நாயன்மார் – 5. ஆனாய நாயனார்

லால்குடி ரயில் நிலையத்திலிருந்து பூவாலுர் வழியே வடமேற்கில் சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம் என்ற ஊர். இத்தலத்தின் பெருமைகள் பெரியபுராணம் மற்றும் கச்சியப்ப முனிவர் பாடிய பூவாளூர் புராணத்திலும் கூறப்படுகிறது. அந்த ஊரில் ஆயர் குலத்தில் அவதரித்தார் ஆனாயர். பரசுராமர் சிவபெருமானை இங்கு தான் வழிப்பட்டு பரசு என்ற ஆயுதத்தைப் பெற்றார். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். ஏராளமான பசு மந்தைகள் இவரிடம் இருந்தன. ஆ என்றால் பசு என்று பொருள்படும். பசுக்களை மேய்க்கும் தொழிலை கொண்ட இவர் ஆனாயர் என்ற பெயர் பெற்றார். இவர் சிவனைத் தனது முழுமுதற்கடவுளாக கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களைக் காட்டுக்கு கொண்டு போய் நண்பர்களோடு சேர்ந்து மேய்த்துக்கொண்டு வருவது இவரது வழக்கம். வகை வகையாக மாடுகளை பிரித்து மேய விட்டுவிட்டு புல்லாங்குழல் வாசிப்பார். இசையில் ஓம் நமச்சிவாய எனும் திருநாமம் கமலும். ஆனாயர் குழல் ஊதுவதில் சிறந்தவராக திகழ்ந்தார். பசுக்கூட்டத்துடன் சென்று அவை மேயும் பொழுது இவர் குழல் ஊதுவார்.

ஒரு மழைக்காலத்தில் அவரது தோழர்கள் யாவரும் பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு செல்ல ஆனாயர் மட்டும் தனி வழியில் நடந்து முல்லை நிலத்திற்கு சென்றார். அப்பொழுது கார் காலம் முல்லை மலர் பூத்து நறுமணம் வீசியது. அங்கு பூத்துக் குழுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவபெருமானை கண்டார். தனது புல்லாங்குழலை எடுத்து ஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவாய என்று குழலோசையில் வாசித்தார். எங்கும் நமசிவாய என்ற ஒலி எதிர்ரொலித்தது. குழல் ஓசையைக் கேட்ட பசுக்கள் அவர் அருகில் வந்து நின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நின்றது. ஆங்கே காணப்பட்ட எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நின்றது. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நின்றது. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலித்தது. அனைத்து தேவர்களும் அங்கே வந்துவிட்டார்கள். இறைவன் அப்பனும் அம்மையுமாக இடப வாகனத்தில் காட்சியளித்தனர். உன் குழல் இசையை கேட்டேன் என்றும் இந்த இசையின் சத்தத்தை எனக்குத் தரவேண்டும் என்று இறைவன் கேட்டார். உடனே இறைவனடி சேர்ந்தார் ஆனாய நாயனார். நமசிவாய மந்திரத்தை ஓதி இறைவனை கவர்ந்து என்றென்றும் இறைவன் அருகிலிருந்து குழல் ஊதும் பாக்கியம் பெற்றார்.

குருபூஜை: ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.