரோசம் தணிந்து சாந்தமடைந்தார். சிவபெருமானை வணங்கிய திருமால் வைகுண்டம் அடைந்தார். இரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மரின் ஆக்ரோசத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட காலமே சிம்ஹக்ன மூர்த்தியாகும். இவருக்கு நடுக்கந்தீர்த்த பெருமான் சிம்மக்ன மூர்த்தி சிம்ஹாரி நரசிம்ம சம்ஹாரர் சரபேஸ்வரர் சரபர் என பல பெயர்கள் உள்ளது.

சரபேஸ்வர வடிவத்தின் திருமேனி பொன்னிறமுடைய பறவையை போன்றது. இதன் கைகள் இரண்டும் மேல் நோக்கி இருக்கின்றன. சிவந்த இரு கண்கள் உண்டு. எட்டு கால்கள் உண்டு. விலங்கின் வாலைப் போன்ற வாலுடன் மனிதரைப் போன்ற உடலையும் சிம்மத்தின் தலையையும் மகுடத்தையும் பக்கத் தந்தங்களையும் உடையதாகவும் தன் இரு கால்களால் நரசிம்மரை தூக்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் திரு உருவம் உள்ளது. இந்த வடிவத்தை ஆகாச பைரவர் என்று உத்தர காமியாகமம் கூறுகிறது. சரபேஸ்வரருக்கு சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் முக்கண்களாய் உள்ளன. காளியும் துர்க்கையும் சரபேஸ்வரரின் இறக்கைகள் ஆகும். இவரின் இதயத்தில் பைரவரும் வயிற்றில் வடவாக்னியும் தலையில் கங்கையும் வீற்றிருக்க தொண்டையில் நரசிம்மர் இருப்பார் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இவர் பெருமைகளை விளக்கும் நூல்கள் பலவும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ளன.

முதலாம் குலோத்துங்களின் மகன் விக்ரமசோழனின் காலத்தில்தான் (கிபி 1118 – 1135) முதன்முதலாக இவ்வடிவம் சிற்பமாக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம் இராஜராஜன் கட்டிய ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோவிலில் ராஜகம்பீர மண்டபத்தில் உள்ள சரபேஸ்வரரின் திருவடியில் கூப்பிய கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். 3 ஆம் குலோத்தங்களின் காலத்தில் கட்டப்பட்ட திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவில் சரபேஸ்வருக்கு என தனியாக சன்னதி உண்டு. சென்னையில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலிலும் சென்னை வைத்தியநாதர் கோவிலிலும் சரபேஸ்வரின் திருவுருவங்கள் உண்டு. பெரியபாளையத்தில் உள்ள சிவாலயத்திலும் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் ஆலயம் முன் மண்டபத் தூண்களிலும் சரபேஸ்வரரின் திரு உருவங்கள் அழகுடன் காணப்படுகின்றன. காரைக்குடி சிவன் கோவிலில் திருவாசியுடன் கூடிய சரபேஸ்வரமூர்த்தியின் செப்புத் திருவுருவம் உள்ளது. சோழிங்கநல்லூர் பிரத்யங்கிராதேவி ஆலயத்தில் சரபேஸ்வரரின் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சிதம்பரத்தில் இறைவன் எதிரேயும் வெள்ளீஸ்வரர் திருக்கோவிலிலும் சரபேஸ்வரரின் திருவுருவம் உள்ளது. இது தவிர பல சிவாலயங்களில் சரபேஸ்வரருக்கு தனி சிவாலய சந்ந்திகள் உள்ளது. காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் நகரில் லிங்க உருவத்தில் சரபேஸ்வரர் உள்ளார். வேறு எங்கும் இவ்வாறு லிங்க சரபேஸ்வர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரணம் இத்திருவும் பற்றி சிறப்பாக கூறுகிறது. திருமாளிகைத்தேவர் நம்பியாண்டார் நம்பி சிவப்பிரகாசர் ஆகியோர் இவரைப் பற்றி பாடல்கள் பாடியிருக்கிறார்கள். வியாசர் இந்த மூர்த்தியை பரிகாரம் இல்லாத துன்பத்திற்கும் பரிகாரம் இல்லாத நோய்களுக்கும் விஷ பயம் மற்றும் பூத பிரேத உபாதைகள் ஆகியவை நீங்க இவரை வணங்கலாம் என்று கூறுகிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.