மகாபாரதம் ஆதிபருவம் பகுதி -11

அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரரின் மனைவியாகிய காந்தாரி கருத்தரித்தாள். ஆயினும் இரண்டு வருட காலம் மகப்பேறு பெறாமலேயே இருந்தாள். காட்டில் குந்திக்கு மகன் ஒருவன் பிறந்தான் என்ற செய்தி காந்தாரியின் காதுக்கு எட்டியது. அதைக் கேட்டதும் அவள் கோபம் கொண்டாள். கோபத்துடன் தன் வயிற்றை அவள் ஓங்கி அடித்தாள். அதன் விளைவாக மாமிசப் பிண்டம் ஒன்றைப் பெற்றெடுத்தாள். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. அந்த நேரம் வியாச மகரிஷி அங்கு பிரசன்னமானார். காந்தாரிக்கு தேவையான விமோசனத்தை அந்த ரிஷி செய்தார். நூற்றியொரு குடங்களில் நெய்யை நிரப்பி வைக்கும்படி உத்தரவிட்டார். அந்த மாமிச பிண்டத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து ஒவ்வொரு குடத்திலும் ஒரு மாமிச துண்டை போட்டு வைத்தார். நாளடைவில் நூறு ஆண்களும் ஒரு பெண்ணும் ஒன்றன்பின் ஒன்றாக பிறந்தனர். நாள் ஒன்றுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவைகளின் பிறப்புக்கு நூற்றியொரு நாள் தேவையாயிருந்தது. வனத்தில் பீமன் பிறந்த அதே நாளில் காந்தாரிக்கு மூத்த மகன் பிறந்தான். அவனுக்கு துரியோதனன் என்னும் பெயர் சூட்டப்பட்டது. யுத்தத்தில் அசையாதவன் என்பது அதன் பொருளாகும். ஆனால் துரியோதனன் பிறப்பை ஒட்டிய சகுனங்கள் கேடு உடையவைகளாய் இருந்தது. இது குறித்து விதுரரும் ஏனைய சான்றோரும் எச்சரிக்கை செய்தார்கள். குருவம்சத்தின் அழிவுக்கும் ஏனைய பல அரசர்களின் அழிவுக்கும் அவன் காரணமாய் இருப்பான் என்று எடுத்துக் கூறினார்கள். நாட்டு நலனை முன்னிட்டு துரியோதனன் தானாக மடிந்து போகும் முறையில் அவனை புறக்கணிப்பது சிறந்தது என்று சொன்னார்கள். ஆனால் புத்திர வாஞ்சை இருந்ததினால் திருதராஷ்டிரன் அதற்கு சம்மதிக்கவில்லை.

வனத்தில் வசித்து வந்த பாண்டுவின் புதல்வர்கள் ஐவரும் ஆரம்பக்கல்வியை ரிஷிகள் பலரிடம் இருந்து கற்று வந்தார்கள். பாண்டுவின் தவ வாழ்வு அமைதியாக நடைபெற்று வந்தது. ஆனால் நல்ல காலம் திடீரென்று கேடு காலமாக மாறியது. பாண்டு மன்னன் தனது சாபத்தை மறந்து தனது இரண்டாவது மனைவி மாத்ரியை அணுகினான். சாபத்தின் விளைவாக பாண்டு மன்னன் மாண்டு போய் கீழே விழுந்தான். மாத்ரியும் தன் கணவனுக்கு பணிவிடை பண்ண வேண்டும் என்று எண்ணி தீர்மானத்துடன் பாண்டுவின் உடலுடன் தானும் உடன் கட்டை ஏறி பரலோக ப்ராப்தி அடைந்தாள். சில காலத்திற்குப் பிறகு காட்டில் இருக்கும் ரிஷி புங்கவர்கள் ஒரு கூட்டமாக கூடி குந்தியையும் பாண்டுவின் ஐந்து புதல்வர்களையும் அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பாண்டு மன்னனுக்கும் மாத்ரிக்கும் நிகழ்ந்த துர்பாக்கியத்தை பீஷ்மரிடம் எடுத்து சொன்னார்கள். பிறகு புதல்வர்கள் ஐவரையும் பாட்டனாரான பீஷ்மரிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

ஒருநாள் வியாசர் தனியாக சத்தியவதியின் முன் தோன்றி குரு வம்சத்தின் நற்காலத்திற்கு முடிவு வந்துவிட்டது என்றும் இனி கேடு காலம் தொடர்ந்து வரப்போகிறது என்றும் தெரிவித்தார். விதவையாய் இருந்த ராணியும் அச்செய்தியை அமைதியாக ஏற்றுக் கொண்டு தவம் செய்யும் பொருட்டு காட்டிற்கு செல்ல தீர்மானித்தாள். தவத்தின் வாயிலாக இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை அடைவது அவள் கொண்டிருந்த குறிக்கோளாகும். தங்களுடைய மாமியாரை பின்தொடர்ந்து போக அம்பிகாவும் அம்பாலிகாவும் தீர்மானித்தார்கள். தனக்கு வாய்ந்த பேரன்கள் அத்தனை பேரையும் நன்கு பராமரிக்க வேண்டும் என்று பீஷ்மரிடம் சத்தியவதி தெரிவித்தாள். கண் தெரியாத திருதராஷ்டிரனை அரசனாக்கி விட்டு குரு வம்சத்து சிம்மாசனத்தின் மீது தகுதிவாய்ந்த அரசன் ஒருவனை அமர்த்தும் வரையில் அவருடைய கடமையை புறக்கணித்து விடலாகாது இன்று பீஷ்மரிடம் சத்தியவதி தெரிவித்தாள். சத்தியவதியின் ஆணையை தலைவணங்கி ஏற்றுக் கொண்ட பீஷ்மர் தமக்கு வாய்த்த கடமையை நிறைவேற்றுவதில் இன்புற்று இருந்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.