ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 37

ராமர் வானர படைகளுக்கு எச்சரிக்கை செய்தார். இலங்கை நகரம் எரிந்து கொண்டிருக்கும் இந்த இரவு நேரத்தில் ராட்சசர்களின் பெரும் படை வருகிறது. மாயங்கள் செய்து எந்த திசையிலிருந்தும் ராட்சசர்கள் தாக்குவர்கள். அனைவரும் நான்கு திசைகளிலும் பார்த்து யுத்தம் செய்யுங்கள் என்றார். யுத்தம் ஆரம்பித்து. கும்பனை சுக்ரீவன் அழித்தான். நிகும்பனை அனுமன் அழித்தார். கும்பன் நிகும்பனுக்கு பாதுகாப்புக்காக வந்த ராட்சசர்கள் அனைவரையும் ராமர் அழித்தார். யுத்தத்திற்கு சென்ற ராட்சசர்கள் அனைவரும் அழிந்தார்கள் என்ற செய்தியை கேட்ட ராவணன் இந்திரஜித்தை அழைத்து அவனிடம் பேச ஆரம்பித்தான். இது வரை யுத்தத்திற்கு சென்றவர்களில் கும்பகர்ணன் உட்பட யாராலும் வெல்ல முடியாத வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள். நீ மட்டும் தான் இரண்டு முறை வெற்றி பெற்று திரும்பி வந்திருக்கிறாய். இது உனது பராக்கிரமத்தை காட்டுகிறது. உனது அஸ்திரத்தினால் தாக்கப்பட்ட ராம லட்சுமணர்கள் எப்படி பிழைத்தார்கள் என்று தெரியவில்லை. இப்போது மீண்டும் யுத்த களத்திற்கு சென்று வானரங்களை அழித்து ராம லட்சுமணர்களை வென்று வா என்று உத்தரவிட்டான் ராவணன். இந்திரஜித் தான் தவம் செய்து பிரம்மாவிடம் பெற்ற அஸ்திரங்களை ராமரின் மீதும் லட்சுமணனின் மீதும் ஏற்கனவே உபயோகப்படுத்தி விட்டதால் இப்போது யுத்தம் செய்வதற்கு மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தான். அதன்படி பெரிய யாகங்கள் செய்து தனது வலிமையை அதிகரித்துக் கொண்ட இந்திரஜித் யுத்தகளத்திற்குள் நுழைந்தான்.

ராமர் இந்திரஜித் வருவதை பார்த்து தனது அம்பை அவனை நோக்கி அனுப்பினார். ராமரின் அம்பு தன்னை தாக்க வருவதை அறிந்து கொண்ட இந்திரஜித் மாயங்கள் செய்து வானத்தையும் பூமியையும் பனி மூட்டத்தால் மறைத்து தன்னையும் மறைத்துக் கொண்டான். ராமரின் மீதும் லட்சுமணனின் மீதும் மறைந்திருந்து அம்பு மழை பொழிந்தான். ராம லட்சுமணர்களை அம்புகள் தாக்கி அவர்களின் உடலில் இருந்து ரத்தம் வரத்தொடங்கியது. இதனால் கோபம் கொண்ட லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். இந்திரஜித் மறைந்திருந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறான். எங்கு இருக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் எனக்கு அனுமதி கொடுங்கள். என்னிடம் உள்ள பிரம்மாஸ்திரத்தை வைத்து ராட்சசர்கள் அனைவரையும் மொத்தமாக அழித்து விடுகிறேன் என்றான். அதற்கு ராமர் பல ராட்சசர்கள் நம்முடைய வானர படைகளின் தாக்குதலை தாங்க முடியாமல் பயந்து ஓடுகின்றனர். சிலர் பயந்து ஒளிந்து கொண்டிருக்கின்றனர். பலர் நம்மை சரணடைந்து யுத்தம் செய்யாமல் ஒதுங்கி நிற்கின்றனர். இந்திரஜித் ஒருவனை தாக்குவதற்காக இவர்கள் அனைவரையும் பிரம்மாஸ்திரத்தினால் தாக்குவது யுத்த தர்மத்திற்கு எதிரானது எனவே வேண்டாம். இந்திரஜித்தையும் நம்மை எதிர்க்கும் ராட்சசர்களை மட்டும் அழிப்பதில் நமது கவனத்தை செலுத்துவோம். இந்திரஜித் நம்மை நோக்கி அனுப்பும் அம்புகள் எந்த திசையிலிருந்து வருகிறது என்று நன்றாக பார்த்து அந்த திசை நோக்கி நமது அம்புகளை அனுப்புவோம். இந்திரஜித் கண்ணுக்கு தெரியாமல் எங்கு மறைந்திருந்தாலும் அவனை தாக்கும் மந்திர அஸ்திரங்களை அனுப்புகிறேன். அவன் எங்கு ஒடி ஒளிந்தாலும் என்னுடைய அஸ்திரம் அவனை தாக்கி நம் முன்னே கொண்டு வந்து சேர்த்து விடும் என்றார்.

ராமர் தனது அஸ்திரங்களை உபயோகிக்க ஆரம்பிக்கப் போகிறார் இதில் நாம் பிழைக்க மாட்டோம் என்பதை உணர்ந்த இந்திரஜித் இலங்கை நகரத்திற்குள் ஒடினான். அதனால் அவனுடைய ராட்சச படைகளும் இலங்கை நகருக்குள் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து பறக்கும் தனது தேரில் யுத்த களத்தின் மேலாக வானத்தில் பறந்து வந்த இந்திரஜித் மாயத்தினால் சீதையின் உருவத்தை செய்து தனக்கு முன்பாக நிறுத்தி யாரும் தன்னை தாக்காதவாறு பாதுகாப்புடன் நின்று ராம லட்சுமணர்களை தாக்கத் தொடங்கினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.