இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. அங்கு வேளாளார் குலத்தில் பிறந்தவர் இளையான்குடி மாறன். விவசாயத்தை தொழிலாக செய்து வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் மேலும் அளவில்லாத அன்பு கொண்டவராக இருந்தார். அடியவர்களுக்கு உணவு அளிப்பதை இறைவனுக்கு செய்யும் பெரும் தொண்டாகவும் இறைவனுக்கு செய்யும் வழிபாடாகவே செய்து வந்தார். அடியவர்கள் விரும்பும் அறுசுவை உணவை தயாரித்து பரிமாறி மகிழ்ந்தார். அவரின் பக்தியை அனைவருக்கும் உணர்த்த இறைவன் முடிவு செய்து அவரை சோதிக்க ஆரம்பித்தார். அவரின் செல்வம் அனைத்தும் கரைய ஆரம்பித்தது. அடியவர்களுக்க்கு உணவு அளிக்க கடன் பெற்றும் சொத்துக்ளை விற்றும் தொண்டு செய்து வந்தார். சிறிது நாளில் மிகவும் ஏழ்மை நிலைக்கு மாறினார். ஆனாலும் அடியவர்களுக்கு உணவு அளிப்பதை தொடர்ந்து செய்து வந்தார்.
ஒரு மழைக் காலத்தில் இரவு நேரத்தில் ஒரு அடியவர் வேடத்தில் இளையான்குடி மாறன் வீடு வந்து சேர்ந்தார். இளையான்குடி மாறனும் அவர் துணைவியரும் அவர்களுக்கே உணவு இல்லாமல் படுத்திருந்தார்கள். மழையில் நனைந்தபடியே வந்த அடியாரை வரவேற்று அவரின் ஈரமேனியைப் போக்க உடைகள் கொடுத்து உதவினார்கள். இளையான்குடி மாறன் மனைவியிடம் அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என ஆலோசித்தார். அவர் மனைவி கணவரிடம் இன்று நம் சிறுவயலில் பயிர் செய்து வைத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு உணவு செய்யலம் என்றார். அதன்படி இளையான்குடி மாறன் மழையில் வயல் வெளிக்குச் சென்றார். அங்கு அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதந்து கொண்டு இருந்தது. அதனை ஒன்று சேர்த்து கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்தார். வீட்டின் பின்புறம் சென்று உள்ள குழி நிரம்பாத குறும் பயிரான கீரையைக் கொண்டு வந்து கொடுத்தார். அடுப்பு எரிக்க இருந்த விறகு இல்லை என்பதை இளையான்குடி மாறனிடம் தெரிவித்தார். உடனே இளையான்குடி மாறன் குடிசையின் விட்டத்தில் உள்ள கட்டையே ஒடித்து கொடுத்தார். இவற்றையெல்லாம் வைத்து அடியரின் பசியைப் போக்க சுவை உணவாக மாற்றிய அம்மையார் தன் உணவு தயாராகி விட்டது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் அடியவரை அழைக்கலாம் என்றார். இருவரும் அடியவரின் அருகில் சென்று அடியவரை அழைத்ததும் அடியவர் இருந்த இடம் பேரொளியாக மாறியது. இருவரும் திகைத்து நின்றனர். பேரோளியில் இருந்து இறைவன் அப்பனும் அம்மையுமாக இடப வாகனத்தில் காட்சியளித்து அன்பனே அடியவர்களுக்கு உணவளிப்பதையே எனக்கு செய்யும் வழிபாடாக செய்த நீயும் உனது மனைவியும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக என்று அருள் செய்து மறைந்தருளினார்.
குருபூஜை: இளையான்குடி மாறன் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.