ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 43

ராமர் ராவணனை பார்த்ததும் யுத்தம் செய்வதற்கு ஆயத்தமானார். அப்போது யுத்தத்தை பார்க்க வந்த முனிவர்களுள் அகத்தியர் ராமரிடம் வந்து பேச ஆரம்பித்தார். ரகசியமானதும் மிகவும் பழமை வாய்ந்ததுமான ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை கேட்டுக் கொள் இது உனது தைரியத்தை பல மடங்கு பெருக்கி உனக்கு சக்தியை கொடுக்கும் என்று ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தை உபதேசம் செய்தார். சூரினை போற்றி வழிபடும் இந்த மந்திரம் பாவங்களை அழிக்கக் கூடியது கவலையை போக்கக் கூடியது ஆயுளை வளர்க்கக் கூடியது. இந்த மந்திரத்தை மனமொன்றி கூறினால் எதிரியை சுலபமாக வெற்றி கொள்ளலாம் என்று சொல்லி ராமரை வாழ்த்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார். ராமர் சூரியனை வணங்கி ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தை செபித்து யுத்தம் செய்ய ஆரம்பித்தார். மந்தரத்தை செபித்த பிறகு மனம் மிகவும் உற்சாகமாக இருப்பதை ராமர் உணர்ந்தார். ராமருக்கும் ராவணனுக்கும் கடுமையான யுத்தம் ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான அம்புகளை ஒரே நேரத்தில் ராமர் ராவணனின் மீது எய்தார். ராவணன் அத்தனை அம்புகளையும் தடுத்து ராமருக்கு சமமாக யுத்தம் செய்தான். வானர படைகளும் ராட்சச படைகளும் சிறிது நேரம் தங்களுக்குள்ளான யுத்தத்தை நிறுத்தி ராம ராவணனின் யுத்தத்தை கண்டு இந்த உலகத்தில் இப்படியும் யுத்தம் நடக்குமா என்று பிரமித்து நின்றார்கள்.

ராமர் பல அஸ்திரங்களை கொண்டு ராவணன் கழுத்தை அறுத்தார். ராமர் ராவணனின் கழுத்தை அறுக்க அறுக்க ராவணனின் தலையானது புதிதாக வளர்ந்து கொண்டே இருந்தது. இதனை கண்ட ராமர் திகைத்து நின்றார். என்னுடைய அஸ்திரங்கள் இத்தனை நாட்களாக பல ராட்சசர்களை சுலபமாக அழித்திருக்கிறது. ஆனால் இந்த ராவணனிடம் இந்த அஸ்திரங்கள் வலிமை குன்றி காணப்படுகிறதே என்று சிந்தித்தவராக ராவணனின் அஸ்திரங்களுக்கு பதில் அஸ்திரம் கொடுத்து யுத்தத்தில் கவனத்துடன் இருந்தார். அப்போது தேரோட்டி மாதலி ராமரிடம் பேச ஆரம்பித்தான். ராவணன் இந்த பூமியை விட்டு செல்ல குறித்து வைக்கப்பட்ட காலம் வந்து விட்டது. ராவணனை அழிக்க இதுவே சரியான நேரம். ராவணனின் அஸ்திரத்திற்கு பதில் அஸ்திரம் மட்டுமே தற்போது கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு தற்போது ஒன்றை ஞாபகம் செய்கிறேன். மூன்று உலகங்களையும் காக்க பிரம்மா தன்னுடைய எல்லையில்லா சக்தியினால் பிரம்மாஸ்திரத்தை உண்டாக்கி இந்திரனுக்கு அளித்தார். ராவணன் மூன்று உலகத்தையும் வெற்றி பெற்று அடக்கியாண்ட போது இந்திரன் அந்த அஸ்திரத்தை பாதுகாக்க அகத்தியரிடம் கொடுத்தான். தண்டகாருண்ய வனத்தில் நீங்கள் சில காலம் இருந்தீர்கள் அப்போது அகத்தியர் தங்களை சந்தித்த போது அந்த பிரம்மாஸ்திரத்தை உங்களுக்கு கொடுத்தார். அந்த எல்லையில்லா ஆற்றலுடைய அஸ்திரத்தை இப்போது ராவணனின் மீது விடுங்கள் என்றான்.

ராமர் பிரம்மாஸ்திரத்தை ராவணனின் மீது எய்தார். பிரம்மாஸ்திம் ராவணனின் மார்பை பிளந்து ராவணனின் உயிரை பறித்தது. ராவணன் இறந்ததை பார்த்த ராட்சச படைகள் நான்கு புறமும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். வானர வீரர்கள் வெற்றி வெற்றி என்று துள்ளிக் குதித்தார்கள். ராவணன் இறந்து விட்டான் என்றதும் தேவர்களும் முனிவர்களும் கந்தர்வர்களும் மலர்கள் தூவி ராமரை வாழ்த்தினார்கள். மலர் குவியலுக்கு நடுவே ராமர் வெற்றி வீரனாக நின்றார். வானத்தில் சங்கு நாதமும் துந்துபி சத்தமும் முரசுகளும் ஒலித்து தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அனுமன் லட்சுமணன் சுக்ரிவன் அங்கதன் பேரானந்தம் அடைந்து ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டார்கள். விபீஷணன் ராவணனின் உடல் இருக்கும் இடத்திற்கு வந்தான். ராவணனின் உடலைப் பார்த்து யார் சொல்லையும் கேட்காமல் இப்படி இறந்து விட்டாயே ராவணா என்று கதறி அழுதான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.