மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -27

யுதிஷ்டிரனுக்கு தக்க வயது வந்த பொழுது அவன் இளவரசனாக முடிசூட்டப்பட்டான். அவனுடைய பெரியப்பாவாகிய திருதராஷ்டிரனுக்கு இந்நிகழ்ச்சி பிடிக்கவில்லை. தன்னுடைய சொந்த மகனாகிய துரியோதனன் அப்பதவியை ஏற்றிருக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்தது. ஆனால் விஷயங்கள் அதற்கு நேர்மாறாக இருந்தது. இறந்த குருவம்சத்து அரசன் பாண்டு மன்னனின் வாரிசில் மூத்தவனாக இருந்ததால் யுதிஷ்டிரன் இளவரசு பட்டத்துக்கு உரியவன் ஆனான். பீஷ்மர், விதுரர், துரோணர் ஆகிய பெருமக்கள் யுதிஷ்டிரனே ராஜபதவிக்கு தகுதி வாய்ந்தவன் எனக் கருதினார்கள். பொது மக்கள் எல்லோரும் அவனையே போற்றிப் பாராட்டினார்கள். ஆகையால் அவனுக்கு முடிசூட்டப்பட்டது. அவனது பங்காளிகளான கௌரவர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் பகிரங்கமாக அவர்களால் இதை எதிர்க்க இயலவில்லை.

யுதிஷ்டிரன் இளவரசர் பதவியை ஏற்று ஒரு வருடம் ஆகியது. குறுகிய காலத்தில் அவன் தன்னுடைய இளவரசன் தலைமையை முற்றிலும் நிரூபித்துக் காட்டினான். மன உறுதிக்கும் தளரா முயற்சிக்கும் நேர்மைக்கும் கடமைக்கும் இருப்பிடமாக அவன் இருந்தான். மக்கள் நலனுக்கு உரிய கடமைகளைநெறி பிறழாது அவன் நிறைவேற்றினான். ஆகையால் மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் பாராட்டினர். காலம் சென்ற பாண்டு மன்னன் ஆட்சி முறையில் மிகச் சிறந்தவர் என உலகத்தவர் கருதினர். அச்செயலை நிறைவேற்றுவதில் தந்தையை மிஞ்சியவனாக யுதிஷ்டிரன் இருந்தான். அவனுடைய தம்பிமார்கள் அந்த ராஜ்ஜியத்தின் எல்லையை விரிவுபடுத்தினார்கள்.

அர்ஜுனன் பெற்றுவந்த வில்வித்தை பயிற்சியை துரோணாச்சாரியார் முற்றிலும் பூர்த்தி செய்து வைத்தார். வில்வித்தையில் விஜயன் என்னும் அவனுடைய பெயர் உலகெங்கும் பரவியது. இந்த திறமையை குறித்து அர்ஜுனன் கர்வம் கொள்ளக்கூடாது என்று துரோணாச்சாரியார் அவனுக்கு புத்தி புகட்டினார். மேலும் அவனிடத்தில் ஒரு விபரீதமான குரு தட்சணையை வேண்டினார். தக்க தருணம் வருகின்ற பொழுது அர்ஜுனன் துரோணரை எதிர்த்துப் போர் புரிய வேண்டும் என்பதே அவர் வேண்டியிருந்த குருதட்சணை ஆகும். அதன்பிறகு மேலும் ஒரு ரகசியத்தை கூறினார். வசுதேவன் என்னும் விருஷ்ணி வம்சத்தவர் அர்ஜுனனுடைய மாமா ஆவார். அந்த வசுதேவனுக்கு மகனாகப் பிறந்தவன் கிருஷ்ணன். அவனுக்கு பலராமன் என்னும் தமயன் இருக்கின்றான். கிருஷ்ணன் சாமானிய மானிடன் இல்லை. பரம்பொருளே கிருஷ்ணனாக வடிவெடுத்து வந்திருக்கிறான். ஆகையால் அர்ஜுனன் எப்பொழுதும் கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டு இருத்தல் வேண்டும் என்று துரோணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்.

பீமனும் துரியோதனனும் கிருஷ்ணனுக்கு தமயனாகிய பலராமனுடைய மாணாக்கர்கள் ஆனார்கள். கதை யுத்தத்தில் பலராமன் மிகச்சிறந்த நிபுணன். பலராமனுக்கு மாணவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் அவன் துரியோதனனை மிக்க நேசித்தான். துரோணாச்சாரியாருக்கு எவ்வாறு அர்ஜுனன் அன்புக்குரிய சிஷ்யனாக இருந்தானோ அது போல் பலராமனுக்கு துரியோதனன் அன்புக்குரிய சிஷ்யன் ஆனான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.