கொங்கு நாட்டிலே உள்ள கருவூரிலே பிறந்தார் எறிபத்தர். அந்த ஊரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைனை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார். சிவனடியார்களுக்கு ஓர் பிரச்சனை என்று வந்தால் முதலில் அங்கு வந்து அவர்களுக்கு உதவுவார். அடியார்களுக்கு தீங்கு கொடுப்பவர்களுக்கு பரசு என்னும் கோடாலி ஆயுதத்தால் எறிந்து தண்டிப்பார். அதனால் அவர் கையிலே எப்பொழுதும் கோடலி ஆயுதம் இருக்கும். கோடாலியை எறிவதனால் அவருடைய இயற்பெயர் மாறி எறிபத்தர் என்ற பெயரால் அனைவராலும் அழைக்கப்பட்டார். அந்த ஊரில் சிவகாமியாண்டார் என்ற முதியவர் தினந்தோறும் கோவிலுக்கு சென்று இறைவனுக்கு பூக்களை கொடுப்பது வழக்கம். இறைவனுக்காக பூக்கள் பறித்து மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு அணியச் செய்வதில் அவருக்கு விருப்பம் அதிகம். விடியற்காலையிலேயே எழுந்து தான் அமைத்த நந்தவனத்திற்கு சென்று பயபக்தியுடன் மலர்களைப் பறிப்பார். அவற்றின் மேல் தன் மூச்சுக் காற்றுக் கூடப்படாதவாறு வாயைக் கட்டிக் கொண்டு அதை எடுத்து வருவார். ஒரு நாள் வழக்கம் போல் ஒரு கூடை நிறைய மலர்களை ஏந்தி திருக்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மதம் கொண்ட பட்டத்து யானை அவர் கையில் வைத்திருந்த பூக்கூடையைத் தாக்கி தன் துதிக்கையால் கீழே போட்டது. மலர்களெல்லாம் கீழே சிதறின. இறைவனுக்கான மலர்களை யானை பாழ் செய்து விட்டதே என எண்ணி வருந்திய சிவகாமியாண்டார் கோபம் கொண்டு தன் கையில் இருந்த தடியால் யானையை அடிக்க ஓடினார். சிவகாமியாண்டார் யானையின் பின்னே ஓடிக் களைத்து கீழே விழுந்து விட்டார். பின் மெல்ல எழுந்த சிவகாமியாண்டார் கீழே சிதறிய பூக்களைப் பார்த்துத் துக்கம் தாளாமல் வாய்விட்டுப் புலம்பினார்.
அடியார் ஒருவரின் அழுகுரல் சத்தத்தை கேட்ட எறிபத்தர் உடனடியாக அங்கே வந்து நடந்தவற்றை கேட்டு அறிந்து கோபம் கொண்டார். யானை இருக்குமிடம் நோக்கி ஓடிய எறிபத்தர் பட்டத்து யானையின் முன் நின்றார். யானை அவரை தாக்க வந்தபோது கையிலிருந்த கோடாரியால் ஓங்கி வீசினார். பூக்கூடையை கீழே போட்ட யானையின் தும்பிக்கை துண்டாக கீழே விழுந்தது. உடனே யானையும் பிளறிக் கொண்டே கீழே விழுந்து இறந்தது. சிவகாமியாண்டாரின் துயரத்தை கண்ட எறிபத்தருக்கு இன்னும் கோபம் தீரவில்லை. இறைவனுக்கான பூக்களை கீழே தள்ளிவிட்ட யானையின் பாகனையும் அவனுக்கு உதவியாக வந்த காவலாளிகளின் மீதும் தன் கோடாரியை எறிந்து வீழ்த்தினார். போர்க்களக் காட்சி போல் யானை ஒரு பக்கம் விழுந்து கிடக்க ஒரு பக்கம் காவளாரிகள் இறந்து கிடந்தனர். அரசு சேவகர்கள் உடனே அரண்மனைக்குச் சென்று பட்டத்து யானையையும் உடன் இருந்த பாதுகாவலர்களையும் ஒருவன் கொன்று விட்டான் என்று புகழ்ச்சோழன் அரசனிடம் தகவலை அளித்தார்கள். புகழ்ச்சோழன் அரசன் சிவாலயங்களைப் பாதுகாப்பது சிவனடியார்களுக்கு வேண்டிய நன்மைகளை செய்து தொண்டுகளில் ஈடுபட்டிருந்தான். காவலாளிகள் கூறிவற்றைக் கேட்ட அரசன் பகைவர்களின் சதிச் செயல் என்று எண்ணி கோபமடைந்தான். தனது சேனைத் தலைவர்களுடன் தானும் சம்பவ இடத்திற்குச் சென்றான். யானை இறந்து கிடந்தது அருகில் எறிபத்தர் நின்று கொண்டிருந்தார். பகைவர்கள் ஓடியிருக்கவேண்டும் என எண்ணி அவர்கள் எங்கே என்று கேட்டான். இதோ இங்கே நிற்கிறாரே இவர் தான் யானையைக் கொன்றார் என்று எறிபத்தரைக் காட்டி அருகில் இருந்தவர்கள் கூறினர்கள். அவரைப் பார்த்த அரசன் எதிரியின் செயல் ஒன்றும் இல்லை. இந்த அடியவருக்குக் கோபம் உண்டாகும்படி ஏதோ நேர்ந்திருக்கிறது என்று யூகித்தான்.
யானை இந்த அடியவரை ஒன்றும் செய்யாமல் கடவுள் தான் காப்பாற்றினார் என்று மனதில் நினைத்து ஆறுதல் அடைந்து எறிபத்தர் முன் கண்ணீர் மல்க அவர் காலில் வீழ்ந்தான். தங்கள் உள்ளம் வருந்தும்படி அடியவருக்கு தீங்கு நடந்திருக்கிறது. அந்தத் தீங்குக்குப் பிராயச் சித்தமாக யானையையும் பாகனையும் தண்டித்தது விட்டீர்கள். இது போதாது யானைக்கு உரியவனான என்னையும் கொல்வதே முறையாகும். தங்களின் புனிதமான கோடாரியால் என்னைக் கொல்ல வேண்டாம் என்று தனது வாளை வாளை எடுத்து அவரிடம் நீட்டி என்னையும் கொன்று விடுங்கள் என்றான் அரசன். ஓர் சிவனடியாருக்கு நடந்த தீங்கை பெரிதாக எண்ணி அரசர் வருந்துவதை உணர்ந்த எறிபத்தர் தான் அரசரை கொல்லவில்லை என்றால் அரசன் தன்னை தானை வாளால் அறுத்துக் கொள்வாரோ என்று பயந்து அரசனிடமிருந்த அந்த வாளை உடனே வாங்கிக் கொண்டார். அதைக் கண்ட சோழன் முகம் மலர்ந்து எறிபத்தர் தம்மேல் வாளை வீசுவதற்கு ஏதுவாகப் பணிந்து நின்றார். சிவனடியார்கள் மீது இத்தனை அன்பு செய்யும் அரசர் இருக்கும் போது நாமே யானையை கொன்று தவறு செய்து விட்டோமோ என்று எண்ணிய எறிபத்தர் நானே குற்றவாளி இந்தக் குற்றத்துக்கு தண்டனையை நானே அளித்துக் கொள்கிறேன் என்று மனதில் புலம்பி கையிலிருந்த வாளைத் தன் கழுத்தில் வைத்து அறுத்துக் கொள்ளப்போனார். அரசன் என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள் என்று அவர் கையிலிருந்த வாளைப் பறித்தான். எறிபத்தர் அசையாமல் நின்றிருந்தார். அப்போது இறைவனின் அசீரீரி குரல் கேட்டது. இறைவன் மீதும் அடியவர்கள் மீதும் உங்களுக்கு இருக்கும் பக்தியின் வலிமையை உலகிற்கு காட்டவே இந்த நிகழ்ச்சியை நடத்தினோம் என்று அசீரீரி குரல் கேட்டது. அதே சமயத்தில் கீழே விழுந்த யானையும் பாகனும் இறந்த காவலாளிகளும் உயிர் பெற்று எழுந்தனர். சிவகாமியாண்டாரின் பூக்கூடை பூக்களால் நிறைந்தது. அனைவரும் சிவபெருமானின் கருணையையும் அடியவர்களின் அன்பையும் உணர்ந்து ஆரவாரித்தனர்.
குருபூஜை: எறிபத்தர் நாயனாரின் குருபூஜை மாசி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.