நாயன்மார் – 13. ஏனாதிநாத நாயனார்

சோழவள நாட்டிலுள்ள சிற்றூரின் பெயர் எயினனூர். இத்தலத்தில் சான்றார் குல மரபில் தோன்றியவர் ஏனாதிநாதர் என்பவர். திருநீற்றுப் பக்தி மிக்கவர். மெய்ப்பொருள் நாயனாரைப் போலவே திருநீறு அணிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சிவமாகப் பார்த்து வணங்கி வழிபடுவார். பகைவர்களாக இருந்தாலும் அவர்களது நெற்றியில் திருநீற்றை கண்டுவிட்டால் உடனே பகைமையை மறந்து அவரை வணங்கி வழிபடுவார். இதனால் இவர் பகைவரும் போற்றும் படியாக நல்லொழுக்கத்தில் தலை சிறந்து விளங்கினார். இவர் சோழ மன்னரின் படையில் சேனாதிபதியாக இருந்தவர்களின் சந்ததியில் தோன்றியவர். ஏனாதிநாதர் வாள் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். இவரிடம் நல்ல வீரமும் சிறப்பான வாள் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்ததால் வாள் பயிற்சி பெற மாணவர்கள் இவரிடம் நிறைய வந்து சேர்ந்தார்கள். வாள் பயிற்சி மூலம் கிடைத்த தனக்கு கிடைத்த வருமானத்தை சிவனடியார்களுக்கே செலவு செய்தார்.

ஏனாதிநாதர் வாழ்ந்த அதே ஊரில் அதிசூரன் என்று ஒருவன் இருந்தான். அவனும் வாள் பயிற்சி கூடம் ஒன்றை அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தான். தொழில் நுட்பத்தில் ஏனாதிநாதரைவிட மிகக் குறைந்து காணப்பட்டான். அதனால் அதிசூரனிடம் வந்து சேர்ந்த மாணவர்கள் விலகி ஏனாதிநாதரின் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள். இதனால் ஏனாதிநாதரிடம் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்றார்கள். அதிசூரனிடம் ஒன்றிரண்டு மாணவர்கள் கூட பயிற்சி பெற வருவதே கஷ்டமாகி விட்டது. இதனால் அதிசூரனது வருவாய் குறைந்தது. இதனால் அதிசூரன் ஏனாதிநாதரிடம் பொறாமை கொண்டு பகைமை கொண்டான். ஒருநாள் தன் சுற்றத்தாரையும் சில போர் வீரர்களையும் அழைத்துக்கொண்டு நாயனாரின் வீட்டை வந்தடைந்தான். ஏனாதிநாதரே ஒரே ஊரில் இரண்டு பயிற்சிக் கூடம் வேண்டாம். இரண்டு ஆசிரியர்களும் வேண்டாம். இந்த ஊரில் நாம் இருவரில் வாள் பயிற்சி ஆசிரியராக இருப்பதற்குரிய தகுதியும் திறமையும் யாருக்கு உண்டு என்பதை ஊரறியச் செய்ய நாம் இருவரும் வாள் சண்டை போடுவாம் என்றான். துணிவிருந்தால் என்னோடு சண்டை போடுங்கள் என்று கத்தினான். அதிசூரனின் சவாலைக் கேட்ட ஏனாதிநாதர் சிங்கம் போல் கிளர்த்தெழுந்தார். அதிசூரனின் ஆட்கள் ஒரு புறமும் ஏனாதிநாதரின் ஆட்கள் ஒரு புறமும் நின்று சண்டையிட்டார்கள். இரு தரப்பிலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. சிலர் உயிரிழந்தார்கள். இறுதியில் ஏனாதிநாதர் வெற்றி பெற்றார். அதிசூரன் தோல்வி அடைந்தான். இதனால் அதிசூரன் உள்ளத்தில் பகைமை உணர்ச்சி அதிகமானது. ஏனாதிநாதரை நேர் பாதையில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்து சூழ்ச்சியால் அவரை கொன்று விடலாம் என்று திட்டம் திட்டினான்.

ஏனாதிநாதரிடம் அதிசூரன் தனது வேலைக்காரன் ஒருவனை அனுப்பினான். தன்னோடு வேறோரிடத்திலே தனித்து நின்று போர் புரியலாம் என்றும் வீணாகப் பெரும் படை திரட்டிப் போர் புரிந்து எதற்குப் பல உயிர்ச் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது வஞ்சக முடிவைச் சொல்லி அனுப்பினான். அவனது அந்த முடிவிற்கும் ஏனாதிநாதர் சம்மதித்தார். அதன் பிறகு அதிசூரன் சண்டை போடுவதற்கான நாள் நேரம் குறித்து இடத்தைத் தேர்ந்தெடுத்து ஏனாதிநாதருக்குச் செய்தி சொல்லி அனுப்பினான். அதற்கும் அவர் சம்மதித்தார். குறித்த நாளும் வந்தது. அதிசூரன் வஞ்சனையால் வெல்லத்தக்க சூழ்ச்சி செய்தான். போருக்குப் புறப்படும் முன் நெற்றியிலும் உடம்பிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டான். வாளும் கேடயமும் எடுத்துக் கொண்டான். தனது நெற்றியும் உடம்பும் தெரியாதவாறு கவசத்தாலும் கேடயத்தாலும் மறைத்துக் கொண்டான். போர் புரிய வேண்டிய இடத்திற்குச் சென்றான். அங்கே ஏனாதிநாதர் அதிசூரனை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார். அதிசூரன் கேடயத்தால் தன் முகத்தை மறைத்த வண்ணமாகவே நாயனாருக்கு முன் சென்றான். இருவரும் போர் புரியத் தொடங்கினர். ஏனாதிநாதர் வாளைச் சுழற்றி பயங்கரமாகப் போர் புரிந்தார். ஏனாதிநாதர் கைகளிலே சுழன்று கொண்டிருந்த வாள் அதிசூரனின் உடலைக் கிழித்துக் கொல்ல நெருங்கி வருகின்ற தருணத்தில் அதிசூரன் தன் உடலை மறைத்துக் கொண்டிருந்த கவசத்தையும் கேடயத்தையும் விலக்கினான். திருநீறு அணிந்த அதிசூரனின் நெற்றியைப் பார்த்துத் திடுக்கிட்டார் நாயனார். அவர் கைகள் தளர்ந்தன. வீரம் பக்திக்கு அடிமையானது. பகைவன் என்று போரிட வந்தேனே சிவத்தொண்டராக அல்லவா இருக்கிறார் இவரோடு போரிடுவது தகாத செயல் ஆகும் என்று எண்ணிய ஏனாதிநாத நாயனார் வரும் ஆபத்தை பற்றி சிந்திக்காமல் தம் கையிலிருந்த வாளையும் கேடயத்தையும் கீழே போட எண்ணினார்.

ஏனாதிநாதருக்கு அத்தருணத்தில் வேறொரு எண்ணமும் பிறந்தது. நாம் ஆயுதங்களைக் கீழே போட்டால் நிராயுத பாணியயை சிவனடியார் கொன்றார் என்ற இழிவுப் பெயர் இவருக்கு வந்துவிடும். அத்தகைய கெட்ட பெயர் இவருக்கு ஏற்படாத வண்ணம் இறுதிவரை நான் ஆயுதத்துடனே இவரை எதிர்த்து நிற்பது போல் பாசாங்கு செய்வேன் என்று எண்ணியபடியே வாளையும் கேடயத்தையும் தாங்கி எதிர்த்துப் போர் செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார். அவர் முன்னே நின்ற கொடிய பாதகனும் தன் கருத்தை நிறைவேற்றிக் கொண்டான். ஏனாதிநாதர் ஆவி பிரிந்தது. ஆகாயத்தில் பேரொளி தெரிந்தது. எம்பெருமான் உடையாளுடன் விடை மேல் எழுந்தருளினார். ஏனாதிநாதரை உயிர் பெற்றெழச் செய்தார். நாயனார் நிலமதில் வீழ்ந்து இறைவனை வணங்கி நின்றார். பகைவனது வாளால் உலகப் பற்று பாசம் பந்தம் ஆகிய எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்ட ஏனாதிநாத நாயனாருக்கு பேரின்ப வாழ்வை அளிப்பதற்கென்றே இவ்வளவு பெரிய சோதனையை நடத்திய எம்பெருமான் நீ நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் பெரு வாழ்வினைப் பெறுவாயாக என்று திருவாய் மலர்ந்தார்.

குருபூஜை: ஏனாதி நாத நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.