ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 42

ராமர் லட்சுமணன் வீழ்ந்து கிடப்பதை கண்டதும் சுக்ரீவனிடமும் அனுமனிடமும் லட்சுமணனை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக அவனுடனேயே இருங்கள் என்று உத்தரவிட்டார். லட்சுமணனை தாக்கிய சக்தி அம்பை அவனது உடலில் இருந்து எடுக்க வானர வீரர்கள் அனைவரும் முயற்சி செய்தனர். எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. ராமர் லட்சுமணனின் உடலில் இருந்த அம்பை எடுத்து அவனின் காயத்திற்கு தேவையான மூலிகைகளை எடுத்து வருவாறு அனுமனுக்கு உத்தரவிட்டார் ராமர். அனுமன் மூலிகையை எடுக்க விரைந்து சென்றார். மூலிகை வந்ததும் சரியான படி உபயோகித்து லட்சுமணனை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று ஜாம்பவானிடமும் சுக்ரீவனிடமும் சொல்லிய ராமர் ராவணனை நோக்கி முன்னேறிச் சென்றார். ராமருக்கும் ராவணனுக்கும் நடக்கும் யுத்தத்தை பார்க்க தேவர்களும் கந்தர்வர்களும் முனிவர்கள் பலரும் வந்தார்கள். ராமருக்கும் ராவணனுக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. ராவணன் தனது தேரில் இருந்து ராமரை சுற்றிய வண்ணம் தனது வலிமையை காட்டி யுத்தம் செய்தான். ராமர் கீழே நின்ற படி ராவணனுக்கு இணையாக யுத்தம் செய்தார். அப்போது வானத்தில் இருந்து நவரத்தினங்கள் மின்ன தங்கத்தினால் செய்யப்பட்ட பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு ஒரு தேர் வந்து ராமரின் முன்பாக நின்றது.

ராமர் இது ராவணனின் மாயமாக இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்தார். அப்போது தேரின் சாரதி ராமரை வணங்கி நின்று அவரிடம் பேச ஆரம்பித்தான். நான் தேவேந்திரனின் தேரோட்டி எனது பெயர் மாதலி. இந்த தேர் தங்கள் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்வதற்காக தேவேந்திரன் அனுப்பியுள்ளான். இந்த தேரில் தங்களுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் உள்ளது. தேவேந்திரனின் தோல்வி என்பதை அறியாத சக்தி அஸ்திரமும் உள்ளது. இந்த தேரில் அமர்ந்து ராவணனை எதிர்த்து யுத்தம் செய்து அவனை கொன்று வெற்றி பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டான். ராமர் இந்திரனின் தேரை வலம் வந்து வணங்கி தேரில் ஏறி ராவணனுடம் யுத்தம் செய்தார். இதனை கண்ட ராவணன் ராமரின் மீது ராட்சச அஸ்திரங்களையும் நாக அஸ்திரங்களையும் தொடர்ந்து எய்து கொண்டே இருந்தான். நாக அஸ்திரம் சீறிப் பாய்ந்து ராமரின் தேரை சுற்றி நெருப்பையும் விஷத்தையும் கக்கியது. ராமர் ராட்சச அம்புகளை சமாளித்து நாக அஸ்திரத்திற்கு எதிர் அஸ்திரமாக கருடன் அஸ்திரத்தை எய்தார். கருடன் அஸ்திரம் அனைத்து நாக அஸ்திரத்தையும் அழித்தது. இதனால் கோபம் கொண்ட ராவணன் ராமர் இருந்த தேரின் குதிரைகளை தனது அம்புகளால் காயப்படுத்தி தேரின் கொடியை அறுத்தான். குதிரைகள் காயமடைந்ததால் ராமரின் வேகத்திற்கு தேரால் ஈடு கொடுக்க முடியவில்லை. ராமர் மீது ராவணன் நொடிப்பொழுதும் இடைவிடால் அம்மை எய்து கொண்டே இருந்தான். இதனை பார்த்த தேவர்களும் கந்தர்வர்களும் சிறிது மனக்கலக்கத்தை அடைந்தார்கள்.

ராமர் ராவணனின் அனைத்து அம்புகளையும் முறியடித்தார். ராவணன் மீது ராமரின் கோபம் சிறிது சிறிதாக அதிகரித்தது. உடனே ராவணனை அழிக்க எண்ணிய ராமரின் பலம் பராக்கிரமம் அஸ்திரங்களின் வலிமை அனைத்தும் இரண்டு மடங்காக கூடியது. தனது அஸ்திரங்களை உபயோகப்படுத்தி ராவணன் மீது அம்பு மழை பொழிந்தார் ராமர். அதனை எதிர்பார்க்காத ராவணன் எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் கலங்கி நின்றான். ராமரின் அம்புகள் தொடர்ந்து ராவணனை துளைக்க அவமானத்தால் தலை குனிந்த ராவணன் மயக்க நிலைக்கு சென்றான். அதனை கண்ட ராவணனின் தேரோட்டி தேரை யுத்த களத்தில் இருந்து வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்றான். சிறிது நேரம் கழித்து கண் விழித்த ராவணன் தனது தேரோட்டி மீது கோபம் கொண்டான். யுத்த களத்தில் இருந்து இத்தனை தூரம் என்னை கொண்டு வந்து விட்டாய் நான் பயந்து ஓடி விட்டேன் என்று அனைவரும் எண்ணுவார்கள் என்று கோபத்தில் திட்டிய ராவணன் விரைவாக மீண்டும் யுத்த களத்திற்குள் செல் என்று கட்டளையிட்டான். ராவணனின் வார்த்தைகளில் பயந்த தேரோட்டி தேரை மீண்டும் யுத்த களத்திற்குள் ராமரின் முன்பாக கொண்டு சென்று நிறுத்தினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.