மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -16

ஒரு நாள் துரோணாச்சாரியார் முன்பு இளைவன் ஒருவன் தோன்றினான் அவன் பெயர் ஏகலைவன். அவன் வேடர்களின் தலைவனுடைய மகன் ஆவான். துரோணாச்சாரியரின் பாதங்களை வணங்கி தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். துரோணர் அவனைப்பார்த்தார். வேடுவனாக இருந்த அவனுக்கு ராணுவப்பயிற்சி தேவையில்லை என்று எண்ணினார். ஆகவே அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். ஆயினும் ஊக்கமே வடிவெடுத்த ஏகலைவன் ஏமாற்றமடையவில்லை. காட்டிற்கு சென்றான் அங்கு துரோணாச்சாரியார் போல் மண்ணில் ஓர் உருவம் செய்தான். அந்த உருவத்தை குருவாக நினைத்து தினந்தோறும் வழிபாடுகள் செய்தான். அதைத்தொடர்ந்து வில்வித்தைகள் பயிற்சி செய்தான். அவனுடைய குருபக்தியும் வில்வித்தையின் மேல் கொண்ட ஆர்வமும் ஒன்றுகூடி வியப்பிற்குரிய பலனைத்தந்தது. செடிகளில் மலர்கள் தோன்றுவது போல அவன் உள்ளத்தில் வில்வித்தைக்கான கலைத்திறன்கள் உருவெடுத்தன. அதிவிரைவில் தனுர் வேதத்தின் ரகசியங்கள் அவனுக்கு தோன்றி தெளிவானான். தலைசிறந்த வில்லாளியாக உருவெடுத்தான்.

குருவம்சத்து ராஜகுமாரர்கள் குருவின் அனுமதி பெற்று காட்டிற்கு வேட்டையாட சென்றார்கள். அவர்கள் வளர்த்து வந்த நாயும் அவர்களுடன் காட்டிற்கு சென்றது. அங்கும் இங்கும் ஓடிய நாய் காட்டில் இருந்த ஏகலைவனைப்பார்த்து பயங்கரமாக குரைத்தது. ஏகலைவன் தன்னுடைய திறமையை காட்டும் விதமாக ஒரு கட்டு நிறைய அம்புகளை எடுத்து வில்லில் பூட்டி ஒரே தடவையில் நாயின் மீது அம்பெய்தான். அந்த அம்புகள் நாயின் வாயில் மொத்தமாக சென்று நாயின் வாயை அடைத்தது. பயந்து போன நாய் ராஜகுமாரர்களிடேயே திரும்பி ஓடி வந்தது. இந்த நூதான காட்சிகளைப்பார்த்து குரு வம்சத்து ராஜகுமாரர்கள் திகைத்துப்போயினர். இத்தகைய அதிசய செயலைப்பார்த்து அக்காட்டில் எந்த மானுடனாலாவது இது போல் செய்ய இயலுமா என்று வனம் முழுவதும் தேடிப்பார்த்தார்கள். வனத்தில் அவர்கள் ஏகலைவனை சந்தித்தார்கள். அவன் யார் என்று விசாரித்த பொழுது தன்னை துரோணாச்சாரியாரின் சீடன் என்று அறிமுகம் செய்து கொண்டான். அவன் கூறியது ராஜகுமாரர்களை மேலும் குழப்பமடைய செய்தது.

ராஜகுமாரர்கள் அனைவரும் குருநாதரிடம் நடந்தது அனைத்தையும் சொன்னார்கள். துரோணாச்சாரியாரும் சிறிது திகைத்தார். துரோணாச்சாரியார் ராஜகுமாரர்களுடன் காட்டிற்கு சென்று அந்த இளைஞனை பார்த்தார். பார்த்ததும் அவருக்கு இந்த இளைஞனை பற்றிய அனைத்தும் ஞாபகம் வந்தது. துரோணர் நடந்தவைகள் அனைத்தையும் ராஜகுராரர்களுக்கு தெரிவித்து குருபக்தியின் மகிமையையும் மேன்மையையும் எடுத்துரைத்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.