சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும். தேவி பாகவதம் என்ற நூல் அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும் அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்று கூறுகிறது. ஆனால் தந்திர சூடாமணியில் 51 சக்தி பீடங்கள் என்று உள்ளது. இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 51 சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும் 18 சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும் 4 சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியா விட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி. 1. அஸ்ஸாம் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில் 2. கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில் 3. ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில் 4. ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி ஆகிய நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும். எந்த சக்தி பீடத்திற்குச் சென்றாலும் அங்குள்ள பைரவரையும் வணங்க வேண்டும் என்பதும் ஒரு நியதியாகும். ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் (தாட்சாயிணியின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்களே சக்தி பீடமாகும்.
பிரம்மாவின் புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து சிவபெருமானிடம் பிரஜாபதி பட்டத்துடன் ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும் வரமாகப் பெற்றான். மேலும் உலகத்திற்கே தாயான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான். தன்னுடைய வரத்தின் பயனால் எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட தானே ஈஸ்வரன் என்று தட்சன் எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான். ஹரித்வாரில் அமைந்துள்ள கனகல் என்னும் தலத்தில் யாகம் தொடங்கப்பட்டது. தனது தந்தையான தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணிய தாட்சாயிணி யாக சாலையில் தோன்றி அறிவுரை கூறினாள். தட்சனோ தாட்சாயிணியை அவமதித்ததோடு ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயில் குதித்து யாகத்தை நிறுத்தி தன் உயிரை விட்டாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில் சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை சுமந்த படி ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் தன் ஆட்டத்தை நிறுத்தினார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின.
சனத்குமாரர்கள் எட்டு பேர் சதாசிவனை நோக்கித் தவம் செய்தனர். அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் ரிஷபாரூடராகத் தோன்றினார். ஆனாலும் ஆழ்ந்த தியானத்திலிருந்து சனத்குமாரர்கள் கண் விழித்துப் பார்க்கவில்லை. அவர்களை எழுப்ப சிவன் தன் கையிலுள்ள டமருகத்தை (உடுக்கை) வேகமாய் அடித்தார். உடுக்கையின் சத்தத்தில் சனத்குமாரர்கள் கண் விழித்துச் சிவனடி பணிந்தனர். இதனைச் சிவமகா புராணம் சொல்கிறது. அந்த உடுக்கையிலிருந்து டம்டம் என்று எழுந்த நாதமே 51 அட்சர எழுத்துக்களாயின. இவை 51 இடங்களில் எரி நட்சத்திரம் போல் தெறித்து விழுந்தன. இந்த 51 அட்சர எழுத்துக்கள் விழுந்த இடங்களிலேயே தேவியின் உடல் பகுதிகள் விழுந்தன. ஆகவே இவற்றிற்கு 51 அட்சர சக்தி பீடங்கள் என்று பெயர் வந்தது. இந்த அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் என்னும் நூல் கூறுகிறது. நித்யோத்சவம் வாமகேஸ்வர தந்த்ரம் போன்ற நூல்களும் சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகின்றன.
- தேவி பாகவதம் கந்த புராணம் பத்ம புராணம் ஆகிய நூல்களில் அம்பாளுக்கு 70 முதல் 108 வரை சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
- வேதவியாசரின் தேவிபாகவதம் 108 சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.
- காளிகா புராணம் நான்கு ஆதி சக்தி பீடங்கள் இருப்பதாகக் கூறுகிறது.
- ஆதி சங்கராச்சாரியாரின் அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரம் 18 மஹா சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.
- தந்திர சூடாமணி என்ற நூல் 51 அட்சர சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது. 52 என்று கூறுபவர்களும் உண்டு.
- லலிதா ஸகஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும் பீடங்களும் அங்க தேவதைகளும் என்ற பகுதியில் சக்தி பீடங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.
- மார்க்கண்டேய புராணமும் திருவிளையாடல் புராணமும் 64 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த 64 பீடங்களும் தேவி பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
எத்தனை சக்தி பீடங்கள் உள்ளன என்பதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளது போலவே எது சக்தி பீடம் என்பதிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் சந்தேகங்களும் உள்ளன. உதாரணமாக தந்த்ர சூடாமணியில் இரண்டாவதாகக் கூறப்படும் சர்க்கரரா பீடம் கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவிலா அல்லது பாகிஸ்தானின் சிவஹர்கரையிலுள்ள கோவிலா என்ற சந்தேகம் உள்ளது. இரண்டில் ஒன்றை மட்டும் சக்தி பீடமாகக் கொள்ளாமல் இரண்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. சக்தி பீடம் என்பதற்கான பெரும்பான்மை ஆதாரம் கொண்ட கோவிலை முதலாவதாகவும் மிகக் குறைந்த ஆதாரங்களைக் கொண்ட கோவிலைக் கடைசியாகவும் வரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன்படி சர்க்கரரா பீடத்திற்கு கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில் முதன்மையானதாகவும் சிவஹர்கரை இரண்டாம் பட்சமாகவும் தரப்பட்டுள்ளது. எந்த சந்தேகமும் இல்லாமல் இது சக்தி பீடம்தான் என்று உறுதியாகக் கூறப்படும் கோவில்கள் மிகச் சிலவே. அவற்றில் முதன்மையானது மற்றும் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப்படும் தலம் அஸ்ஸாமின் காமாக்யா கோவிலாகும். இந்தக் குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களுக்கான மூன்று முக்கியக் காரணங்கள் 1. உள்ளூர் மக்கள் தங்கள் பகுதியிலுள்ள சக்தித் தலங்கள் மீது கொண்ட பக்தியும் ஈடுபாடும் 2. நாளடைவில் பெருகிய சக்தித் தலங்களும் கலாச்சார மாற்றங்களும் 3. புராணங்கள் மற்றும் தந்திர சூடாமணியில் உள்ள பழைய புராதனப் பெயர்களுக்கும் தற்போதுள்ள பெயர்களுக்கும் உள்ள மாறுதலும் வேறுபாடுகளும். மேலும் சில கோயில்கள் உப சக்தி பீடங்களாக கருதப்படுகிறது. உப பீடங்கள் என்பவை மேற்கண்ட எந்த வகைப்பாட்டிலும் வராத சக்தி பீடங்களாகும்.
51 சக்தி பீடங்கள்
- மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்) கர்நாடகா
- காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்) தமிழ்நாடு
- மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
- விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்) உத்திரபிரதேசம்.
- சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்) மத்தியபிரதேசம்.
- பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்) தமிழ்நாடு
- அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்) தமிழ்நாடு
- அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்) தமிழ்நாடு
- கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்) தமிழ்நாடு
- பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்) தமிழ்நாடு
- மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்) மத்தியபிரதேசம்
- மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்) தமிழ்நாடு
- வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்) காஷ்மீர்
- நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்) மிர்ஜாப்பூர்
- பிரம்மராம்பாள்-ஸ்ரீசைலம்-(சைல பீடம்) ஆந்திரா
- மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்) இமாசலபிரதேஷ்
- ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்) ஆந்திரா
- காமாக்யா-கவுஹாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
- சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
- அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்) தமிழ்நாடு
- பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்) கேரளா
- மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீர பீடம்) மகாராஷ்டிரம்
- ஸ்தாணுபிரியை-குருக்ஷேத்ரம்-(உபதேச பீடம்) ஹரியானா
- மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
- பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
- பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
- மாணிக்காம்பாள்-திராக்ஷராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
- அம்பாஜி-துவாரகை-பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
- பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்) தமிழ்நாடு
- முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
- லலிதா-ஈங்கோய் மலை குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
- காயத்ரி-அஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரி பீடம்) ராஜஸ்தான்
- சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
- விமலை, உலகநாயகி-பாபநாசம்-(விமலை பீடம்) தமிழ்நாடு
- காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்) தமிழ்நாடு
- பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்) தமிழ்நாடு
- தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்) தமிழ்நாடு
- திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷி பீடம்) தமிழ்நாடு
- மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்) தமிழ்நாடு
- நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாண பீடம்) இமாசல பிரதேசம்
- திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
- திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோண பீடம்) மகாராஷ்டிரம்
- சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
- ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
- நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
- பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
- பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
- மந்த்ரிணி-கயை-(திரிவேணி பீடம்) பீகார்
- பத்ரகர்ணி-கோகர்ணம்-(கர்ண பீடம்) கர்நாடகா
- விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்-(விரஜா பீடம்) உத்திரபிரதேசம்
- தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாக பீடம்) திபெத்