லட்சுமணன் ஊர்மிளை

ராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பினார்கள். அவர்களுக்குச் சேவை செய்ய லட்மணனும் கிளம்பினான். தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக் கொள்ள அவளது அந்தப்புரத்துக்கு வந்தான் லட்சுமணன். தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியும் ஆகையால் இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால் தன் நினைவும் விரகதாபமும் அவரை சரி வர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள். ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லட்சுமணனை வரவேற்கத் தயாரானாள். லட்சுமணன் கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்ல நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் அண்ணி தான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர் பின்னால் போகிறாள். நானாக இருந்தால் அது கூட போகமாட்டேன். வாருங்கள் என்னுடன் நாம் மிதிலைக்குப் போய் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாள். லட்சுமணன் கோபத்துடன் நீ இவ்வளவு மோசமானவளா நீ என்னுடன் வர வேண்டாம் என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு என் அண்ணனுடனும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றான். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஊர்மிளை. அப்படியே ஆகட்டும். எனக் கூறிச்சென்ற லட்சுமணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காமல் ராமனுக்குச் சேவை செய்தான். ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லட்சுமணனை வாட்டவில்லை. ராம பட்டாபிஷேகம் முடிந்த பிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லட்சுமணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை முன்பை விடவும் அதிகமாக நேசித்தான்.

லட்சுமணனின் குணந்தை ஊர்மிளை அறிந்து கொள்ள சீதை ஒரு வழி செய்தாள். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஒரு நாள் தன் கால் கொலுசுகளை ஊர்மிளைக்குப் பரிசாக அளித்தாள் சீதை. அன்றிரவு அவளின் அந்தப்புரத்துக்கு வந்த லட்சுமணனின் பார்வையில் அந்தக் கொலுசுகள் தான் முதலில் பட்டன. தினமும் சீதையின் கால்களை மட்டுமே வணங்கி வந்துள்ள லட்சுமணன் சீதை தன்முன் நிற்பதாகக் கருதி அவள் கால்களில் விழுந்து வணங்கினான். துணுக்குற்றுப் பின்வாங்கிய ஊர்மிளை உண்மையைக் கூற அவளைக் கடிந்து அந்தக் கொலுசுகளை உடனே அண்ணிக்குத் திருப்பித்தர உத்தரவிட்டான் லட்சுமணன். ஊர்மிளையிடம் கொலுசைப் பெற்றுக் கொண்ட சீதை உயர்ந்த கொலுசை அவளுக்குப் பரிசளித்து லட்சுமணன் தன்னிடம் கொண்ட பக்தியை உனக்கு புரிய வைப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் என்று ஊர்மிளையிடம் கூறினாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.