சுலோகம் -50

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #3

பார்த்தா பேடித்தனத்தை நீ அடைந்து விடாதே அந்தத் தன்மை உனக்கு பொருத்தம் இல்லை எதிரிகளை பயத்தால் வாட்டுபவனே மிகவும் தாழ்மை விளைவிக்கக் கூடிய இந்த இதயத் தளர்வை நீக்கி எழுந்து நிற்பாயாக.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணர் அர்ஜூனனை ஏன் பார்த்தா என்று அழைக்கிறார்?

அர்ஜூனனின் தாய் குந்தியின் இயற்பெயர் பிருதை (சிறந்த அழகி என பொருள்) இவளது பெயரை வைத்து பிருதையின் மகனே என்ற பொருளுக்கு பார்த்தனே என்று அர்ஜூனனை அழைப்பார்கள். போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக குந்தியை கிருஷ்ணர் சந்திக்க சென்ற போது அவரிடம் அர்ஜூனனுக்கு யுத்தத்திற்கான வீரமிக்க வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தாள். அதில் வீரத்தாயின் வீரமகன் என்று ஆரம்பித்து அர்ஜூனனுக்கு வாழ்த்து சொல்லி யுத்ததிற்க்கு அர்ஜூனனை உற்சாகம் ஊட்டியிருந்தாள். அதனை இங்கே சுட்டிக் காட்டி வீரத்தாயின் வீரமகனை என்று அர்ஜூனனுக்கு மன தைரியத்தை கொடுப்பதற்காக கிருஷ்ணர் பார்த்தா என்று குறிப்பிட்டு அழைத்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 74

கேள்வி: தலைமுடி காணிக்கை குறித்து விளக்குங்கள்?

இறைவன் அருளால் பலமுறை இது குறித்து கூறியிருக்கிறோம். மேலும் கூறுகிறோமப்பா. ஒரு மனிதன் இறைவனை நோக்கி பக்தி செலுத்தும் பொழுது எடுத்த எடுப்பிலேயே பூர்வ புண்ணியம் இருந்தால் பக்தியை செலுத்தலாம். இல்லையென்றால் ஒரு குழந்தைத் தனமான ஒரு பக்திதான் இறைவனிடம் தோன்றும். இறைவா என்னுடைய பிரச்சனையைத் தீர்த்துவிடு. என் முடியைக் காணிக்கையாகத் தருகிறேன். இறைவா என் குழந்தைக்கு உன் சந்நிதியில் வந்து காதினை நகையலங்காரம் செய்து பார்க்கிறேன். இறைவா உன்னுடைய சந்நிதிக்கு இதை செய்கிறேன் என்பதெல்லாம் மிக மிக ஆதி நிலை பக்தியாகும். அதற்காக இதனை ஏளனம் செய்யத் தேவையில்லை.

தன்னுடைய தலை சிகையை முடி காணிக்கையாக தந்தால்தான் இறைவன் அருள்வார் என்ற மனப்பான்மை இருக்கும்வரை அந்த பக்தி நிலை சரி. ஆனால் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தால் இறைவன் அருள்வார் மகிழ்வார். நாம் நேர்மையாக வாழ்ந்தாலே இறைவன் அருள்வார். நம் மீது கருணை செய்வார் என்ற சிந்தனை வளர்ந்த பிறகு மீண்டும் இந்த பக்தி நிலைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் வேண்டிக் கொள்ளும் பொழுது எந்த மனநிலையில் இருந்து வேண்டிக் கொள்கிறானோ அந்த வேண்டுதலை கூடுமானவரை அவன் மனநிலைக்கு ஏற்ப சரியாக கடமையாற்றுவது மிக சரியான செயலாகும். எனவே பக்தியில் எல்லா நிலைகளும் உயர்வுதான். ஒரு நிலை உயர்வு ஒரு நிலை தாழ்வு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் உயரே செல்ல செல்ல தாழ்ந்த நிலையில் இருக்கின்றவனை பார்த்து உயர்ந்த நிலையில் இருப்பவன் ஏளனம் செய்ய வேண்டாம்.

சுலோகம் -49

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #2

அர்ஜூனா இத்தகைய தகாத நேரத்தில் இந்த வருத்தம் உன்னை எந்த காரணத்தினால் பீடித்தது? உனது கருத்து சான்றோர்களால் கடைபிடிக்கப்படாதது. சொர்கத்தை அளிக்காது மேலும் பெருமைக்கு இழுக்காகி விடும்.

இந்த சுலோகத்தில் சொல்லப்படும் கருத்து என்ன?

முதல் அத்தியாயத்தில் அர்ஜூனன் சொன்னவற்றை கேட்ட கிருஷ்ணர் இப்போது பேச ஆரம்பிக்கிறார். யுத்தம் ஆரம்பிக்க இருக்கும் இறுதி நேரத்தில் அர்ஜூனன் யுத்தம் செய்ய மறுப்பதால் இந்த நேரத்தை தகாத நேரம் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். பெரிய மகாரதர்களையும் வெற்றி பெறக்கூடிய அர்ஜூனனுக்கு யுத்தத்தில் இருந்து பின் வாங்கும் இந்த கோழைத்தனம் எப்படி வந்தது என்று கேட்கிறார். இந்த கோழைத்தனத்தினால் உனது கடமையை செய்ய மறுக்கிறாய். கடமையை செய்ய மறுப்பவனுக்கு சொர்க்கம் இல்லை என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார். மேலும் அர்ஜூனன் யுத்தத்தில் யாராலும் வெற்றி பெற முடியாதவன் என்ற பெருமைக்கும் புகழுக்கும் உரியவனாக இருக்கிறான். இப்போது யுத்தத்தில் இருந்து பின் வாங்கினால் யுத்தத்திற்கு அர்ஜூனன் பயப்படுகிறான் என்ற அவச்சொல் ஏற்பட்டு அவனது பெருமைகள் அனைத்துப் அழிந்து போகும். யுத்தத்தில் இருந்து பின் வாங்க அர்ஜூனன் சொல்லும் காரணங்கள் அனைத்தும் இதற்கு முன்பாக இருந்த முன்னோர்கள் யாரும் கடைபிடிக்காதவைகள் ஆகும் என்று கிருஷ்ணர் அர்ஜூனனிடம் சொல்கிறார்.

இந்த சுலோகத்தில் சான்றோர் என்ற தமிழ் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ஆரியன் என்ற சொல் வருகிறது. அதற்கு பொருள் என்னவென்றால் அறவழியில் நிற்பவனும் ஆசைகளுக்கு அடிபணியாதவனும் பண்பட்ட மனமும் இறைவனை நோக்கிச் செல்லும் சிறந்த வாழ்க்கை முறையை கொண்டவன் எவனோ அவனே ஆரியன் என்றும் தமிழில் சான்றோன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 73

கேள்வி: பாவங்கள் ஒரு மனிதனை ஆன்மீக வழியில் செல்லவிடாது எனும் பொழுது அது எப்படி மனித குற்றமாகும்?

இறைவன் அருளால் பாவத்தை குறைத்துக் கொள்ள மனிதன் என்றாவது ஒரு சிறு முயற்சி எடுத்திருக்கிறானா? என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். கட்டாயம் பாவங்கள் இருக்கும் வரை இறை சிந்தனையோ பெருந்தன்மையோ தர்ம சிந்தனையோ வராது என்பது உண்மை. அதனால்தான் முதலில் ஏதாவது ஒரு ஆலயம் செல்லப் பழக வேண்டும். பிறகு அன்றாடம் சில நாழிகையாவது இறை நாமத்தை மனம் சோர்ந்தாலும் தளர்ந்தாலும் பாதகமில்லை என்று உருவேற்ற வேண்டும். எல்லாம் கடினம் என்று எண்ணினால் தனம் இருப்பவர்கள் முதலில் இந்த தனம் நமக்கு உரியதல்ல என்றோ நாம் செய்த (நல்) வினைகளுக்காக இறைவன் தந்திருக்கிறார். நமக்கும் நம் குடும்பத்திற்கும் போக எஞ்சியுள்ள தனம் அனைத்தையும் பிறருக்காக தந்துவிட்டால் நல்லது என்ற சிந்தனையை அசைபோட வேண்டும். அதனால்தான் மனம் என்பது பாவத்தை நோக்கி செல்லாமல் இருக்கும். பாவங்கள் இருக்கிறது. எவ்வாறு தர்மம் செய்வது? அந்த பாவங்கள்தானே மனிதனை மேல் நோக்கி செல்லவிடாமல் தடை போடுகிறது என்ற சிந்தனை வரும் பொழுதே அந்த பாவங்களை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்துவிட வேண்டும். உடல் ஊனம் நான் எப்படி வாழ்வேன்? என்பதை விட இந்த உடல் ஊனத்தோடு என்ன முடியுமோ அதை செய்வேன் என்பதுதான் மனஉறுதி. எனவே யாம் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் வறுமை தண்டனையல்ல. வித்தை கற்காமை தண்டனையல்ல. பிணி தண்டனையல்ல. அறியாமை ஒன்று தான் தண்டனை.
விதி மனிதனிடம் விளையாடுவது அறியாமையை வைத்துத்தான்.

அறியாமை என்றால் என்ன?

ஆசை பற்று தனக்கு வேண்டும் தன் குடும்பத்திற்கு வேண்டும் தன் வாரிசுக்கு வேண்டும் தனக்குப் பின்னால் தன் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவே எப்படியாவது முடிந்தவரை தனத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறானே? இதை முதலில் மனதை விட்டு அகற்றினாலே பாவங்கள் அகன்றுவிடும். எனவே தான் மீண்டும் மீண்டும் இந்த ஜீவ அருள் ஓலையிலே பரம்பொருள் கூறுகின்ற தர்ம விளக்கத்தைக் கூறிக்கொண்டே இருக்கிறோம். சோதித்துக்கூட பார்க்கலாம். பாவம் இருக்கிறது என்னால் ஆலயம் செல்ல முடியவில்லை பிராத்தனை செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது. அடுத்தடுத்து நஷ்டம் வருகிறது. போராட்டமாக இருக்கிறது. போர்க்களமாக இருக்கிறது. ஒன்று போனால் ஒன்று கஷ்டம் வருகிறது. இதில் எப்படி நான் தர்மத்தை செய்ய முடியும்?

முதலில் நான் பட்ட கடனையெல்லாம் அடைக்க வேண்டும். நான் படும் கஷ்டங்களிலிருந்து வெளியே வரவேண்டும். நான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் தானே எதனையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அந்த நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதற்காக முதலில் எப்படி அன்றாடம் உலகியல் கடமைகளை மனிதன் ஆற்றுகிறானோ அதைப்போல அவனவனால் முடிந்த உதவியை அன்னத்தை ஆடையை தனத்தை மருத்துவ உதவியை தேடி தேடி தேடி தேடி தேடி தேடி தேடிச் சென்று தர தர பாவங்கள் குறைந்து கொண்டே வரும். பாவங்கள் குறைந்தாலே மனம் அறியாமையிலிருந்து விடுபட்டுவிடும். எனவேதான் கடுமையான பூஜைகளையும் தவங்களையும் நாங்கள் கூறாமல் இந்த எளிய வழிமுறைகளைக் கூறுகிறோம். வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 72

கேள்வி: சக்தியும் சிவனும் வெவ்வேறா? அல்லது ஒன்றா?

தங்கமும் நகையும் வெவ்வேறா? (பதில் – இல்லை ஒன்றுதான்). அதைப்போல் தானப்பா.

கேள்வி: அவ்வாறிருக்க சக்திக்கும் சிவனுக்கும் ஏன் தனித்தனி வழிபாடுகள்?

முன்புதான் கூறினோமேயப்பா. மனிதனுக்கு அனைத்தும் விதவிதமாக இருக்க வேண்டும். உண்ணுகின்ற உணவாக இருந்தாலும் உடுத்துகின்ற உடையாக இருந்தாலும் செல்லுகின்ற மார்க்கமாக இருந்தாலும் ஒரே விதமாக இருந்தால் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனிடம் இருக்கின்ற தன்முனைப்புதான் இத்தனை விதமாக இறைவனை பிரித்து வைத்திருக்க உதவியிருக்கிறது அல்லது அதுதான் சரி என்று அவனுக்கு பட்டிருக்கிறது. எதுவுமே இல்லை ஒரு விலங்கைப் பார்த்து இதுதான் இறைவன் என்றால் அதையும் மனிதன் ஏற்றுக் கொள்வான். அதன் பின்னாலும் சிலர் செல்வார்கள். எனவே நீ சக்திக்குள்ளேயே சிவத்தைக் காணலாம். சிவத்திற்குள்ளேயே சக்தியைக் காணலாம். அதையெல்லாம் உணர்ந்து தானே அந்த அர்த்தநாரி வடிவத்தையே அன்று இறைவன் எடுத்திருக்கிறார். யாருக்கு எந்த வடிவில் இறைவனை வணங்க பிடிக்கிறதோ அந்த வடிவில் வணங்கிவிட்டுப் போகட்டும் என்றுதான் இறைவனும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: பூனை வழிபட்ட புனுகீஸ்வரர் பற்றி

சர்ம பிணிகளை நீக்கிக் கொள்ள முடியாமல் கர்மவினையால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

கேள்வி: நண்டு வழிபட்ட ஈஸ்வரர் பற்றி:

இந்த நண்டு வடிவில் மட்டுமல்ல பல்வேறு மகான்களும் ஞானிகளும் இன்றளவும் வழிபடக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. பிரம்மஹத்தி தோஷங்களில் நீக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.

குறிப்பு: பூனை மற்றும் நண்டு வழிபட்ட கோவில்களை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

சுலோகம் -48

சாங்கிய யோகம் முன்னுரை

சாங்கிய என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கணிதம் என்று பொருள். கணிதம் என்றால் ஏதோ கணக்கு வாய்ப்பாடு கூட்டல் கழித்தல் என்று பொருள் அல்ல. தர்க சாஸ்திரத்தில் கேள்வி கேட்டு விவாதம் செய்து அதற்கு விளக்கம் சொல்லி புரிய வைப்பது போல அறிவை அகலப்படுத்துவதற்கு கணிதம் செய்தல் என்று பொருளாகும். விஷாத யோகத்தில் அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்ட கேள்விக்கு பதிலாக ஆத்ம தத்துவத்தையும் சுய தர்மத்தையும் கர்ம யோகத்தின் சொரூபத்தையும் இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார். மற்ற அத்தியாயங்களை விட இந்த அத்தியாயத்தில் ஆத்ம தத்துவ உபதேசங்கள் விளக்கமாக கூறப்பட்டுள்ளதால் இந்த அத்தியாயம் சாங்கிய யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் 72 சுலோகங்கள் உள்ளது.

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #1

சஞ்சயன் கூறினான். இப்படி மனம் முழுவதும் இரக்கம் நிறைந்தவனாக கண்களில் நீர் பெருகிக் கலங்கிய கண்களும் நிலைகுலைந்த உள்ளமும் உடையவனாக அர்ஜூனன் நின்றான். அவனைப் பார்த்து மதுசூதனன் பேசத் துவங்கினார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: சஞ்சயன் கிருஷ்ணரை ஏன் மதுசூதனன் என்று குறிப்பிட்டு கூறுகிறார்?

மது எனும் அரக்கனை கிருஷ்ணர் அழித்ததால் அவர் மதுசூதனன் என்று பெயர் பெற்றார். மது என்னும் அரக்கனை கொன்றது போல உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மேல் உள்ள இரக்கத்தினாலும் கருணையினாலும் யுத்தம் செய்ய மறுக்கும் அர்ஜூனனின் கவலைகளையும் அவனது குழப்பங்களையும் கொன்று அர்ஜூனனின் மனதை தெளிவிக்கப்போகிறார் கிருஷ்ணர். அதன்பின் உனது மகன்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்வதற்காக மதுசூதனன் என்ற பெயரை சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 71

கேள்வி: ஸ்ரீராமருக்கு எவ்வாறு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டது?

அயனம் என்றால் பாதை என்பதை புரிந்துகொள். ராமாயணம் எனும் பொழுது ராமரின் வாழ்வின் பாதை. வாழ்வு நிலை என்று எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும். இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? மேலிடத்து நாடகத்தை மனிதர்கள்தாம் தாம் அறிந்த வழியில் சிந்தித்தால் குழப்பம்தான் மிஞ்சும். எனவே இந்த நிலையில் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான்.

நல்ல நோக்கத்திலே கூட பிறரை வதம் செய்தால் தோஷம் வரும் என்றால் சுயநல நோக்கத்திலே பிறரை வதம் செய்தால் அந்த தோஷமும் பாவமும் எத்தனை பிறவி தொடரும். எனவே நல்ல நோக்கத்திற்காகவே பிற உயிரை எடுக்கக்கூடாது எனும் பொழுது சுயநல நோக்கிலே பிற உயிரை எடுத்தால் அதனால் வரக்கூடிய பாவங்களும் அதன் விளைவுகளும் எத்தனை கடுமையாக இருக்கும்? என்பதை புரிந்து கொண்டு சாத்வீகமாக வாழ வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை பொருளாகும்.

கேள்வி: தாய்க்கும் குருவிற்கும் என்ன வித்தியாசம்?

தாய் பலருக்கு குருவாக இருக்கலாம். ஏனென்றால் மராட்டிய மண்ணிலே பிறந்து வீரம் செறிய போரிட்டானே அதை வீரம் என்று மனிதர்கள் கூறலாம். அதற்குள் நாங்கள் போக விரும்பவில்லை. அந்த மன்னனுக்கு தாய்தான் குரு போல இருந்து போதித்திருக்கிறாள். இன்னும் பலருக்கு தாய் குருவாக இருந்திருக்கிறாள். ஆனால் குருவோ எல்லோருக்கும் தாயாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கிறார்.

கேள்வி: நாக தோஷத்திற்கு என்ன மந்திரங்கள் சொல்வது?

நவக்கிரக வழிபாட்டையும் செய்யலாம். அதோடு ஒவ்வொரு நவக்கிரத்திற்கு உண்டான அதிதெய்வ வழிபாட்டையும் சேர்த்து செய்வது சிறப்பு.