மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -15

இளமைக்காலத்தில் இருக்கும் நட்பு ஆயுள்காலம் முழுவதும் நிலைத்து இருக்கும் தன்னுடைய வறுமைகள் சென்று விடும் என்ற எண்ணத்துடன் துரோணர் பாஞ்சால மன்னனாகிய துருபதனை காண அவனுடைய ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றார். அங்கு துருபதன் மன்னனைப் பார்த்து மன்னா நான் துரோணர். தாங்கள் என்னுடைய சிறு வயது நண்பர். சிறுவயதில் தாங்கள் எம்மிடம் மன்னனானதும் செல்வங்கள் அளிப்பதாக சொன்னீர்கள். ஆனால் எனக்கு தங்களின் செல்வங்கள் எதுவும் வேண்டாம். ஒரு குடும்ப ஜீவனத்திற்கு தேவையானதை கொடுத்து உதவினால் போதும் என்று கூறினார். துருபதனுடைய பாங்கு இப்போது முற்றிலும் மாறியிருந்தது. துரோணரே நீ என்னோடு அன்யோன்யமாக இருப்பது இப்போது பொருந்தாது. விளையாட்டுப்பிள்ளை கூறியதை உண்மை என்று எண்ணி கற்பனை செய்வது மடமையாகும். நாடோடியாய் இருந்து யாசகம் பெறுகின்ற ஒருவன் அரசனுக்கு நண்பன் ஆவனா? வறியவன் ஒருவன் வேந்தனோடு எவ்வாறு உறவு கொண்டாட முடியும்? இணையில்லாத இருவருக்கு இடையில் நட்பு எற்படுவது ஆகாத காரியம். பிள்ளைப்பருவ கதைகளை எல்லாம் என்னிடம் சொல்லி என்னை உபத்திரப்படுத்தாதே. இந்த இடத்தை விட்டுச்செல் என்று துரோணரை அவமரியாதை செய்தான். போற்றுதலுக்குரிய துரோணர் அவமானப்படுத்தப்பட்டார்.

துரோணர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்பு அவ்விடத்தில் இருந்து பின் வாங்கினார். கர்வம் பிடித்த துருபத மன்னனுக்கு ஆயுள் முழுவதும் மறக்க முடியாத படி பாடம் ஒன்றை புகட்ட வேண்டும் என்று மனதில் ஓர் தீர்மானத்தை எண்ணிக்கொண்டார். அங்கிருந்து தனது மைத்துனரான கிருபாச்சாரியார் இருக்கும் அஸ்தினாபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு தான் துரோணரை பீஷ்மர் ராஜ குருவாகவும் ராஜ குமாரர்களுக்கு ஆச்சாரியராகவும் நியமித்தார். துரோணருக்கு ராஜகுமாரர்கள் பல பேர் சிஷ்யர்களாக வாய்த்தார்கள். அவர்களுள் குரு வம்சத்தை சேர்ந்த பாண்டுவின் குமாரர்களும் திருதராஷ்டிரரின் புதல்வர்களும் தலைசிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். அருகில் இருக்கும் நாடுகளில் இருந்தும் நெடுந்தூரத்தில் இருக்கும் நாடுகளில் இருந்தும் பல ராஜகுமாரர்கள் இந்த குருகுலத்தை நாடி வந்தனர். அந்தந்த மாணாக்கனின் திறமைக்கேற்றவாறு அவர்களுக்கு போர்க்கலை கற்ப்பிக்கப்பட்டது.

மாணாக்கர்களின் கூட்டத்தில் அர்ஜூனன் தலைசிறந்த மாணவனாக திகழ்ந்தான். அவனுடைய குரு பக்தி போற்றுவதற்கு உரியதாயிருந்தது. கல்வியிலும் வில்வித்தையிலும் அவன் தளராத ஊக்கம் பெற்றவனாயிருந்தான். அவனுடைய ஆர்வத்தை முன்னிட்டு துரோணருக்கு அர்ஜூனன் விருப்பமான மாணாக்கனாக இருந்தான். வில்வித்தைக்கு விஜயன் என்னும் பெயர் பெற்று இருந்தான். மற்ற மாணவர்களுக்கு விளங்காத வில்வித்தைகள் அர்ஜூனனுக்கு எளிதில் விளங்கியது.

Image may contain: 4 people
Image may contain: one or more people

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.