ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 23

ராமர் துயரத்துடன் இருப்பதை பார்த்த விபீஷணன் அவருக்கு ஆறுதல் சொல்ல தனது ராட்சச சுயரூபத்தில் அங்கு வந்தான். இதனை கண்ட வானர படைகள் இந்திரஜித் மீண்டும் திரும்பி வந்து விட்டான் என்று எண்ணி சிதறி ஓட ஆரம்பித்தார்கள். இதனை கண்ட சுக்ரீவன் ஏன் வானர வீரர்கள் சிதறி ஒடுகின்றார்கள் என்று குழப்பமடைந்து அங்கதனை பார்த்து கேட்டான். அங்கதனும் புரியாமல் விழித்தான். அவர்களின் அருகில் விபிஷணன் வந்ததை பார்த்ததும் அவர்களுக்கு புரிந்தது. விபீஷணனின் பெரிய ராட்சச உருவத்தை பார்த்து இந்திரஜித் வந்து விட்டான் என்று ஓடுகின்றனர் என்பதே உணர்ந்த சுக்ரீவன் ஜாம்பவான் மூலமாக வானர வீரர்களிடம் வந்திருப்பது விபீஷணன் என்று புரிய வைத்து அனைவரையும் அமைதிப் படுத்தினான். விபீஷணன் ராம லட்சுமணர்களின் மீது நாக பாணம் பாய்ந்து கிடப்பதை பார்த்து காரியம் அனைத்தும் கெட்டு விட்டது இனி என்ன செய்வது என்று கண்ணீர் வடித்தான். இதனை கண்ட சுக்ரீவன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினான். தனது உறவினன் சுஷேணனே அழைத்து ராம லட்சுமணர்களை கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் அந்த ராவணனே அழித்துவிட்டு சீதையை அழைத்து வருகிறேன் என்றான் சூக்ரீவன். அதற்கு சுஷேணன் ராம லட்சுமணர்களின் காயத்திற்கு மூலிகை மருந்துகள் இருக்கிறது. மூலிகைகள் இருக்கும் இடம் நம்மில் பலருக்கு தெரியும். அனுமனிடம் சொன்னால் மூலிகையை உடனே கொண்டு வந்து விடுவார். அதனை வைத்து விரைவில் ராம லட்சுமணர்களே குணப்படுத்தி விடலாம் என்றான். அப்போது காற்றின் சத்தம் அதிகமானது சத்தத்திற்கு நடுவே மிகப்பெரிய கருடன் ஒன்று பறந்து வந்தது.

ராமர் லட்சுமணர்களின் அருகே வந்த கருடன் இருவரையும் தடவிக் கொடுத்தது. உடனே இருவரின் மீதிருந்த அம்புகள் அனைத்தும் மறைந்தது. கருடன் இருவரின் உடலில் இருந்த காயங்கள் மீது தடவிக் கொடுத்தான். இருவரின் மேலிருந்த காயங்கள் அனைத்தும் மறைந்து மிகவும் பலத்துடனும் பொலிவுடனும் எழுந்து அமர்ந்தார்கள். ராமர் லட்சுமணன் எழுந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவனை அணைத்துக் கொண்டார். வானர வீரர்கள் அனைவரும் ராம லட்சுமணர்கள் எழுந்ததை பார்த்து மகிழ்ந்து ராம லட்சுமணர்கள் வாழ்க என்று கோசமிட்டார்கள். ராமர் முன்னை விடவும் உற்சாகமாய் இருப்பதை உணர்ந்து மிகவும் ஆச்சரியமடைந்தார். கருடனை பார்த்து தாங்கள் யார் என்று கேட்டார் அதற்கு கருடன் நான் உனக்கு நண்பன். இந்திரஜித் தன்னுடைய மாயத்தினால் பாம்புகளை அம்புகளாக்கி உங்கள் மீது எய்தான். பாம்புகளின் விஷத்தன்மையால் இருவரும் கட்டப்பட்டு இருந்தீர்கள். உங்கள் தவ சக்தியின் மிகுதியால் உங்களால் கண் விழிக்க முடிந்தது. பாம்புகளின் சத்ருவான கருடனான என்னை கண்டதும் பாம்புகள் ஓடிவிட்டது. நீ தொடர்ந்து யுத்தம் செய்யலாம் உனக்கு வெற்றி உண்டாகும். நான் யார் என்பதை நேரம் வரும் போது சொல்கிறேன். இப்போது யுத்தத்தில் உங்களுடைய கவனத்தை செலுத்துங்கள் நான் வருகிறேன் என்று கருடன் அங்கிருந்து சென்றது.

ராம லட்சுமணர்கள் மீண்டும் தங்களின் முழுமையான பலத்துடன் யுத்தம் செய்ய வருகின்றார்கள் என்று தெரிந்ததும் வானர படைகள் தங்கள் பயத்தை விட்டு உற்சாகத்துடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார்கள். ஆராவாரத்துடன் சென்ற வானர படைகள் ராவணனின் கோட்டையை தாக்க ஆரம்பித்தார்கள். கோட்டைக்கு வெளியே வானரர்களின் ஆரவாரத்தை கேட்ட ராவணன் ஆச்சரியப்பட்டான். அருகில் இருந்தவர்களிடம் ஏன் இந்த வானர படைகள் உற்சாகத்துடன் நம்மை நெருங்கி வருகின்றார்கள். ராம லட்சுமணர்கள் நாக பாணத்தால் மயங்கிக் கிடக்கிறார்கள் விரைவில் இறந்து விடுவார்கள். இதனை நினைத்து கவலைப்பட வேண்டியவர்கள் மகிழ்ச்சியுடன் யுத்தத்திற்கு வருகின்றார்கள். இதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் அது என்ன என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.