சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 96 வது தேவாரத்தலம் கோனேரிராஜபுரம். புராண பெயர் திருநல்லம் மற்றும் திருவல்லம். மூலவர் உமாமகேஸ்வரர் பூமிநாதர் மாமனி ஈஸ்வரர். சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமா மஹேஸ்வரர் லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். அம்பாள் அங்கவளநாயகி தேகசுந்தரி தேக சவுந்தரி மங்கள நாயகி. அம்பாள் சன்னதி கிழக்குப் பார்த்து உள்ளது. உமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அம்பிகை அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிர் திசையில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அருள்பாலிக்கிறார்கள். தலவிருட்சம் அரசமரம் வில்வம். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை உள்ளது. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் பூமி தீர்த்தம். பூமாதேவி இங்கு வழிபாடு செய்து அருள் பெற்றமையால் இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும். கோவில் முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் எதிரே நீண்ட முன் மண்டபமும் மண்டபத்தின் உள்ளே கொடி மரம் பலிபீடம் மற்றும் நந்தி உள்ளது. மண்டபத்தின் மேற்கு பக்கத்தின் உட்புறம் அறுபத்து மூவர் சிவமூர்த்தம் பன்னிரண்டு ராசிகள் மகரிஷிகள் ஆகிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மூலவர் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் தட்சிணாமூர்த்தி அகத்தியர் ஜ்வரஹரர் லிங்கோத்பவர் கங்காதரர் அர்த்தநாரீஸ்வரர் துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். கருவறை கோஷ்டத்தில் பின்புறம் கிழக்கு நோக்கி லிங்கோத்பவர் இருக்கிறார். அவரின் இரு பக்கமும் பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். கல்யாண சுந்தரர் கல்யாண கோலத்துடனும் மகாவிஷ்ணு பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சியுடன் அருள் பாலிக்கிறார்கள். மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். இத்தல வைத்தியநாத சுவாமி சன்னிதியின் எதிரில் முத்துக்குமார சுவாமியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். திரிபுரத்தை எரித்த திரிபுரசம்ஹாரமூர்த்தி இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். கருவறையைச் சுற்றி வரும்போது உள் சுற்றில் கருவறைக்கு வெளிப்புறம் ஆனையுரித்தேவர் லிங்கத்திற்கு பூசை செய்தல் இறைவன் தேவியரோடு இருத்தல் உள்ளிட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.
முன் காலத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட உலகைக் காக்கும் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார். பூமாதேவி சிவனை வழிபட்டு சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி பூமாதேவி வழிபாட்டிற்கு ஒரு இடத்தைத் தேடினாள். திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வணங்க வேண்டிய தலம் இது என்று உணர்ந்து தேவ சிற்பியிடம் ஆலயம் அமைக்க கேட்டுக் கொண்டாள் பூமாதேவி.
தேவ சிற்பியான விஸ்வகர்மா அங்கே ஆலயம் அமைத்தார். வைகாசி மாதத்தில் குருவாரத்தில் ரோகிணியும் பஞ்சமியும் கூடிய சுப நாளில் தேவகுருவான பிரகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தார். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி நாள்தோறும் இறைவனை பூஜித்து வணங்கி வந்தாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் கொடுத்தார். பூமாதேவியே இந்த உலக உயிர்களின் சகல பாவங்களையும் போக்கும் தீர்த்தம் ஒன்றை உருவாக்கு என்று பணித்தார் இறைவன். அதன்படி பூமாதேவி தீர்த்தம் ஒன்றை உருவாக்கினாள். அதுவே பூமிதீர்த்தம் ஆகும். பூமாதேவி இங்கு வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. பூமா தேவியால் அருளப்பட்ட அற்புத பெருமை வாய்ந்த சிவதுஷ்டிகர ஸ்தோத்திரம் இத்தலத்திற்கு உண்டு.
இத்தலத்தில் நடராஜர் திருஉருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த உலோகச் சிற்பம் உலகின் பழமையான சிலைகளில் ஒன்றாகும். இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. நடராஜரின் உடம்பில் மனிதருக்கு இருப்பது போலவே கை ரேகை தழும்பு ரோமம் மார்பில் மரு உள்ளது. மதுரை உத்திரகோசமங்கை கோனேரிராஜபுரம் ஆகிய இம்மூன்று தலங்களிலும் நடராஜருக்கு திருவீதிவுலா கிடையாது.
நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் கூறினார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன். சிவ பக்தரான அந்த சிற்பி ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்பட்டு சிலையை சிற்பியால் வடிக்க முடியாமல் போனது. பணி தாமதமாவதை அறிந்த மன்னன் ஸ்தபதியை கடிந்து கொண்டார். நாளைக்குள் சிலை தயாராகவில்லை எனில் தண்டனை நிச்சயம் என்று எச்சரித்தான். நேரம் செல்ல செல்ல சிற்பிக்கு கவலையும் ஆதங்கமும் ஏற்பட்டது. இறுதி முயற்சியாக சிற்பி கொதித்துக் கொண்டிருக்கும் உலோக கூழை (உலோகத்தை) தான் செய்துள்ள அச்சில் ஊற்றுவதற்குத் தயாரானார். அப்போது சிவபெருமானும் அம்பாளும் தம்பதி சமேதராக வந்தார்கள். உலைக் களத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்டனர். சிற்பத்தை சரியாக செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சிற்பி உலைக் களத்தில் ஏது தண்ணீர்? வேண்டுமென்றால் உலோகக் கூழ் இருக்கிறது குடியுங்கள் என்றார். அந்த தம்பதிகளும் அதனை வாங்கிப் பருகினார்கள். மறு நொடியே அந்த தம்பதிகள் நின்று கொண்டிருந்த இடத்தில் நடராஜர் சிலையும் சிவகாமி அம்பாள் விக்கிரகங்களாக மாறிப் போனார்கள்.
இதனைக் கண்ட சிற்பிக்கு வந்தது இறைவனும் இறைவியும் என்று உணர்ந்து கொண்டார். நடந்தவற்றை அப்படியே அரசரிடம் சென்று சொன்னார். உடனடியாக அங்கு வந்த அரசர் சிற்பத்தைக் கண்டு மிகவும் அற்புதமான சிலை என்று சிற்பியை பாராட்டினார். நடராஜரின் சிலையில் நகங்கள் உரோமங்கள் என உயிரோட்டமாக இருந்ததைக் கண்டதும் மன்னன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ஆனால் சிற்பி சொன்னதை அரசனால் நம்ப முடியவில்லை. சிற்பி பொய் சொல்வதாக நினைத்த மன்னன் இந்த சிலை மனித ரூபத்தில் வந்த இறைவன் என்றால் சிற்பத்தை வெட்டினால் இரத்தம் வர வேண்டும் என்று தனது வாளால் சிலையை வெட்டினான். உடனடியாக அந்த இடத்தில் இருந்து இரத்தம் வந்தது. உடனே மன்னனின் கை கால்கள் செயலிழந்தன. தொழு நோய் மன்னனை பீடித்தது. தவறை உணர்ந்த மன்னன் இறைவனிடமும் சிற்பியிடமும் மன்னிப்பு கேட்டான். தன் நோய் குணமாக பரிகாரமும் கேட்டான். ஆலயத்தில் உள்ள வைத்தியநாத சுவாமியை 48 நாட்கள் பூஜித்தால் குணமடையலாம் என்று இறைவன் அசீரிரியாக அருளினார். அதன்படி செய்து மன்னன் வழிபட்டு குணமடைந்தான். நடராஜர் விக்கிரகம் இப்படித்தான் உருவானது. தானே சுயம்புவாக தோன்றியவர் என்பதால் தம்முடைய மேனியில் மனிதனுக்கு உள்ளது போன்றே கையில் ரேகைகள் மச்சங்களுடன் மார்பில் மருவுடன் திகழ்கிறார். ருத்ராட்ச பந்தலின் கீழ் ஸ்வாமி தெற்கு நோக்கி அருள இவரை தரிசனம் செய்தபடி நால்வர் பெருமக்களும் அற்புதமாகக் காட்சி தருகின்றனர். மன்னனின் வாளால் ஏற்பட்ட காயத்தை நடராஜரின் வலது திருப்பாதத்தில் இன்றும் காணலாம். கூடவே கையில் மச்சம் கைவிரல் ரேகைகள் என்று இத்தல நடராஜர் உயிரோட்டமுள்ளவராக அருள் பாலிக்கிறார்.
நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எமதர்மர் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான். அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். சிவன் பார்வதி திருமணக் காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவனும் பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பை குடித்து சுயம்பு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி அம்மனாக காட்சி கொடுத்துள்ளனர். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் சனிபகவானை வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி பகவான் இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன் நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோயிலுக்கு காணிக்கையாக சிவனின் சன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான். ஒரு கிளிக்கு ஆத்ம ஞானம் அளித்த ஞான கூபம் என்ற கிணறு இன்றும் உள்ளது.
இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன் இராசேந்திரன் முதலாம் இராசாதிராசன் இரண்டாம் இராசேந்திரன் முதலாம் குலோத்துங்கன் காலத்தியவைகளாக உள்ளது. கல்வெட்டில் இறைவன் திருநல்லம் உடையார் என்று பொறிக்கப்பட்டுள்ளது. கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றிக் கட்டினார். வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவரின் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும் நக்கன் நல்லத் தடிகள் என்பவரால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும் குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன. தலபுராணம் சமஸ்கிருதத்தில் உள்ளது. அகத்தியர் உட்பட 16 சித்தர்களும் பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார்கள். இத்தலத்தை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்று அப்பர் தனது பாடலில் பாடியுள்ளார். அப்பர் திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.












