ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 21

ராமர் வாழ்க லட்சுமணன் வாழ்க ராம லட்சுமணர்களுக்கு வெற்றி என்ற கர்ஜனையுடன் வானர சேனைகள் இலங்கை நகரத்திற்குள் முன்னேறிச் சென்றார்கள். இதனை கண்ட ராவணன் பெரும் ராட்சசர்களின் படையை அனுப்பி வைத்தான். சங்குகள் பேரிகைகள் முழங்க ராட்சச வீரர்களும் கடல் அலைகள் போல் கிளம்பி வானர வீரர்களை கொடூரமான ஆயுதங்களை கொண்டு தாங்கினார்கள். ராட்சச படைகளுக்கும் வானர படைகளுக்கும் பெரும் யுத்தம் தொடங்கியது. வானர வீரர்கள் பெரிய பாறைகளையும் மரங்களை வேரோடு பிடுங்கி ராட்சசர்கள் மீது தூக்கி வீசி தாக்கினார்கள். இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்தார்கள். யுத்த பூமி முழுவதும் ரத்தமும் சதையும் பரவிக் கிடந்தது. ஒரு பக்கம் அங்கதனும் இந்திரஜித்தும் மறு பக்கம் ப்ரஜங்கன் என்ற ராட்சசனும் விபீஷணனுடைய மந்திரி சம்பாதிக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. மறு பக்கம் அனுமனுக்கும் ராட்சசன் ஜம்புமாலிக்கும் லட்சுமணன் ராட்சசன் விருபாக்ஷனுக்கும் சண்டை நடந்தது. இன்னோரு பக்கம் நீலனும் ராட்சசன் திகும்பனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திரஜித்தின் குதிரைகளை கொன்ற அங்கதன் ரதத்தையும் உடைத்து எறிந்தான். அங்கதனின் வீரத்தை கண்ட வானரர்கள் மிகவும் உற்சாகமாக சண்டையிட்டார்கள். இதனால் கோபமடைந்த இந்திரஜித் அதற்கு பதிலடியாக தனது மாய வித்தைகளை காட்டி மறைந்திருந்து யுத்தம் செய்து அங்கதனை அடித்து காயப்படுத்தினான். இந்திரஜித் இருக்கும் இடத்தை வானர வீரர்களால் காணமுடியவில்லை. இந்திரஜித் மறைந்திருந்து அம்புகள் எய்து வாரன வீரர்களின் உற்சாகத்தை குலைத்தான். இந்திரஜித் செய்த மாய யுத்தத்தினால் வானர வீரர்கள் தங்களின் தைரியத்தை சிறிது இழக்கத் தொடங்கினார்கள்.

ராமரை தாக்க அவரின் அருகில் நெருங்க முடியாத ராட்சசர்கள் ராமரை அம்புகளால் தாக்கத் தொடங்கினார்கள். ராட்சசர்களின் அனைத்து அம்புகளுக்கும் பதிலடி கொடுத்த ராமர் மறுபக்கம் தனது அம்புகளால் கூட்டம் கூட்டமாக ராட்சசர்களை அழித்துக் கொண்டிருந்தார். அன்றைய பகல் முழுவதும் நடந்த யுத்தம் இரவிலும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இந்திரஜித் தனது மாய வித்தையின் மூலம் மறைந்திருந்து ராம லட்சுமணர்களின் மீது நாக பாணத்தை ஏய்தான். இதனால் ராம லட்சுமணர்கள் இருவரும் நாக பாணத்தால் கட்டுண்டு அசைய முடியாமல் கீழே விழுந்தார்கள். வானர சேனைகள் ராம லட்சுமணர்களை சூழ்ந்து கொண்டு கவலையுடன் இருந்தார்கள். இதனால் யுத்தம் நின்றது. இந்திரஜித் ராட்சச படை வீரர்களை பாராட்டி விட்டு அரண்மனைக்கு வெற்றிக் கொண்டாடத்தோடு திரும்பினான். ராவணனிடம் சென்ற இந்திரஜித் ராம லட்சுமணர்கள் அழிந்தார்கள். இனி எதிரிகளால் எந்த பயமும் இல்லை என்று கூறினான். இதனைக் கேட்ட ராவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது மகனின் வீரத்தை பாராட்டி கட்டி அணைத்து புகழ்ந்தான்.

ராம லட்சுமணர்கள் நாக பாணத்தின் சக்திக்கு கட்டுப்பட்டு மயக்கத்தில் கிடக்கிறார்கள். பல வானர வீரர்கள் இறந்து விட்டார்கள். பலர் காயமடைந்து விட்டார்கள். முதல் நாள் யுத்தத்தில் மிகப்பெரிய பின்னடைவை கண்ட சுக்ரீவன் நாம் யுத்தத்தில் தோல்வி அடைந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டு கவலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அமர்ந்து விட்டான். இதனை கண்ட விபீஷணன் சூக்ரீவனிடம் சென்று நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். நீங்கள் தைரியத்தை இழந்தால் வானர வீரர்களும் தைரியம் இழந்து விடுவார்கள். ராம லட்சுமணர்களின் முகத்தை பாருங்கள் இன்னும் அவர்களின் பொலிவு அப்படியே முகத்தில் இருக்கிறது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து மறுபடியும் யுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள் என்று சூக்ரீவனுக்கு தைரியத்தை கொடுத்தான் விபீஷணன். சூக்ரீவனும் விபீஷணனும் வானர வீரர்கள் தைரியத்தை இழக்காமல் இருக்க சிதறிப் போயிருந்த வானர வீரர்களை ஒன்று படுத்தி உற்சாகப் படுத்தினார்கள். அனைத்து வானர வீரர்களும் ஒன்று பட்டு ராம லட்சுமணர்கள் விழிப்படைய காத்திருந்தார்கள்.

One thought on “ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 21

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.