ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 45

ராமர் ராவணனை அழித்து யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டார் என்று அனுமன் நடந்தவைகள் அனைத்தையும் சீதையிடம் எடுத்துக் கூறினார். அனைத்தையும் கேட்ட சீதைக்கு பேச்சு வரவில்லை. அமைதியாக இருந்த சீதையிடம் அனுமன் மேலும் பேச ஆரம்பித்தார். இப்போது இந்நாட்டின் அரசன் விபீஷணன் அவரது அனுமதியின் பேரிலேயே தங்களை சந்தித்து உங்களது செய்தியை ராமரிடம் கொண்டு செல்ல வந்திருக்கிறேன். விரைவில் நீங்கள் ராமரை சந்திக்க போகிறீர்கள். தங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்திருக்கிறேன் தாங்கள் ஏன் பேசாமல் மௌனமாக இருக்கீறீர்கள் என்றார். அதற்கு சீதை பேச முடியவில்லை அனுமனை மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். இத்தனை பெரிய செய்தியை கொண்டு வந்த உனக்கு பரிசு கொடுக்க விரும்புகிறேன். மூன்று உலகங்களையும் அரசாளும் அரசனின் பதவியை உனக்கு பரிசாக கொடுத்தாலும் நீ செய்திருக்கும் காரியத்திற்கு ஈடு ஆகாது. உன்னுடைய விவேகம் பொறுமை வீரம் மனோபலம் இந்த உலகத்தில் யாருக்கும் இல்லை. நான் ராமரையும் அவருடன் எப்போதும் இருக்கும் லட்சுமணனையும் பார்க்க விரும்புகிறேன் என்ற தகவலை ராமரிடம் எடுத்துச்செல் என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினாள். சீதையை சுற்றி நின்ற ராட்சசிகளை பார்த்த அனுமன் இத்தனை காலம் இவர்கள் உங்களை மிகவும் துன்புறுத்தி இருக்கிறார்கள். எனக்கு உத்தரவு கொடுங்கள் இவர்களை அழித்து விடுகிறேன் என்றார். அதற்கு சீதை அரசன் இட்ட உத்தரவை இவர்கள் பின் பற்றினார்கள். அரசன் இப்போது இறந்து விட்டான். இந்த ராட்சசிகள் இப்போது பயந்து கொண்டிருக்கிறார்கள். உலக உயிர்களுக்கு துன்பத்தை மட்டுமே கொடுப்பது பிறவி இயல்பாக இந்த ராட்சசர்ளுக்கு உள்ளது. ஆனால் நாம் உலக உயிர்களுக்கு நன்மை செய்வதையே இயல்பாக கொண்டவர்கள். இவர்களுக்கு நன்மை இல்லாததை நாம் செய்யக்கூடாது. எனவே இவர்களை தண்டிப்பது சரியல்ல எனது செய்தியை ராமரிடம் தெரிவித்து விட்டு அதன் பின் அவர் உத்தரவின்படி செயல்படுவாயாக என்று அனுமனிடம் சீதை கூறினாள். அனுமன் சீதையை வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

ராமரிடம் வந்த அனுமன் தங்களையும் லட்சுமணனையும் சீதை சந்திக்க விரும்புவதாக செய்தி சொல்லி அனுப்பினார் என்று கூறினார். இதனை கேட்ட ராமர் யாருடைய முகத்தையும் பார்க்க விரும்பாமல் தரையை பார்த்தபடியே மிகவும் சிந்தித்து விபீஷணனை வரவழைத்தார். சீதை புனித நீராடிய பின்பு நல்ல பட்டாடைகள் கொடுத்து இங்கு அழைத்து வர அந்தப்புறத்தில் இருப்பவர்களுக்கு உத்தரவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி விபீஷணன் உத்தரவிட சீதை இப்போது இருக்கும் கோலத்துடன் ராமரை சந்திக்க விரும்புவதாக கூறினாள். அதற்கு உடன் இருப்பவர்கள் இது ராமரின் உத்தரவு எனவே புனித நீராடி பட்டாடைகள் அணிந்து வாருங்கள் என்று சீதையிடம் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி சீதை ஒரு ராஜகுமாரிக்கு உண்டான கோலத்தில் பல்லக்கில் அசோக வனத்தில் இருந்து ராமர் இருக்குமிடம் கிளம்பினாள்.

ராமரை நோக்கி சீதை பல்லக்கில் வந்து கொண்டிப்பதை அறிந்த வானர வீரர்களும் கரடிக் கூட்டமும் சீதையை பார்க்க விரும்பி ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டு முன்னேறி வந்தார்கள். இதனை கண்ட விபீஷணன் தனது ராட்சச வீரர்களை கொண்டு அனைவரையும் விரட்டி சீதையை பாதுகாப்புடன் அழைத்து வந்தான். இதனை கண்ட ராமர் விபீஷணனிடம் கடுமையான வார்த்தைகளில் பேசத் தொடங்கினார். வானர வீரர்களும் கரடிக் கூட்டங்களும் என்னைச் சார்ந்து வந்திருக்கிறார்கள். எனது மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் அனைவரும் கலந்து கொள்வது தவறாகாது அவர்களை உனது ராட்சச வீரர்கள் விரட்டுவது சரியில்லை. அனைவரது முன்னிலையிலும் சீதை இங்கு வரட்டும் என்று கோபத்துடன் கூறினார். விபீஷணன் தலை குனிந்தபடி ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வானர வீரர்கள் யாரையும் விரட்ட வேண்டாம் என்று தனது வீரர்களுக்கு உத்தரவிட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.