ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 49

ராமர் சீதை லட்சுமணன் மூவரும் தங்களது வணக்கத்தை அனைவருக்கும் சொல்லி விட்டு புஷ்பக விமானத்தில் ஏறினார்கள். ராமரின் வேண்டுகோளுக்கிணங்க விபீஷணன் வானரங்கள் அனைவருக்கும் அவர்களது தகுதிக்கேற்றபடி செல்வங்களை கொடுத்து கௌரவித்தான். இதனைக் கண்டு திருப்தி அடைந்த ராமர் அனைவரிடமிருந்தும் விடை பெற்றார். புஷ்பக விமானம் கிளம்ப ஆயத்தமாக இருந்த போது விபீஷணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். வானர தலைவர்கள் அனைவரும் தங்களுடன் அயோத்திக்கு வர விரும்புகின்றார்கள். அவர்களுடன் நானும் தங்களுடன் வர விரும்புகின்றேன் தயவு செய்து எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் சிறிது நாள் உங்களுடன் இருந்து விட்டு எங்கள் இருப்பிடம் திரும்பி விடுவோம் என்று கேட்டுக் கொண்டான். இதனைக் கேட்ட ராமர் உங்களுடன் அயோத்திக்கு செல்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறுங்கள் என்றார். சுக்ரீவன் தனது படைகளை கிஷ்கிந்தை செல்லுமாறு உத்தரவிட்டு அனுமனுடனும் சில வானர தலைவர்களுடனும் விபீஷணனுடனும் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டான். புஷ்பக விமானம் அங்கிருந்து கிளம்பியது.

ராமர் பரத்வாஜருக்கு மரியாதை செய்யும் பொருட்டு அவரது ஆசிரமத்திற்கு முதலில் வந்து இறங்கினார். ராமரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பரத்வாஜர் ராமரிடம் பேச ஆரம்பித்தார். நீ இங்கிருந்து கிளம்பியது முதல் யுத்தத்தில் ராவணனை அழித்தது வரை நடந்த அனைத்து சம்பவங்களையும் எனது தவத்தின் சக்தியால் தெரிந்து கொண்டேன் அரிய பல செயல்களை செய்து உனது பராக்கிரமத்தை காட்டியிருக்கிறாய். இந்த நேரத்தில் எனது வேண்டுகோள் ஒன்றே இங்கே வைக்கின்றேன். இன்று ஒரு நாள் இங்கேயே தங்கி எனது விருந்து உபசாரங்களை ஏற்றுக் கொள்ளுமாறு ராமரிடம் கேட்டுக் கொண்டார். ராமரும் அங்கே தங்குவதற்கு சம்மதம் தெரிவித்து பரதனைப் பற்றியும் அயோத்தியில் உள்ளவர்களைப் பற்றியும் பரத்வாஜரிடம் விசாரித்தார். அதற்கு பரத்வாஜர் அனைத்து செல்வங்களும் வசதிகளும் இருந்தாலும் மருஉரி தரித்து தவ வாழ்க்கை வாழ்ந்து வரும் பரதன் உனது பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்துக் கொண்டே அரசாட்சி செய்து வருகின்றான். பரதன் உட்பட அயோத்தியில் உள்ளவர்கள் நீ எப்போது வருவாய் என்று உனது வருகைக்காக காத்திருக்கிறார்கள் என்றார்.

ராமர் பரத்வாஜர் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் சிந்தித்து அனுமனை அழைத்து பேச ஆரம்பித்தார். இங்கிருந்து உடனடியாக கிளம்பி அயோத்திக்கு செல்லும் வழியில் இருக்கும் வேடர்களின் தலைவன் குகனை சந்தித்து எனது நலத்தை சொல்லிவிட்டு நாளை அயோத்திக்கு செல்லும் வழியில் சந்திப்பதாக செய்தி சொல்லிவிடு. அங்கிருந்து கிளம்பி அயோத்திக்கு சென்று பரதனை சந்தித்து ராமர் சீதை லட்சுமணனுடன் அவர்களது நண்பர்களுடன் அயோத்திக்கு நாளை வருகின்றார்கள் என்று செய்தியை சொல்லிவிடு என்றார். பரதனிடம் சொல்லும் போது அவனின் முகக்குறிப்புகள் பேச்சு ஆகியவற்றை வைத்து அவனது உள்ளத்தை அறிந்து கொள்ள முயற்சி செய். பதினான்கு ஆண்டு காலம் பரதன் அயோத்தியை ஆட்சி செய்திருக்கிறான். இனி வரும் நாட்களிலும் அயோத்திக்கு அரசனாக இருந்து ஆட்சி செய்ய விரும்பினால் அப்படியே ஆட்சி செய்யட்டும். இதனால் எனக்கு மகிழ்ச்சியே மீண்டும் காட்டிற்கு சென்று தவ வாழ்க்கை வாழ்ந்து கொள்வேன். இந்த காரியத்தை நாளை இங்கிருந்து நாங்கள் அனைவரும் கிளம்புவதற்குள் செய்து முடித்து விடு என்று கேட்டுக் கொண்டார். ராமரை வணங்கிய அனுமன் தன்னுடைய உடலை மானிட ரூபத்திற்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். குகனிடம் செய்த்தியை சொல்லி விட்டு அயோத்தியை சென்றடைந்தார். நகரத்தின் வெளியே ஒரு கிராமத்தில் இளைத்த உடலுடன் முகம் வாடி மான் தோலை உடுத்திக் கொண்டு இருந்த பரதனைக் கண்ட அனுமன் அவர் இருக்கும் குடிலுக்குள் சென்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.