சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 253 வது தேவாரத்தலம் திருவொற்றியூர். மூலவர் ஆதிபுரீஸ்வரர், படம்பக்கநாதர், தியாகராஜர், ஒற்றீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர். இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைஅம்மன், வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம், திரிபுரசுந்தரி. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். அம்பாளுக்குக் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கேரள நம்பூதிரிகளே இவளுக்குப் பூஜை செய்கின்றனர். தினமும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு இவள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி சேவையில் காட்சி தருகிறார். தலவிருட்சம் மகிழம், அத்தி. தீர்த்தம் பிரம்மதீர்த்தம், நந்தி தீர்த்தம். திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானமாக இருக்கின்றார்கள். வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன் என இரண்டு அம்பாள்கள், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள். காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது.
முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் பெற்றது. மற்றொரு காரணமாக இங்குள்ள இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் ஒற்றிக் கொண்டதால் அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும் வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். வாசுகி என்னும் நாகம் உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய சிவன் புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இவர் படம்பக்கநாதர் என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் அணிவித்திருக்கிறார்கள். சுவாமி இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால் அர்ச்சகர்கள் சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை. இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே சுவாமியின் சுயரூப கோலத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிக்கின்றனர்.
ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. மேலும் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. கோவிலின் பின்பக்கம் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. ஒரு சிவலிங்கம் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். இவருக்கு ஆவுடையார் கிடையாது. வடக்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி இருக்கின்றன. பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.
தலமரம் மகிழமரம் இந்த வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறம் தள்ளி அமைந்திருக்கிறது. தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள பகுதியை அடையலாம். தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கிய தியாகராஜர் சந்நிதி இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருக்கிறது. இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடையலாம். பாண்டியன் அரசவையில் அநீதி இழைக்கப்பெற்ற கண்ணகி மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன் கிளம்பினாள். அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும் அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தைத் தணிக்க எண்ணிய சிவன் தாயக்கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள். அப்போது சிவன் அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடி விட்டார். பின்பு கண்ணகி பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவே இவள் வட்டப்பாறையம்மன் என்று பெயர் பெற்றாள். பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில் தனியே சிலை வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார். வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு அருகில் திருப்தீஸ்வரர் என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார். இவர் ஒரு சதுர வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார்.
வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியது கவிச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர். கம்ப இராமாயணம் எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில் தான். வட்டப்பாறை அம்மனை வணங்கிய பிறகே கம்பர் இராமாயணம் எழுத தொடங்குவார். கம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு இரவில் எழுதினார். அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே நந்தாது எழுதுதற்கு நல்லிரவில் பிந்தாமல் பந்தம் பிடி என பாடல் பாட அவ்வாறே காளியன்னையும் அவர் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்திருக்கின்றாள். கௌலீஸ்வரர் என்ற பெயரில் ஓர் சிவன் இக்கோயிலில் தனிச்சன்னதியில் இருக்கிறார். ரூபத்துடன் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர் இடது மேல் கையில் ஓடு வைத்து கீழ் கையை மார்புக்கு கீழே வைத்தபடி இருக்கிறார். வலது கையில் சின்முத்திரை காட்டுகிறார். கலிய நாயனாரின் அவதாரத் தலம் ஆகும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை. இங்குள்ள அருள்ஜோதி முருகன் அருணகிரியாரால் பாடப்பெற்றவர் ஆவார். நந்திதேவருக்காக சிவன் இத்தலத்தில் பத்ம தாண்டவம் ஆடிக்காட்டியிருக்கிறார். 27 நட்சத்திரங்கள் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்றது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இந்த லிங்கங்கள் அனைத்தும் வடக்கு நோக்கியிருக்கிறது. மாசி மாதம் சிவராத்திரியன்று மாலையில் இந்த லிங்கங்களுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடக்கும்.
பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர் பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார். இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும். இக்கோயிலில் இருந்து 15 கி.மீ., தூரத்திலுள்ள மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், 25 கி.மீ., தூரத்திலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். மூன்று அம்பிகையர்களும் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருஒற்றயூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம். இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும்.
இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர் மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர் இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம் அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர் மாணிக்க தியாகர் என்றும் அழைக்கப்படுகிறார். கலியனார் என்னும் சிவபக்தர் இங்கு சுவாமிக்கு தினமும் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன் வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் அவர் விளக்கிட்டு சிவனை வழிபட்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் தீபத்திற்கு எண்ணெய் வாங்கக்கூட பணமில்லை. எனவே தனது கழுத்தை அறுத்து ரத்தத்தில் தீபம் ஏற்ற முயன்றார். அப்போது சிவன் அவருக்குக் காட்சி தந்து அவரது பக்தியை உலகறியச் செய்தார். கலியனார் நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது.
சென்னை செங்குன்றம் அருகிலுள்ள ஞாயிறு என்னும் ஊரில் பிறந்த சங்கிலியார் என்னும் பெண்மணி சிவ பக்தையாக திகழ்ந்தார். இளவயதிலேயே இத்தலம் வந்து சிவனுக்கு சேவை செய்தார். திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்திருந்த சுந்தரர் இத்தலம் வந்தார். சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார். அவரும் ஒப்புக்கொண்டு சங்கிலியாரிடம் சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். அப்போது சங்கிலியார் சிவனிடம் சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணந்து கொண்டதால் இரண்டாவதாக தான் எப்படி மணக்க முடியும்? எனக்கேட்டாள். சிவன் அவளிடம் சுந்தரரை அவளை விட்டு பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித்தருவதாகக் கூறினார். இதையறிந்த சுந்தரர் தான் சன்னதி முன்பு சங்கிலியாருக்கு சத்தியம் செய்து தருவதாகவும் அப்போது பிரகாரத்திலுள்ள மகிழ மரத்தடியில் எழுந்தருளும்படியும் சிவனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் சிவன் சங்கிலியாரிடம் சுந்தரரை மகிழ மரத்தடியில் சத்தியம் வாங்கும்படி சொல்லிவிட்டார். அதன்படி இங்குள்ள மரத்தடியில் சத்தியம் செய்து சுந்தரர் சங்கிலியாரை மணந்து கொண்டார். இன்றும் மாசி மாதம், மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இவ்விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார். மாசியில் நடக்கும் இந்த விழா மகிழடி சேர்வை ஆகும். இவ்விழாவின்போது அறுபத்துமூவரும் எழுந்தருளுவர்.
இங்குள்ள மகிழ மரத்தடியில் சிவன் பாதம் இருக்கிறது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கிறார்கள். வள்ளலார் வடிவுடையம்மன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் இங்கு அம்பிகையை வழிபடுவார். ஒருசமயம் கோயிலில் அர்த்தஜாம பூஜையைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு தாமதமாகச் சென்றார். கதவு அடைத்திருக்கவே சாப்பிடாமல் பசியுடனே வெளியில் திண்ணையிலேயே படுத்து விட்டார். வள்ளலாருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை ஒரு இலையில் வெண்பொங்கல் வைத்து அவருக்குக் கொடுத்துச் சென்றாள். இதை வள்ளலார் தனது அருட்பாவில் குறிப்பிட்டிருக்கிறார். சூரிய குலத்தைச் சேர்ந்த மாந்தாதா என்னும் மன்னனின் ஆளுகைக்குட்பட்டு இப்பகுதியை சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம் அம்மன்னன் இப்பகுதிக்கு வரி கேட்டு ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க என்று திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இறைவனே இவ்வாறு ஓலையில் திருத்தம் செய்ததாக கருதிய மன்னன் இவ்வூருக்கு வரி விதிக்காமல் விலக்கி வைத்தான். இதனாலும் இவ்வூருக்கு திருவொற்றியூர் என பெயர் உண்டானதாக ஓர் வரலாறு உள்ளது. வங்கக்கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசர் கடலில் திசை தெரியாமல் செல்லும் கப்பல்களுக்கு கரையிலிருக்கும் கலங்கரை விளக்கம் வழி காட்டுவதைப்போல வாழ்க்கையில் வழி தெரியாமல் செல்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் ஞான தீபமாக இத்தலத்து சிவன் அருளுகிறார் என்று பாடியிருக்கிறார். தேவார மூவர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற சிவஸ்தலங்கள் 44-ல் திருஒற்றியூர் தலமும் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது இத்தலம். இத்தலத்திற்கு திருநாவுக்கரசரின் பதிகங்கள் 5, ஞானசம்பந்தர் பநிகம் 1, சுந்தரர் பதிகங்கள் 2 என மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன. இக்கோயிலில் சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், இராஷ்டிர கூடர்கள், விஜய நகர மன்னர்கள், சம்புவராய மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன. இக்கோயிலில் 200 மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பல தமிழ் வரிவடிவத்தில் உள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழன் கி.பி.1215 ம் ஆண்டு 56 நாட்கள் கோவில் திருநாட்களை நடத்த உத்தரவிட்டுள்ளதை கல்வெட்டின் மூலம் அறியலாம். ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன், பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள், வள்ளலார் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், வள்ளலார் பாடல்கள் பாடியுள்ளனர்.
அருமையான விரிவான விளக்கமான அழகிய தமிழ் பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன்.