பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-39
சுலோகம் -86
பார்த்தனே இது வரை உனக்கு ஆத்ம ஞானம் பற்றி கூறினேன். இனி கர்ம யோக வழியில் சொல்கிறேன். நீ இந்த புத்தியோடு கூடியவனாகி கர்ம பந்தத்தை விலக்கி விடுவாய்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
ஆத்ம ஞானம் என்பது பரம்பொருளுக்கும் ஜூவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய ஞானம் ஆகும். ஆத்ம ஞானம் மோட்சம் பெறுவதற்கான ஒரு வழியாகும். இந்த ஆத்ம ஞானத்தைத் தெரிந்து கொண்ட பின்னர் இதன் வழியாக மோட்சம் அடைவதற்கான கர்மங்களை சரியாக செய்வதில் புத்தியை பயன்படுத்த வேண்டும். இதுவரையில் ஆத்ம ஞானம் பற்றி உனக்கு விளக்கமாக கூறினேன். நீ தெரிந்து கொண்ட இந்த ஆத்ம ஞானத்தின் வழியாக கர்ம யோகத்தில் உனது புத்தியை எவ்வாறு செலுத்த வேண்டும் என்று இனி கர்ம யோகம் பற்றி கூறுகிறேன். கர்ம பந்தம் என்பது கர்மம் மூலம் உண்டாகும் சம்சாரப் பிடிப்பு ஆகும். இதனையும் நீ அறிந்து கொண்ட பின்னர் கர்மத்தினால் உண்டாகும் விளைவுகள் குறித்து நீ கவலைப் படமாட்டாய் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.