சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 30 வது தேவாரத்தலம் இலுப்பைப்பட்டு. புராணபெயர் பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப்படிக்கரை. மூலவர் நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர். இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அமிர்தவல்லி, மங்களநாயகி. தலமரம் இலுப்பை. தீர்த்தம் பிரமதீர்த்தம், அமிர்ததீர்த்தம். சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி அவ்விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த தலம். இலுப்பை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் இத்தலம் இலுப்பைபட்டு என்றும் மண்ணியாற்றின் கரையில் அமைந்ததனால் திருமண்ணிப்படிக்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
கோவிலின் கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. பிரகாரத்தில் திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகர் இருக்கிறார். இவருக்கு அருகிலேயே இடம்புரி விநாயகரும் இருக்கிறார். கோயிலுக்கு எதிரே வெளியில் விஜய விநாயகர் இருக்கிறார். இங்கு தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். உற்சவர் வில்லேந்திய வடிவில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை திருப்புகழில் அருணகிரிதாதர் பாடியுள்ளார். பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். இக்கோவிவில் சிவன் ஐந்து தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார்.
பாற்கடலை கடைந்தபோது வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார். அவ்விஷம் சிவனின் உடம்பில் சேராமல் இருப்பதற்காக அம்பாள் சிவனுக்கு பின்புறமாக இருந்து அவரது கண்டத்தை (தொண்டைக்குழி) பிடித்து நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது. இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தத்தில் கலந்திருந்த விஷத்தை நிறுத்தியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். இவள் தன் இடது கையால் பாதத்தை காட்டியபடி அருளுகிறாள்.
பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள் இங்கு தேடிப்பார்த்தும் லிங்கம் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில் இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக மனதில் நினைத்து வணங்கினர். சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம் தங்களுக்கு அருளியதைப்போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர். சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது. தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர். அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர். பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர். நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர். சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது சித்திரை பெளர்ணமி நாளில் இத்தலம் வந்து பஞ்ச லிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு உள்ளது. திரௌபதி வலம்புரி விநாயகரை வழிபட்டுள்ளார். இவர்களில் நீலகண்டேஸ்வரர் படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன் சோடஷலிங்கமாக 16 பட்டைகளுடன் இருக்கிறார். ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும் நீலகண்டேஸ்வரர் படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர் தெற்கு நோக்கி இருக்கிறார்.
துரியோதனன் பஞ்சபாண்டவர்களைக் கொல்ல இங்குள்ள தீர்த்தத்தில் விஷத்தைச் சேர்த்தான். அம்பிகை அவ்விஷத்தைத் தன் கையிலிருந்த அமுதத்தால் முறித்து பிறகு அந்நஞ்சை இறைவன் சிவபெருமான் உண்டார். அதனாலேயே இத்தலத்து இறைவன் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார். அமிர்தத்தைத் தன் கையில் வைத்திருந்த காரணத்தால் இறைவி அமிர்தகரவல்லி எனப் பெயர் பெற்றார் என்றும் புராண வரலாறு உள்ளது. சனிபகவானால் பிடிக்கப்பட்ட நளமகாராஜன் ஏழரைச்சனியின் முடிவு காலத்தில் சிவதலங்களுக்கு சென்று தரிசித்து வந்தார். திருக்கடையூர் செல்லும் முன்பு அவர் இத்தலத்தில் பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்தார். அப்போதே தனக்கு சனியின் ஆதிக்கம் குறைந்திருப்பதை உணர்ந்து கொண்டார். இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் பாடப்பட்டுள்ளது. இந்திரன், விபாண்டகர், துந்து, பாண்டவர்கள், பிரமன், மாந்தாதா, நளன் வழிபட்டுள்ளனர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.