ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 3

கேள்வி: விராலி மலையில் மயில் தரிசனம்?

பதில்: மயிலை கனவில் கண்டாலே புண்ணியம். நனவில் கண்டால் அதை விட புண்ணியம். ஆனால் மனிதன் கண்ணில் மயில் பட்டால் மயிலுக்குத் தான் பாவம்.

கேள்வி: ஐயனே சம்பளத்தில் ஒரு 10% தானத்திற்கு கொடுத்தால் போதுமா?

பதில்: அப்படி என்றால் கர்மவினையும் 10% தான் குறையும் போதுமா?

கருத்து : இதற்கு பொருள் என்னவென்றால் வருமானத்தில் சதவீதம் பார்த்து தானம் செய்யவதை விட தேவைப் படுபவர்களுக்கு தேவையானதை சரியான நேரத்தில் எதிர்பார்ப்பில்லாமல் தானம் செய்வதே சரியானது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 2

குருநாதா உலகம் அழியப் போகிறது என்று பலர் கூறுகிறார்களே?

இறை அருளால் இந்த நொடி வரை சிறைச் சாலையை மூடுவதாக இறைக்கு எந்த எண்ணமும் எமக்கு தெரிந்தவரை இல்லையப்பா. ஒரு வேளை பூலோகத்தில் உள்ள அனைத்தும் ஆத்மாவும் நல்லவர்களாக மாறிவிட்டால் அப்படி ஒரு நிகழ்வு நிகழலாம். உலகம் முழுவதும் எப்போதும் அழியாதப்பா. சில பகுதிகள் முற்றிலும் மறைந்து விடக்கூடிய சூழல் உண்டாகுமே அன்றி மொத்த உலகமும் முற்றில அழிந்து போகாதப்பா.

நாக்கு

குரு ஒருவர் தன் குருகுலத்தில் தனக்கு தெரிந்த கலைகள் அனைத்தையும் மாணாக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். குரு குலத்தில் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் ஒரு நாள் பேச அழைத்தார். உங்களில் ஒருவரை தலைமை சீடனாக அறிவிக்கப் போகிறேன். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு எனக்கு தெரிந்த மேலும் பல சூட்சுமமான கலைகளை சொல்லிக் கொடுப்பேன். அதற்கான தகுதி உங்களில் யாருக்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக 2 பரீட்சை வைக்கப் போகிறேன் என்று கூறி முதல் போட்டியை அறிவித்தார். உங்களுக்கு தெரிந்த உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள் என்று அறிவித்தார். மறு நாள் அனைவரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தார்கள். ஒருவன் தேனைக் கொண்டு வந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிப்பான பொருளைக் கொண்டு வந்திருந்தார்கள். இறுதியாக வந்த ஒரு சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான். அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது. அதை பார்த்த குரு என்ன இது எதற்காக இதை இங்கே கொண்டு வந்தாய். இதுவா உனக்கு தெரிந்த இனிமையான பொருள் என்று கேட்டார். அனைவரும் இந்த சீடனைப் பார்த்து சிரித்தார்கள். சீடன் குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டு வர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏதுவும் எனக்கு தெரியவில்லை. மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் மனிதனுடைய நாக்கின் குறியீடாக ஆட்டின் நாக்கை கொண்டு வந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்கள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் மகிழ்ச்சி அடைகிறான். கோபத்தில் இருப்பவனும் சாந்தமடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான் என்றான். சீடனின் பதிலில் திருப்தி அடைந்த குரு இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள் என்று கூறினார். மாணவர்கள் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டார்கள்.

குரு உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வாருங்கள் என்று கூறினார். மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தார்கள். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான் இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். இறுதியாக இந்த சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி இருந்தது. அதை திறந்து காட்டினான். அதே ஆட்டின் நாக்கு இருந்தது. இதனைக் கண்ட குரு என்ன இது இனிமையான பொருளை கேட்டேன் நேற்று காட்டிய அதே நாக்கை மீண்டும் கொண்டு வந்திருக்கிறாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாக்கை கொண்டு வந்திருக்கிறாயே இதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். சுற்றி இருந்த மாணவர்கள் மீண்டும் சிரித்தார்கள். சீடன் அமைதியாக பதில் சொல்ல ஆரம்பித்தான் தீய சொற்களை பேசும் நாக்கை போல கசப்பான பொருள் உலகில் எனக்கு தெரிந்து இல்லை அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாக்கு தான் உலகிலேயே கசப்பான பொருள் என்று கூறினான். சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தலைமை சீடனாக அறிவித்து தனக்கு தெரிந்த சூட்சுமமான கலைகளை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.

நாக்கு சொர்கத்தின் திறவு கோலும் அது தான். நரகத்தின் வாசல் படியும் அது தான்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 1

கிளி ஜோதிடம் பற்றி

இதனை நம்ப வேண்டாமப்பா. ஆறு அறிவுக்கு ஐந்து அறிவா ஆருடம் சொல்வது? யோசிக்க வேண்டும். அது போன்ற ஜோதிடத்தை உன்னிப்பாக கவனித்தால் அந்த மனிதனின் கை விரல்கள் எவ்வாறு அசைகிறதோ அதற்கு ஏற்ப தான் அந்த பறவை செயல்படும். எனவே அவன் விரலை ஒரு விதமாக சைகை செய்வான். அதற்கு ஏற்ப தான் அந்த பறவை நடந்து கொள்ளும். என்றாலும் இந்த கிளி ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த நிலையில் இருந்தது என்பது உண்மை. தற்காலத்தில் இது வெறும் வயிற்று பிழைப்பு என்பதால் இவற்றை முற்றிலும் ஓரம் கட்டுவது நல்லது.

இது போன்று தான் ஆங்காங்கே இறைவன் வாக்கு சொல்கிறான். அம்பாள் வந்து வாக்கு சொல்கிறாள் என்பது எல்லாம். இது சுத்த வயிற்று பிழைப்பு. எனவே பிழைப்பு என்ற வகையிலே அந்த மனிதன் பிழைத்து விட்டு போகட்டும். சாதரணமாக இது போன்ற வாக்குகளிலே பெரிய அளவிலே பாதிப்பு இல்லாத வரையில் எந்த பிரச்சனையும் இல்லை. இது போன்றவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் தர வேண்டாம்.

ஜடபரதன்

பரதன் என்ற ஒரு நாட்டு அரசன் காட்டில் தவ வாழ்வு மேற்கொள்ள நாட்டைத் துறந்தான். தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நிறைமாத கர்பிணியாய் இருக்கும் மான் ஒன்று ஆற்றில் நீர் அருந்துவதை பார்க்கிறார். மான் அதன் தாகம் தீர்ந்தவுடன் கரையேற முற்படும் போது ஒரு சிங்கத்தின் கர்ஜனையை கேட்டது. மானுக்கு குலை நடுங்கி விட்டது. இதனால் தண்ணீருக்குள்ளேயை தன் குட்டியை ஈன்றது. அந்த மான் குட்டி ஆற்றின் நீரிலேயே விழுந்து மிதந்து போனது. தன் கண்ணெதிரே கன்று மிதந்து போவதை பார்த்து தாய் மான் கலங்கி உருகி வருந்தியது. சிங்கம் மானை துரத்த ஆரம்பிக்க சிங்கத்திடம் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் காட்டிற்குள் ஓடி விட்டது. நீரில் சென்ற குட்டி மானை பார்த்த பரதன் அதன் மீது ஈரக்கம் கொண்டு அதனை காப்பாற்றி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தார். ஆசிரமத்தின் அருகாமையில் இருந்த இளம்புற்களை மேய்ந்து கொண்டும் புலியைக் கண்டால் பயந்து ஆசிரமத்துக்கு ஓடி வந்து ஒளிந்து கொண்டும் காலையில் புறப்பட்டு மேய்ந்து விட்டு மாலையில் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து தங்கிக் கொண்டும் அந்த மான் வளர்ந்து வந்தது. அந்த மான் ஓடி விளையாடுவதைக் கண்ட பரதரின் மனம் மானின் மீது பற்றும் பாசமும் உண்டானது. ராஜ்யம் மக்கள் முதலிய பந்த பாசங்களை விட்டு தவம் செய்ய வந்த பரதன் மான் மீது மிகவும் அபிமானம் கொண்டிருந்தார். மாலை தனது இருப்பிடம் மான் வரவில்லை என்றால் நம்முடைய மான்குட்டியைக் காணவில்லையே? அதைச் புலி அடித்து சாப்பிட்டு விட்டதோ சிங்கம் அடித்து சாப்பிட்டு விட்டதோ இன்னமும் வரவில்லையே? என்ன செய்வேன்? என்று வருந்துவார். மான் குட்டி மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் வரை அதன் நினைவாகவே இருந்து தவவாழ்வினை மறந்தார். இந்நிலையில் அவருக்கு மரண காலமும் நெருங்கியது.

பரதனை அவரது அன்பு மகன் பார்ப்பதைப் போல அந்த மான் குட்டியானது கண்ணில் கண்ணீர் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தது. அதுபோலவே பிரியமான மகனைத் தந்தை பார்ப்பது போல பரதரும் கண்ணீர் ததும்ப மான்குட்டியைப் பார்த்துக் கொண்டே தன் உடலை விட்டார். அதனால் மறுபிறவியில் அவர் கங்கைக் கரையில் ஒரு மானாகப் பிறந்தார். ஆனாலும் தன் தவத்தின் பயனால் பூர்வ ஜன்ம ஞானமுடையவராக இருந்தார். மான் மீது வைத்த பற்றினால் தன்னுடைய தவ வாழ்க்கையை இழந்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்ட அவர் தான் முன்பு வாழ்ந்த இடத்திற்கு வந்து அங்குள்ள உலர்ந்த புற்களையும் சருகுகளையும் தின்று மானாகப் பிறக்க காரணமான கர்மங்களைக் கழித்து அங்கேயே மரணமடைந்தார். பிறகு அந்த ஊரிலேயே பிராமணர் குலத்திலே பூர்வ ஜன்ம வாசனையோடு பிறந்தார். பூர்வ புண்ய ஞானத்தால் சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்ந்தவராய் எல்லாவிதமான ஞானத்திலும் தேர்ச்சி பெற்றார். ஆத்ம ஞானியாக இருந்ததால் எந்தவொரு செயலையும் செய்யாமல் அழுக்கு நிறைந்த உடம்போடும் அழுக்கேறிய கந்தை ஆடைகளோடும் காண்பவர்கள் அருவருத்து அவமதிக்கும்படி நடந்து கொண்டார். யாரேனும் அருகில் வந்தால் அவர்கள் மீது பற்று வந்து மீண்டும் பிறவி எடுக்க வேண்டி வருமோ என்று எண்ணி இது போல் நடந்து கொண்டார். மூடனைப் போலவும் பித்தனைப் போலவும் நீண்ட ஜடாமுடியுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த இவரை ஊரார் ஜடபரதர் என்ற பெயர் கொடுத்தார்கள்.

ஜடபரதன் ஒரு ஆத்ம ஞானி என்பதை அறிந்து கொண்ட சவ்வீர ராஜன் என்பவன் இவரை காளிக்கு இவரை பலியிட்டால் பல சக்திகள் கிடைக்கும் என்று எண்ணி அவரைக் காளிக்கு நரபலியிட நிச்சயித்து இரவில் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றான். பலியிடுவதற்குரிய அலங்காரங்களை எல்லாம் அவருக்குச் செய்து காளியின் திருக்கோயிலின் எதிரே கொலை செய்யும் இடத்தில் கொண்டு நிறுத்தினான். காளியானவள் இவர் மகாயோகி என்பதையறிந்து அவரைப் பலியிட வந்த அந்தக் கொடியவனையே தன் கத்தியினால் வெட்டினாள்.

ஜடபரதன் இருந்த நாட்டின் சௌவீரன் என்ற மன்னன் கபிலர் என்ற ரிஷியிடம் துக்கமயமான சம்சாரத்தில் எது உயர்ந்தது என்ற தனது சந்தேகத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்று அவரை சந்திக்க தனது பல்லக்கில் சென்று கொண்டிருந்தான். பல்லக்கு தூக்குவதில் ஒருவனுக்கு உடல் சரியில்லாமல் போனது. பல்லக்கு தூக்குவதற்கு ஒருவரை மன்னனது சேவகர்கள் தேடினார்கள். அருகில் இருந்த ஜடபரதரை கண்ட அவர்கள் அரசனுடைய பல்லக்கை தூக்குமாறு கட்டளையிட்டார்கள். சகல ஞானமும் உணர்ந்தவராக ஜடபரதர் இருந்தாலும் தமது முற்பிறவிப் பாவங்களைத் தொலைக்க அவர் பல்லக்கை தூக்கி நடக்க ஆரம்பித்தார். பல்லக்கு தூக்கும் மூவரும் ஒரே வேகத்தில் நடக்க இவரது வேகம் சற்று வித்தியாசப்பட்டது. இதனால் பல்லக்கு நிலையின்றி தடுமாறி சென்றது. இதனைக் கண்ட மன்னன் பல்லக்கு சரியாக செல்லாததற்கு காரணம் ஜடபரதர் என்று எண்ணினார். என் பல்லக்கைச் சிறிது தூரம் தானே நீ சுமந்திருக்கிறாய் அதற்குள் உடல் களைத்து விட்டதோ? உடல் பருத்திருக்கும் உன்னால் மன்னனான என்னை வைத்து இந்த பல்லக்கை தூக்க முடியவில்லையா? என கோபமாக கேட்டார். அதற்கு ஜடபரதர் நீங்கள் மன்னரும் இல்லை. நான் பருத்தவனும் அல்ல. உனது பல்லக்கை நான் சுமக்கவும் இல்லை. அதனால் நான் களைப்படையவும் வில்லை என்றார். இந்த வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்த அரசன் பல்லக்கிலிருந்து இறங்கி அம்மனிதனைப் பார்த்தான். என்னை மன்னித்து விடுங்கள் ஞானியான அந்தணரை அவமதித்த பாவம் என்னைச் சேரும் என அஞ்சுகிறேன். தங்கள் பேச்சுக்கள் என் மனத்தில் ஐயங்களை எழுப்பியுள்ளன. தாங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் என் கண்ணால் கண்டவற்றை மறுக்கின்றன. தயவு செய்து தங்கள் வார்த்தைகளின் உள்ளர்த்தம் என்னவென்பதை விளக்குங்கள் என்று பணிவுடன் வேண்டினான்.

ஜடபரதன் பேச ஆரம்பித்தார். உடல் வேறு உள்ளிருக்கும் ஆத்மா வேறு உடல் ஒவ்வொருவருக்கும் மாறிக் கொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் இளமைப் பருவம் முதுமைப் பருவம் என்ற கட்டங்களைக் கடந்து முடிவில் பஞ்சபூதங்களில் கலந்து விடும். நிலையில்லாத இந்த உடலைப் பார்த்து நீங்கள் பருத்தவன் என்று சொன்னீர்கள். அதனால் நான் பருத்தவன் இல்லை என்றேன். ஆனால் உடலுக்குள்ளிருக்கும் ஆத்மா அழிவற்றது. எப்போதும் மாறாதது. என்னையும் என் உடலையும் பல்லக்கையும் அதில் அமர்ந்துள்ள உங்களையும் இந்த பூமி சுமக்கிறது பூமியை யார் சுமக்கிறார்கள்? அறிவியல் ரீதியாக அணுக்கள் சுமக்கின்றன எனலாம். ஆனால் ஜடப்பொருளான அணு தானாக இயங்காது. அதை இயக்குபவன் அணுவைக் காட்டிலும் நுண்ணியதாக இருந்து இறைவன் இயக்குகின்றான். ஓர் உயிருக்கு இறைவன் வேறு இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் வேறு என்ற எண்ணம் அவனது கர்மங்களால் உண்டாகிறது. தவத்தின் வழியாக இந்த கர்மங்களை நீங்கியதும் இந்த வேறுபாடு நீங்கி விடும் அதன் பிறகு இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்குள் இருக்கும் ஆத்மாக்கள் அனைத்திற்கும் ஒருவருகொருவர் உருவத்தில் வேற்றுமை கிடையாது. அனைத்திற்கும் மூலமாக இருப்பது பரமாத்மாவான இறைவனே என்று உணர்ந்து கொள்ளலாம் என்றார்.

ஜடபரதன் தொடர்ந்து பேசினார். அடுத்து நீங்கள் மன்னன் இல்லை என்றேன். உண்மையே நீங்கள் இந்த நாட்டுக்கு மட்டும் மன்னன். உங்களை விடப் பெரிய அரசர்கள் உள்ளனர். அவர்களை விட பெரிய அரசர்களும் உள்ளார்கள். அனைவரையும் ஆளும் அரசன் ஒருவன் இருக்கிறான் அவனே இறைவன். பந்தம் பாசத்தினால் உறவு என்ற எண்ணத்தில் நிலையில்லாத ஒரு உடலின் மீது பற்று வைத்துக் கொண்டு நாம் ஆசைகளை வளர்த்துக் கொண்டு துன்பங்களுக்கு ஆளாகிறோம் என்றார் ஜடபரதர். இந்த ஞானத்தை எப்படி பெறுவது என்று மன்னன் கேள்வி கேட்டான். அதற்கு ஜடபரதன் பார்க்கும் உயிர்கள் மற்றும் அசையும் பொருள் அசையா பொருள் அனைத்துமே இறைவனே என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த ஞானத்தை விரைவில் பெறலாம் என்றார். மன்னன் தெளிவடைந்து ஆன்மீக மார்க்கத்தில் பயணிக்க ஆரம்பித்தான்.

திரிலோசனதாசர்

திரிலோசனதாசர் பொற்கொல்லர் இனத்தைச் சார்ந்தவர் தனது தொழிலில் மிகவும் நேர்மையானவர் இறை பக்தி மிக்கவர் பாண்டுரங்கனிடம் அளவு கடந்த அன்பும் பக்தியும் கொண்டவர். இவர் இயற்றியுள்ள பக்திப் பாடல்கள் சீக்கிய கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன. இவர் மன்னரின் அரண்மனைப் பொற்கொல்லராக இருந்தார். மன்னரின் மகளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. மகளுக்கான நகைகளை திரிலோசனதாசர் செய்ய வேண்டுமென மன்னன் விரும்பி பொன் மற்றும் நவரத்தினக் கற்களை திரிலோசனரிடம் கொடுத்து நான்கு நாட்களுக்குள் நகை செய்து தரவேண்டும் எனக் கட்டளையிட்டான். திரிலோசனரும் சம்மதித்தார். ஆனால் இவர் அரண்மனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தவுடன் இவர் வீட்டிற்கு பஜனை கோஷ்டி ஒன்று வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து திரிலோசனாருடன் பாண்டுரங்கனை பற்றி பஜனை செய்ய விரும்புவதாகச் சொன்ன போது மிகவும் மகிழ்ந்து போனார் திரிலோசனார். இரண்டு நாட்கள் அவரின் வீடு பாண்டுரங்கன் பஜனையால் கோலாகலமாய் இருந்தது. பஜனை கோஷ்டி விடை பெற்றுச் சென்றது. அதன் பின்னர் தான் இவருக்கு நகை செய்ய வேண்டுமென்ற நினைவு வந்தது. நவரத்தினம் பதித்த நகைகளை செய்யும் வேலையில் இறங்கினார். அந்நகையைச் செய்வது அவ்வளவு எளிதாய் இல்லை. நான்கு நாள் கெடுவில் ஏற்கனவே பஜனையில் இரண்டு நாட்கள் கழிந்து விட்டதால் மீதமிருந்த இரண்டு நாளில் என்ன முயன்றும் திரிலோசனதாசரால் நகைகளைச் செய்ய முடியவில்லை. மன்னரின் ஆட்கள் நான்கு நாட்கள் முடிந்து விட்ட நிலையில் நகை செய்தாகி விட்டதா எனக் கேட்டு வந்தார்கள். இவர் இன்னும் இரண்டு நாட்கள் தரும்படியும் அதற்குள் செய்து முடித்து விடுவதாகவும் சொல்ல இன்னும் இரண்டு நாட்களில் செய்து முடித்து தராவிட்டால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறுவீர்கள் என எச்சரித்து விட்டுச் சென்றார்கள். என்ன சோதனையோ இரண்டு நாளில் இவரால் முடிக்க முடியவில்லை பயந்து போனார் திரிலோசனார். மன்னர் என்ன தண்டனை தருவாரோ என்ற பயத்தில் மனைவியிடம் கூடச் சொல்லாமல் அடர்ந்த காட்டிற்குள் சென்று ஓர் மரத்தடியில் அமர்ந்து பாண்டுரங்கனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பாண்டுரங்கனின் அவதாரமான கிருஷ்ணரின் பால லீலைகலைப் பாடல்களாகப் புனைந்து பாடியபடியும் பாண்டுரங்கனை நினைத்து தியானித்தபடியும் காட்டில் காலத்தைப் போக்கினார். கணவரைக் காணாது அவரின் மனைவி கலங்கிப்போனார். அப்போது பாண்டுரங்கன் திரிலோசனதாசராக உருவெடுத்து அவருடைய வீட்டிற்கு வந்தார். அவருடைய மனைவி அவரிடம் திடீரென உங்களைக் காணவில்லையே எங்கு சென்றீர்கள் எனக் கேட்கவும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர் என்றார் திரிலோகரின் உருவில் இருந்த பாண்டுரங்கன். மேலும் எதுவும் கேள்விகள் கேட்காமல் மௌனமாகிவிட்டார் திரிலோகரின் மனைவி. திரிலோசனாரின் வீட்டுக்கு அவரின் உருவில் வந்த பாண்டுரங்கன் மன்னரின் மகளுக்காக அழகிய நகைகளைச் செய்து முடித்தார். அது சந்திரனைப் போல் ஒளி வீசியது. அதனை அவரே அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். ஒளி வீசும் நகைகளைப் பார்த்த மன்னரின் கண்கள் வியப்பால் விரிந்தன. நகைகள் மிகவும் அழகு என வியந்து பாராட்டினார் மன்னர். இவ்வளவு அழகான நகைகளைச் செய்த உங்களுக்கு எவ்வளவு பொருள் தந்தாலும் தகும் எனச் சொல்லி ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினார். திரிலோசனாரின் உருவில் இருந்த பாண்டுரங்கன் பொற்காசுகளுடன் வீட்டிற்கு வந்தார். அவற்றை திரிலோசனதாசரின் மனைவியிடம் கொடுத்து பொற்காசுகளில் சிலவற்றை எடுத்துச் சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வந்து விருந்து தயாரிக்கும் படியும் தான் போய் பக்தர்கள் சிலபேரை விருந்துண்ண அழைத்து வருவதாகவும் சொல்லிச் சென்றார். திரிலோசனாரின் மனைவிக்கு அதிக அளவு பொற்காசுகளைப் பார்த்து அதிசயமாக இருந்தது. ஆனாலும் கணவரை ஒன்றும் கேட்கவில்லை. கணவர் சொல்லிச் சென்றது போல் விருந்து தயார் செய்தார்.

பாண்டுரங்கனும் சில பக்தர்களை உணவுண்ண அழைத்து வந்தார். தானும் அவர்களோடு அமர்ந்து உணவு உண்டார். பின்னர் விருந்தில் தயாரித்திருந்த அனைத்துப் பதார்த்தங்களையும் பொட்டலங்களாகாக் கட்டி எடுத்துக் கொண்டு திரிலோசனார் ஒளிந்திருந்த காட்டிக்கு அடியவர் வேடத்தில் வந்தார். அப்போது திரிலோசனார் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். அடியவர் வேடத்தில் வந்திருந்த பாண்டுரங்கன் ஐயா கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள் என்று பலமுறை வேண்டினார். திரிலோசனாரும் கண்களைத் திறந்து அடியவரை பார்த்து இந்த காட்டில் உங்களைப் பார்த்தால் வியப்பாக உள்ளது. நான் தங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார். அடியவர் வேடத்தில் இருந்த பாண்டுரங்கன் இன்று இன்னாட்டின் மன்னர் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம். மன்னரின் மகளான மணமகள் அணிய கண்டோர் வியக்கும் வண்ணம் நகைகளை பொற்கொல்லர் ஒருவர் செய்து கொடுத்திருக்கிறார். இதனால் மகிழ்ந்த மன்னர் அளவுக்கதிகமாக பொற்காசுகள் கொடுத்திருக்கிறார். அந்த பொற்கொல்லார் அடியவர்களை அழைத்து நல்லதொரு விருந்தளித்தார். அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன். திருப்தியாய் சாப்பிட்ட நான் திரும்பி வருகையில் பாதை தவறி இக்காட்டிற்குள் வந்து விட்டேன். விருந்தில் அளிக்கப்பட்ட பதார்த்தங்களை மீண்டும் பசியெடுத்தால் உண்ணலாமென கொஞ்சம் அந்த பொற்கொல்லரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்துள்ளேன். உங்களைப் பார்த்தால் மிகவும் பசியோடு இருப்பவர் போல் தெரிகிறது. இந்தாருங்கள் இதனை நீங்கள் உண்ணுங்கள் என்று கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை அளித்தார்.

பாண்டுரங்கன் வடிவில் இருந்த அடியவர் கூறிய செய்தி திரிலோசனதாசருக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. நாம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மன்னர் வேறொரு பொற்கொல்லரை வைத்து நகைகளை செய்து வாங்கிக் கொண்டார். இனி நமக்கு பயமில்லை. இனி நாம் நம் வீடு திரும்பலாம் என நினத்தார். அந்த நினைப்பே அவருக்குப் பசியைத் தூண்டியது. அடியவர் அளித்த உணவை ஏற்று அதனை உண்டார் திரிலோசனார். வீட்டுக்குக் கிளம்பியவர் அந்த அடியவரிடம் சுவாமி எனக்கு உணவளித்த நீங்கள் என்னுடன் என் இல்லம் வரவேண்டும். உங்களுக்குத் தக்க மரியாதை செய்ய விரும்புகிறேன் என்றார். அடியவரின் உருவில் இருந்த பாண்டுரங்கனும் சம்மதித்தார். இருவரும் திரிலோசனாரின் இல்லம் அடைந்தனர். அடியவர் திரிலோசனாரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொள்ள திரிலோசனதாசர் உள்ளே சென்றார். வீட்டில் குவிந்து கிடந்த மளிகைப் பொருட்களைக் கண்டு வியந்த திரிலோசனார் மனைவியிடம் இவ்வளவு மளிகைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன எப்படி வந்தது என்று வியப்போடு கேட்டார். அவரின் கேள்வியில் திகைத்துப் போன மனைவி இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் தானே நகைகளை செய்து கொடுத்ததற்காக மன்னர் அளித்த பொற்காசுகளை என்னிடம் கொடுத்து அடியவர்களுக்கு விருந்து வைக்க மளிகைப் பொருட்கள் வாங்கி வரச் சொன்னீர்கள். அவ்வாறு நானும் வாங்கி வர அடியவர்களுக்கு விருந்தும் வைத்தோமே? நீங்களும் அவ்விருந்தில் இருந்த பதார்த்தங்களைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு எங்கோ சென்றீர்களே? ஒன்றுமறியாதவர் போல கேள்வி கேட்கிறீர்களே என்றாள். மனைவி சொன்னதைக் கேட்டு வியந்து போன அவர் தன்னைக் காட்டில் சந்தித்தவரும் இதைத்தானே சொன்னார் என்று அதிசயத்தபடி வெளியே வந்து பார்த்த போது திண்ணையில் அந்த அடியவர் இல்லை. இப்போது திரிலோசனதாசருக்கு நன்கு புரிந்தது. தான் மன்னனுக்கு பயந்து காட்டில் சென்று ஓளிந்து கொண்ட போது பாண்டுரங்கனே தம் உருவில் இங்கு வந்து நகைகளைச் செய்து மன்னனிடம் கொடுத்து கூலிபெற்று அதில் மளிகை வாங்கி அடியவர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அவிருந்தில் அளிக்கப்பட்ட உணவினை எனக்கும் கொண்டு வந்து அளித்துள்ளார் என மிகுந்த பக்தியோடு தன்னை மறந்து பாண்டுரங்கன் மீது பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.

சக்கராங்கிதா லிங்கம்

கர்நாடகாவின் விஜயபுரா பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சக்கராங்கிதா லிங்கம் என்று அழைக்கப்படும் இந்த லிங்கம் புராதாண பண்டைய லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தின் மேல் ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது. ஸ்ரீசக்கரத்தின் மைய பகுதியில் தேவி லலிதா பரமேஸ்வரி வசிக்கிறாள்.