தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 1 சிதம்பரம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 1 வது தேவாரத்தலம் ஆகும். மூலவர் திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்), தாயார் உமையாம்பிகை (சிவகாமசுந்தரி), தலவிருட்சம் தில்லைமரம், தீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல், புரணா பெயர் தில்லை.

இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயம் தலம் ஆகும். சைவத்தில் கோயில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும். இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் இல்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது. நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருக்கின்றது. நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பது தான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம்.

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளும் 5 வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நால்வர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் சிதம்பரத்தில் நடராஜனைக் காண திருக்கோயிலுக்குள் வந்தார்கள். திருஞானசம்பந்தர் இறைவனையடைய சத்புத்திர மார்க்கத்தைக் கையாண்டவர். அதனால் தென்வாயில் வழியாக நேரே வந்து இறைவனைக் கண்டுகளித்தார். திருநாவுக்கரசர் தாச மார்க்கத்தைப் பின்பற்றியவர். தாச மார்க்கம் என்பது ஆண்டான் அடிமை உறவு. ஆகவே வலது புறமாக (கிழக்கு) வந்து ஏவல் கேட்கும் நோக்கத்துடன் இறைவனைக் கண்டார். சுந்தரர் நட்பு முறையில் இறைவனை வழிபட்டவர். அதனால் பின்புறமாக (வடக்கு) வந்து வேண்டியதை உரிமையுடன் பெற்றவர். மாணிக்கவாசகர் சன்மார்க்க முறையைக் கடைப்பிடித்தவர். (குரு சீட உறவு). ஆதலால் அருட்சக்தி (மேற்கு) பக்கம் வந்து இறைவனைக் கண்டார். இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் திருநாவுக்கரசர் அங்கப்பிரதட்சணமே செய்திருக்கிறார்.

இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர் நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்தலத்து திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருக்கிறது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன் திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இதுபோல் வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும் திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும் சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால் சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று நடராஜருடன் ஐக்கியமானார். மூலவரே வீதிவலம் வருவது இங்கு மட்டுமே. திருவிழா காலத்தில் தேரில் வீதிவலம் வருவார், திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது. இங்கு அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்கின்றார்கள். இதை திருநாவுக்கரசர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார்.

ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர். அப்போது நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும் யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 முதல் 11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும் பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர். மனிதனின் உருவ அமைப்பிற்கும் தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும் 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும் 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும் 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக் காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார். இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை. பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும் இருளிலும் நன்றாகத் தெரியும் படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

நடராஜர் நிகழ்த்திய திருவிளையாடல்

சேந்தன் எனும் சிவபக்தன் விறகு வெட்டி அதை விற்று காசாக்கி பிறகு உணவாக்கி சாப்பிடுவான் சாதாரண வாழ்க்கை வாழும் அவன் தினமும் சிவனடியார் ஒருவருக்காவது உணவு வழங்கிவிட வேண்டும் சேந்தனுக்கு இல்லையென்றால் தூக்கமே வராது அவனுக்கு ஒரு நாள் மழை. கடும் மழை. இயல்பு வாழ்க்கை பாதித்தது. விறகு வெட்டமுடியவில்லை. அப்படியே வெட்டினாலும் முழுக்க நனைந்திருந்ததால் விற்கவே இல்லை. விற்றால்தான் காசு கிடைக்கும். காசு கிடைத்தால் தான் பசியாறமுடியும். முக்கியமாக சிவனடியாருக்கு உணவு வழங்கமுடியும். தவித்துப் போன சேந்தன் கேழ்வரகுதான் இன்றைக்கு என தேற்றிக் கொண்டான். கேழ்வரகில் களி செய்தான். அப்பாடா சிவனடியாருக்கு உணவு தயார் என பூரித்தான். ஆனால் சிவனடியார் மழையில் வருவாரா என சந்தேகம் வந்தது அப்போது சிவனடியார் ஒருவர் வந்தார். சேந்தன் சிவனடியாரை வரவேற்றான். கைகூப்பினான் விழுந்து வணங்கினான் சிவனடியாராக வந்த சிவபெருமான் களியை எடுத்து ரசித்து ரசித்துச் சாப்பிட்டார். ருசித்து ருசித்துச் சாப்பிட்டார். வார்த்தைக்கு வார்த்தை பாராட்டினார். வாய்க்கு வாய் பாராட்டினார். இது களியமுது என புகழ்ந்தார். நெகிழ்ந்து நெக்குருகிப் போனான் சேந்தன் மீண்டும் விழுந்து வணங்கினான்.

மறு நாள் விடிந்தது பிரமாண்டமான சிதம்பரம் கோயிலின் நடை திறக்கப்பட்டது. தீட்சிதர்கள் சிவபூஜைக்காக சந்நிதி சந்நிதியாகத் திறந்து பூஜை கைங்கர்யத்தில் இறங்கினார்கள். அப்போது சிவனார் குடிகொண்ட கருவறைக் கதவைத் திறந்தார்கள். ஆச்சரியம் பிரமித்துப் போய் அப்படியே நின்றார்கள். கருவறை வாசலில் களி மூலவரின் திருவாயில் களிப் பருக்கைகள். திருக்கரத்தில் களி. சந்நிதியில் எங்கு திரும்பினாலும் களியமுது இது வரை இந்த உணவை இறைவனுக்குப் படைத்ததே இல்லையே. எப்படி இப்படி? குழம்பினார்கள். தவித்தார்கள் தீட்சிதர்கள். ஊர்மக்களுக்கு சேதி பரவியது. மன்னனுக்கும் சென்றது. அதனிடையே மன்னனுக்கு கனவு. கனவில் வந்த ஈசன் சேந்தனின் களியமுதையும் அதன் ருசியையும் அவனுடைய பக்தியையும் தெரிவித்தார்.

அன்றைய தினம் ஆலயத்தில் ஸ்ரீநடராஜர் ரதோத்ஸவத்தில் பவனி வரும் வைபவம். மன்னனும் வந்திருந்தான். மக்களும் கூடியிருந்தனர். தேர் வடம் பிடிக்க மன்னன் உட்பட அனைவரும் ஆவல் கொண்டு இழுத்தனர். முதல்நாள் பெய்த மழையால் சேறாகிவிட்டிருந்தது. சேற்றில் சிக்கிக் கொண்டது தேர்ச் சக்கரம். ஒரு அடி கூட நகரவில்லை. நகர்த்த முடியவில்லை. தேர் வடம் பிடிப்பவர்களில் ஒருவனாக சேந்தனும் நின்றிருந்தான். கூட்டத்துடன் கூட்டமாக நின்று வடம் பிடித்தான். அப்போது சேந்தனாரே என் மீது பல்லாண்டு பாடுங்கள். நீர் பல்லாண்டு பாடினால் தான் தேர் நகரும் என்று கோயிலில் இருந்த அனைவருக்குமாக அசரீரி கேட்டது. மன்னர் தீட்சிதர்கள் மக்கள் என அனைவரும் திகைத்துப் போனார்கள். யார் இந்த சேந்தன் என்று கூட்டத்தைக் கூட்டமாகப் பார்த்தார்கள். அன்று சேந்தன் எனும் ஏழை சேந்தனார் என உலகத்தாரால் அறியப்பட்டான். சாமீ. நமக்கு பாட்டெல்லாம் வராது சாமீ என்றான் சேந்தன். உன்னைத்தான் தெரியும் எனக்கு. பாட்டு தெரியாதே என்றான். முடியும். பாடு இன்று நீ பாடுவாய் என மீண்டும் கேட்டது அசரீரி மன்னுக தில்லை என்று கண்கள் மூடி கரம் குவித்துப் பாடினான் சேந்தன். பிறகு சேந்தனார் பதிமூன்று பாடல்கள் பாடினார். மெய்யுருகிப் போனார்கள். சட்டென்று சகதியில் இருந்து நகர்ந்து முன்னேறியது தேர் சேந்தனாருக்கு சிவபெருமானே வந்து அருள்புரிந்த நன்னாள் மார்கழித் திருவாதிரைத் திருநாள். எனவே இன்றும் சிவாலயங்களில் மார்கழி திருவாதிரையின் போது களி செய்து இறைவனுக்குப் படைத்து பிரசாதமாக வழங்குவது தொடர்கிறது.

சோழமண்டலத்திலே கொள்ளிடநதியின் பக்கத்துள்ள மேற்காநாட்டிலே ஆதனூரிலே புலையர்குலத்திலே நந்தனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடிகளையே நினைத்துக் கொண்டு இருப்பார். இவரது தொழில் சிவாலயங்களுக்கு பேரிகை முதலாகிய ஒருமுகக்கருவிகளுக்கும் மத்தளமுதலாகிய இருமுகக்கருவிகளுக்கும் தோலும் வாரும் வீணைக்கும் யாழுக்கும் நரம்பும் அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுக்கின்றவர். ஆலயங்களின் திருவாயிலில் நின்று கொண்டு கூத்தாடிப் பாடுவார். அவர் ஒருநாள் திருப்புன்கூரிலே போய்ச் சுவாமி தரிசனம் பண்ணித் திருப்பணி செய்தற்கு விரும்பி அங்கே சென்று திருக்கோயில் வாயிலிலே நின்றுகொண்டு சுவாமியை நேரே தரிசித்துக் கும்பிடவேண்டும் என்று நினைத்தார். சுவாமி அவருடைய விருப்பத்தின்படியே தமக்கு முன்னிருக்கின்ற இடபதேவரை விலகும்படி செய்து அவருக்குக் காட்சி கொடுத்தருளினார். நந்தனார் அந்த ஸ்தலத்திலே ஒரு பள்ளத்தைக் கண்டு பெரிய குளமாக வெட்டித் தம்முடைய ஊருக்குத் திரும்பினார். அவர் இப்படியே பல ஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்து வந்தார்.

ஒருநாள் சிதம்பர ஸ்தலத்திற்குப் போகவேண்டும் என்று ஆசைகொண்டு அவ்வாசை மிகுதியினாலே அன்றிரவு முழுதும் தூங்காமல் விடிந்தபின் நான் சிதம்பர ஸ்தலத்திற்குப் போனால் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக்கியதை என் சாதிக்கு இல்லையே என்று கவலையுடன் இதுவும் சுவாமியுடைய அருள்தான் என்று எண்ணிச் செல்லவில்லை. ஆனால் ஆசை மிகுதியால் நாளைக்குப் போவேன் என்றார். இப்படியே நாளைக்குப் போவேன் நாளைக்குப் போவேன் என்று அநேக நாட்கள் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும் பெயர் உண்டாயிற்று. ஒருநாள் அவர் சிதம்பர தரிசனம் பண்ணவேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய ஊரிலிருந்து கிளம்பி சிதம்பரத்தின் எல்லையை அடைந்தார். கோவிலைச் சுற்றிய மதில் சுற்றிலும் அங்குள்ள பிராமணர்களுடைய வீடுகளிலே ஓமஞ் செய்யப்படுவதைக் கண்டு உள்ளே போதற்கு அஞ்சி அங்கே நமஸ்கரித்து கோவிலை சுற்றிக் கொண்டு போவார். இப்படி இராப்பகலாக கோவில் சுற்றி தம்மால் உள்ளே போக கூடாமையை நினைத்து வருந்தி திருநாளைப்போவார் இறைவனை எப்படித் தரிசிக்கலாம்? இந்த இழிந்த பிறப்பு இதற்குத் தடைசெய்கின்றதே என்று துக்கத்தோடும் தூங்கச் சென்றார்.

இறைவன் அவருக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு அவருக்கு கனவில் தோன்றி நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து பிராமணர்களோடும் நம்முடைய சந்நிதானத்தில் வருவாய் என்று கூறினார். அதே சமயம் தில்லைவாழ் அந்தணர்களுக்கும் கனவில் தோன்றி நெருப்பை வளர்த்து அந்தத் திருநாளைப்போவாரை நெருப்பில் இறங்கும்படி செய்யுங்கள் என்று கூறி மறைந்தருளினார். தில்லை வாழந்தணர்கள் எல்லாரும் விழித்தெழுந்து திருக்கோயிலிலே வந்துகூடி இறைவன் கூறியபடியே செய்ய முடிவு செய்து திருநாளைப்போவாரிடத்திலே சென்று இறைவன் கூற்றினால் இப்பொழுது நெருப்பு வளர்க்கும்படி வந்தோம் என்றார்கள். அதைக்கேட்ட திருநாளைப்போவார் அடியேன் உய்ந்தேன் என்று சொல்லி வணங்கினார். பிராமணர்கள் தென்மதிற்புறத்திலே கோபுரவாயிலுக்கு முன்னே ஒரு குழியிலே நெருப்பு வளர்த்து அதைத் திருநாளைப் போவாருக்குப் போய்த் தெரிவித்தார்கள். திருநாளைப்போவார் அந்நெருப்புக் குழியை அடைந்து சபாநாயகருடைய திருவடிகளை மனசிலே தியானம் பண்ணி அதனை வலம் செய்து கும்பிட்டுக்கொண்டு நெருப்பினுள் புகுந்தார். புகுந்த நாயனார் அந்தத் தேகத்தை ஒழித்து சடைமுடியோடு பிராமணமுனி வடிவத்துடம் எழுந்தார். அதுகண்டு தில்லைவாழந்தணர்களும் மற்றைச் சிவபத்தர்களும் களிப்படைந்தார்கள். திருநாளைப்போவார் அவர்கள் உடன் செல்லச் சென்று கோபுரத்தை அணுகி அதனை நமஸ்கரித்து எழுந்து உள்ளே போய் கனகசபையை அடைந்தார். பின் அவரை அங்கு காணாவில்லை நடராஜ பெருமான் திருநாளைப்போவாருக்குத் தம்முடன் சேர்த்துக் கொண்டார்,

பாண்டிய நாட்டில் திருவாதவூரில் சம்புபாதாசிருதர் சிவஞானவதி ஆகியோருக்கு மகவாக அவதரித்தார். இவரது இயற்பெயர் திருவாதவூரர். இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்தார். தென்னவன் பிரம்மராயர் என்னும் உயரிய விருதை அளித்து பெருமை படுத்தினார். அரசனுக்கு அமைச்சராக இருந்தும் அவர் ஆன்மீக நாட்டம் உடையவராகவே இருந்தார். தக்கவொரு குருவை அவர் உள்ளம் நாடியவாறிருந்தது.

ஒரு நாள் அரசன் தன்னுடைய குதிரைப் படையைப் பலப்படுத்தவேண்டி வாதவூராரை அழைத்து கருவூலத்திலிருந்து பொன்னை எடுத்துக்கொண்டு கீழைக்கடற்கரைக்குச் சென்று நல்ல அரபு பாரசீகக் குதிரைகளாகப் பார்த்து வாங்கிவரும்படி ஆணையிட்டான். ஒட்டகங்களின் மீது பெரும்பொருளை ஏற்றிக்கொண்டு வாதவூரார் பாண்டிநாட்டு வடஎல்லையில் இருந்த திருப்பெருந்துறை என்னும் ஊரை அடைந்தார். இப்போது இத்திருத்தலம் ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்படுகின்றது. அவ்வூரை நெருங்கியதுமே வாதவூராருக்கு ஏதோ பெரும்பாரமொன்று மறைந்ததுபோலத் தோன்றியது. அங்கு ஓரிடத்திலிருந்து சிவ சிவ என்ற ஒலி கேட்டது. அந்த ஒலியை நோக்கிச் சென்றார். அங்கு ஈசனே குருந்தமரத்தடியில் சீடர்களுடன் மௌனகுருவாக அமர்ந்திருந்தான். இறைவன் அவரின் மீது தனது அருட்பார்வையைச் செலுத்தி அவருக்கு மாணிக்கவாசகன் என்னும் தீட்சாநாமமும் வழங்கினான். மாணிக்கவாசகராய் மாறிவிட்ட திருவாதவூராரும் திருப்பெருந்துறையிலேயே தங்கி பெரும் கோவிலைக்கட்டி பல திருப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்து கொண்டிருந்தார். வந்த காரியத்தையும் மறந்தார் அரசன் கொடுத்தனுப்பிய பணத்தையும் கோவில் கட்டுவதிலேயே செலவிட்டுவிட்டார்.

குதிரைகளை ஞாபகப்படுத்தி பாண்டிய மன்னன் தூதுவர்களை அனுப்பினான். ஈசனின் ஆணைப்படி ஆவணி மூல நாளன்று குதிரைகள் வந்து சேருமென்று சொல்லியனுப்பினார். ஒற்றர்களின் வாயிலாக உண்மையினை அறிந்த மன்னவன் செலவழித்த பொருட்களைத் திருப்பித்தருமாறு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான். மாணிக்க வாசகரின் உண்மையான பக்தியை உலகுக்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்ட சொக்கேசப்பெருமான் தானே காட்டில் திரிந்த நரிகளைக் குதிரைகளாக மாற்றி தன்னுடைய பூதர்களை ராவுத்தர்களாக்கி தானும் சொக்கராவுத்தர் என்னும் கோலத்தொடு ஓர் அராபியக் குதிரை வணிகனாகப் பாண்டியனை அடைந்து குதிரைகளை ஒப்படைத்தார். ஆனால் இரவில் போலிக்குதிரைகள் நரிகளாக மாறி காட்டிற்குள் ஓடிப்போயின. மீண்டும் பாண்டியன் மாணிக்கவாசகரை சித்திரவதை செய்தான். வைகை ஆற்றின் சுடு மணலில் நிற்க வைத்தான். அப்போது சொக்கேசப்பெருமான் வைகையில் பெருவெள்ளம் தோன்றிடச் செய்தார்.

அரசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வைகையை அடைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். அந்த சமயம் பிட்டு விற்கும் வயதான பெண்ணுக்கு யாரும் இல்லாததால் அவர் ஆலவாயண்ணலிடம் வேண்டி முறையிட்டாள். அவளுக்கும் அருள கூலியாளாகத் தானே வந்து கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே கூலி என்று பேசினார் அனைவரும் மண் எடுத்து வெள்ளத்தை அடைத்துக் கொண்டிருக்க கூலியாளாக வந்த பெருமான் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தார். அங்கே வந்த பாண்டியன் கோபம் கொண்டு தன் கையால் இருந்த பிரம்பால் முதுகில் அடிக்க அந்த அடி எல்லாவுயிர்களின் முதுகிலும் விழ அரசன் மயங்கி நிற்க தானே ஒரு கூடை மண்ணை வெட்டிப்போட்டு வைகையின் வெள்ளத்தை அடக்கி அனைத்தும் எமது திருவிளையாடலே என்று சொல்லி மறைந்தார்.

மணிவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான். ஆனால் அவர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன்பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு திருஉத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன்பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் திருவெம்பாவை திருவம்மானை ஆகியவற்றைப் பாடினார். கடைசியாகத் தில்லையை அடைந்தார்.

ஒருநாள் பாண்டிநாட்டு அந்தண வடிவில் ஈசன் மணிவாசகரிடம் வந்து அதுவரை அவர் பாடியுள்ள பாடல்களை முறையாகச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டான். மணிவாசகர் அவ்வாறு சொல்லச்சொல்ல இறைவனும் தன் திருக்கரத்தால் ஏட்டில் எழுதிக்கொண்டான். திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் எழுதிய பின்னர் ஈசன் மணிவாசகரிடம் பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று கேட்டுக் கொண்டான். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட ஈசன் அதையும் ஏட்டில் எழுதிக்கொண்டான். எழுதி முடித்தவுடன் இறுதியில் இவை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து என்று தனது கையெழுத்திட்டு திருச்சிற்றம்பலத்தின் வாசற்படியில் வைத்து மறைந்தான். வாசற்படியில் ஏட்டுச்சுவடி இருப்பதைக்கண்ட அர்ச்சகர் தில்லைமூவாயிரவர் ஆகியோர் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்குப் பொருளைக் கேட்டனர். அவனே அதற்கு அர்த்தம் மாணிக்கவாசகர் அவர்களை அழைத்துக்கொண்டு திருச்சிற்றம்பலத்தை அடைந்து அந்நூலின் பொருள் இவனே என்று சிற்சபையில் நடனமாடும் நடராசப் பெருமானைக் காட்டியவாறு சிற்றம்பலத்துள் தோன்றிய பேரொளியில் ஆனி மாத மூலத்தன்று கலந்து கரைந்து மறைந்தார். இறைவன் தான் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி இன்றும் சிதம்பரத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக செய்திகள் உள்ளது.

நடராஜ மூர்த்தியின் உருவ வரலாறு

ஒருமுறை பாற்கடலில் வீற்றிருந்த திருமாலின் எடை சற்றுக் கூடியதை அவரை எப்போதும் சுமந்திருக்கும் ஆதிஷேசன் உணர்ந்து திருமாலிடம் அவரின் எடை சட்டென்று கூடியதன் காரணத்தை கேட்டார். அதற்குத் திருமாலும் புன்முறுவலுடன் உத்திரகோசத்தில் சிவபெருமான் ஆடும் நடராஜ தாண்டவத்தைக் கண்டு உள்ளம் பூரித்திருந்ததால் எடை கூடியிருக்கலாம் என்று கூறினார். உலகைக் காக்கும் பெருமாளையே உள்ளம் பூரிக்கவைத்த அந்த அற்புத நடனத்தைத் தானும் காண வேண்டும் என்று ஆதிஷேசன் மிகவும் ஆவலுடன் திருமாலிடம் அனுமதி கேட்டார். அதற்குத் திருமால் நடராஜரின் திருநடனம் காண வேண்டும் என்ற ஆவலில் சிவனருளை வேண்டி தில்லை வனக் காடுகளில் வியாக்கிரமர் எனும் முனிவர் தவமிருப்பதாகவும் அங்கே மனித பிறப்பெடுத்துச் சென்று அவரோடு சேர்ந்து தவம் புரிந்தால் சிவனருள் கிடைக்கும் நடராஜரின் நடனமும் காணலாம் என்று அருளினார். அதன்படியே ஆதிஷேசனும் இடுப்புக்கு மேலே மனித உருவத்திலும் இடுப்புக்குக் கீழே பாம்பின் உருவத்திலும் இருக்கும் பதஞ்சலி முனிவராக பிறப்பெடுத்து தில்லை வனத்தை அடைந்து அங்கு தவமிருக்கும் வியக்கிரமருடன் நட்புகொண்டு தவத்தில் கலந்து கொண்டார்.

அக்காலத்தில் தில்லை வனத்தைச் சுற்றியிருந்த காடுகளின் நடுவே வீடுகளமைத்து வாழ்ந்து கொண்டிருந்த அந்தணர்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றுத் தெளிந்த வித்தகர்களாக இருந்தார்கள். அவர்களின் மந்திரங்கள் அனைத்தும் சர்வ வல்லமையுடன் பலிப்பதைக் கண்டு தெய்வங்களைவிட மந்திரங்களே உயர்ந்தவை என்றும் இறைவனை மந்திரத்தாலேயே கட்டிவிடலாம் என்றும் செறுக்கு கொண்டும் இருந்தார்கள். அவர்களுக்கு நல்லறிவை புகட்டிடவும் தன்னை நோக்கித் தவமிருக்கும் வியாக்கிரமருக்கும் பதஞ்சலிக்கும் அருளவும் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் திருமாலை அழைத்து பார்ப்பவர் மயங்கும் பெண்மை அழகுடன் விளங்கும் மோகினியின் அவதாரத்தை எடுக்க வைத்துத் தாமும் பார்த்தவரை வசீகரித்து விடும் ஆண்மை அழகுடன் விளங்கிய பிக்‌ஷாடனர் அவதாரம் எடுத்துக் கொண்டார். பிக்‌ஷாடனர் அவதாரத்தில் உடலில் துணியின்றி நிர்வாணமாகவும் வலது கையில் ஒரு பிச்சையோடும் எடுத்துக் கொண்டு மோகினி பின்தொடர்ந்து வர தில்லை வனத்தை அடைந்தார். இந்தக் காட்சியைக் கண்டு களிக்க ஆசைப்பட்ட பிரம்மனும் ஒரு அழகிய மானின் உருவம் எடுத்துக் கொண்டு பிக்‌ஷாடனரைத் தொடர்ந்து வந்தார்.

தில்லை வனத்தில் வந்திறங்கிய பிக்‌ஷாடனர் அங்கு இருக்கும் ஆசிரமங்களை நோக்கிச் சென்று அனைத்து வீட்டின் கதவையும் தட்டி பிச்சை கேட்டார். பிச்சை போட வெளியே வந்த அந்தனர்களின் பத்தினிகள் பிக்‌ஷாடனரின் அபூர்வ அழகைக் கண்டு அவரின் மேல் அளவிடமுடியாத அளவு மோகம் கொண்டு அவரின் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தனர். அதே சமயம் அந்தணர்கள் வீற்றிருந்த யாகசாலைக்குச் சென்ற மோகினியும் அங்கே யாகத்தில் மூழ்கியிருந்த அந்தணர்களை மயக்கிவிட்டாள். அவர்களும் அவளின் பேரழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தார்கள். மோகினியைப் பின் தொடர்ந்த அந்தணர்கள் பிக்‌ஷாடனரை வந்தடைந்ததும் அங்கே தங்களின் பெண்டிர்கள் அனைவரும் ஒரு பேரழகனின் பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் மோகினியின் மேலிருந்த மயக்கம் தெளிந்தார்கள். மயக்கம் தெளிந்து தங்களின் கோலத்தையும் தங்களின் மனைவிகளின் கோலத்தையும் பார்த்தவர்கள் தாங்கமுடியாத கோபம் அடைந்து தங்களின் ஆச்சாரத்தைக் கலைத்த மோகினியையும் தங்களின் மனைவிகளின் கற்பை கலங்கப்படுத்திய பிக்‌ஷாடனரையும் பலவாறாக சபிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களின் சாபங்கள் அனைத்தும் ஆண்டவனை என்ன செய்யும்? அவர் புன்முறுவல் மாறாமல் இருந்ததைப் பார்த்து இன்னும் கோபம் கொண்ட அந்தணர்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து தங்களின் மந்திரங்களால் பஞ்ச நாகங்களை உருவாக்கி அவரை நோக்கி ஏவினார்கள். சீறிவந்த பஞ்ச நாகங்களையும் தன் ஒற்றை விரலால் மாற்றி தன் இடுப்பில் ஆரமாகவும் இரண்டு தோள்களிலும் காப்பாகவும் இரண்டு கால்களிலும் சிலம்பாகவும் அணிந்து கொண்டார் பிக்‌ஷாடனர்.

பாம்புகளை மிக எளிதாக மாற்றி விட்டதைப் பார்த்த அந்தணர்கள் மீண்டும் சீற்றமுற்றவர்களாக அடுத்து தங்களின் மந்திர சக்தியை உபயோகித்து காட்டுப் புலியை ஆண்டவரை நோக்கி ஏவினார்கள். பிக்‌ஷாடனரோ சிறிதும் தயங்காமல் சீறிவந்த புலியை இரண்டாகக் கிழித்து அதன் தோலை எடுத்து இடுப்பில் வேஷ்டியாகக் கட்டிக்கொண்டார். இன்னும் பெரிய விலங்காக அனுப்புவோம் என்று தங்களின் மந்திர சக்திகளை மீண்டும் பிரயோகித்து காட்டு யானையை ஆண்டவரை நோக்கி ஏவினார்கள். பிக்‌ஷாடனரும் புன்முறுவல் மாறாமல் அந்த யானையைக் காடே அதிரும்படி கதறப் பிளந்து அதன் தோலை தன்மேல் அங்கவஸ்திரமாக போர்த்திக் கொண்டார். இனி இவரிடம் விலங்குகளைப் பயன்படுத்திப் பயனில்லை என்று புரிந்து கொண்ட ஆத்திரம் தீராத அந்தணர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய யாக வேள்வியை உருவாக்கி அதில் தங்களின் மந்திரசக்திகள் அனைத்தையும் பிரயோகித்து ஒரு முயலகன் என்னும் குள்ள அரக்கனை உருவாக்கினார்கள். அவர்களின் அறியாமையின் மொத்த உருவான முயலகன் என்கிற அந்த அரக்கன் இறைவனை நோக்கி சீறி வர அவனை ஒரே அடியில் கீழே விழவைத்து அவனின் முதுகில் ஏறி ஒற்றைக் காலில் நின்று தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை ஆடினார்.

பிக்‌ஷாடனராக வந்திருந்த சிவபெருமான் காட்டு யானையின் கதறலில் தவம் கலைந்து என்னவென்று பார்க்க அங்கு வந்த வியாக்கிரமரும் பதஞ்சலியும் இறைவனின் திரு நடனத்தைக் கண்டு உள்ளம் உருக கண்களில் ஆனந்தக் கண்ணீர் வர நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்கள். இவை அனைத்தையும் பார்த்த அந்தணர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஆண்டவரின் பேரழகையும் ஆற்றலையும் கண்டு அவரின் சக்திக்கு முன் வேறு எதுவுமே கிடையாது என்பதையும் அண்டங்கள் அனைத்தும் அவரின் ஆட்டத்திற்கு அடிமை என்பதையும் உணர்ந்து தங்களின் தவறையும் உணர்ந்து ஆண்டவரின் அருளை அறியாமல் பாவம் செய்தோமே என்ற மிகவும் கவலைக்கு ஆட்பட்டு கண்களின் நீர்வர இறைவனை நோக்கி நிலத்தில் வீழ்ந்து பணிந்தார்கள். இறைவன் ஆடிய ஆட்டம் முடிய அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திருந்தனர். அந்தணர்கள் அனைவரும் இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து தங்களை மன்னித்து விடக் கோரினார்கள்.

அவர்களின் மாயையை அறுக்கவே தாம் வந்ததை புன்முறுவலுடன் இறைவன் மொழிய அந்தணர்களோ இந்த மாயை இனி எப்போதும் இங்குள்ள மனிதர்களுக்கு வரக்கூடாது தயவு செய்து உங்களின் ஆடல் திருமேனியை எங்களுக்குத் தந்தருள வேண்டும். அதை நாங்கள் வைத்து காலம் காலமாக வழிபடுவோம் என்று வேண்டிக்கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இறைவன் வியாக்கிரமரை நோக்கி தாங்கள் இவர்களுக்கு தம்மை நோக்கிச் செய்யும் மஹா யாக முறைகளைக் கற்றுக் கொடுத்து ஒரு யாகம் செய்யும் படியும் அதில் நடராஜத் திருமேனியாய் தாம் வந்தருளுவதாகவும் கூறி அதுவரை அபிஷேகம் செய்து வழிபட ஒரு சிறிய பளிங்காலான சிவலிங்கத்தையும் தந்தருளி மறைந்தார். தில்லை வாழ் அந்தணர்களும் வியாக்கிரமர் சொல்படியே மஹா யாகத்தைக் கற்று அதன்படியே அவர் தலைமையில் ஒரு மாபெரும் யாகம் செய்து இறைவனை வேண்ட அந்த யாகத் தீயின் நடுவில் பிரம்மலோகத்திலிருந்து நடராஜத் திருமேனி சிலையாகத் தோன்றியது. தாங்கள் இறைவனுக்கு அளித்த வாக்குறுதியின்படி இன்று வரையிலும் அவர்கள் தலைமுறை தலைமுறையாக சிதம்பரம் கோயிலில் அந்த நடராஜ சிலையை வைத்து வியாக்கிரமர் கூறிய முறைப்படி இறைவன் வழங்கிய பளிங்கு லிங்கத்திற்கு அபிஷேகமும், நடராஜருக்கும் ஆறு கால பூஜை செய்து வருகின்றார்கள்.

சிதம்பரம் நடராஜருக்கு தினமும் ஆறு கால பூஜைகள் இங்கே நடைபெறுகின்றன. ஆனாலும் முன்னதாக தினமும் காலையில் பால் நைவேத்தியத்துடன் சிறப்பு பூஜை ஒன்று நடைபெறுகிறது. இரவு சாப்பிட்ட சிவனார் பசியுடன் இருப்பார் என்பதால் பால், வாழைப்பழம், பொரி, வெல்லச் சர்க்கரை, வெற்றிலைப் பாக்கு என வைத்து பூஜை செய்வது வேறெங்கும் காணப்படாத ஒன்று. அதேபோல் தமிழக ஆலயங்களில் 8 மணியில் இருந்து 9 மணிக்குள் அர்த்த ஜாம பூஜை நடைபெற்றுவிடும். பிறகு நடை சாத்திவிடுவார்கள். ஆனால் சிதம்பரம் கோயிலில் தினமும் இரவு 10 மணிக்கு தான் அர்த்த ஜாம பூஜை நடைபெறுகிறது. அதாவது சிவனாரின் ஆனந்த நடனத்தைத் தரிசிக்க எல்லாக் கோயில்களில் இருந்தும் கடவுளர்கள் இங்கு வந்துவிடுவார்கள்.

ஸ்ரீநடராஜரின் வலது பக்கத்தில் திரை ஒன்று இருக்கும். அந்தத் திரைக்குப் பின்னே உள்ள கற்சுவரில் தங்கத்தாலான வில்வ மாலை சார்த்தப்பட்டிருக்கும். ஸ்ரீ மற்றும் சிவா என்கிற இரண்டு சம்மேளனச் சக்கரங்கள் அங்கே அமைந்திருப்பதைத் தரிசிக்கலாம் (ஸ்ரீ- அம்பாள் அதாவது சக்தி. சிவா என்பது இறைவன்). அதன் மேலே புனுகு ஜவ்வாது ஆகியவை எப்போதோ சார்த்தப்பட்ட நிலையில் இன்றைக்கும் அப்படியே இருப்பதைப் பார்க்கலாம் என்கிறார் .மனிதரின் உடல் அமைப்பில் இந்தச் சிதம்பரம் கோயில் கட்டப் பட்டிருக்கிறது. மனித உடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என ஐந்து நிலைகள் உள்ளன. இந்த ஐந்தும் சேர்ந்தது தான் சரீரம் இயங்கும் நிலை. இந்த உலகின் மையப்புள்ளியாக அமைந்திருப்பதுதான் ஆடல்வல்லான் தில்லை அம்பலத்தானின் திருச்சந்நிதி. ஐந்து கோசங்களும் ஐந்து பிராகாரங்களாக இங்கே அமைந்துள்ளன. சித்சபை அதன் எதிரில் கனகசபை அதையடுத்து நேரெதிர் வரிசையில் நடன சபை அடுத்து உத்ஸவ மூர்த்தங்கள் காட்சி தரும் தேவ சபை ஆயிரங்கால் மண்டபத்தில் ராஜசபை என ஐந்து சபைகள் உள்ளன.

சிதம்பர மகாத்மியம் என்னும் புத்தகத்தில். சிதம்பரம் பற்றியும் அதன் கோவில் பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. வேத வியாசரால் எழுதப் பட்ட ஸ்கந்த மஹாபுராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையை ஒட்டி எழுதப்பட்ட இந்தப் புத்தகம் 26 அத்தியாயங்களைக் கொண்டது. இந்த இடம் வியாக்ரபாதர் ஆசிரமமாக இருந்துள்ளது. ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரின் யோகாசிரமமாகவும் அவர் கற்பித்துக் கொண்டிருந்த இடமாயும் இருந்துள்ளது மற்றும் மாணிக்கவாசகர் முக்தி பெற்ற ஸ்தலம் என்னும் குறிப்பும் உள்ளது. சிதம்பரம் பற்றி புராணங்களில் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் மூலமும் உப புராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும் ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், தில்லைவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம், ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.

தீட்சிதர்கள்

நடராஜ பெருமானை அனுதினமும் பூஜித்து வரும் தீட்சிதர்களும் கவனிக்கத்தக்கவர்கள். சிதம்பரத்துக்குத் தில்லை தில்லையம்பதி என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. இங்கே உள்ள தீட்சிதர்களை தில்லைவாழ் அந்தணர்கள் என்று குறிப்பிடாத புராணங்களோ சரித்திரங்களோ இலக்கியங்களோ இல்லை. தில்லை மூவாயிரம் என்றொரு வாசகம் மிகப் புராதனமானது. அதாவது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் மூவாயிரம் பேரைக் குறிப்பிடும் வாசகம் அது. பூலோகத்தில் பிறப்பெடுத்து பதஞ்சலி முனிவர் என எல்லோராலும் வணங்கப்பட்ட அந்த முனிவர் தில்லை வனத்தில். வியாக்ரபாத முனிவருடன் சிவபூஜையில் ஈடுபட்டார். தை மாதத்தில் வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நன்னாளில் இறைவன் ஆனந்த நடனக் காட்சியை வியாக்ரபாதருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் தேவர்பெருமக்களுக்கும் காட்டி அருளினார். அந்த வேளையில் திருக்கயிலாயத்தில் இருந்து சிவனாருடன் மூவாயிரம் வேத விற்பன்னர்களும் வந்தார்கள். அவர்களுக்கு குருவாக இருந்து நடராஜ பெருமானே வேதங்களைத் தந்தருளினார். ஈசனிடமே தீட்சை பெற்றவர்கள் எனும் பெருமைக்கு உரியவர்கள் ஆனதால் அந்த மூவாயிரம் பேரும் தீட்சிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

திருஞானசம்பந்தர் ஸ்ரீநடராஜ பெருமானைத் தரிசிக்கும் ஆவலில் தில்லையம்பதிக்கு வந்தார். அங்கே தீட்சிதர்களையும் அவர்கள் செய்து வரும் பூஜைகளையும் அறிந்து நான் இங்கு தங்கமாட்டேன் கடவுளுக்குத் தொண்டு செய்யும் அடியவர்களை கடவுளே விரும்பி அமர வைத்துள்ள பூமி இது. இங்கே படுத்து உறங்குவது தகாத செயல் என்று சொல்லிவிட்டு அருகில் உள்ள கொற்றவன்குடி எனும் கிராமத்துக்குச் சென்று தங்கினார். திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைப் பார்த்த போது அந்த சிவகணங்களே சிவனாருக்கு அரணாக வந்து கொண்டிருப்பது போல் எனக்குக் காட்சி கிடைத்தது என்று சொல்லிச் சிலிர்க்கிறார்.

மிகப் பிரமாண்டமான யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தார் பிரம்மா. தில்லை மூவாயிரத்தாரை அழைத்து யாகத்தில் கலந்துகொண்டு அதற்கு இன்னும் வலுவும் பெருமையும் சேருங்கள் என்றார். தினமும் நடராஜருக்கு பூஜை செய்யவேண்டுமே அது தடைப்படுமே எனத் தயங்கினார்கள் அவர்கள். உடனே பதஞ்சலி முனிவர் நீங்கள் வரும்வரை நான் பூஜை செய்கிறேன். போய் வாருங்கள் என்றார். அதன்படி பிரம்ம லோகத்துக்குச் சென்ற தில்லை அந்தணர்கள் யாகத்தில் கலந்து கொண்டார்கள். யாகம் முடிந்தபின்பு சிதம்பரம் வந்தார்கள். வந்தவர்கள் ஒருவரைக் காணாது திடுக்கிட்டார்கள். மூவாயிரம் பேர் இருக்க வேண்டுமே 2999 பேர்தானே இருக்கிறோம் என்று பதறினார்கள். அப்போது மூவாயிரத்தில் நானும் ஒருவன். உங்களில் ஒருவன் நான் என்று சிவனாரே கேட்க பொன்னம்பலத்தானின் பெருங்கருணையை வியந்து ஆனந்தக்கண்ணீர் வடித்தார்கள் தீட்சிதர்கள். அதனால்தான் சிவனாருக்கு சபாநாயகர் எனும் பெருமையும் பேரும் கிடைத்தது.

எத்தனையோ சிவாச்சார்யர்களுக்கும், பட்டாச்சார்யர்களுக்கும், குருக்கள்மார்களுக்கும் கிடைக்காத ஒரு தனிப் பெருமை தில்லை வாழ் தீட்சிதர்களுக்குக் கிடைத்திருக்கிறது. தஞ்சைப் பெரியகோயிலில் கோபுரத்தின் உட்பகுதிகளில் நிறைய ஓவியங்கள் உள்ளன. அதில் பொன்னம்பலத்தானை ராஜராஜசோழன் வணங்குவது போலவும் அருகில் தில்லைவாழ் அந்தணர்கள் நிற்பது போலவும் ஓர் ஓவியம் உள்ளது. சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்த தஞ்சை பெரிய கோயிலில் தீட்சிதர்களின் ஓவியங்களும் இருக்கின்றன. கும்பகோணம் தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றில் அம்பலவாணனான நடராஜ பெருமான் அழகு கொஞ்சக் காட்சி தருகிறார். அருகில் தில்லை மூவாயிரத்தாரின் இருப்பை உணர்த்தும்விதமாக ஆயிரத்துக்கு ஒருவர் வீதம் மூன்று பேர் நிற்கிறார்கள். ஒருவர் ஸ்ரீநடராஜருக்குக் குடை பிடிக்க இன்னொருவர் இறைவனுக்கு சாமரம் வீச மூன்றாமவர் நைவேத்தியத் தட்டினை ஏந்தியபடி நிற்கிறார். தஞ்சையில் ஓவியமாகவும் தாராசுரத்தில் சிற்பமாகவும் இருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தரிசித்த சிதம்பரம் கோயில் முற்காலப் பல்லவர்கள் காலத்துக் கோயில் என்றும் இதைச் சொல்கிறார்கள். ஹிரண்யவர்மன் எனும் வங்க தேசத்து அரசன் சிற்சபைக்கு பொன்வேய்ந்ததாகச் சொல்லும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. அதேபோல் பராந்தக சோழன் கொங்கு தேசத்தைக் கைப்பற்றிய வெற்றிக் களிப்பின் அடையாளமாக அங்கிருந்து கொண்டு வந்த பொன் பொருளைக் கொண்டு சிதம்பரம் சபைக்குப் பொன் வேய்ந்ததாகக் கல்வெட்டு தெரிவிக்கிறது. தவிர ஒவ்வொரு மன்னரும் இந்த தீட்சிதர்களுக்கு நிலங்களும் வீடுகளும் தானம் அளித்துள்ளனர். தீட்சிதர்களும் அப்போதிருந்தே இருக்கிறார்கள்.

தீட்சிதர்கள், நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்வதையே தொண்டாகக் கருதி வாழ்ந்து வருபவர்கள். எப்போதும் மனத்தில் ஈசனையும், மடியில் விபூதிப் பையையும் வைத்திருப்பவர்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தில் சிவனாரிடம் முழுவதுமாகச் சரணடைந்தவர்கள் என்று பெரியபுராணத்தில் தில்லைவாழ் அந்தணர் சருக்கம் எனும் பகுதியில் தீட்சிதர்களைப் போற்றி விவரித்துள்ளார் சேக்கிழார் பெருமான் வேதமே முக்கியம் எனக் கொண்டு பதஞ்சலி முனிவர் அருளிச் சென்ற பூஜா சூத்திரத்தின்படிதான் இந்தக் கோயிலில் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

இங்குள்ள தீட்சிதர்களில் தலைவர் தொண்டர் என்றெல்லாம் இல்லை. ஒன்பது பேர் கொண்ட குழுவை வருடந்தோறும் அமைக்கின்றார்கள். அந்தக் குழுவினரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை பிரித்து வழங்கப்படுகிறது, யஜன, யாஜன, அத்யயன, அத்யாபக, தான, ப்ரதிக்ரக என ஆறு கர்மாக்கள் தீட்சிதர்களுக்கு உண்டு. யஜனம் யாகம் செய்தல், யாஜன யாகம் செய்வதற்கு உதவி செய்தல், அத்யயன வேதம் கற்றல், ஓதுதல், அத்யாபன கற்றுக்கொண்ட வேதத்தைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தல், தானம் பிறருக்கு வழங்குதல், ப்ரதிக்ரக பிறர் தருவதை மறுக்காமல் வாங்கிக்கொள்ளுதல். இந்த ஆறு கர்மாக்களையும் அதாவது ஆறு கடமைகளையும் செவ்வனே செய்பவனே தில்லை வாழ் அந்தணன்.

தேவார மூவர் தங்கள் பதிகங்களின் ஓலைச் சுவடிகளை தில்லைவாழ் அந்தணர்களிடம் கொடுத்துச் சென்றார்கள். ராஜராஜசோழன் நம்பியாண்டார்நம்பியின் உதவியுடன் இங்கே உள்ள அறைக் கதவைத் திறந்து தேவாரப் பதிகங்களை திருமுறைகளை உலகுக்குக் கொண்டு வந்தார். சோழ மன்னர்கள் காலத்தில் அவர்களுக்குத் தில்லைவாழ் அந்தணர்களே முடிசூட்டுவது மரபு. அப்படி ஒரு பெருமையை சோழ மன்னர்கள் தீட்சிதர்களுக்குத் தந்திருந்தார்கள். சோழர்களின் பின்னடைவுக்குப் பிறகு களப்பிரர்கள் இங்கே ஆட்சி செய்தார்கள். அச்சுதக் களப்பிர மன்னன் என்பவன் தில்லையம்பதிக்கு வந்தான். கோயிலுக்கு வந்தவன் எனக்கும் முடிசூட்டுங்கள் என்றான். ஆனால் தீட்சிதர்கள் மறுத்து விட்டார்கள். சிவமே கதியென்று இருந்த சோழ மன்னர்களைத் தவிர வேறு எவருக்கும் முடிசூட்டி மரியாதை செய்ய மாட்டோம் என்று உறுதியாக இருந்தார்கள். உயிரை விடத் தயாரா? என்று அவர்களை அச்சுறுத்தினான். அதில் ஏராளமான தீட்சிதர்கள் சேர தேசமான கேரளத்தை நோக்கி ஓடி அங்கே சிவபூஜையில் ஈடுபட்டார்கள். பிறகு மன்னனின் கனவில் வந்த சிவனார் அவன் சிரசில் தனது திருவடியை வைத்தார். அகம் குளிர்ந்த மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். தீட்சிதர்களை மீண்டும் சிதம்பரத்துக்கு அழைத்து வந்து மன்னிப்புக் கேட்டான்.

அதையடுத்து மராட்டியர்களின் காலம் வந்தது. அந்நியர்களின் படைகள் உள்ளே நுழைந்து பல கோயில்களை இடித்தன. இறை விக்கிரகங்களைச் சிதைத்தன. அப்போது தில்லை நடராஜப் பெருமானின் விக்கிரகத்தைக் காப்பாற்றுவதற்காக அதைத் திருவாரூர், குடுமியான்மலை, மதுரை எனப் பல ஊர்களுக்கு மறைவாக பத்திரமாக எடுத்துச் சென்றார்கள் தீட்சிதர்கள். இப்படிக் கட்டிக் காத்த‍தில் குலகுரு முத்தைய தீட்சிதர் என்பவருக்குப் பெரும் பங்கு உண்டு. இந்தத் தகவல்களை திருவாரூர் கோயிலில் உள்ள மராட்டியர்களின் செப்பேட்டில் உள்ளது, கோயிலைப் புனர் நிர்மாணம் செய்யும் பணியையும் எடுத்துச் செய்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். கோயில் திருப்பணிக்குக் கேரளாவில் இருந்து சிற்பிகளை வரச் செய்திருக்கிறார்கள். இதைத் தெரிவிக்கும் செப்பேடுகளும் திருவாரூரில் உள்ளன. தில்லையில் நடராஜர் கோயிலில் உள்ள திருமால் ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு தில்லை மூவாயிரத்தார் எனப்படும் தீட்சிதர்கள் பூஜை செய்து வழிபட்டிருக்கிறார்கள் என்பதை திருமங்கை ஆழ்வாரும் நான்கு வேதங்களும் தெரிந்த தில்லை மூவாயிரத்தார் நாள்தோறும் பெருமாளுக்குப் பூஜை செய்ததைச் சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். தில்லை மூவாயிரம்பேர் என்று பெருங் கூட்டமாக இருந்த நிலை இப்போது இல்லை. தற்போதைய நிலவரப்படி சுமார் 299 தீட்சிதக் குடும்பங்களே உள்ளன.

கால் மாற்றி நடனமாடிய நடராஜர்

மதுரையை ஆண்ட விக்ரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயகலைகள் அறுபத்து நான்கில் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். அவன் கற்காதிருந்த ஒரு கலை, நடனம். நடராஜப் பெருமான் நடனமாடிக்கொண்டிருக்கும்போது தான் அதனைக் கற்று ஆடுவது அவருக்கே அவமரியாதை செய்வது போல ஆகாதா என்று கருதி நடனம் கற்பதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான். இதே காலத்தில் வாழ்ந்த கற்காற் சோழன் என்ற மன்னன் 64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். அப்போதுதான் ராஜசேகர பாண்டியன் நடனம் என்பது இறைவனே நாம் உய்யும் பொருட்டு நமக்காக உருவாக்கித் தந்திருக்கும் ஒரு கலை என்பதையும் அதனை மிகச் சரியாகப் பயின்று பக்திப் பெருக்குடன் ஆடும்போது இறைவனுக்கு நாம் சமர்ப்பிக்கும் பக்தியாகவே அது மாறும் என்றும் உணர்ந்தான். உடனே நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெற்றான். இப்படி நடனம் கற்கும்போது உடம்பெல்லாம் வலியெடுக்க நடனக் கலையைப் பயில்வதும் அதனைத் தொடர்ந்து ஆடுவதும் எத்தகையத் துன்பகரமானது என்பதை அனுபவித்து உணர்ந்தான்.

அறுபத்து நாலு கலைகளையும் கற்ற நிறைவில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீர்வாதம் பெற வந்தான். அவரை தரிசித்ததும் நடனம் கற்பதே உடல்வலி மிகுந்த கஷ்டமான விஷயமாக இருக்கும்போது காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி நடனமாடி கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்பட்டான். இதை யாரிடம் எப்படி கேட்பது? தேவர்கள் முனிவர்கள் எல்லோரும் இதைப் பற்றி பேசாமல் இருக்கும் போது நாம் எப்படி ஈசனிடம் கேட்பது என நினைத்து மனம் நொந்தான். இந்நிலையில் சிவராத்திரி திருவிழா வந்தது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு நடராஜரின் எதிரில் நின்று ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் இறைவா எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா என மனம் உருகிக் கேட்டான். அப்படி நீ கால் மாறி ஆடாவிட்டால் என் முன்னால் கத்தியை நிறுத்தி வைத்து அதில் விழுந்து உயிர் துறப்பேன் என இறைவனிடம் கண் மூடி மன்றாடினான். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்த ராஜசேகபாண்டியன் அப்படியே மெய்சிலிர்த்து நின்று விட்டான். தன்மீது வெறும் பக்தி மட்டுமல்லாமல் பாசமும் காட்டிய பக்தனுக்காக இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி ஆடினார் நடராஜப்பெருமான். அதேசமயம் எனக்காக கால்மாறி ஆடிய பெருமானே இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்து தங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும் என்ற வரமும் வாங்கி விட்டான்.

அன்றிலிருந்துதான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார். மதுரை வெள்ளியம்பலத்தில் ஈசனின் கால் மாறி ஆடிய சந்தியா தாண்டவம் குறித்து பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்பு பட்டயத்தில் தொடக்கத்திலேயே காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீசைலம் கோயிலில் ஆனந்த தாண்டவத்தை போன்றுள்ள சந்தியா தாண்டவ சிற்பம் உள்ளது. நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டே இருப்பதால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சதா சர்வ காலமும் ஆனந்த நடனம் புரிந்து கொண்டிருக்கிறார் சிவனார். ஒவ்வொரு முறையும் நமசிவாய என்னும் பஞ்சாட்சர நாமத்தைச் சொல்லிக்கொண்டே மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுகிற தியானம் அல்லது தவத்தில் ஈடுபட ஈடுபட அந்த ஆனந்த நடனத்தைத் தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். பதஞ்சலி முனிவர் அருளிய யோகா சூத்திரம் இந்த ஆனந்த நடனத்தைத்தான் வலியுறுத்துகிறது, நாயன்மார்கள், சமயக்குரவர்கள், சந்தானச்சார்யர்கள், அருணகிரிநாதர் எனப் பலரும் தரிசித்துப் போற்றி வணங்கிய தலம் இது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் மற்றும் பலர் பாடல்கள் பாடியுள்ளனர். தன் பக்தனுக்காக கால்மாறி ஆடிய ஈசனை நாமும் தரிசித்து வளங்கள் பெறுவோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.