ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 45

கேள்வி: திருவிடைமருதூர் பற்றி? (கும்பகோணம் அருகில்)

சந்திரனின் சாபத்தை நீக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்தலம். அதை சந்திரனுக்காக இறைவன் உண்டாக்கினாரப்பா இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? யாம் கூறுகின்ற பரிகாரங்களை செய்யும் (எம்மை வணங்குகின்ற) சில பக்தர்கள் எண்ணுகிறார்கள். நாம் அகத்தியரை வணங்குகிறோம். அவரிடம் கேட்டால் அவர் இன்னொரு தெய்வத்தை வணங்க சொல்கிறார். நான் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று முரண்டு பிடிக்கின்ற கூட்டம் இன்றும் உண்டு. ஆனால் அன்று என்ன நடந்தது தெரியுமா? தனக்கு ஏற்பட்ட இன்னல் தீருவதற்கு என்ன வழி சுவாமி? என்று சந்திரன் வினவுகிறார். சந்திரனே பூமியிலே காவிரிக்கரையில் இந்த இடத்தில் (திருவிடைமருதூர்) சென்று வணங்கு தக்க காலத்தில் வந்து யாம் உன் சாபத்தை நீக்குகிறோம் என்றார் இறைவன். இங்கு தான் கவனிக்க வேண்டும். சாபத்தை நீக்குகிறேன் என்று சொல்பவர் யார்? சிவன். அங்கேயே நீக்க வேண்டியது தானே? எதற்காக இடை மருதூர் சென்று வணங்கு. பிறகு நீக்குகிறேன் என்று சொல்ல வேண்டும்? காரணம் அத்தனை காலம் சந்திரன் அந்த இடத்திலே தவம் செய்ய வேண்டும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது. அதைப் போலவே திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம் மாவட்டம்) சென்று தவம் செய்து சாபத்தை நீக்கிக் கொள் என்று நந்திக்கு இறைவன் சொல்கிறார். நந்தி தவம் செய்ய சென்ற உடனேயே இந்திரனை அழைத்து ஊர்வசியை அனுப்பி நந்தியின் தவத்திற்கு இடையூறு செய் என்கிறார். இதுதானப்பா இறைவனின் லீலை. எனவே சிவனே விரும்பி சந்திரனுக்காக ஏற்படுத்திய ஸ்தலங்களுள் இடை மருதூரும் (திருவிடைமருதூர்) ஒன்று.

திருவிடை மருதூர் தலத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 93 திருவிடைமருதூர்

திருக்கழுக்குன்றம் தலத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 261 திருக்கழுகுன்றம்

சுலோகம் -17 # 18

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #17

வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும் மகாரதனாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் விராடனும் தோல்வியை என்பதை அறியாத சாத்யகியும்

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #18

துருபதனும் திரௌபதியின் ஐந்து மகன்களும் பெரும் தோள்களுடைய சுபத்திரையின் மகன் அபிமன்யுவும் தனித்தனியே தங்களுக்குரிய சங்குகளை முழங்கினார்கள்.

பகவத்கீதையின் இந்த இரண்டு சுலோகத்தில் சொல்லப்பட்டவர்கள் யார் யார் என்று முதலில் வரும் சில சுலோகங்களில் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு சுலோகத்திலும் எழும் பொதுவான கேள்வி: பாண்டவர்களில் முக்கியமானவர்கள் அத்தனை பேரும் ஏன் ஒரே நேரத்தில் சங்குகளை ஊதினார்கள்?

தாங்களும் தங்களின் படைகளும் யுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம் என்றும் தங்களின் படைகளை உற்சாகப்படுத்தவும் அவர்களிடம் உள்ள சங்குகளை தனித்தனியாக ஒரே நேரத்தில் முழங்கினார்கள்.

மேலும் இதில் கவனிக்க வேண்டியது சங்கின் சத்தமாகும். அர்ஜூனனும் பீமனும் முழங்கிய சங்குகளிலிருந்து வந்த சத்தம் எதிரிகளுக்கு பயத்தை உருவாக்கியது போல இவர்கள் முழங்கிய சங்குகளில் இருந்து வரும் சத்தம் பாண்டவ படைகளின் பயத்தை போக்குகிறது. மிகப்பெரிய ராட்சச ராட்டினத்தில் செல்பவர்களை கவனித்தால் புரியும் அதில் செல்பவர்கள் ஆ ஊ என்று சத்தம் போடுவார்கள். ஏன் என்றால் உரக்கமாக கத்தினால் வரும் சத்தத்திலிருந்து பயம் குறையும். யுத்தத்தில் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறார்கள். மரண பயம் படைகளில் யாருக்கேனும் இருந்தால் சங்கு நாதத்தில் இருந்து வரும் ஒலியானது மனித மனதில் உள்ள பயத்தை பல விதங்களில் சரி செய்து யுத்தம் செய்ய ஒரு வெறியை கூட்டும். அதே ஒலி மிகவும் வெறித்தனத்துடன் இருப்பவர்களின் மனதை அமைதிப்படுத்தி யுத்த தர்மத்துடன் யுத்தம் செய்ய வைக்கும். இல்லை என்றால் யுத்த வெறியில் ஆயுதம் இல்லாதவர்களையும் யுத்த களத்தில் இருந்து பயந்து பின் வாங்குபவர்களையும் கொன்று தர்மத்திற்கு எதிராக செயல்படுவார்கள்.

சங்கின் முழக்கமனாது பலவகைப்படும். சங்கை முழங்குபவர்கள் என்ன தேவைக்காக எப்படி முழக்கம் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் பலன் உண்டாகும். உதாரணமாக இசை ஒன்று தான் அதை என்ன ராகத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து ராகத்திற்கு ஏற்றார் போல் மகிழ்ச்சி துக்கம் பயம் என ஒருவருக்குள் இசையால் எந்த மனநிலையையும் வரவழைக்க முடியும். இசையால் உடல் நோய்களைக் கூட சரி செய்ய முடியும். இசையைப் போலவே மனித உணர்வுகளை பாதிப்பதில் சங்கின் நாதமும் முக்கியமானது. பயத்தைப் போக்கவும் அல்லது உண்டாக்கவும் குழப்பத்தைப் போக்கவும் அல்லது உண்டாக்கவும் தெளிவு படுத்தவும் அமைதிப் படுத்தவும் யுத்த களத்தில் சங்கு பயன்படுகிறது. ஆகவே யுத்த களத்தில் சங்கின் பங்கு மிகவும் முக்கியமானது.

சுலோகம் -16

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #16

குந்தியின் மகனான அரசர் யுதிஷ்டிரர் அநந்தவிஜயம் என்ற சங்கையும் நகுலனும் சகாதேவனும் முறையே சுகோஷம் மணிபுஷ்பகம் என்ற சங்கையும் முழங்கினார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: யுதிஷ்டிரரின் தாய் குந்தி என்று ஏன் குறிப்பிட்டு சொல்லப்படுகிறார்?

யுதிஷ்டிரரும் அர்ஜூனனும் பீமனும் குந்திக்கு பிறந்தவர்கள். நகுலனும் சகாதேவனும் மாத்ரீக்கு பிறந்தவர்கள். இந்த சுலோகத்தில் நகுலன் மற்றும் சகாதேவன் பெயர்களும் வருகிறது. எனவே யுதிஷ்டிரரின் தாய் வேறு நகுலன் சகாதேவனின் தாய் வேறு என்பதை குறிப்பிடுவதற்காக குந்தியின் பெயர் சொல்லப்படுகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: யுதிஷ்டிரர் மகாபாரத யுத்தம் ஆரம்பிக்கும் போது எந்த நாட்டிற்கும் அரசனாக இல்லை ஆனாலும் அரசர் யுதிஷ்டிரர் என்று ஏன் சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் கூறினார்?

யுதிஷ்டிரர் வனவாசம் செல்வதற்கு முன்பு இந்திரப்பிரஸ்தத்திற்கு அரசனாக இருந்து தன் சகோதரர்களுடன் ராஜசூய யாகம் நடத்தி தன்னை எதிர்த்த அனைத்து அரசர்களையும் வெற்றி பெற்று அரசர்களுக்கெல்லாம் அரசனாக இருந்து சக்கரவர்த்தி என்று பெயர் பெற்று பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தவர். மேலும் யுத்தத்தின் போது யுதிஷ்டிரருடைய உடம்பில் அரசனுக்குரிய அரசுச் சின்னங்கள் இருந்தது. இதன் காரணமாகவும் மேலும் இந்த யுத்தத்தில் யுதிஷ்டிரனே வெற்றி பெற்று அரசனாவான் என்று சஞ்சயன் அறிந்திருந்தான். இதனை திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் யுதிஷ்டிரனை அரசன் என்றுகூறினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 44

கேள்வி: தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்? யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்? இல்லாதவர்களுக்கா? நம் உடன் பிறந்தவர்களுக்கா? உறவினர்களுக்கா?

இறைவனின் கருணையைக் கொண்டு தர்மம் எனப்படும் வார்த்தையை நாங்கள் பயன்படுத்தும் பொழுது மிக மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே ஒரு மனிதனுக்கு தர்மத்தின் அனைத்து சூட்சுமத்தையும் கூறிவிட இயலாது. பொதுவாக கூறுகிறோம். தர்மம் செய்ய செய்யத்தான் தர்மத்தின் அனைத்து நுணுக்கங்களும் ஒரு மனிதனுக்கு புரிபடத் துவங்கும். இந்த நிலையில் நாங்கள் கூறுவது என்னவென்றால் யாருக்கு வேண்டுமானாலும் அவர்களின் தேவையறிந்து எந்த நிலையிலும் காலம் பார்க்காமல் திதி பார்க்காமல் நட்சத்திரம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் கிழமை பார்க்காமல் தாராளமாக தேவைப்படும் மனிதர்களுக்கு தேவைப்படும் உதவியை தேவைப்படும் தருணத்தில் தரலாம். யாருக்கு தந்தாலும் நன்மைதான். இருந்தாலும் இரத்த சம்பந்தமான உறவுகளுக்கு தருவது கட்டாயக் கடமை. அதை தர்மத்தில் நாங்கள் சேர்க்க மாட்டோம். இரத்த தொடர்பு இல்லாதவர்களுக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்வதைதான் நாங்கள் தர்மத்தில் சேர்க்கிறோம். அதே தருணம் ஒருவனுக்கு ஒரு உதவியை தர்மத்தை செய்யும் பொழுது அவன் அதனை முறைக்கேடாக பயன்படுத்துகிறான். எப்படி இதனை நாங்கள் ஏற்றுக் கொள்வது? என்றால் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு இது ஏற்புடையது இல்லை என்று மனதிலே பட்டுவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம். நாங்கள் அதை குறை கூறவில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனையும் பார்த்து இந்த உதவியை இவன் சரியாக பயன்படுத்துவானா? என்று ஆராய்ந்து கொண்டே போனால் கட்டாயம் தர்மம் செய்ய இயலாது.

இறைவன் இவ்வாறு பார்த்து செய்தால் இங்கே மனிதனுக்கு பஞ்சபூதங்கள் கிட்டாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் காற்று வீசட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் சூரிய ஔி கிட்டட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நீர் கிடைக்கட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நிலவொளி கிடைக்கட்டும் என்று இறைவன் ஒரு பொழுதும் சிந்திப்பதில்லை செயல்படுவதில்லை. அந்த இறைவனின் மிகப்பெரிய பராக்ரம சிந்தனைக்கு ஒவ்வொரு மனிதனையும் நாங்கள் அழைக்கிறோம். அந்த உயர்ந்த உச்ச நிலையிலிருந்து அள்ளி அள்ளி வழங்குவதே எம் வழியில் வருபவர்களுக்கு அழகாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 43

கேள்வி: ஐயனே சரிவிகித உணவு என்பது என்ன? எப்பொழுது எவ்வகையான உணவை மனிதன் உண்ண வேண்டும்?

இறைவன் அருளால் நாங்கள் அடிக்கடி கூறுவது போல உணவை மனிதன் உண்ண வேண்டும். எந்த உணவும் மனிதனை உண்ணக் கூடாது. அப்படிப் பார்த்து மனிதன் உண்ணும் ஒரு முறையை கற்க வேண்டும். இன்னும் கூறப்போனால் உணவு என்பது ஒரு மனிதன் வாயைப் பார்த்து நாவைப் பார்த்து உண்ணக் கற்றுக் கொண்டிருக்கிறான். அப்படியல்ல வயிற்றைப் பார்த்து வயிற்றுக்கு எது சுகமோ வயிற்றுக்கு எது நன்மை தருமோ அப்படிதான் உண்ண பழக வேண்டும். உணவும் ஒரு கலைதான். இன்னும் கூறப்போனால் உணவு எனப்படும் இரை சரியாக இருந்தால் மாற்று இரை தேவையில்லை. அதாவது மாத்திரை தேவையில்லை என்பது உண்மையாகும். எனவே உடல் உழைப்பு சிந்தனை உழைப்பு இவற்றைப் பொறுத்து ஒரு மனிதன் உணவை தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவிலும் சாத்வீகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஒருவனின் அன்றாடப் பணிகள் என்ன? அதிலே உடல் சார்ந்த பணிகள் என்ன? உள்ளம் சார்ந்த பணிகள் என்ன? இவற்றையெல்லாம் பிரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல் உணவை பயன்படுத்த வேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் உணவைக் குறைத்துக் கொள்வதும் உணவிற்கு பதிலாக கனி வகைகளை சேர்த்துக் கொள்வதிலும் இன்னும் கூறப்போனால் மசை பண்டம் இன்னும் அதிக காரம் அதிக சுவையான பொருள்கள் செயற்கையான உணவு பொருள்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து உணவை ஏற்பதே சிறப்பாக இருக்கும்.

வயது தன்னுடைய உடலின் தன்மை அன்றாடம் செய்கின்ற பணியின் தன்மை மனநிலை இவற்றை பொருத்துதான் எப்பொழுதுமே உணவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் ஒருவன் எந்த சூழலில் இருக்கிறானோ எந்த தட்ப வெப்ப நிலையில் இருக்கிறானோ அதற்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட கவனம் வேண்டியது உணவை பகிர்ந்துண்டு ஏற்பது. அது மட்டுமல்லாமல் உயர்ந்த உணவாயிற்றே இதை வீணடிக்கக் கூடாது என்பதற்காக ஏற்காமல் உணவு வீணானாலும் உடல் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஏற்பதே சிறந்த உணவாக இருக்கும். உணவு நல்ல உணர்வை தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். சாத்வீக உணவாக இருக்க வேண்டும். எனவே உணவை ஒவ்வொரு மனிதனும் உண்ணும் பொழுது அந்த உணர்வை சிரமப்படுத்தாத உணவாகப் பார்த்து ஒரு உணவு உள்ளே செல்கிறதென்றால் அந்த உணவு பரிபூரணமாக செரிமானம் அதாவது ஜீரணம் அடைந்த பிறகே அடுத்ததொரு உணவை உள்ளே அனுப்பும் முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

காலம் தவறாமல் நாழிகை தப்பாமல் உண்ணுகின்ற முறையை பின்பற்ற வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் சமையல் செய்கின்ற ஒரு தருணம் ஒருவன் ஒரு அடுப்பிலே ஒரு பாத்திரத்தை ஏற்றி நீரை இட்டு அதிலே அரிசியை இட்டு அன்னம் சமைத்துக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அங்கே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால் மூன்று மனிதர்களுக்கு ஏற்ப அன்னம் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அன்னம் பகுதி வெந்துவிட்டது. இப்பொழுது மேலும் மனிதர்கள் அங்கே வந்துவிட்டார்கள். உடனடியாக ஆஹா இப்பொழுது சமைத்த உணவு பத்தாது. இப்பொழுது வெந்து கொண்டிருக்கும் இந்த அரிசியிலேயே இன்னும் மூன்று பேருக்குத் தேவையான அரிசியைப் போடுகிறேன் என்று யாராவது போடுவார்களா? மாட்டார்கள். இதை முழுமையாக சமைத்தப் பிறகு வேறொரு பாத்திரத்தில் மேலும் தேவையான அளவு சமைப்பார்கள். இந்த உண்மை சமைக்கின்ற அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏற்கனவே உண்ட உணவு அரைகுறையான செரிமானத்தில் இருக்கும் பொழுது மேலும் உணவை உள்ளே அனுப்புவது உடலுக்கு வியாதியை அவனாகவே வரவழைத்துக் கொள்வதாகும். ஒரு மனிதனுக்கு பெரும்பாலான வியாதிகள் விதியால் வராவிட்டாலும் அவன் மதியால் வரவழைத்துக் கொள்கிறான். விதியால் வந்த வியாதியை பிராத்தனையாலும் தர்மத்தாலும் விரட்டலாம். பழக்க வழக்கம் சரியில்லாமல் வருகின்ற வியாதியை மனிதன்தான் போராடி விரட்டும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவு என்பது நல்ல உணர்வை வளர்க்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் பக்குவமாக உணவை அகங்காரம் இல்லாமல் ஆத்திரம் இல்லாமல் வேதனை இல்லாமல் கவலையில்லாமல் கஷ்டமில்லாமல் நல்ல மன நிலையில் அதனை தயார் செய்ய வேண்டும். நல்ல மனநிலையில் அதனை பரிமாற வேண்டும். உண்ணுபவனும் நல்ல உற்சாகமான மன நிலையில் உண்ண வேண்டும். இதில் எங்கு குறை இருந்தாலும் அந்த உணவு நல்ல உணர்வைத் தராது.

ஜீவாத்மா பரமாத்மாவின் வடிவம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொ ன்றாமே. திருமந்திரம் பாடல் # 2011

முதலில் ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை 100 ஆக பிரிக்க வேண்டும். அந்த 100 இல் ஒன்றை எடுத்து அதை ஆயிரமாக பிரிக்க வேண்டும். அந்த ஆயிரத்தில் ஒன்றை எடுத்து நூறாயிரம் ஆக பிரிக்க வேண்டும். கணக்கின் பாடி பார்த்தால் ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பிரிக்க வேண்டும். இது அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மனிதனின் முடியானது 40-80 மைக்ரோனாக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்

பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரித்தால் 0.1 மில்லி மீட்டர் இதனை 100 ஆக பிரித்தால் = 0.001 மில்லி மீட்டர்

0.001 மில்லி மீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் = 0.000001 மில்லி மீட்டர்.

0.000001 மில்லி மீட்டர் இதனை நூறாயிரமாகப் (100,000) பிரித்தால் = 0.00000000001 மில்லிமீட்டர்

திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 மில்லிமீட்டர்.

தற்போதைய விஞ்ஞானம் ஒரு ஹைட்ரோஜென் அணுவின் சுற்றளவு 0.000000212 எனப் பிரித்திருக்கின்றது. திருமூலர் அதற்கும் கீழே சென்று ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லி மீட்டராகக் திருமூலர் கூறியிருக்கின்றார்.

கடவுளின் வடிவம் பற்றி திருமூலர்

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. திருமந்திரம் பாடல் # 2008

அணுவிற்குள் அணுவாகவும் அதற்கு அப்பாலும் இருப்பவன்தான் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து அந்த ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லவர்களுக்கு அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம்.

ஜீவாத்மாவுக்கு கூறப்பட்ட அணுவின் வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது இறைவன் வடிவம் என்று கூறுகின்றார்.

ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லிமீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் = 0.0000000000000001

மனிதனின் ஜீவாத்மா 0.00000000001 மில்லிமீட்டர் அளவு இருக்கும். இந்த ஜீவாத்மா அணுக்களுக்குள் அணுவாக இறைவன் இருப்பதாகக் கூறுகின்றார். அணுவிற்குள் மனித ஜீவாத்மா இருப்பதாகவும் அதை ஆயிரம் மடங்கிற்கும் மேல் பிளக்கும் போது அதில் இறைவன் இருக்கிறான் என்றும் திருமூலர் கூறியிருக்கின்றார்.