சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 251 வது தேவாரத்தலம் திருக்கண்டலம். புராணபெயர் திருக்கள்ளில். மூலவர் சிவானந்தேஸ்வரர். இறைவன் இத்தலத்தில் சதுர ஆவுடையாராக சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் ஆனந்தவல்லி. தலவிருட்சம் அலரி. தீர்த்தம் நந்தி தீர்த்தம். இக்கோயிலில் சிவன் சக்தி தட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் அமுத கலசமும் ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார். சுவாமி விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே நந்தி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கிறது. அதையடுத்து நேரே இறைவனை கருவறை உள்ளது. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதியும் அதையடுத்து அம்பாள் ஆனந்தவல்லி அம்மை சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சந்நிதிகளும் சோமஸ்கந்தர் வடிவில் அமைந்திருக்கின்றது. வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும் காளத்தீஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. இறைவன் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் இறைவன் சந்நிதிக்கு வெளியே தெற்கு நோக்கியபடி அமைந்துள்ளது. நால்வர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன.
பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒருசமயம் சிவனைப் பார்க்க அவர் கைலாயம் சென்றார். அங்கு சிவன் பார்வதியுடன் அமர்ந்திருந்தார். அருகில் சென்ற பிருகு சிவனை மட்டும் வணங்கி அவரை சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதி தேவி மனதில் கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என நினைத்த அவள் சிவனை ஒட்டியபடி அமர்ந்து கொண்டாள். பிருகுவோ வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்தார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. என்னதான் இருந்தாலும் சிவன்தானே பெரியவர் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. பின்னர் பிருகு பூலோகத்தில் சிவதல யாத்திரை வந்தபோது கள்ளில் என்ற ஒரு வகையான மரம் வனமாக இருந்த இங்கு அகத்தியர் பூஜித்த சுவாமியை கள்ளில் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது சிவன் அவர் முன்பு தோன்றி சிவமும் சக்தியும் ஒன்றுதான். சக்தி இல்லாமல் சிவமும் சிவம் இல்லாமல் சக்தியும் இருக்க முடியாது என்று உபதேசம் செய்து அம்பாளை தன் மடியில் அமர வைத்து சக்தியுடன் இணைந்த தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்தார். சக்தியின் பெருமையை உணர்ந்த பிருகு முனிவர் அம்பாளிடம் தன் செயலை மன்னிக்கும்படி வேண்டினார். இதனால் அம்பாள் மனதில் ஆனந்தம் கொண்டதோடு தன்னையும் சிவனையும் வழிபட்டு ஆனந்தமாக இருக்கும்படி அருளினாள். எனவே அம்பாள் ஆனந்தவல்லி என்ற பெயர் பெற்றாள்.
இக்கோயில் குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சுவாமி அம்பாள் சன்னதியில் எப்போதும் அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. பிருகு முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்த சிவன் என்பதால் சுவாமிக்கு திருக்கள்ளீஸ்வரர் என்ற பெயரும் தலத்திற்கு திருக்கள்ளில் என்ற பெயரும் இருக்கிறது. அகத்தியருக்கு காட்சி தந்தது போலவே சிவன் அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் தனிச்சன்னதியில் அமைந்து சோமாஸ்கந்த வடிவமாக இக்கோயில் இருக்கிறது. திருவெண்பாக்கம் தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தர் சிவனை வணங்கி விட்டு தன் யாத்திரையை தொடர்ந்தார். அவர் குசஸ்தலை ஆற்றின் கரையில் தான் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்கள் விபூதி பிரசாதம் ஆகியவற்றை வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். குளித்து விட்டு திரும்பி வந்தபோது அப்பொருட்களைக் காணவில்லை. அதனைத் தேடிய திருஞானசம்பந்தர் இங்கு வந்தபோது சுயம்பு லிங்கத்திற்கு அருகே பூஜை பொருட்கள் இருந்ததைக் கண்டார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரவேண்டும் என்பதற்காகவே பூஜைப்பொருட்களை மறையச்செய்து அருள் செய்ததாக அசரீரியாக ஒலித்தார் சிவன். திருஞானசம்பந்தர் சுவாமியை வணங்கி பதிகம் பாடினார்.
இங்குள்ள நந்தி பகவானுக்கு இறைவன் பெயரிலேயே சிவா நந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது வடக்கு உயர்ந்து தெற்கு பகுதி தாழ்வாகியது. இதனால் பூமி சமநிலை இழக்கவே சிவன் அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். சிவனது திருமணத்தை தானும் காண வேண்டுமென விரும்பிய அகத்தியர் அவரிடம் தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்காட்சியை தரிசிக்கும்படி வரம் பெற்றார். தென்பகுதியை நோக்கி வந்த அகத்தியர் திருப்பாலைவனம் தலத்தை வணங்கிவிட்டு அங்கு தங்கியிருந்தார். அன்று இரவு அவரது கனவில் சிவன் தோன்றி இத்தலத்தையும் தீர்த்தத்தையும் குறிப்பால் உணர்த்தி சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். பின் அகத்தியர் இத்தலம் வந்து சுவாமியை வழிபட்டார். சிவன் அம்பாளுடன் திருமணக்காட்சி காட்டியருளியதோடு முருகனோடு சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். தனக்கு அருள்புரிந்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருளவேண்டும் என வேண்டினார் சிவனிடம் அகத்தியர் வேண்டினார். சிவனும் இங்கு சுயம்புவாக எழுந்தருளி சிவாநந்தீஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். திருஞானஞம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.