ராமரிடம் இருந்த சீதையை பிரித்து இங்கு கொண்டு வந்ததில் இருந்து இலங்கை நகரத்தில் அபசகுனங்கள் நிறைய தெரிகிறது. ஹோமங்கள் செய்யும் போது எரியும் அக்னி எரிய வேண்டிய முறையில் எரியவில்லை. சரியான மந்திரங்களை சொல்லி ஆகுதிகளையும் நெய்யையும் அக்னியில் போட்டாலும் அக்னி எரிவதில்லை. பூஜை செய்யும் இடங்களில் பாம்புகள் நிறைய காணப்படுகிறது. இறைவனுக்கு படைக்க செய்யும் உணவுகளை இறைவனுக்கு படைக்கும் முன்பாகவே அதில் எறும்புகள் வந்து மொய்க்கிறது. பசுக்கள் சரியாக பால் கரப்பது இல்லை. நமது அரண்மணையில் உள்ள யானைகள் குதிரைகள் கோவேறு கழுதைகள் என அனைத்து விலங்குகளும் ஆரோக்கியம் இல்லாமல் கிடக்கின்றது. சரியாக உண்ணாமல் விபரீதமாக நடந்து கொள்கின்றன. விலங்குகளுக்கு செய்யும் வைத்தியங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை. காக்கைகள் நகரத்தின் உயரமான இடங்களின் மேல் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து விபரீதமாக கத்துகின்றன. கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நரிகள் ஊருக்குள் புகுந்து ஊளையிடுகின்றன. காட்டு மிருகங்கள் நகரத்திற்குள் நடமாடுகின்றன. சகுனம் சொல்லும் அறிஞர்கள் இந்த அபசகுனங்களின் அறிகுறிகளை பார்த்து அதற்கு அர்த்தம் சொல்வது அனைவருக்கும் கவலையை உண்டாக்கி இருக்கின்றது. இவையெல்லாம் நமக்கு மிகப்பெரிய அபாயத்தையும் நஷ்டத்தையும் குறிக்கின்றது. இதை நாம் அலட்சியம் செய்யக்கூடாது. சீதையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். அவளை இங்கு கொண்டு வந்தது முதல் இந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் மற்றவர்களையும் விசாரித்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் என் மீது கோபித்துக் கொள்ளாதீர்கள்.
ராமரை பகைத்துக் கொள்வதினால் நமக்கு லாபம் ஒன்றும் இல்லை. சீதையை திருப்பி அனுப்பிவிட்டு நாம் சுகமாக வாழ்வோம் என்று மிகப் பணிவுடன் விபீஷணன் ராவணனிடம் கூறினான். அதற்கு ராவணன் சீதையைத் திருப்பி தரும் பேச்சுக்களை இங்கு பேச வேண்டாம். அது ஒரு நாளும் முடியாது. ராமரை நான் ஒரு எதிரியாகவே காணவில்லை. ராமரின் மேல் எனக்கு ஒரு பயமும் இல்லை நீ போகலாம் என்றான். ராவணன் சீதையை திருப்பி அனுப்பக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாலும் தன்னுடைய ஆசை நிறைவேறவில்லையே என்று மிகவும் வருந்தினான். தான் செய்யும் காரியத்திற்கு தன்னுடைய உறவினர்களும் தவறாக பேசுகின்றார்களே என்று தனது மன அமைதியை இழந்தான் ராவணன். அதனை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சபையை கூட்டி ஆலோசனை செய்தான். இழந்த மன அமைதியை மீண்டும் பெறுவதற்காக சபையை கூட்டி ஆலோசனை என்ற பெயரில் தன்னை மற்றவர்கள் பெருமையாக பேசுவதை கேட்டு ஆறுதல் அடைந்தான் ராவணன். தனது அகங்காரத்தால் சிறிய காரியத்துக்கு கூட சரியான யோசனை செய்ய இயலாமல் முடிவெடுக்க முடியாமல் திணறினான் ராவணன்.
ராமரை பற்றி விவாதிக்க மீண்டும் தனது மந்திரி சபையை கூட்டினான். இந்த முறை நகரத்தில் உள்ள அனைத்து ராட்சச குழுக்களின் தலைவர்களும் வர வேண்டும் என்று கட்டளையிட்டான். அரண்மனையில் ராட்சச தலைவர்களால் நிரம்பியது. ராவணன் பேச ஆரம்பித்தான். எல்லா விதத்திலும் நீங்கள் திறமைசாலிகள். இந்த மந்திரி சபையில் உள்ளவர்கள் எந்த விதமான சிக்கலான காரியத்திற்கும் சரியான யோசனை சொல்லும் சக்தி வாய்ந்தவர்கள் நீங்கள். இதுவரை நீங்கள் ஆலோசித்து சொன்ன அனைத்தும் நமக்கு நன்மையை அளித்திருக்கிறது. இதுவரையில் நாம் செய்த யுத்தங்களும் அதற்கு நீங்கள் சொன்ன அனைத்து ஆலோசனைகளும் நமக்கு பல வெற்றிகளை கொடுத்திருக்கிறது. நாம் இது வரையில் தோல்விகளை கண்டதில்லை. இப்பொழுது உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன்.