ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 9

ராமரிடம் அனுமன் தொடர்ந்து பேசினார். எதிரிகள் கூட்டத்தில் இருந்து ராட்சசன் ஒருவன் வந்ததும் அவனை எப்படி நம்புவது என்று பலரும் வந்தவர்களை சந்தேகத்தோடு பார்த்தார்கள். சிறிது நாள் அவர்களை சேர்த்துக் கொண்டு கண்காணிக்கலாம் என்றும் அவர்களின் குணத்தை அறிந்து பின்பு சேர்த்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். சரணடைந்தவர்களை சேர்த்து கொண்ட பிறகு அவர்கள் மேல் சந்தேகப்படுகிறோம் என்று தெரிந்தாலே நம் மீதான நம்பிக்கை குறைந்து விடும். முன்பு நம்மிடம் நடந்து கொண்டது போல் விசுவாசமாக அவர்களால் நடந்து கொள்ள முடியாது. இது இயற்கையாக அனைவருக்கும் இருக்கும் சுபாவம். நாம் அவர்களிடம் ஏதோ குற்றத்தை தேடுகிறோம் என்று சுதந்திரமாக இல்லாமல் நம்மிடம் பயத்துடனே இருப்பார்கள். ஒருவன் பொய் பேசினால் அவனது முகம் காட்டிக் கொடுத்து விடும். இது நீதி சாஸ்திரம் சொல்லும் உண்மை. வந்திருக்கும் ராட்சசர்களின் முகத்தையும் பேச்சையும் பார்க்கும் போது அவர்கள் உண்மையை பேசுகின்றார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. அவர்கள் மீது எனக்கு எந்த விதமான சந்தேகமும் வரவில்லை. ராவணனின் பராக்கிரமத்தை முழுவதுமாக அறிந்தவன் விபீஷணன். ஆனாலும் ராவணன் தங்களிடம் தோல்வி அடைவான் என்பதை தன் அறிவின் மூலம் உணர்ந்து கொண்டான்.

ராமர் யாராலும் வெற்றி பெற முடியாத வாலியை அழித்து சுக்ரிவனிடம் ராஜ்யத்தை கொடுத்தார் என்பதை விபீஷணன் நன்கு அறிவான். அதன்படி ராவணனை நீங்கள் அழித்த பிறகு இலங்கைக்கு விபீஷணனை அரசனாக்கி விடுவீர்கள் என்ற திட்டத்தில் தற்போது உங்களை சரணடைய வந்திருக்கிறான் என்பது என்னுடைய கருத்து. விபீஷணன் அவ்வாறு திட்டமிட்டு நடந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் இத்திட்டத்தில் அவன் ராவணனுக்கு எதிராக வஞ்சகம் ஒன்றும் செய்யவில்லை. தான் பிறந்த நாடு அழியாமல் பாதுகாக்கும் நன்மை கருதி தர்மத்தின் படியே நடந்து கொள்கிறான். விபீஷணன் உண்மையில் உங்களை சரணடைய வந்திருக்கிறான் என்றே நான் எண்ணுகிறேன். ஆகவே வந்திருக்கும் ராட்சசர்களின் மீது சந்தேகப்படாமல் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என்னுடைய கருத்து. என்னுடைய புத்திக்கு எட்டிய வரை சொன்னேன். தாங்கள் எப்படி சொல்கிறீர்களோ அதன் படியே செய்து கொள்ளலாம் என்று பேசி முடித்தார் அனுமன்.

ராமருக்கு அனுமன் சொன்ன கருத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் பலரும் பல விதங்களில் ஆலோசனைகளை சொன்னார்கள். அனைவரது கருத்துக்களையும் பொறுமையாக கேட்ட ராமர் பேச ஆரம்பித்தார். வந்திருக்கும் ராட்சசர்கள் நட்பு நாடி சரணடைய வந்திருப்பதாக சொல்கிறார்கள். சரணம் என்று சொல்லி என்னிடம் வந்தவர்களை ஒதுக்கித் தள்ளக் கூடாது என்பது என்னுடைய தர்மம். எனக்கு நண்பனாக வந்திருந்து எனக்காக இத்தனை வேலைகளை செய்யும் நீங்கள் அனைவரும் இதனை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் வந்தவர்கள் வஞ்சகம் செய்து ஏமாற்ற வரவில்லை என்று முழுமையாக தெரிந்து விட்டால் அவர்களிடம் குற்றம் காண கூடாது என்றார். இதனை கேட்ட சுக்ரீவன் சமாதானமடையாமல் தனது வருத்தத்தை ராமரிடம் தெரிவித்து தனது கருத்தை தெரிவித்தான். தங்களது கருத்துப்படி இந்த ராட்சசன் நல்லவனாகவே இருக்கலாம். ஆனால் தனது சொந்த அண்ணன் ஆபத்தில் சிக்கிய இந்த சமயத்தில் அவனைக் கைவிட்டு நம்மிடம் நட்பு வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்திருக்கிறான். இது போல் நாம் ஆபத்தில் சிக்கி இருக்கும் போது நம்மையும் இது போலவே கைவிட்டு செல்வான். இவனை எப்படி நம்புவது அண்ணன் ஆபத்திலிருக்கும் போது கைவிட்டு வந்தவனால் நம்மையும் கைவிட மாட்டான் என்று எப்படி நம்புவது என்றான் சுக்ரீவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.