சிவ பூஜை செய்து பலனடைந்த துந்தூபி என்ற அரக்கனின் மகன் முண்டாசுரன். இவன் இளமையிலேயே சிவபெருமானை நோக்கி உணவு உறக்கமின்றி வெயில் மழை குளிர் என்று பார்க்காமல் ஐம்புலனையும் அடக்கி சிவபெருமானை மட்டுமே சிந்தையில் வைத்துக் கொண்டு தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தும்புருநாதர் இசைபாட பார்வதியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார். இறைவனை தம்பதி சமேதராய்க் கண்ட முண்டாசுரன் மகிழ்ந்து தங்களைத் தவிர தேவர்களாளோ மனிதர்களாளோ யாராலும் அழிக்க முடியாத வரம் கேட்டான். அவனின் தவப்பலனால் அவன் கேட்டபடி வரம் கொடுத்து மறைந்தார் சிவபெருமான். அவ்வரத்தினால் குபேரனின் சொத்துக்கள் அத்தனையையும் கொண்டு சென்றான். தேவர்கள் அவனுடன் போர் புரிந்து தோற்றனர். தேவர்கள் அனைவரையும் சிறை வைத்து துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பிரம்மாவை சரணடைந்தனர். பிரம்மா முண்டாசுரனை அழிக்கப் புறப்பட்டார். இருவருக்கும் கடும் போர் நடைபெற்றது. பிரம்மாவால் முண்டாசுரனை வெற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் பிரம்மா சிவபெருமானை வணங்கி முண்டாசுரனை அழித்து தேவர்கள் துயர் தீர்க்க உதவ வேண்டும் என்று சிவபெருமானை பிரார்த்தனை செய்தார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் தன்னிடமிருந்து தோற்றுவிக்கப்பட்ட வடுக மூர்த்தியை அனுப்பி முண்டாசுரனை அழிக்க உத்தரவிட்டார்.
வடுகமூர்த்தியும் அவ்விடம் சென்று முண்டாசுரனை ஒரு நொடியில் வதம் செய்தார். இதனைக் கண்ட பிரம்மா மனம் மகிழ்ந்தார். தேவர்கள் பூமாரிப் பொழிந்து வடுகமூர்த்தியை வாழ்த்தினார். பின்னர் வடுகமூர்த்தி தேவர்களை விடுவித்து அவரவர் இடத்தில் அமர்த்தி விட்டு சிவபெருமானிடம் சென்று ஐக்கியமானார். பிரம்மாவின் வேண்டுகோளிற்கேற்ப சிவபெருமான் முண்டாசுரனை அழிக்க எடுத்த ரூபமே வடுக மூர்த்தியாகும்.
பாண்டிச்சேரியில் வடுகூர் என்ற ஊரில் திருவாண்டார் கோயிலில் வடுகநாதர் அருள்பாலிக்கிறார். இவருக்கு வடுகீஸ்வரர் வடுகூர்நாதர் என்ற பெயரும் உள்ளது.