ராமரின் பாதுகை

ராமர் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார். நாட்டு மக்கள் அனைவரும் ராமரை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப் பொருட்களை தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. அனைவரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும் போது நாம் மட்டும் அற்ப காலணிகளையா தருவது என நினைத்தவன் ராமரைப் பார்க்கப் போகாமல் திரும்ப சென்று விடலாம் என்று நினைத்து திரும்பினான். அதனை கவனித்து விட்ட ராமபிரான் அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே என்று ராமர் சொல்ல அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. ராமர் வனவாசம் செல்லப் புறப்பட்ட போது வனவாசம் செல்லும் போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது. இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல எனக்கு அனுமதியுங்கள் என்று கேட்டு அனுமதி வாங்கி தன்னுடன் எடுத்துச் சென்றார் ராமர். கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கி விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன என்றார். உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர் பரதனால் கொண்டு செல்லப்பட்டு அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.