ராமாயணம் 6. யுத்த காண்டம் பகுதி – 11

ராமர் கடல் அரசனுக்கு உபவாசத்தை செய்து கொண்டிருக்கும் போது ராவணன் ராமர் எத்தகைய படைகளுடன் வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள சார்தூலன் என்ற ராட்சசனை அனுப்பி உளவு பார்த்து வருமாறு அனுப்பினான். ராவணனிடம் திரும்பி வந்த ஒற்றன் கடற்கரையில் தான் கண்ட காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தான். ராமரும் லட்சுமணனும் சீதை இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு மிகப்பெரிய படைகளுடன் இங்கு வருவதற்கான முயற்சிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். இலங்கையை நோக்கி கணக்கில் அடங்காத வானரங்களும் கரடிகளும் பெரும் திரளாக வந்து கொண்டிருக்கிறது. அவர்களை பார்ப்பதற்கு கடற்கரையில் இன்னோரு கடல் இருப்பது போல் யாரும் உள் புக முடியாத அளவிற்கு கூட்டமாக உள்ளார்கள். இந்த படைகள் பத்து யோசனை தூரத்திற்கான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் அளவிற்கு மிகப்பெரிய படைகளாக இருக்கிறார்கள். விரைவில் இங்கு வந்து விடுவார்கள் என்று சொல்லி முடித்தான். ஒற்றனின் பேச்சில் ராவணன் மிகவும் மனக்கலக்கம் அடைந்து தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து ஒரு தந்திரம் செய்தான். தனது தூதுவர்களின் சிறந்தவனான சுகனை வரவழைத்து அவனிடம் சுக்ரீவனிடம் தனியாக சென்று பேச வேண்டும் என்றும் பேசும் முறைகளையும் சொல்லி தூது செல்ல அனுப்பினான். சுகன் ஒரு பறவை உருவத்தை அடைந்து கடலை தாண்டி யாருக்கும் தெரியாமல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான்.

ராமர் லட்சுமணர்கள் உட்பட அனைவரும் ஒன்றாக இருந்ததினால் சுக்ரீவனை தனியாக வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த சுகனுக்கு அதற்கான சமயம் அமைந்தது. சுக்ரீவன் அருகில் பறவை வடிவிலேயே சென்றான் சுகன். இலங்கையின் அரசனான ராவணன் தங்களிடம் என்னை தூதுவனாக அனுப்பி இருக்கின்றான் என்று பேச ஆரம்பித்தான். ராவணன் இலங்கையின் அரசன். நீங்களும் அரச பரம்பரையில் பிறந்த ஒரு நாட்டின் அரசன். ஒரு நாட்டின் அரசன் இன்னோரு நாட்டின் அரசனோடு நட்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள். இதுவே மரபு. ஒரு நாட்டில் இருந்து துரத்தப்பட்ட ராமருடன் நீங்கள் நட்பு கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் காட்டில் வாழும் ராமருடன் நட்பு கொள்வதால் அரசன் என்ற உங்களின் பெரும் மதிப்பு தாழ்ந்து சென்று விடுகிறது. நீங்கள் ராமருக்கு உதவி செய்வதினால் இலங்கை அரசனை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கும் ராவணனுக்கும் இதுவரையிலும் எந்த விதமான பகையும் விரோதமும் இல்லை. தற்போது பகை என்று வந்து விட்டால் இருவரின் படைகளுக்கும் சண்டை ஏற்படும். ராட்சசர்களின் படைகள் மிகவும் வலிமையானது அவர்களை வெற்றி பெறுவது என்பது யாராலும் இயலாத காரியம். இலங்கை நகரத்தை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இதுவரை தேவர்கள் மற்றும் கந்தர்வர்களால் கூட நெருங்க முடியவில்லை. அப்படியிருக்க இந்த வானர படைகளை வைத்து நீங்கள் எப்படி வெற்றி பெற முடியும் என்று நம்புகிறீர்கள். நீங்கள் ராவணனுக்கு தம்பி போன்றவர். உங்களையும் உங்களது படைகளின் அழிவையும் ராவணன் விரும்பவில்லை. உங்களிடம் நட்புடன் இருக்கவே விரும்புகிறார்.

ராமரின் மனைவி சீதையை ராவணன் தூக்கிச் சென்றதில் உங்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை. எனவே இது பற்றி நீங்கள் நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். விரைவில் உங்கள் படைகளுடன் உங்கள் நாட்டிற்கு திரும்பி சென்று விடுங்கள் இதுவே உங்களுக்கு நன்மையை தரும் என்று சொல்லி முடித்தான். ராட்சசன் சுகன் சொன்னதை முழுமையாக கேட்ட சுக்ரீவன் கோபம் மிகவும் அடைந்தான். இந்த ராட்சசனை பிடித்து கட்டுங்கள் என்று தனது வானர படைகளுக்கு சுக்ரீவன் கட்டளையிட்டான். வானர வீரர்கள் பாய்ந்து சென்று பறவை வடிவத்தில் இருந்த ராட்சசனை பிடித்து கட்டி அதனை துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.