ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 15

ராமர் தனது படைகளை ராவணன் கோட்டையின் நான்கு பக்கங்களும் இருக்கும் ராட்சசர்களின் வலிமைக்கு ஏற்ப நான்காக பிரித்தார். கிழக்குப் பக்கம் இருக்கும் பிரஹஸ்தனை எதிர்க்க நீலனை நியமித்தார். தெற்கே இருக்கும் மகோதரனையும் மகாபாரிசுவனையும் எதிர்க்க அங்கதனை நியமித்தார். மேற்கே இருக்கும் இந்திரஜித்தை எதிர்க்க அனுமனை நியமித்தார். வடக்கே இருக்கும் ராவணனை நானும் லட்சுமணனும் எதிர்ப்போம். எங்களுடன் சுக்ரீவனும் ஜாம்பவானும் விபீஷணனும் இருக்கட்டும் என்றார். காலையில் சுவேலே மலை மீது ஏறி ராவணனின் கோட்டையை பார்த்த ராமர் அதன் அழகை பார்த்து வியந்தார். திரிகூட மலை மேல் மனதைக் கவரும் அழகுடன் ஜொலித்த நகரம் ஆகாயத்தில் தொங்குவது போல் காட்சி கொடுத்தது. கோட்டையின் மதிலை காவல் காத்து நின்ற ராட்சசர்கள் இன்னோரு மதில் சுவர் போல் காணப்பட்டனர். மாட மாளிகையின் அழகையும் செல்வத்தையும் பார்த்த ராமர் ராவணனை நினைத்து வேதனைப் பட்டார். நற்குலத்தில் பிறந்து அதன் பெருமையை அறிந்த ராவணன் தனது மூர்க்கத்தனத்தால் தானும் அழிந்து தனது குலத்தையும் இவ்வளவு செல்வத்தையும் தனது அகங்காரத்தினால் அழிக்கப் பார்க்கின்றானே என்று வருத்தப்பட்டார். நமது சிந்தனையை ராவணை அழிப்பதில் செலுத்துவோம் தேவையில்லாத சிந்தனை செய்தால் பிறகு குழப்பம் உண்டாகும் என்று தனது சிந்தனையை திருப்பி படைகளுக்கு உத்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

ராமர் அனைத்து படைகளுக்கும் யுத்தத்தில் செய்ய வேண்டியதையும் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் சொல்ல ஆரம்பித்தார். ராட்சசர்கள் யுத்தம் நடக்கும் நேரத்தில் பல மாய வேடங்களில் வந்து நம்மை குழப்புவார்கள். ஆகவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ராட்சசர்கள் வானர வேடத்தையும் கரடி வேடத்தையும் போட்டு நம்மிடம் வந்து யுத்தம் செய்ய அவர்களின் கர்வம் இடம் தராது. எனவே வேறு பல பயங்கரமான பெரிய வேடங்களில் வந்து நம்மை பயமுறத்துவார்கள். அவர்களின் உருவம் மற்றும் ஆயுதங்கள் வேண்டுமானால் பெரியதாகவும் கொடூரமானதாகவும் இருக்கலாம். ஆனால் நம்முடைய வலிமைக்கு முன்பு அவர்களின் வலிமை மிகவும் குறைவு. அவர்களின் உருவத்தை பார்த்து நாம் பயப்படாமல் யுத்தம் செய்தால் வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும். இதனை அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நமது வானர படைகளும் கரடி படைகளும் தங்களது சொந்த வடிவத்திலேயே யுத்தம் செய்யட்டும் என்று சொல்லி முடித்தார். அனைவரும் அங்கிருந்து கிளம்பி ராவணன் கோட்டையை நோக்கி கிளம்பினார்கள். கடற்கரைக்கு அடுத்த காட்டை வானர படைகள் கடக்கும் போது அங்கிருக்கும் மிருகங்கள் இவர்களின் கூட்டத்தை பார்த்து பயந்து அங்கும் இங்கும் ஓடியது. ராவணனின் கோட்டையை பார்த்த வானர வீரர்களுக்கு யுத்தம் செய்யும் ஆர்வம் மேலோங்கி உற்சாக மிகுதியில் கத்திக்கொண்டே விரைவாக சென்றார்கள்.

ராமரின் பின்னே சென்று கொண்டிருந்த சுக்ரீவன் தனது யுத்த ஆர்வத்தினால் ஒரே தாவலில் ராவணன் இருக்கும் மாளிகையின் உச்சிக்கு சென்று அமர்ந்தான். அங்கே ராவணன் தனது பரிவாரங்களோடு அமர்ந்திருந்தான். ராவணனை கண்ட சுக்ரீவன் ராவணா என்னிடம் நீ இன்று சிக்கினாய் இன்றோடு நீ அழிந்தாய் என்று ராவணனின் மேல் பாய்ந்து ராவணனின் கீரிடத்தை தள்ளி ராவணனை ஓர் அறை அறைந்தான். தன்னை தாக்க யாரும் இல்லை என்ற கர்வத்தில் இருந்த ராவணனுக்கு விழுந்த அடியில் அவனுக்கு சிறிது நேரம் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. உடனே சுதாரித்துக் கொண்ட ராவணன் தானும் யுத்தத்திற்கு தயாரானான். இருவருக்கும் இடையே பெரிய மல்யுத்தம் நடந்தது. இருவரும் மல்யுத்தத்தில் வல்லவர்கள். இருவரும் தங்களது வலியையையும் திறமையையும் காட்டி சண்டையிட்டார்கள். சிறிது நேரத்தில் சுக்ரீவனுடன் சண்டையிட ராவணன் மிகவும் கஷ்டப்பட்டான். அதனால் தனது மாய வித்தையை காட்ட ஆரம்பித்தான். இதனை சமாளிக்க முடியாத சுக்ரீவன் உடனே மீண்டும் தாவி ராமர் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.