ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 17

ராமரிடம் வந்த அங்கதன் ராவணனின் அரண்மனையில் நடந்த அனைத்தையும் கூறினான். இதனை கேட்ட ராமர் வானர படைகளிடம் யுத்தத்திற்கு தயாராகும்படி கூறினார். கோட்டையை வானர படைகள் நெருங்கியது. ராமர் லட்சுமணனிடம் இந்த இலங்கையின் அழகை பார்த்தாயா என்று அதன் அழகை பார்த்து ரசித்தபடியே அருகில் சென்றார். ராமருக்கு சீதையின் ஞாபகம் வந்தது. நாம் இவ்வளவு பெரிய படையுடன் வந்து விட்டோம் என்று சீதைக்கு இந்நேரம் தெரிந்திருக்குமா என்று சிந்தனை செய்தபடியே படைகளை அணிவகுக்கும் பணியில் ஈடுபட்டார். கோட்டையின் நான்கு புறமும் யார் யார் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ராமர் நிர்ணயித்தபடி அனைவரும் அணிவகுத்து நின்றனர். ராவணன் அனுப்பிய இரண்டு ஒற்றர்களும் வானரர்கள் போல் தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு வானர படைகளுக்குள் கலந்து வேவு பார்த்தார்கள். எவ்வளவு வானர வீரர்கள் இருக்கிறார்கள் என்று இவர்களால் கணக்கெடுக்க இயலவில்லை. காடு மலைகள் அனைத்திலும் வானர வீரர்கள் குவிந்திருந்தார்கள். மேலும் கடலில் உள்ள பாலத்தின் வழியாகவும் கூட்டம் கூட்டமாக இருந்தார்கள். இரு ராட்சச ஒற்றர்களையும் வீபிஷணன் கண்டு பிடித்து விட்டான். வானர வீரர்களிடம் சொல்லி அவர்களை பிடித்து ராமரிடம் அழைத்துச் சென்றான் விபீஷணன்.

ராமரிடம் சென்ற இரண்டு ராட்சசர்களும் மிகவும் பயந்த படியே பேசினார்கள். எங்களது பெயர் சுகன் மற்றும் சாரணன். நாங்கள் தூதுவர்களாக எங்களது அரசரால் அனுப்பப்பட்டோம். எங்களை விட்டு விடுங்கள் என்று அவரை கைகூப்பிய படியே நின்றனர். ராமர் ராட்சசர்களை பார்த்து சிரித்தபடியே பேசினார். எங்களது கையில் சிக்கிக் கொண்டோமே என்று பயப்படாதீர்கள். ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். உங்கள் அரசர் சொன்னபடி எங்களது படைகளின் எண்ணிக்கையை சரியாக எண்ணிப் பார்த்து விட்டீர்களா? எங்களது வலிமை ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு விட்டீர்களா? இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் விபீஷணனை உங்களுடன் அங்கு அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு தேவையான செய்தியை மறைக்காமல் விபீஷணன் சொல்லுவார். முழுமையாக பார்த்து விட்டு அனைத்தையும் தெரிந்து கொண்டு உங்கள் அரசரிடம் போய் சொல்லுங்கள். உங்கள் உளவு செய்தியுடன் அப்படியே நான் சொல்லும் செய்தியையும் சேர்த்து உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். எந்த பலத்தின் மேல் நம்பிக்கை வைத்து சீதையை தூக்கி வந்தாயோ அதே பலத்தை உனது படை வீரர்களோடு வந்து உன்னால் முடிந்த வரை காட்டி என்னுடன் யுத்தம் செய். நாளை காலையில் எனது அம்புகள் இந்த இலங்கை நகரத்தை அழிக்கத் தொடங்கும். அதை உனது கண்களால் பார்ப்பாய். அதன் பிறகு பெரிய ராட்சச படையுடன் இருக்கும் உன் மீது எனது கட்டுக் கடங்காத கோபத்தை எனது அம்புகள் வழியாக காட்டுவேன். எனது அம்பின் வலிமையின் முன்பு உனது வலிமையை காட்டி முடிந்தால் தப்பித்துக்கொள் இச்செய்தியை ராவணனிடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லி முடித்தார்.

ராமர் விபீஷணனிடம் ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் இவர்களை விட்டு விடுங்கள் என்றார். விடுபட்ட இரண்டு ராட்சசர்களும் ராமரிடம் தாங்கள் நிச்சயம் இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று தங்களையும் அறியாமல் வாழ்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்கள். ராவணனிடம் சென்ற ஒற்றர்கள் தாங்கள் தெரிந்து கொண்டதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒரே நோக்கத்திற்காக ராமர் லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் நால்வரும் ஒன்று கூடி இருக்கிறார்கள். அவர்களின் வலிமையை சொல்ல வேண்டுமானால் இந்த நான்கு பேரின் வலிமையை கணக்கிட்டால் இவர்கள் நால்வர் சேர்ந்தால் இந்த இலங்கை நகரத்தையே தனியாக தூக்கி வேறு இடத்தில் வைத்து விடுவார்கள். அவ்வளவு வலிமையானவர்கள். இதற்கு எந்த படை பலமும் இவர்களுக்கு தேவையில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.