ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 417

ஔவையார் சொன்ன அற்புதம் நின்ற கற்பகக் களிறே இதற்கு விளக்கம்:

இறைவனின் கருணையைக் கொண்டு இதுபோல் கூறும் முன் ஒவ்வொரு வாசகம் வாக்கியம் இதுபோல் பக்தி பாடல்கள் பாசுரங்கள் இவற்றின் பொருள் என்பதும் அர்த்தம் என்பதும் வெளிப்படையாக தெரிவது ஒன்று உள்ளொன்று இருப்பது ஒன்றாகும். மனிதர்கள் அதற்கு அர்த்தம் கற்பிப்பது என்பது வேறு. மகான்கள் அதை வேறு வகையில் புரிந்துகொள்ள என்றுமே அர்த்தம் கற்பிப்பார்கள். இதுபோல் முழுக்க விநாயகப் பெருமானின் தன்மையையும் பரம்பொருள் விநாயகப் பெருமானின் வடிவில் இருக்கின்ற பொழுது அந்த ஓம்கார தத்துவத்தை அந்த வடிவம் உணர்த்தி அந்த வடிவத்தையே தொடர்ந்து தியானம் செய்து தியானம் செய்து அந்த வடிவத்தின் தன்மையாய் தானும் மாறுகின்ற அந்த செயல்தான் அற்புதமாகும்.

அந்த அற்புதமாய் நின்ற கற்பகக் களிறே என்று அதுபோல் விநாயகப் பெருமானின் அற்புதமான அந்த ஆற்றலை பரம்பொருள் விநாயகப் பெருமானின் வடிவத்தில் செய்கின்ற லீலா வினோதங்களை விநாயகப் பெருமானின் அந்த வடிவத்தால் மனிதனுக்குள் ஏற்படக்கூடிய ஆன்மீக மெய்ஞான மாற்றங்களை அதோடு மட்டுமல்லாமல் முழுமையான நல்விதமான பற்றற்று மிகவும் லோகாய ஆசைகளில் சிக்கி உழல்கின்ற மனிதனுக்கு அதையெல்லாம் தாண்டி அதுபோல் ஒரு ஞான நிலை சட்டென்று கிட்டுவதற்கு அதுபோல் வழிமுறையை கற்பிக்கின்ற அருளுகின்ற விநாயகப் பெருமானையே அற்புதம் என்றும் களிறே என்றும் பிராட்டி (அவ்வை) போற்றுகிறாள். அதோடு மட்டுமல்ல எல்லோரும் அவசரமாய் சுந்தரரின் முக்திமோட்ச நிலையை தரிசிக்கும் வேளையிலே இதுபோல் பிராட்டியும் நல்விதமாய் ( திருக்) கோவிலூர் தன்னிலே அவசரகதியாய் பூஜை செய்யும் பொழுது மூத்தோனும் தடுத்தாட் கொண்டு சுந்தரனுக்கு முன் உன்னை அழைத்து யாம் செல்வோம் என்று கூறிய அந்த வாசகத்தின் பொருளால் சிலிர்த்துப் போன பிராட்டியின் வாசகமப்பா இது. இதைத்தாண்டி எந்தவிதமான பொருள் கூறினாலும் அது மனிதனின் விருப்பமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 416

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் எமை நாடும் சேய்கள் ஏன் மனித குலம் முழுவதும் எல்லா உயிரினங்களும் நலமாய் வாழ பாவ எண்ணங்கள் இல்லாது வாழ பாவத்தின் பிடியிலிருந்து விலகி வாழ இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். இயம்புகிறோம் இதுபோல் நல்விதமாய் ஹஸ்தம் (அஸ்த நட்சத்திரம்) மீன் ஓடும் காலம் இதுபோல் இறைவனின் அருள் ஆணையால் யாம் எம் சேய்களுக்கு சில வாக்குகளை கூற இருக்கின்றோம் நலமாய். நலமாய் வாழத்தான் உயிர்கள் எண்ணுகின்றன. நலமாய் வாழத்தான் மாந்தனும் எண்ணுகிறான். நலமாய் வாழ வேண்டும் என எண்ணுகின்ற மாந்தன் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று நாங்களும் நாள்நாளும் கூறிக் கொண்டே இருக்கிறோம். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்தாலும் நலமில்லாமல் வருகிறதே? என மனிதன் விரக்தி கொண்டே வாழ்கிறான். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ என்றென்றும் யாங்கள் அருளாணையிட்டாலும் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்து வாழ மாந்தர்களுக்கு பல்வேறு தயக்கங்கள் இருக்கின்றன. அத் தயக்கம் யாவற்றையும் விட்டுவிட்டு என்ன விளைவுகள் நடந்தாலும் நலம் எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ இதுபோல் மீண்டும் அதுபோல் நலத்தை நினைவூட்டி நலமாய் அனைவரும் வாழ இறைவனருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.

இயம்புகிறோம் இதுபோல் மனம் தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமாகும். இயம்புகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமானது இதுபோல் விதவிதமாய் மனிதர்களை வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டம் ஒடுங்கினால் தொடரும் எண்ணங்கள் அற்ற நிலை வரும். எண்ணங்களற்ற நிலை ஒரு மனிதனுக்கு எப்பொழுது வருகிறதோ அன்றுதான் அவன் பின்னங்கள் இல்லாது வாழக்கூடிய வழியை அறிவான். எனவே எவ்வித எண்ணங்களும் இல்லாத நிலையை நோக்கி மனிதன் செல்வது என்பது எடுத்த எடுப்பிலேயே கடினம் என்றுதான் பக்திவழி கூறிக் கொண்டே இருக்கிறோம். பக்தியும் தர்மமும் சத்தியமும் ஒருநாள் கட்டாயம் மனிதன் எண்ணுகின்ற நிரந்தர நிம்மதியை, நிரந்தர சந்தோஷத்தை தரும். ஆனால் அதுவரை மனிதனின் மனம் அலை பாய்ந்து கொண்டேதான் இருக்கிறது இந்த உலகினால் ஆசாபாசங்களால் பந்தபாசங்களால் பற்றால். ஆசையால் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே இவற்றையெல்லாம் விடு என்று கூறுவதைவிட மாந்தர்களின் போக்கிலேயே ஆன்மீக வழிமுறைகளை போதித்து இதுபோல் பல்வேறு விதமான சடங்குகளையும் பூஜை முறைகளையும் கூறி அந்த வழியிலிருந்து மெல்ல மெல்ல அவன் மேலேறி வரவேண்டும் என்றுதான் யாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனாலும்கூட எத்தனைதான் நுணுக்கமாய் யாங்கள் வெளிப்படையாய் தெளிவாய் உரைத்தாலும் யாங்கள் எந்த நோக்கிலே உரைத்தாலும் அந்த நோக்கிலே புரிந்து கொள்ளாமல் போவதுதான் மனிதர்களின் தன்மையாகும்.

யாங்கள் எதை எதற்காக எப்படி கூறுகிறோம்? என்பதை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய மனம் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் அவன் விரைவில் இறையருளை பரிபூரணமாக பெற்றுவிடுவான். இதுபோல் மனதிலே ஒரு மனிதனுக்கு கள்ளமும் சூதும் சூழ்ச்சியும் இல்லாத நிலையிலே அவன் இறையருளைப் பெறுவது எளிதாகும். சுயநலமும் சூழ்ச்சியும் சந்தேகமும் ஆளுமை சிந்தனையும் அகங்காரமும் யாரிடம் இருந்தாலும் இறையருளைப் பெறுவது கடினமாகும். எனவே எமை நாடும் சேய்கள் நாள்நாளும் எமது வாக்கின் போக்கை சிந்தித்து சிந்தித்து யாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு கூறுகிறோம்? எப்படி கூறுகிறோம்? எந்த இடத்தில் கூறுகிறோம்? எதற்காக கூறுகிறோம்? என்ன வழிமுறைக்காக கூறுகிறோம்? அதனை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? என்பதை நன்றாக சுய ஆய்வு செய்து புரிந்து புரிந்து புரிந்து எமது வாக்கை அசைபோட்டு அசைபோட்டு அந்த வழியில் மேலேற இறைவன் அருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.

இதுபோல் நல்விதமாய் தொடர்ந்து இறை பக்தியும் பரிபூரண சரணா பக்தியும் இந்த சரணா பக்தி என்பது சரணாகதியிலிருந்து வருவதாகும். சரணாகதி பக்தி இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு எந்தவிதமான நிம்மதியும் சட்டென்று வந்துவிடாது. எனவேதான் எந்தவிதமான ஐயமுமின்றி சரணாகதி பக்தியை ஒருவன் வளர்த்துக்கொள்ள வேண்டும். சரணாகதி பக்தி வளரவேண்டும் என்றால் ஒரு மனிதனிடம் கூடுமானவரை குற்றங்களும் குறைகளும் இல்லாமல் இருத்தல் அவசியம். குற்றங்கள் இருந்தாலும் அவற்றை உள்ளுணர்ந்து மெல்ல மெல்ல திருத்திக்கொள்ள வேண்டும். தவறு செய்வதைவிட பலர் முன் அந்தத் தவறை எவனொருவன் ஒத்துக்கொள்கிறானோ அவன்தான் எமது வழியில் வர தகுதி பெற்றவனாவான். எனவே நல்விதமாய் சிந்தனையை வளர்த்து சிந்தனையை கூர்மையாக்கி எமது வழிமுறையை புரிந்துகொண்டு வர பரிபூரண நல்லாசியை இத்தருணம் கூறுகிறோம்.

திருநீற்றின் மகிமை

ஒரு ஏழை அன்றாட உணவிற்கே ஒன்றுமில்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருந்தான். அவன் பொய் பேச மாட்டான். சோம்பேறியும் அல்ல. முன் ஜென்ம பிரதிபலன் அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. ஒருநாள் தன் வாழ்வினை நொந்து நடந்து கொண்டிருந்தான். அவனுக்கருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் ஐயா எனக்கு சிறிய சந்தேகம் தீர்த்து அருள்வீராக என்று அவரை வணங்கி தாங்கள் ஏன் இப்படி சாம்பலை பூசிக்கொண்டிருக்கிறீர்கள் அதுவும் மேனி முழுதும்? என்றான்.

சிவனடியாரும் இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு அதன் அடையாளமே இது. நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய் விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்க வேண்டும். ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக் கூடாது என்பதை அறியவும். இன்னும் உயிருள்ளவரை இதுவே மகாலெட்சுமி அம்சம். இதையணிந்தால் செல்வம் பெருகும் என்பதற்காகவும் திருநீறு அணிகிறேன் என்றார். சுவாமி எங்கள் குல வழக்கத்தில் இதை அணிய மாட்டார்கள். நான் மிகவும் வறுமையில் வாடுகிறேன் நான் என்ன செய்யவேன் என்று சிவனடியாரிடம் புலம்பி அழுதான். சிவனடியாரும் சரியப்பா நீ அணியவில்லை என்றாலும் பரவாயில்லை அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும் என சொல்லி அங்கிருந்து கிளம்பினார். ஏழை சிந்தித்தான் நம் குல வழக்கப்படி பூச முடியாது. அப்படியெனில் நம் தெரு முனையில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசித்திட வேண்டும் என முடிவு செய்து அதிகாலை எழ வேண்டும் என்ற முனைப்பில் உறங்கினான். அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித் திருநீறு பூச்சை காண காத்திருந்தான். குயவர் அன்று சற்று இவனுக்கு முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார். இதனை அறிந்த அவன் நாம்தான் தாமதமாக எழுந்துவிட்டோமோ? என்று எண்ணி குயவன் மண்ணெடுக்கும் இடத்திற்கே போய் தரிசனம் செய்யலாம் என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்.

குயவர் அதிகாலை மண்ணை தோண்டிக் கொண்டிருக்கும் போது எதிர் பாராத விதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது. அந்த தங்கப்பானை புதையலைக்கண்டு அதிர்ச்சியும் சந்தோஷமுமாக இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் பார்த்தான். அப்போது ஏழை குயவனின் நெற்றியிலிருந்த திருநீற்றை தூரத்திலிருந்து பார்த்ததும் பார்த்துட்டேன் பார்த்துட்டேன் என ஆவலாய் கத்தினான். உடனே குயவன் உண்மையாகவே பார்த்து விட்டாயா என்று கேட்டான். ஆமாம் நிறைவாகக் கண்டுவிட்டேன் எனக் கூறினான். உடனே குயவன் அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைபிடித்து தூக்கு ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்வோம் எனக்கூறினான். அப்போது தான் புதையல் விஷயம் ஏழைக்கு புரிந்தது. அப்போது சிந்தித்தான் நெற்றியைப் பார்த்ததற்கே பாதி தங்கம் கிடைத்ததே இன்னும் நாம் பூசினால் என்னவெல்லாம் கிடைக்குமோ என்று தன் குல வேற்றுமையை தூரத் தள்ளி வைத்து உடல் முழுதும் திருநீற்றை பூசினான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 415

நாங்கள் ஆலயத்திற்கு செல்லும் பொழுது லிங்க ஸ்வரூபத்தை வணங்குவதா? அல்லது சுடரை ஆராதிப்பதா? எதில் ஒன்றுபடுவது?

இறைவனின் கருணையைக் கொண்டு யாம் கூறுவது என்னவென்றால் இறையை உணர்வதற்கு உண்டான கரணங்களே புறத்தோற்றங்களே இத்தனையும். ஆலயமாக இருக்கட்டும் தெய்வ வடிவங்களாக இருக்கட்டும். அங்கே நடக்கின்ற புற சடங்குகளாக இருக்கட்டும் தீப ஆராதனையாக இருக்கட்டும் ஒலிக்கின்ற மணியாக இருக்கட்டும். மனிதரின் மனோநிலையும் மன பக்குவமும்தான் இறைவனை உணர்வதற்கு உண்டான ஒரு கருவியாகும். உதாரணமாக உரத்து மந்திரங்களை சொன்னால்தான் சிலருக்கு இறைவனை வழிபட்ட திருப்தி ஏற்படும். அப்படி ஒரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறு செய்துவிட்டுப் போகட்டும். சிலருக்கு மனதிற்குள் மந்திரத்தை உச்சரித்தால்தான் இறைவனை திருப்தியாக வழிபட்ட ஒரு நிலை ஏற்படும். அப்படிப்பட்ட மனிதன் அப்படியே வணங்கிவிட்டு செல்லட்டும். இன்னும் சிலருக்கோ இன்னவன் கூறியதுபோல கண் மூடி மௌனமாக இருந்தால்தான் இறைவனை வணங்கியது போல் தோன்றும்.

இறைவன் காட்சி தந்தது போலவும் தோன்றும். அப்படியொரு மனோபாவம் இருக்கின்ற மனிதன் அவ்வாறே செய்துவிட்டுப் போகட்டும். இது மனிதன் வளர வளர மாறக் கூடிய நிலையாகும். எனவே கருவறையின் முன்னால் நிற்க வேண்டும் விழி மூடவேண்டும் அல்லது விழி திறக்க வேண்டும் அல்லது லிங்க ஸ்வரூபத்தையோ அம்பாளையோ பார்க்க வேண்டும் அல்லது ஆராதனையை காதால் கேட்க வேண்டும். மந்திரங்களை கேட்க வேண்டும் அல்லது தீப சுடரை உற்றுப் பார்க்க வேண்டும். இப்படி எதையும் நாங்கள் கூறவில்லை. மனதில் இறை பற்றிய சிந்தனை இருக்கிறதா? இறைவனை இந்த வடிவத்தில் பார்த்தால் என் மனம் ஏற்றுக் கொள்கிறது என்று ஒரு மனிதனுக்கு ஒரு வடிவம் பிடித்திருக்குமே? அந்த வடிவத்தை மனதில் கொண்டுவந்து வைத்து விட்டால் போதும். இறை சிந்தனை இருந்தால் போதும். விழி மூடி வாய் மந்திரங்களை உச்சரிக்க உடலெங்கும் திருநீறு பூசியிருக்க சிந்தனை எங்கோ இருந்தால் அதனால் பலனேதுமில்லை. அங்கே ஒரு கணமாவது வேறு சிந்தனை ஏதுமில்லாமல் அதுபோல் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை லிங்க வடிவமாகவோ அல்லது வேறு எந்த வடிவத்தில் எண்ணினால் மனம் சிக்கென்று பிடித்துக் கொள்கிறதோ அந்த வடிவத்தில் நினைக்க பிடித்துக் கொள்ள நன்மையாகும் அதே வழிபாடாகும்.

Spiritual evolution is achieved by yoga and striving. Devotees perform tapas, holding pots of fire, meditating for long hours, rolling around the temple in hot sand and carrying kavadi. Devas bless their efforts from the inner planes, while the baser worlds remain below and apart.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 414

கேள்வி: அன்னை லோபாமுத்திரை வாக்கு அருள வேண்டும்:

இறைவனின் கருணையாலே இதுபோல் சூழல் இறைவன் அருளால் நிகழும் பொழுது கட்டாயம் நடக்குமப்பா. யாம் முன்னரே கூறியதைதான் மீண்டும் நினைவூட்டுகிறோம். எம்மைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான் என்று பார்க்க எம் சேய்கள் பழக வேண்டும். இதுபோல் பெண்பால் லோபா முத்திரையாக யானும் ஆண்பால் அகத்தியனாக அன்னையும் இருந்து அருள்பாலிப்பது உண்மை. எனவே இந்த உண்மையை புரிந்து கொண்டால் இங்கு ஆண் பெண் பேதங்கள் யாருக்கும் தோன்றாது.

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் அமைச்சராக இருந்த போது ஆபரணங்கள் தலையில் கீரிடத்துடன் உடன் வயிற்றில் சிறிது தொந்தியுடன் முதல் சிற்பத்தில் இருக்கிறார். இறைவனின் திருவடி தீட்சை பெற்று சிவனடியார் ஆன பின்பு ருத்திராட்ச மாலையுடன் தொந்தி இல்லாமல் கைகள் கட்டிக் கொண்டு பணிவுடன் 2 வது சிற்பத்தில் இருக்கிறார். இடம் ஆவுடையார் ஆத்மநாதசுவாமி கோவில் திருப்பெருந்துறை புதுக்கோட்டை மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 413

கேள்வி: காஞ்சியில் தாங்கள் வழிபட்ட சாளக்ராமத்தினால் ஆன ஸ்ரீ ராம சக்ரம் சூட்சுமத்தைப் பற்றி சொல்லுங்கள்:

இறைவனின் கருணையைக் கொண்டு பல்வேறு விதமான சக்கரங்கள் குறிப்பாக யந்திரங்கள் செம்பில் கனகத்தில் வெள்ளியில் இருந்தாலும் இதுபோல் சிறப்பிலும் சிறப்பு தூய்மையான கருங்கல்லிலே செதுக்கப்பட்ட சக்கரங்கள். இவற்றிலிருந்து சில ஆற்றல்கள் வருவது உண்மைதான். இவற்றை நன்றாக புரிந்துகொள்வது மனிதர்களுக்கு சற்றே கடினம்தான். இருந்தாலும் சுருக்கமாக யாங்கள் கூறுகிறோம். இதுபோல் எதாவது ஒரு காரணத்தால் குழந்தைகளை பிரிந்திருக்கும் பெற்றோர் கணவனை பிரிந்திருக்கும் பெண்டிர் இதுபோல் எதாவதொரு பிரிவு வாட்டுகின்ற கர்மவினை இருக்கின்ற மனிதர்கள் இதனை வழிபட்டால் பிரிவால் ஏற்பட்ட சோகம் மெல்ல மெல்ல மாறும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 412

கேள்வி: அறப்பணிகளில் ஈடுபடும்போது சில நேரங்களில் மனம் தொய்வடைகிறது. அப்போது என்ன செய்ய வேண்டும்? அடுத்து கர்மவினை ஒரு மனிதனை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்படி புரிந்துகொள்வது?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் ஒரு மனிதன் தர்மம் செய்து கொண்டே இருக்க வேண்டும். புண்ணிய காரியங்களை ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அறச்செயல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். சத்தியநெறியில் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். பரிபூரண சரணாகதி பக்தியை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படியெல்லாம் வாழ்ந்தாலும் கூட எதாவது ஒரு துன்பம் வந்து மனம் சோர்ந்து விடுகிறதே? விரக்தியடைந்து விடுகிறதே? இறை பக்தியே வீண் என்பது போலெல்லாம் தோன்றுகிறதே? இத்தனை உருகி உருகி இறைவனை வணங்கினாலும் துன்பம்தான் வருகிறது என எண்ணுவது மனதின் இயல்பு. அப்பொழுது மௌனமாக தனக்குள்ளே சிந்திக்கவேண்டும் உண்மைதான்.

எத்தனையோ தர்மங்களை ஒருவன் செய்திருக்கலாம். எத்தனையோ புண்ணிய காரியங்களை செய்து கொண்டிருக்கலாம். எத்தனையோ விதமான பூஜைகளை செய்யலாம். வாழ்க்கையை தொண்டாகவே மாற்றி வாழலாம். தியாக செம்மலாகவே வாழலாம். ஆனாலும்கூட அவனுக்கும் முன் ஜென்ம முன் ஜென்ம பாவவினைகள் இருக்கிறதல்லவா? அது வந்து வாட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரி இத்தனை செய்தும் இப்படியொரு துன்பம் வந்திருக்கிறதே? இவையெல்லாம் செய்யாதிருந்தால் இதே துன்பத்தின் தாக்கமும் அளவும் எந்தளவிற்கு இருந்திருக்கும்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தர்ம வழியில் சத்திய வழியில் பக்தி வழியில் சாத்வீக வழியில் பிறருக்கு நல்லதை நினைக்கின்ற செய்கின்ற வழியில் வருகின்ற மனிதனுக்கு துன்பம் வந்தாலும் இறைவன் தலையிட்டு அதனை எப்படியெல்லாம் குறைக்க முடியுமோ குறைத்து அது விதியே ஆனாலும் மாற்றித் தருகிறார். இதற்கு நம்பிக்கைதான் முக்கியம். இதனையும் தாண்டி மனம் விரக்தி அடைந்துவிட்டால் அமைதியாக யாருடனும் பேசாமலும் ஏதாவதொரு ஆலயம் சென்று அமைதியாக அமர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு இட்டம் போல் விருப்பம் போல் சில ஆத்மாக்களின் நியாயமான தேவைகளை எப்படியாவது நிறைவேற்றி விடுவோம் என்று போராடி தர்ம காரியத்தை செய்தால் உடனடியாக மறுதினமே மாற்றங்கள் வந்து நல்லதொரு சூழல் ஏற்படும். எனவே இதனை நன்றாக புரிந்து கொண்டு இந்த தர்ம சூட்சுமத்தை நன்றாக செய்ய நன்மை உண்டு. குறிப்புக்காக கூறுகிறோம். இதையே உதாரணமாக பிடித்துக்கொள்ளக் கூடாது.

சில மனிதர்கள் பூர்வ ஜென்ம பாவத்தின் காரணமாக பறவைகளை சிறைபிடித்து விற்பனை செய்வார்கள். இவற்றை வாங்கி உகந்த வனாந்திரமான இடத்திலே சுதந்திரமாக பறக்க விட்டால் எத்தனை மன இறுக்கமும் ஒருசில தினங்களில் மாறிவிடும். பறவைகளை பறக்கவிடு என்பதற்காக மெனக்கெட்டு ஒரு பறவையை பிடித்து அதன் சிறகுகளை நறுக்கி அதனை பற என்றால் அது பாவமாகும். பறவையை வெளியே விடு என்றால் என்ன பொருள்? பறவை எப்படி சிறைபட்டு நொந்து இருக்கிறதோ அப்படி எத்தனையோ ஆண்களும் பெண்களும் சில வேதனையான விஷயங்களை வெளியே சொல்லாமல் இருப்பார்கள். சில நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதே சமயம் அதற்கான சூழல் இராது. தனமும் இராது. அவர்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்னர் அந்த உதவியை செய்ய வேண்டும். குறிப்பாக இடர்பாட்டில் வேதனையில் இருக்கின்ற பெண்களுக்கு இன்னும் சரியாக கூறப்போனால் எங்கெல்லாம் பெண்கள் துன்பத்தில் இருக்கிறார்களோ அவர்களின் நியாயமான துன்பங்களையெல்லாம் யார் தீர்த்து வைக்கிறார்களோ அவர்களுக்கு இறையருள் பரிபூரணமாக உடனடியாகவே கிட்டும் என்பதை யாங்கள் கூறுகிறோம். அதைப்போல யாரையும் துன்புறுத்தக்கூடாது. குறிப்பாக பெண்களை எந்த விஷயத்திலும் யாரும் துன்புறுத்தாமல் வாழ்ந்தால் அதே இறையருள்தான்.

ஆனாலும்கூட இவையெல்லாம் தெரிந்தாலும் என்னுடைய சூழ்நிலை நான் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று ஒரு மனிதன் தொடர்ந்து தவறுகளை செய்தால் அதன் விளைவுகளை அவன் எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். எனவே இதுபோல் நல்விதமான வழிமுறையை தர்மத்தை பின்பற்றிக் கொண்டே வந்தால் பாவ கர்மாக்கள் குறையும். பாவ கர்மாக்கள் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எவ்வாறு ஒரு மனிதன் புரிந்து கொள்ள முடியும்? என்றால் சினம் குறைந்து விடும். பொறாமை இல்லாத மனோநிலை வந்து விடும். ஆற்றாமை இராது. யார் மீதும் எதற்காகவும் ஆத்திரமும் எரிச்சலும் வராது. தனக்கு தீமை செய்த மனிதன் மீது கூட அன்பு பெருகும். இப்படியொரு மனம் யாருக்கு மெல்ல மெல்ல வளர்கிறதோ அவர்களுக்கு பாவங்கள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே இருக்கிறது என்று பொருளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 411

கேள்வி: புற்றுநோயால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவரிடம் நீங்கள் விரைவில் குணமாகி விடுவீர்கள் என்று பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. இது இன்னுரையில் வருமா? இது சரியா? தவறா?

வள்ளுவன் கூற்றைத்தான் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். எனவே பிறருக்கு தீங்கைத் தராத எதுவும் பொய்யல்ல. எனவே இதுகுறித்து குழப்பமே வேண்டாம்.

கல்லேஸ்வரர்

தாமரை பீடத்துடன் கூடிய பெரிய கல்பீடத்தின் மீது உமாமகேஸ்வரர் தோற்றத்தில் சிவபெருமான் பார்வதிதேவியுடன் இரண்டு பறக்கும் வித்யாதரர்களுடன் காட்சி அளிக்கின்றார். இடம் கல்லேஸ்வரர் கோவில் தும்கூர் மாவட்டம் கர்நாடக மாநிலம்.