சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 250 வது தேவாரத்தலம் திருவெண்பாக்கம். மூலவர் ஊன்றீஸ்வரர், ஆதாரதண்டேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் தடிகௌரி அம்பாள், மின்னொளியம்மை. தலவிருட்சம் இலந்தை. தீர்த்தம் குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்தே இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை உள்ளது. தேவார காலத்தில் இருந்த பழைய கோயில் குசஸ்தலையாற்றின் கரையில் திருவிளம்பூதூரில் இருந்தது. இந்த இடம் இலந்தை மரக்காட்டுப் பகுதியாக இருந்தது. சுந்தரருக்கு ஊன்றுகோலை இறைவன் அளித்தருளிய தலம் இதுதான்.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் பல கல்வெட்டுக்களுடன் இருந்தது. சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்க குசஸ்தலையாற்றில் அணையைக் கட்ட 1942ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில் தேவார காலத்தில் இருந்த ஊண்றீஸ்வரர் ஆலயம் இருந்தது. எனவே திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு தற்போதுள்ள இடத்தில் பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு 5-7-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு கல்லில் பொறித்து அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன. சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு தடுமாறிய போது அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். ஆனால் சிவன் தடுத்து விட்டார். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின் அம்பாள் சுந்தரரிடம் தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பது ஒரு ஊழ்வினைப்பயனே கலங்காது செல்லுங்கள் என்றார். தகுந்த காலத்தில் இறைவன் அருளால் பார்வை கிடைக்கும் என்று சுந்தரரை சாந்தப்படுத்தினாள். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாள். இதனால் அம்பாள் மின்னொளி அம்பாள் என்றும் கனிவாய்மொழிநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.
திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர் திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு சிவன் அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள் என்றார். தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. கோபம் அதிகரித்த சுந்தரர் சிவன் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்து விட்டது. பின் சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்து இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.