நாயன்மார் – 8. இயற்பகை நாயனார்

காவிரிபூம்பட்டினத்தில் கடற்கரை பகுதியில் வசித்தவர் இயற்பகையார். வணிகரான இவர் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே ஈசனின் மீதும் அவர்கள் அடியார்கள் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். சிவனடியார்கள் யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுக்கும் அளவுக்கு சிவனின் சிறப்பு மிக்க அடியவராக திகழ்ந்தார். இயற்பகையாரின் பக்தியை உலகுக்கு உணர்த்த சிவபெருமான் சித்தம் கொண்டு தன் பக்தனை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அடியவர் வேடத்தில் இயற்பகையாரின் மாளிகை முன்பாக வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார் இயற்பகையார். அடியவர் தன் வாசல் தேடி வந்தது நான் செய்த பாக்கியம் என்று கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர் உயர்வான ஒரு ஆசனத்தில் அமரச் செய்தார். பின்னர் அடியவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். நீங்கள் இறைவனின் அடியவர்கள் என்ன கேட்டாலும் இல்லை என்று கூறாமல் வழங்குகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அதனால் உங்கள் இருப்பிடம் தேடி வந்தேன் என்றார். அதற்கு இயற்பகையார் ஐயனே எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். என்னிடம் இருக்கும் பொருள் எதுவுமே எனக்கு சொந்தமானது இல்லை. எல்லாம் ஈசன் தந்தது. ஆகையால் அதனை இறைவனின் அடியவர்களுக்கே கொடுத்து ஆனந்தம் கொள்கிறேன் உங்களின் தேவையை சொல்லுங்கள் என்றார்.

சிவனடியார் வேடத்தில் இருந்த இறைவன் உன்னுடைய அழகிய மனைவி எனக்கு வேண்டும். அவளை என்னுடன் அனுப்பி வை என்றார். சாதாரண ஒரு மனிதனாக இருந்தால் இந்த இடத்தில் நடக்கும் செயல் வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். ஆனால் இறைவனின் சித்தத்தை உணர்ந்த இயற்பகையார் சிவனடியாருக்கு வேண்டியதைத் தருவதாக ஒப்புக் கொண்டார். ஐயனே தாங்கள் என்னிடம் இல்லாத பொருளைக் கேட்டு என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவீர்களோ என்று கவலை கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடைபெற வில்லை. ஆகையால் என் மனம் இப்போது மகிழ்ச்சியில் திளைக்கிறது. தங்கள் விருப்பப்படி இதோ என் மனைவியை உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியவர் தன் மனைவியிடம் நடந்த விவரங்களை கூறினார். இயற்பகையாரின் இயல்பை நன்றாக அறிந்து வைத்திருந்த அவரது உத்தம மனைவி கணவனின் பேச்சுக்கு மறுபேச்சின்றி அவர் கட்டளையை ஏற்றுக் கொண்டாள். தான் சிவனடியாருடன் செல்வதாக ஒப்புக் கொண்டாள். இதையடுத்து இயற்பகையார் மனைவியை சிவனடியார் முன் நிறுத்தி அழைத்துச் செல்லும்படி கூறினார். வேடதாரியான சிவபெருமான் அங்கிருந்து சென்றார். அவர் பின்னே இயற்பகையாரின் மனைவியும் புறப்பட்டார். வீட்டின் வெளியே சென்ற பின் சிவனடியார் ஏதோ ஒரு யோசனையில் அப்படியே நின்றார். என்ன என்று அறியாததால் பதறிப்போய் ஓடி வந்த இயற்பகையார் ஐயனே ஏன் நின்று விட்டீர்கள் வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அடியவர் ஒன்றுமில்லை. இந்த ஊரில் உனது உறவினர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். மேலும் நான் உன் மனைவியை அழைத்துச் செல்வது தெரிந்தால் அவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் எனக்கு இடையூறு செய்யக்கூடும். எனவே ஊர் எல்லை வரை நீ எனக்குத் துணையாக வந்தால் நலம் என்று நினைக்கிறேன் என்றார். ஐயனே இது நானே உணர்ந்து செய்திருக்க வேண்டிய காரியம். ஆனால் தவறிவிட்டேன். நீங்கள் நினைத்தது சரிதான். நான் உங்களுடன் வருகிறேன். எதிர்ப்பவர் எவராக இருப்பினும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியபடி வீட்டிற்குள் சென்று ஒரு வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

சிவனடியார் முன் நடக்க அவரைத் தொடர்ந்து இயற்பகையாரின் மனைவியும் பின் இயற்பகையாரும் சென்றனர். இதற்கிடையில் நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டு அவர்கள் செல்லும் வழியில் இயற்பகையாரின் உறவினர்களும் ஊர் பொதுமக்களும் கூடினர். அவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தினார்கள். அடே மூடனே எவரும் செய்யத் துணியாத காரியத்தை செய்து ஊருக்கும் உறவினர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாய். உன் அறிவு இப்படியா மழுங்கிப் போகும். இப்போதே உன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டுச் செல் என்று அனைவரும் இயற்பகையாரை எச்சரித்தனர். ஆனால் அவர் தன் அடியவரை தடுக்கும் உங்களை கொன்று அழிக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறி எதிர்ப்பவர்கள் அனைவரையும் வாளால் வெட்டி வீழ்த்தினார். தப்பி ஓடியவர்கள் உயிர் பிழைத்தனர். எதிர்த்தவர்கள் இயற்பகையாரின் வாளுக்கு பலியாகினர். உறவினர்கள் அழுதனர். மூர்க்கத்தனமான அவரது வாள் வீச்சை எதிர்க்கும் சக்தி அவர்களில் யாருக்குமில்லை. சிவவேதியர் ஊர் எல்லைக்கு வந்து விட்டார். அவர்களை எதிர்த்து அங்கு யாரும் வரவில்லை. ஆகவே இயற்பகையாரை ஊருக்குத் திரும்புமாறு சிவவேதியர் கட்டளையிட்டார். அதை வேதவாக்காக கருதிய இயற்பகையார் சிவனடியாரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அவர் தனது மனைவியை சற்றும் சலனமில்லாமல் திரும்பிப் பார்க்காமல் சென்றார்.

இயற்பகையனாரின் செயலைப் பார்த்து சிவனடியார் உருவில் இருந்த சிவபெருமான் மனம் மகிழ்ந்தார். அவரது பக்தியின் உயர்வைக் கண்டு இன்புற்றார். சிறிது தூரம்தான் சென்ற இயற்பகையனாருக்கு சிவனடியாரின் காப்பாற்றுங்கள் இயற்பகையாரே காப்பாற்றுங்கள் என்ற ஓலக்குரல் கேட்டது. பதறிப்போன இயற்பகையார் குரல் வந்த திசை நோக்கி ஓடினார். ஐயனே உங்களுக்கு தீங்கிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொன்று அழிப்பேன் என்று எண்ணியபடி சென்றார். ஆனால் அங்கு சிவனடியாரைக் காணவில்லை. தன் மனைவி மட்டும் தனியாக நிற்பதைக் கண்டார். சற்றே குழப்பத்தில் ஆழ்ந்தார். அப்போது ஒரு பேரொளி விண்ணில் எழுந்தது. அந்த ஒளியில் இருந்து அசரீரியாக சிவவேதியரின் குரல் ஒலித்தது. இயற்பகையாரே உங்களை சோதிக்க யாமே வந்தோம். ஊரார் என்னை காமாந்தகாரன் என்று வசைபாடினர். நீரோ உலக மாந்தரின் இயல்பான சுபாவங்களை எல்லாம் உதறி எறிந்து உங்களது கொள்கையில் உறுதியாக நின்றீர்கள். சிவனடியாரே உபசரிக்கும் உங்களது பண்பு இந்த உலகம் கண்டு வியக்கக்கூடியது. அதை அனைவருக்கும் உணர்த்தவே உங்களை இவ்வாறு சோதித்தோம். சிவலோகம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது என்றார் இறைவன். இயற்பகையார் மெய் சிலிர்த்து நின்றார். அவர் மீதும் அவர் மனைவி மீதும் விண்ணவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவனடி சேர்ந்து அவ்விருவரும் அரிதிலும் அரிதான பாக்கியம் பெற்றனர். அவர்களுடன் இயற்பகையாரின் வாளுக்கு பலியானவர்களும் சிவலோகம் சென்றனர்.

குருபூஜை: இயற்பகை நாயனாரின் குருபூஜை மாதம் மார்கழி உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.