ஆதிசேஷன்

ஆதிசேஷன் தான் குழந்தை செல்வத்தை பெற ஓர் முனிவரின் அறிவுறுத்தலின்படி மகா சிவராத்திரி நன்னாளில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய எண்ணினான். அதன்படி முதல் காலத்தில் கும்பகோணம் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகநாதசுவாமி திருக்கோவிலிலும் இரண்டாம் காலம் திருநாகேஸ்வரதிலும் மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரம் திருத்தலத்திலும் நான்காம் காலத்தில் நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமியை வழிபட்டு பின் தனியாக லிங்கப் பிரதிஷ்டை செய்து தீர்த்தம் அமைத்து வழிபட்டு வந்தார். இறைவனும் மனமிரங்கி ஆதிசேஷனுக்கு காட்சியளித்து பிள்ளை வரமளித்தார். நாகர்களின் குலம் செழிக்க காரணமான இந்த ஊருக்கு அவர்களது பெயராலே நாகப்பட்டிணம் என வழங்கலாயிற்று.

இறைவன் அருளால் ஆதிஷேசன் ஓர் பெண் குழந்தையை பெற்றார். அக்குழந்தை வளர்ந்து பருவம் எய்திய போது மூன்று தனங்களுடன் இருப்பதை அறிந்து மன வேதனை கொண்டு இறைவனிடம் முறையிட்டார். அப்போது அசரீரியாக ஆதிசேஷனே வருந்தாதே அப்பெண்ணிற்கு உரிய மணாளனே அவள் காணும் பொழுது மூன்றாவது ஸ்தனம் மறையும் என ஒலித்தது. ஆதிசேஷனின் மகளான நாககன்னிகை காயாரோகண சுவாமியையும் நீலாயதாட்சி அம்மனையும் நாள்தோறும் வழிபட்டு வந்தாள். ஒரு நாள் தேவ தீர்த்தக்கரையில் சோழர் குலத்தில் உதித்த அரசகுமாரன் சாலிசுகனை கண்டபோது அவள் மூன்றாவது தனம் மறையவே இவனே தனது மணாளன் என உணர்ந்து தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். சாலிசுகனை நாக லோகத்திற்கு வரவழைத்து தனது மகளுக்கு மணமுடித்துக் கொடுத்தார் ஆதிசேஷன். இடம்: காயாரோகணேசுவரர் கோவில் நாகப்பட்டிணம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.