யோகினி

64 யோகினிகளில் ஒருவரான யோகினி யமுனை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறாள். இந்த யோகினி ஒரு ஆமையின் மேல் ஒரு காலையும் அதன் வால் முனையின் மேல் மற்றொரு காலையும் வைத்து தன்னை சமநிலைப்படுத்திக் கொள்வதைக் காணலாம். இந்த யோகினிக்கு நான்கு கைகள் உள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பான அம்சம் இவளது தலையை சுற்றி சுருண்டு எழும்பியுள்ள ஜடாமுடி தான்.

அமைவிடம்: சௌசாத் யோகினி கோவில் ஹிராபூர் ஒடிசா மாநிலம்.

லலிதை

பிள்ளையார் முருகனுடன் லலிதை சிதிலமடைந்த நிலையில் சிற்பம். தற்போது பிரித்ததானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 11 ஆம் நூற்றாண்டு ஒடிசா கோயிலில் இருந்த சிற்பம்.

வள்ளிமலை வள்ளி

வள்ளி மலைக் கோவிலில் சுப்ரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்த ஜாம பூஜையில் தேனும் தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக் கோவிலில் குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில் கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன் வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. வள்ளி பாறைச் சிற்பமாக இங்கே அருள் பாலிக்கிறாள். இடம்: வேலூரில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள வள்ளிமலை.

திரிபுர பைரவி

தசமஹாவித்யா என்ற 10 பெரும் தேவியரில் திரிபு ரபைரவி தேவியும் ஒரு சக்தி. ஆதி சக்தியான காளியே சம்ஹார காலத்தில் பைரவி உருவை எடுத்து அருள்கிறாள். பைரவ சக்திக்கெல்லாம் மூலமானவள் திரிபுர பைரவி. சிவப்பரம்பொருள் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர்.

அந்தகனாக உள்ள அசுரனை சிவபெருமானார் ஆட்கொண்ட பிறகு மலைகளில் உறைந்து சிவார்ச்சனை விதிகளையும் தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும்படி பைரவர்களைப் பணித்தார் சிவனார். அவர்கள் வேண்டிய சக்தியைப் பெற்றிட எல்லாம் வல்ல பராசக்தியை பைரவி உருவில் தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார். அதன்படி அனைத்து பைரவ சக்திகளும் உண்டாயினர்ர்ந்த சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே திரிபுர பைரவி எனப் போற்றப்படுகிறாள். மும்மூர்த்திகளை சிருஷ்டி செய்வதாலும் முன்னரே இருப்பதாலும் மூன்று வேதங்களின் ஸ்வரூபமாக விளங்குவதாலும் உலகம் அழிந்த பின்னும் முன்போலவே உலகை பூர்த்தி செய்வதாலும் சரஸ்வதி லட்சுமி காளி ஆகிய முப்பெரும் தேவியரும் இவளின் அங்கமாக விளங்குவதாலும் ஸ்தூலசூட்சும காரண சரீரங்களில் உள்ளவள் என்பதாலும் இந்த சக்தியை திரிபுரை அல்லது திரிபுர பைரவி என்று போற்றுகின்றனர். இடம்: கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரம்.

நாராயணி

ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று. இடம்: கங்காஜடாதீஸ்வரர் கோவில் கோவிந்தபுத்தூர் அரியலூர் மாவட்டம்.

பார்வதிதேவி

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகைக் கொண்ட இந்த சோழர் காலத்தைச் சேர்ந்த பார்வதிதேவியின் வெண்கலச் சிலை நியூயார்க்கில் உள்ள தி மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட் என்ற மியூசியத்தில் தற்போது உள்ளது.

கிளி முகம் கொண்ட யோகினி உமாதேவி

தாந்த்ரீக வழிபாடு முறையின் யோகினியான கிளி முகம் கொண்ட பெண் தெய்வமான உமாதேவி இவள். ஒரு ஆட்டுக் குட்டியின் முகத்தைக் கொண்ட குழந்தையைப் பிடித்துக் கொண்டு காட்டுப் பன்றியின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள்.

காலம் 11 – 12 ஆம் நூற்றாண்டு இடம் ஹிராபூர் புவனேஸ்வரில் கண்டெடுக்கப்பட்ட இந்த பழமையான சிலை தற்போது குவாலியர் மாநில அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

துர்கை

நடனத் தோரணையில் ஒய்யாரமாக நிற்கின்ற துர்கை என்று அழைக்கப்படும் கொற்றவை. இடம் சோமேஸ்வரர் கோவில் தும்கூர் மாவட்டம் கர்நாடக மாநிலம்.