உனகோடி என்பதன் நேரடி பொருள் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு (9999999) என்று பொருளாகும். இது ஒரு வங்காள மொழிச் சொல் ஆகும். இது ஒரு பழமையான சைவத்தலமாகும். இங்கு பாறைகளில் புடைப்புச் சிற்பங்களும் கற்சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. இந்த சிற்ப உருவங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. ஒன்று பாறையில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்கள். இரண்டு கல் சிற்பங்கள். கல்லில் வெட்டப்பட்ட சிற்பங்களுக்கு மத்தியில் சிவனின் தலையும் பிரம்மாண்டமான விநாயகர் சிற்பமும் சிறப்பாக குறிப்பிடப்பிடத்தக்கன. கால பைரவர் என அழைக்கப்படும் இந்த சிவனின் சிலை சுமார் 30 அடியைவிட உயரமானதாக உள்ளது. இதில் கலை நயமிக்க சிவனின் தலை மட்டும் சுமார் 10 அடி உயரம் உள்ளது. சிவன் சிலையின் இருபக்கத்திலும் இரு பெண் தெய்வங்களின் முழு உருவங்கள் உள்ளன. அதில் ஒன்று சிங்கத்தின் மேல் அமர்ந்த துர்க்கை. அருகே நந்தி உருவமும் உள்ளது. நந்தி உருவம் அரைப்பகுதி தரையில் புதைந்துக் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு கல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த செதுக்கல்கள் அழகிய நிலப்பரப்பு வனப்பகுதியில் அமைந்துள்ளன சுற்றிலும் பசுமையான தாவரங்கள் உள்ளன. இது சிற்பங்களுக்கு அழகு சேர்க்கிறது. திரிபுரா மாநிலத்தில் உனகோடி அகர்தலாவில் இருந்து வடகிழக்கில் 178 கிமீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் உள்ள எல்லாச் சிற்பங்களும் குல்லு கம்ஹார் என்று சிற்பியால் வடிக்கப்பட்டவை. அவர் பார்வதியின் பக்தர். பார்வதியும் சிவபிரானும், சிவகணங்களுடன் இந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது தன்னையும் அழைத்துச் செல்லும்படி வேண்டினார் இந்தச் சிற்பி. ஈசனால் இதை ஏற்க முடியவில்லை. பக்தனின் கோரிக்கையை நிறைவேற்ற விரும்பிய அன்னை பக்தனுக்கு ஒரு நிபந்தனை விதித்தாள். இரவு முடிவதற்குள் ஒருகோடி உருவங்களைச் செதுக்கச் சொன்னாள். பார்வதியின் அருளால் விடிவதற்குள் கோடிக்கு ஒன்று குறைவாகவே சிற்பி செதுக்கி முடித்தார்.
இந்த சிற்பங்களுக்கு இன்னோரு புராண கதையும் சொல்லப்படுகிறது.
சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் காசிக்குச் செல்லும் வழியில் இந்த இடத்தில் இரவு தங்கினார். பின் அனைத்து தேவர்களையும் சூரியன் உதிக்கும் முன் எழுந்து காசிக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காலையில் சிவனைத் தவிர வேறு யாரும் சோம்பல் காரணமாக எழுந்திருக்கவில்லை. எனவே அனைவரையும் கற்களாக மாறும்படி சபித்து விட்டு காசிக்கு தானே தனியாக புறப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரபலமான அசோகாஷ்டமி மேளா என அழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பயணிகள் கலந்து கொள்ளும் திருவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.