யானையின் தலையைக் கொண்ட பெண் தெய்வம் ஆவார். இவரைப் பற்றிய வரலாறு புராணங்ககளில் தெளிவாக சொல்லப்படவில்லை. விநாயகி தெய்வத்தின் உருவங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இவரது யானை உருவ அம்சங்கள் காரணமாக இத்தெய்வம் யானைத் தலையை உடைய ஞான கடவுளான விநாயகருடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இவருக்கு நிலையான பெயர் இல்லாததால் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். ஸ்திரீ கணேசா விநாயகி விக்னேசுவரி மற்றும் கணேசனி போன்றவை இவரது பெயர்களாக உள்ளது. இந்தப் பெயர்கள் அனைத்தும் விநாயகர் கஜானனா விக்னேசுவரா மற்றும் விநாயகர் ஆகியோரின் பெண்ணிய வடிவங்கள் ஆகும். விநாயகி சில சமயங்களில் அறுபத்து நான்கு யோகினிகள் அல்லது சப்தகன்னியர் தெய்வங்களின் ஒரு பகுதியாகவும் காணப்படுகிறார்.
வட நாட்டில் தனிக்கோயில்கள் உள்ளன. தமிழகத்திலும் சில கோயில்களில் கோயில் மண்டபத்தூண்களில் பெண் உருவில் காட்சி தரும் விநாயகியைக் காணலாம். நாகர்கோயில் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள தூண் ஒன்றில் விநாயகியின் திருஉருவத்தைத் தரிசிக்கலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் வலப்புறமுள்ள தண்டபாணி சன்னிதியின் முன்புறமுள்ள ஒரு மண்டபத் தூணில் விநாயகத் தாரணி எனப்படும் விநாயகியைக் காணலாம். தாரணி என்றால் அழகு பொருந்திய மேன்மையான பெண் என்று பொருள். இவரது பாதம் புலியின் கால்களைப் போல் உள்ளது. எனவே இவருக்கு வியாக்ர பாத விநாயகி என்று பெயர். கையில் வீணையுடன் காட்சி தரும் விநாயகியின் திருவுருவை கோவை மாவட்டம் பவானி பகுதியில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் சந்நிதியின் மேல்மண்டபத்தில் காணலாம். இடுப்பிற்குக் கீழே யாளி வடிவமுடனும் கைகளில் வாள் மழு கதை கேடயம் ஆகியவற்றுடன் காட்சி தரும் விநாயகி திருவுருவத்தை நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூரில் உள்ள கோயிலில் தரிசிக்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவிலில் ஒரு தூணில் விநாயகியின் சிற்பம் அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து இடக்காலை தொங்கவிட்ட நிலையில் காணப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சிவாலயம் மற்றும் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அம்மன் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும் விநாயகி திருஉருவத்தைத் தரிசிக்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக்கு முந்தைய விநாயகியின் கல் சிற்பம் ஒன்று இந்திய தொல்லியல் துறை குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகியின் சிலை கிரானைட் கல்லால் செய்யப்பட்ட 3 அடி உயரம் கொண்ட சிற்பமாகும்.
சமண மற்றும் பௌத்த மரபுகளில் விநாயகி ஒரு சுதந்திர தெய்வமாக போற்றப்படுகிறார். பௌத்த படைப்புகளில் இவர் கணபதி ஹிருதயா (விநாயகரின் இதயம்) என்று அழைக்கப்படுகிறார். முதன் முதலில் அறியப்பட்ட யானைத் தலையுடன் கூடிய விநாயகியின் தெய்வ உருவம் ராஜஸ்தானின் ரைரில் காணப்படுகிறது. இந்த உருவம் முதல் நூற்றாண்டை சார்ந்ததாக உள்ளது. இத்தெய்வத்தின் யானை முகத்தில் இருக்கும் தும்பிக்கை வலதுபுறம் திரும்பியுள்ளது. மேலும் இரண்டு கைகளைக் கொண்டுள்ளது. இதன் கைகளில் உள்ள சின்னங்களும் பிற அம்சங்களும் அழிந்துள்ளதால் தெய்வத்தை தெளிவாக அடையாளம் காண முடியவில்லை. இந்த தெய்வத்தின் மற்ற சிற்பங்கள் பத்தாம் நூற்றாண்டு முதல் காணப்படுகின்றன. விநாயகியின் மிகவும் பிரபலமான சிற்பங்களில் ஒன்று மத்தியப் பிரதேசத்தின் பெடகாட் நகரத்திலுள்ள சௌசத் யோகினி கோயிலில் நாற்பத்தியொன்றாவது யோகினியாக காணப்படுகிறது. இந்த தெய்வம் இங்கே ஸ்ரீஐங்கினி என்று அழைக்கப்படுகிறது. இங்கே விநாயகியின் வளைந்த இடது காலை யானை தலை கொண்ட விநாயகர் ஆதரிப்பது போல காணப்படுகிறது.
விநாயகியின் ஒரு அரிய உலோக சிற்பம் ஷிராலியின் சித்ராபூர் மடத்தில் காணப்படுகிறது. இங்கு இவர் விநாயகரைப் போல் இல்லாமல் மெல்லிய தோற்றத்தில் காணப்படுகிறார். இவரது மார்பின் குறுக்கே பூணூல் எனப்படும் புனித நூல் காணப்படுகிறது. மேலும் கழுத்தில் இரண்டு ஆபரணங்களை அணிந்துள்ளார். இவருடைய இரண்டு முன் கைகள் அபயம் மற்றும் வரம் கொடுக்கும் முத்திரைகளில் உள்ளது. இவருடைய இரண்டு பின்புற கைகளில் ஒரு வாள் மற்றும் ஒரு கயிறு காணப்படுகிறது. இவருடைய தும்பிக்கை இடது பக்கம் திரும்பியுள்ளது.












