சக்தி பீடம் 4. விசாலாட்சி – காசி

சக்தி பீடத்தில் 4 ஆவது கோயில் காசி விசாலாட்சி கோயிலாகும். இக்கோயில் இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் வாரணாசியில் கங்கைக் கரையில் உள்ள மீர்காட்டில் அமைந்துள்ளது. இக்கோயில் மணிகர்ணீகா சக்தி பீடமாகும். தேவியின் காதணி விழுந்த இடமாக இது கருதப்படுகிறது. சதி தேவியின் காதணி முத்து (மணி) போல இருந்ததால் மணிகர்ணீகா என்று பெயர் ஏற்பட்டது. மற்றோரு நூல் விசாலாட்சியின் மூன்று கண்களில் ஒன்று இங்கு விழுந்ததால் இது சக்தி பீடம் என்று கூறுகிறது. கோயிலில் உள்ள அம்பாளின் பெயர் விசாலாட்சி ஆகும். விசாலாட்சி என்றால் ஆகன்ற பெரிய கண்களைக் கொண்டவள் என்று பொருள். இந்தக் கண்ணால் பிரபஞ்சம் முழுவதையும் உணர முடியும் என்பதால் விசாலாட்சி என்று அழைக்கப்படுகிறாள். தற்போது உள்ள விசாலாட்சியின் கருஞ்சிலை 1970ஆம் ஆண்டு கோயிலை புணரமைக்கும் போது நிர்மாணிக்கப்பட்டது. சிலைக்கு வலது பக்கத்தில் தேவியின் உண்மையான சித்திரம் இடம் பெற்றுள்ளது. தேவியின் பிரதான கல் சிலைக்கு பின்னால் மற்றொரு சிலை உள்ளது. பண்டைய காலத்தில் இருந்து வழிபடப்பட்ட சிலை இதுவாகும். இச்சிலை வெள்ளியால் செய்யப்பட்டது என்று ஒரு கருத்து உள்ளது. ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலுக்குச் சென்ற போது ​​பல படையெடுப்புகளின் சுமைகளைத் தாங்கிய கோயிலில் சக்திகளை நிரப்ப பிரார்த்தனை செய்து ஒரு ஸ்ரீ யந்திரத்தை நிறுவினார்.

கோயிலில் தனி சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள் அன்னை விசாலாட்சி. சாந்த வடிவத்தோடு எட்டு திக்குகளிலும் பக்தர்களுக்கு அருள் புரியும் வகையில் அன்னை விசாலாட்சி மணி கர்ணிகா பீடத்தில் அழகுற அருள் பாலிக்கிறாள். நவராத்திரியின் போது 9 நாட்களும் நவ துர்க்கா வடிவில் தோன்றி அருள்பாலிக்கிறாள். இந்த முக்தி தலத்தில் வந்து இயற்கையாக உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும். ஆன்மா பிரியும் தருணம் அவர்களை விசாலாட்சி தன் மடி மீது கிடத்திக் கொள்கிறார். அப்போது விஸ்வநாதர் அவர்களது காதில் ஸ்ரீ இராம நாமத்தை உபதேசிக்கிறார். ஆகவே அந்த ஆன்மாவானது பிறவியில்லாத நிலையை பெறுகிறது. கங்கை கரையோரத்தில் நீராடுவதற்கென்று 64 படித்துறைகள் தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை தீர்த்தக் குளம், ஞான வாவி சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள் ஆகும். கங்கையில் நீராடினால் தேகமும் விஸ்வநாதரை தரிசித்தால் ஆன்மாவும் புனிதமடைகின்றன.

புனித தலங்களில் சிறப்பு மிக்கது உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள காசி புராதனமான நகரான இது. முக்தி தலம் என்றும் அழைக்கப்படுகிறது. காசிக்கு இன்னொரு பெயர் வாரணாசி. அசி நதியையும் வருணை நதியையும் தெற்கு வடக்கு எல்லையாகக் கொண்ட கங்கைக் கரை நகரம் என்பதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. புராண பெயர் பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம் ஆகும். வட இந்தியாவில் அயோத்யா, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகா ஆகிய ஏழு மோட்சபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வது காசி தலமாகும். 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான். கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும் திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும் துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி தலம் இருப்பதாக காசி ரகசியம் புராண நூல் கூறுகிறது. மகான்களான ஆதிசங்கரர் இராமனுஜர் குமரகுருபரர் முனிவர்கள் ஞானிகள் ரிஷிகள் தடம் பதித்த புனித பூமி. காசி என்றால் ஒளிநகரம் மற்றும் ஒளி மங்காத ஞானம் என்று பொருள். பிரளய காலத்தில் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்கிய பிறகும் இந்த நகரம் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சிவனை அழைக்காமல் தட்சன் யாகம் செய்த போது தாட்சாயிணி சிவனின் பேச்சை மீறி தந்தையை எதிர்த்தாள். அப்போது யாகத்தை நிறுத்த தீயில் மாய்ந்த தாட்சாயிணியைக் கண்டு சிவன் ஊழித்தாண்டம் ஆட திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி பார்வதி தேவியின் உடலை துண்டித்தார். அதில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு இடத்தில் சிதறி விழுந்தன. ஆவேசமடைந்த சிவன் பார்வதியின் உடல் பாகங்களைக் காசிக்கு கொண்டு வந்தார். அப்போது சிவன் பார்வதியின் காதில் தாரக மந்திரத்தை உபதேசம் செய்தார். அப்போது தேவியின் காதில் இருந்த காதணிகளைக் காணாத சிவபெருமானின் கண்களில் திருமால் தென்பட்டார். தமது சக்கரத்தால் கிணறு தோண்டி அருகே அமர்ந்து சிவனை நோக்கி தரிசனம் செய்தார். அவரிடம் சென்று அம்பிகையின் காதணியைக் கேட்க அவர் அருகில் இருந்த கிணற்றைக் கை காண்பித்தார். சிவன் கிணறை எட்டிப்பார்க்க அச்சமயம் சிவனின் காதுகளில் இருந்த குண்டலமும் விழுந்தது. அப்போது கிணற்றில் பிரகாசமான பேரொளியுடன் வெளிப்பட்ட சிவலிங்கத்தில் சக்தி சிவன் இருவரது சக்தியும் ஐக்கியமாக இருந்தது. அந்த ஜோதிர் லிங்கத்தை எடுத்து திருமால் வழிபட்டதோடு தொடர்ந்து சிவனை நோக்கி தவமிருந்து இந்த ஜோதிர் லிங்கத்தை மக்கள் வழிபட வேண்டும் என்றும் சிவனது பிறையில் குடிகொண்டிருக்கும் கங்கை இந்த லிங்கத்தை அபிஷேகம் செய்து இங்கு நீராடும் மக்களின் பாவங்களைப் போக்க வேண்டும் என்றும் வேண்டினார். சிவபெருமானும் திருமாலின் விருப்பத்துக்கு இணங்க அந்த ஜோதிர் லிங்கத்தில் ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு தரிசனம் தந்துகொண்டிருக்கிறார்.

காசி நகரத்தில் வசிக்கும் மனிதர்கள் மட்டுமல்ல அங்கு வசிக்கும் அனைத்து ஜீவன்களும் புண்ணியம் செய்தவையே. இங்கு நாய்கள் குரைப்பதில்லை. பல்லிகள் சத்தம் எழுப்புவதில்லை. மாடுகள் யாரையும் முட்டுவதில்லை. மேலும் பூக்கள் மணப்பதில்லை. எரிக்கப்படும் பிணங்களின் இருந்து கெட்ட நாற்றம் வருவதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர் ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் நின்றார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அதைக் கண்டதும் என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக் கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்றும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

காசி நகரம் வேதகாலம் புராண காலத்துக்கு முந்தையது. சூரியனின் புதல்வரான சனிபகவான் சிவனை நினைத்து தவம் செய்து நவக்கிரகங்களில் ஒரு வராகவும் மற்றொரு புதல்வர் எமதர்மர் எம்பெருமானை நோக்கி தவம் செய்து எமலோகத்துக்கு அதிபதியாகவும் ஆயினர். பிரம்மதேவன் இத்தலத்தில் யாகம் செய்து பிரம்ம பதவியைப் பெற்றார். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலமாக கூறப்படுகிறது. பல ஞானிகளும் யோகிகளும் சப்த ரிஷிகளும் இங்கு தவம் புரிந்து பல பேறுகளை அடைந்திருப்பதால் சொல்லில் அடங்கா சிறப்புகளைப் பெற்றது. காசி சேத்திரத்தில் பார்வை படும் இடமெல்லாம் லிங்க ஸ்வரூபம் காணப்படும். தரையில் பல இடங்களில் லிங்க ஸ்வரூபம் இருப்பதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் காசி நகரத்தில் மலஜலம் கழிக்க நகருக்கு வெளியே செல்வார். காஞ்சி மகாபெரியவர் காசியில் வசிக்கும் காலங்களில் காலில் பாதுகையே அணிய மாட்டார்.

சக்தி பீடமாக திகழும் அன்னை விசாலாட்சி கோயில் தென்னிந்திய பாணியில் அழகுற கட்டப்பட்டுள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கிபி 1893 இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள் கிபி1908இல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. தீபாவளியின் போது மட்டும் இரண்டு நாள்களுக்கு நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் உள்ள சுவர்ண உற்சவ விசாலாட்சி அம்மன் தரிசனத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுகின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.