ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 38

ராமர் சீதையை கண்டதும் செய்வதறியாமல் திகைத்து நின்றார். லட்சுமணனும் வானர வீரர்களும் இந்திரஜித்தை எப்படி தாக்குவது என்று புரியாமல் நின்றனர். இந்த சூழ்நிலையை தனக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொண்ட இந்திரஜித் வானரங்களை கொன்று குவித்தான். இதனை கண்ட வானர படைகள் மாயையால் உருவாக்கப்பட்டவள் இந்த சீதை என்று தெரியாமல் பெரிய பாறைகளை அவளின் மீது படாதவாறு இந்திரஜித்தின் மீது தூக்கி எறிந்தார்கள். இதனால் கோபமடைந்த இந்திரஜித் மாயையால் உருவாக்கப்பட்ட சீதையின் தலை முடியை பிடித்து அவளை தாக்கத் தொடங்கினான். இதனைக் கண்ட அனுமனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. மாயையால் உருவாக்கப்பட்ட சீதையின் கதறலை பொறுக்க முடியாமல் இந்திரஜித்திடம் பேச ஆரம்பித்தார். மகாபாவியே பிரும்ம ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் நீ. பெண்ணை துன்புறுத்துகிறாயே நீயும் ஓர் ஆண் மகன் தானா? சாபத்தின் காரணமாக ராட்சச குலத்தில் பிறந்ததினால் ராட்சசர்களின் குணத்தை பெற்றுவிட்டாய். அதற்கும் ஓர் எல்லை உண்டு. உனது செயல்கள் எல்லை மீறிப் போகிறது. உன் தந்தை செய்த தவறால் இந்த இலங்கை நகரம் இப்போது இந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அது போல் நீயும் பெரிய தவறைச் செய்கிறாய். இதன் பலனாக மூன்று உலகங்களில் நீ எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் நீ தப்பிக்க மாட்டாய். உனக்கான அழிவை நீயே தேடிக் கொள்கிறாய் என்றார். அதற்கு இந்திரஜித் பெண்களை துன்புறுத்தக் கூடாது என்று சொல்கிறாயே அது உண்மை தான் ஆனால் யுத்த நியதிப்படி எதிரிக்கு பெரும் துன்பத்தை கொடுக்க என்ன காரியம் வேண்டுமானாலும் செய்யலாம். அதையே இப்போது செய்கிறேன். சீதையை துன்புறுத்துவதற்கே இப்படி பேசுகிறாயே இப்போது இவளை கொல்லப் போகிறேன். இதன் பிறகு சுக்ரீவனையும் உன்னையும் விபீஷணனையும் கொல்வேன். நீங்கள் இத்தனை காலம் யுத்தம் செய்து சிரமப் பட்டதெல்லாம் வீணாகப் போகிறது என்று தனது கத்தியை எடுத்து மாயையால் உருவாக்கப்பட்ட சீதையை கொன்றான் இந்திரஜித். அனுமன் அதிர்ச்சி அடைந்தார்.

ராமர் சீதை கத்தியால் கொல்லப்படுவதை பார்த்து பிரமை பிடித்தது போல் நின்றார். இந்த சமயத்தைப் பயன் படுத்திய இந்திரஜித் ஒரு அம்பை ராமரின் மீது எய்தான். இதனைக் கண்ட லட்சுமணன் ராமரின் முன்பு நின்று அந்த அம்பை தன் உடம்பில் ஏற்றுக் கொண்டு மயங்கி விழுந்தான். சீதை இறந்து விட்டாள். இன்னொரு பக்கம் லட்சுமணன் தனக்கு வந்த அம்பை ஏற்று மயங்கி கிடக்கின்றான். என்ன செய்வது என்று தெரியாமல் ராமர் மயக்க நிலையில் சிலை போல் நின்றார். லட்சுமணனை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திரஜித் நீங்கள் இத்தனை நாட்கள் செய்த யுத்தம் அனைத்தும் வீணாகப் போயிற்று என்று ஆனந்தக் கூத்தாடி இலங்கை நகரத்திற்குள் நுழைந்தான். சுக்ரீவன் உட்பட வானர தலைவர்கள் அனைவரும் ராமருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் ராமரை சுற்றி நின்று கொண்டிருந்தனர். இந்திரஜித் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று அனுமன் சிந்திக்க ஆரம்பித்தார்.

ராமரையும் லட்சுமணனையும் அழிக்க பெரிய வேள்வியை செய்து அதன் வழியாக வரத்தையும் வலிமையையும் பெற இந்திரஜித் திட்டமிட்டிருந்தான். வேள்வியை செய்யும் போது ராம லட்சுமணர்கள் இடையில் வந்து வேள்வியை தடுத்து விட்டால் என்ன செய்வது என்று சிந்தித்து ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி அவர்களை செயல்பட விடாமல் தடுக்க மாயையால் சீதை போன்ற உருவத்தை உருவாக்கி அவளைக் கொன்றால் அனைவரும் துக்கத்தில் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். அப்போது வேள்வியை செய்து முடித்து விடலாம் என்று திட்டம் தீட்டி இருந்தான் இந்திரஜித். அத்திட்டத்தின் படி இப்போது பாதி திட்டத்தை நிறைவேற்றி விட்டான். திட்டத்தின் மீதியை செயல்படுத்த ஆரம்பித்தான் இந்திரஜித். மலையின் குகைக்குள் பெரிய வேள்வியை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தான் இந்திரஜித். அனைத்து செய்தியையும் அறிந்த ராவணன் ராமரை எதிர்க்க தந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திரஜித்தை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.