சக்தி பீடத்தில் 20 ஆவது கோயில் திருக்கடையூர் அபிராமி கோயிலாகும். இவ்வூரின் புராண பெயர்கள் திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம். திருமால் முதலிய தேவர்கள் தூய்மையான இடத்தில் அமிர்தத்தை உண்ண வேண்டுமென்று அமிர்த குடத்தை இங்குக் கொண்டு வந்து வைத்தமையால் இத்தலம் கடபுரி அல்லது கடவூர் என்று பெயர் பெற்றது. இக்கோயில் கால சக்தி பீடமாகும். இக்கோயில் தமிழ் நாட்டில் திருக்கடையூரில் அமைந்துள்ளது. இங்கு மூல தெய்வமாக அபிராமியம்மன் அருளுகின்றாள். இவளுக்கு அபிராமி தேவி, அபிராமசுந்தாி, அபிராமநாயகி, அபிராமவல்லி, அபிநயசரசநாயகி, அபிநயசுந்தாி, அமுதகடேஸ்வாி, அமுதநாயகி, அமுதாதேவி, அழகியமுலைநாயகி இடையழகுசுந்தாி, அஞ்சுகமொழியாள், ரத்னதொடுடையாள், ரத்னாம்பிகை, சுகுந்தகுளாம்பிகை, சுகந்தினாவதி, சுகம்தந்தநாயகி, சுகுணாம்பிகை, சந்திரஜோதி, சந்திரஆா்த்தி, சந்திரசேகாி, ஞானசோரூபினி, கனிமொழியாள் என பல பெயர்கள் உள்ளது. தல விருட்சம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் என்ற ஜாதிமுல்லை. தீர்த்தம் அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம், சிவகங்கை, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம். பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் குகாம்பிகையாக அருள் பாலிக்கிறாள்.
இந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும் குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்கம். இளமை முதல் அபிராமி அம்பாளின் மேல் தனிப்பற்றும் பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தம் உள்ளத்தில் அன்னையிடம் தோன்றும் அன்பின் விளைவாக பல பாடல்களைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை கிரியை என்பவற்றைக் கடந்து யோக நிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று சஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளி மயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும் அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் பைத்தியமாய் ஆகி போய்விட்டார் என்று சொல்லித் திட்ட ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமல் அபிராமியைத் துதிப்பதும் பாடல்கள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர்.
தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வது அவரது தந்தையான அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். அக்காலத்தில் தஞ்சையைத் தலை நகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணி தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக் கடனை நிறைவு செய்தபின் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்ய என்று திருக்கடவூரை அடைந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சன்னதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும் தொழுவதும் கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேரானந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு ஆனந்தத்தில் இருந்தார். மன்னர் வந்திருப்பதும் அறியாமல் மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும் சிரித்துக் கொள்ளுவதும் அழுவதுமாய் இருக்கிறாரே என எண்ணி மன்னர் இவர் யாரெனக் கேட்டதும் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம் இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது? என்று கேட்டார். அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் சஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ ஆஹா இன்று பெளர்ணமி அல்லவோ? என்று சொல்லிவிட்டார்.
அபிராமி பட்டரைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். மன்னர் சரியாக கூறாத பட்டருக்கு அன்றிரவு பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும் இல்லாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னார். அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும் உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அபிராமி சன்னதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி அதில் விறகை அடுக்கி தீ மூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும் நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன் என்று சபதம் செய்து விட்டு அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். உதிக்கின்ற செங்கதிர் என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப்
பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே.
என்ற பாடலை பாடிய உடன் ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வான வீதியில் விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம் நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு என்றாள். அம்பிகை அருள் பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு தம் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970 களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அனுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை. இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அபிராமி அந்தாதி என்றப்பெயரில் வந்தன. அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு. ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப் பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப் பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் முதல் வரி உதிக்கின்ற என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கும் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது. அபிராமி பட்டர் இயற்றிய வேறு நூல் அபிராமி அம்மைப் பதிகம்.
அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும் போது வெளியில் மின் விளக்கினை எரியச் செய்கிறார்கள்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 47 வது தேவாரத்தலம் இத்தலம் ஆகும். மூலவர் அமிர்தகடேஸ்வரர் வேறு பெயர் அமிர்தலிங்கேசுவரர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். உற்சவர் காலசம்காரமூா்த்தி.
ஒருசமயம் பிரம்மதேவர் ஞான உபதேசம் பெறும் எண்ணத்தோடு கயிலாய மலை சென்றார். சிவபெருமானும் பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி அவரிடம் வில்வ விதைகளை அளித்தார். பூவுலகில் எந்த இடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) வில்வ மரம் வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் அளிப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி பிரம்ம தேவர் விதைத்த வில்வ விதை இத்தலத்தில் 24 நிமிடத்தில் மரமாக வளர்ந்தது. இங்கு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமானும் அவருக்கு அருட்காட்சி அளித்து ஞான உபதேசம் செய்து வைத்தார். கோயிலில் மூல மூர்த்தியாக சிவனே ஆதி வில்வநாதராக தனிசன்னநிதியில் அருள்பாலிக்கிறார். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் கிடைக்கப் பெற்ற தேவர்கள் மகிழ்ச்சியில் விநாயகப் பெருமானை தரிசிக்காமல் சென்றனர். இதில் கோபமடைந்த விநாயகர் அந்த அமிர்தக் கலசத்தை மறைத்து வைத்தார். தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அவரிடம் இருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்தக் கலசம் இருந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. அப்படி அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த அமிர்தத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும் முன் சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.
திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின் புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். அட்டவீரட்ட தலங்களில் இத்தலம் எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். முருகப் பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப் பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும். இந்த வினாயகர் துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம் கம்பீரம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரக பூஜைகள் இங்கு கால சம்கார மூர்த்திக்கே செய்யப்படுகிறது.
திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது 50 ஆம் திருமண விழா பூஜையும் 59 வயது பூர்த்தியாகி 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜையும் 60 வயது பூர்த்தியாகி 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜையும் 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜையும் 80 வயது பூர்த்தியாகி 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் 90 வயது பூர்த்தியாகி 91 வயது தொடங்குகிறவர்கள் கனகாபிஷேகம் பூஜையும் 100 வயது தொடங்குகிறவர்கள் பூர்ணாபிஷேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் இக்கோயிலில் செய்யப்படுகிறது. இந்த பூஜைகள் செய்பவர்கள் திதி நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. இந்த பூஜைகளை செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு வருகிறார்கள். மேலும் ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பூஜைகள் செய்யப்படுகிறது.
கௌசிக முனிவரின் மகனான மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது.
மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்ன காரணம் என்றுக் கேட்டான். பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாக கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகை அருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்க வரமளித்தார். பின் ஊர் திரும்பிய மார்க்கண்டேயன் அங்கும் தனது வழிபாட்டைத் தொடர்ந்து மகாமிருத்யுஞ்சய மந்திரத்தையும் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது 16 வது வயது ஆயுள் முடிவடையும் சமயத்தில் மார்க்கண்டேயன் திருக்கடவூர் சிவன் கோயிலுக்கு வந்து அங்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்தான் எமதூதன். மார்க்கண்டேயரின் பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும் எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. முடிவாக எமனே வந்தார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை உறுதியுடன் தழுவிக் கொண்டான். ஆனாலும் எமன் மார்க்கண்டேயனை இழுக்க மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. உடனே சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார். மார்க்கண்டேயனை நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார்.
எமன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை. தேவி ஈசனிடம் முறையிட கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும் திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன் ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும் மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். காலசம்ஹார மூர்த்தியை தரிசிக்கும் போது எமனை பார்க்க முடியாது. பூஜை செய்யும் போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி கையில் சூலத்துடன் காட்சி தருவதை சம்ஹார கோலம் ஆகும். எமனுடன் இருப்பது உயிர்ப்பித்த அனுக்கிர மூர்த்தி கோலம் ஆகும். ஆக பீடம் திறக்கும் போது ஒரே சமயத்தில் சம்ஹார மற்றும் அனுக்கிர மூர்த்தியை தரிசிக்கலாம். இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை சிறுமி வடிவில் இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.
மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக தினமும் காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன் திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்த போது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்தது. பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது. இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.
அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் தற்போதும் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும் போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின் போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச் சென்ற பாதாள குகை இருக்கிறது. மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வது தலமாகும்.
திருக்கடையூரில் இருந்து தென்மேற்கே சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள திருமணல்மேட்டில் மார்க்கண்டேயருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு மூல சன்னதியில் மார்க்கண்டேயர் சிலை உள்ளது. அந்த இடத்தில் மார்க்கண்டேயரின் பெற்றோர் மகன் பிறக்க வேண்டி கடவுளை வழிபட்ட கோவிலும் உள்ளது.
கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ மன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜதேவன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும் பாண்டிய மன்னர்களில் மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி, எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரதேவன், கோனேரின்மை கொண்டான், பெருமாள் சுந்தரபாண்டியன் என்போர் காலங்களிலும்; விஜயநகரவேந்தர்களில் கிருஷ்ணதேவமகாராயர், வீரவிருப்பண்ண உடையார் என்போர் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக் கல்வெட்டுக்களில் இறைவனது பெயர்கள் திருவீரட்டானத்துப் பெருமானடிகள், திருவீரட்டானமுடைய பரமசுவாமி, காலகாலதேவர் என்னும் பெயர்கள் கூறப்பட்டுள்ளது. இந்த மன்னர்கள் கோயிலுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதற்கு திருக்கடையூர் ரகசியம் என்று பெயர். இக்கோயிலை தற்போது தரும்புரம் ஆதினம் நிர்வாகித்து வருகிறார்கள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டரும் இங்குதான் அவதரித்தார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார். பிரம்மன் அகத்தியர் புலஸ்தியர் வாசுகி துர்க்கை பூமாதேவி முதலியோர் வழிபட்ட தலம் இது. இத்தலத்து முருகனை அருணகிரியார் தனது திருப்புகழ் பாடியிருக்கிறார். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.