சுலோகம் -55

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #8

நான் உன்னை சரணடைந்தது ஏன் என்றால் இந்த உலகில் எதிரிகள் இல்லாத தனமும் தானியங்களும் நிறைந்த செழிப்பான அரசு மற்றும் தேவர்களின் தலைவனான இந்திரனின் பதவியைக் கூட நான் அடையலாம். ஆனால் எனது புலன்கள் அவற்றை அனுபவிக்க இயலாத படி வருத்துகின்ற நிலையை எது போக்கும் என்பதை நான் உணர இயலவில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கிருஷ்ணர் முன்பே சொன்னபடி யுத்தம் செய்து வெற்றி பெற்று தனமும் தானியங்களும் நிறைந்த செழிப்பான அரசையும் இந்திரனுக்கு நிகரான பதவியைப் பெற்றாலும் கூட இவை அனைத்தும் என்னுடைய வருத்தத்தை போக்காது. ஆகவே எனது புலன்களை அடக்கி வருத்தத்தை போக்க குருவாய் இருந்து நல்ல வழியை நீங்கள் கூற வேண்டும் அதனால் சரணடைகிறேன் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் சொல்கிறான்.

இந்த சுலோகத்தின் ஒரு கேள்வி?

அர்ஜூனன் வருத்தம் என்று எதனை குறிப்பிடுகின்றான்?

உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று வெற்றி பெற்று அதனால் செழிப்பான ராஜ்யம் கிடைத்தாலும் உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று விட்டோமே என்றும் அவர்கள் தற்போது இல்லையே என்று நினைப்பதையே வருத்தம் அர்ஜூனன் இங்கு கூறிப்பிடுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 79

கேள்வி: இறைவன் ஒருவரே அவர் சிவபெருமான் தான். அப்படியென்றால் படைக்கும் கடவுள் யார்? காக்கும் கடவுள் யார்? அழிக்கும் கடவுள் யார்? இவர்கள் இருக்கிறார்களா அல்லது இல்லையா?

இறைவன் ஒருவரே சரியாக கூறினாய். சிவபெருமான்தான் என்று ஏன் கூறுகிறாய்? மகாவிஷ்ணுவை வணங்கக் கூடியவன் என்ன எண்ணுவான்? மகாவிஷ்ணுதான் என்று கூறுவான். பிரம்மனை வணங்கக் கூடியவன் பிரம்மன் என்று கூறுவான். பிறை மார்க்கத்தில் (இஸ்லாம்) பிறந்தவன் என்ன எண்ணுவான்? அவன் அல்லா என்று தான் கூறுவான். அன்பு சித்தன் (இயேசு) வழியில் பிறந்தவன் வழியில் வந்தவன் பரமபிதா என்றுதான் கூறுவான். நன்றாக புரிந்துகொள். ஒருவன் இல்லத்திலே மனைவிக்கு கணவன். தந்தைக்கு பிள்ளை தாத்தாவிற்கு பேரன் பேரனுக்கு தாத்தா சகோதரனுக்கு சகோதரன் சகோதரிக்கு சகோதரன். அலுவலகம் சென்றால் அதிகாரி இப்படி இருக்கின்ற ஒருவனே பல வடிவங்கள் எடுக்கிறான். இறை ஏனப்பா பல வடிவங்கள் எடுக்கக்கூடாது?

கேள்வி: தர்மர் மட்டும்தான் வைகுண்ட பிராப்தி அடைந்தார். கர்ணன் உட்பட மற்றவர்கள் அவர்களின் கர்மாவின்படியான நிலையை அடைந்தார்கள் என்று மூல நூலில் படித்தேன் அது குறித்து.

சூரியனிடமிருந்து பிரிந்த ஒரு சிறு சக்திதான் கர்ணன் என்ற ஒரு பாத்திரமாக பரிணமித்தது. அது தன்னுடைய கடமையை இறையாணையின்படி செய்துவிட்டு பிறகு இறையோடு ஒன்றாகக் கலந்து சூரிய பகவானோடு இணைக்கப்பட்டது என்பதே உண்மையான தேவ செய்தியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 78

கேள்வி: வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் துன்பங்களை தாங்கள் அறிவீர்கள். சொந்த வீடு அமைய எளிய வழியைக் காட்டுங்கள்

இறைவன் அருளைக் கொண்டு ஆத்மா குடியிருக்கும் தேக வீட்டை (உடல் வீட்டை) நன்றாக ஒரு மனிதன் பராமரிக்க வேண்டும். ஒரு பிறவியிலே பெற்ற புண்ணியத்தால் பல்வேறு இல்லங்களை பெறக்கூடிய வாய்ப்பு பல்வேறு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அப்பொழுது அந்த ஆணவத்தால் பலரை இடர்படுத்திய பாவம்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்லதொரு சுகமான இல்லம் அமையாமல் ஒரு மனிதன் வேதனைப்பட நேரிடுகிறது. எனவே இது போன்ற கடுமையான மனைதோஷம் அடையப்பெற்ற ஜாதகர்கள் அவர்கள் விருப்பம்போல் இறை வழிபாட்டை செய்வதோடு குறிப்பாக செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வணங்கி நவகிரகங்களில் உள்ள செவ்வாய்க்கும் (பூமிக்காரகன்) முடிந்த பிராத்தனைகளை செய்து கொண்டே இருப்பதும் கூடுமானவரை மனைதோஷங்கள் குறைவதற்கு முடிந்தவரை தர்மங்களை குறிப்பாக சிறிய அளவு மனையையாவது ஒரு ஏழைக்கு தானமாக அளித்தால் கட்டாயம் இந்த தோஷம் விலகுமப்பா.

கேள்வி: அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டால் இறைவன் முக்தி அருள்வார் என்ற கருத்து சரியா?

இறைவனுக்கு தர மனிதன் யாரப்பா? இறைவனுக்கு தருகிறேன் என்ற எண்ணம் இருக்கும் வரையில் எப்படியப்பா முக்தி கிட்டும்? அப்படியானால் இறைவன் வேறு தான் வேறு என்ற எண்ணம் இன்னும் அங்கு இருக்கிறது என்று பொருள். அது இருக்கும் வரையில் அங்கு முக்தி கிட்டாது.

சுலோகம் -54

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #7

கோழைத்தனத்தினால் சீரழிந்த சுபாவம் கொண்டவனும் தர்ம விஷயத்தில் குழம்பிய மனதுடையவனுமான நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால் எந்த செயல் உறுதியாக மேன்மை பயக்கக்கூடுமோ அதனை எனக்குச் சொல்லுங்கள் நான் உங்களுடைய சீடன். உங்களை சரணடைந்த எனக்கு அறிவுரை கூறுங்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

யுத்தம் செய்யலாமா? வேண்டாமா? தர்மத்தின் படி எது சிறந்தது என்ற குழப்பத்தில் இருக்கிறேன் எனக்கு சரியானது எதுவோ அதனை எனக்கு சொல்லி புரியவையுங்கள். நான் சீடனாக தற்போது நிற்கிறேன் குருவாக வந்து எனக்கு உபதேசியுங்கள். நான் உங்களை சரணடைகிறேன் என்று கிருஷ்ணரை சரணடைந்தான் அர்ஜூனன்.

இந்த சுலோகத்தின் ஒரு கேள்வி?

கிருஷ்ணரும் அர்ஜூனனும் நண்பர்கள் இந்த இடத்தில் ஏன் கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொண்டு தன்னை சீடன் என்று சொல்கிறான் அர்ஜூனன்?

கிருஷ்ணர் நண்பன் என்ற ஸ்தானத்தில் தர்மம் எது என்று அறிவுரை மட்டும் சொல்லி புரியவைப்பார். ஆனால் குருவாக ஏற்றுக் கொண்டால் குருவானவர் தர்மம் எது என்று அறிவுறை மட்டும் சொல்லாமல் அதனை ஏதேனும் ஒரு வகையில் உணர்த்தி புரிய வைப்பார். தான் உணர்ந்தால் மட்டுமே தெளிவுடைய முடியும் என்ற எண்ணத்தில் கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொண்டு சீடனாக சரணடைந்தான் அர்ஜூனன்.

சுலோகம் -53

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #6

நாம் அவர்களை வெற்றி கொள்வோமா? அல்லது நம்மை அவர்கள் வென்று விடுவார்களா? இவற்றுள் எது மேன்மை என்பது விளங்கவில்லை. யாரைக் கொன்று நாம் வாழக்கூட விரும்பவில்லையோ அவர்களே (திருதராஷ்டிர குமாரர்கள்) நம் முன்னே நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

யுத்தம் செய்வது நல்லது அதுவே மேன்மை என்ற முடிவுக்கு வந்து யுத்தம் செய்தால் அதில் நமக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பமடைகிறான் அர்ஜூனன். வெற்றி பெற்றால் உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று அதனால் பாவத்தை சேர்க்க வேண்டும் மேலும் அவர்கள் இல்லாத இந்த வாழ்க்கையில் இன்பமும் விரும்பமும் இருக்காது. இது எப்படி மேன்மை ஆகும் என்று எண்ணுகிறான். அது போல் யுத்தத்தில் தோற்று கொல்லப்பட்டால் அதர்மம் வெற்றி பெற்று விடும் அது எப்படி மேன்மை ஆகும் என்ற குழப்பத்தில் அர்ஜூனன் இருக்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 77

கேள்வி: கிரிவலம் செல்லும் போது செருப்பை அணிந்து கிரிவலம் செல்லலாமா? அன்றாடம் வீட்டில் காலையில் பூஜை செய்யும் போது வாயை மட்டும் கொப்பளித்து விட்டுத்தான் பூஜையில் அமரவேண்டுமா?

இறைவன் அருளால் மலை வலமாக இருக்கட்டும் ஆலயத்தின் ராஜகோபுரம் அல்லது ஆலயத்தின் எல்லையாக இருக்கட்டும் கூறப்போனால் இன்னும் பல இடங்களில் ஆலய கோபுரத்தை சுற்றியும் பாதரட்சைகளை (செருப்பு) மனிதர்கள் விடுகிறார்கள். இது மகாபெரிய தோஷத்தை ஏற்படுத்துவதாகும். இன்னும் கூறப்போனால் ஆலயம் செல்வதற்கு முன்பாகவே உடல் தூய்மை செய்துவிட்டு நீராடிவிட்டு மாற்று உடை அணிந்து செல்வதே மிகவும் சிறப்பு. ஆண்கள் மேலாடை இல்லாமல் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு. கட்டாயம் கிரிவலம் போன்ற இறைவழிபாட்டிலே பாதரட்சை (செருப்பு) அணியாமல் செல்வதே சிறப்பாகும்.
பாதரட்சை அணியாமல் செல்ல முடியவில்லை அதனால் சில துன்பங்கள் ஏற்படுகிறது என்றால் ஒன்று அதை சகித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செல்லாமல் இருப்பதே சிறப்பு. அடுத்ததாக உடல் சுத்தி என்பது மனிதனுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டது. உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு இறைவனை வணங்கினால் நன்மை உண்டு. தவிர்க்க முடியாத சூழலிலே இன்னவள் கூறியது போல் மேலெழுந்தவாரியாக சுத்தம் செய்து கொண்டு தாராளமாக இறைவனை வணங்கலாம். ஆனால் இதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்யாமல் இறை வழிபாடு செய்வதை நாங்கள் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

கேள்வி: ஜாதகத்தில் ராகு கேது போல் மாந்தி என்ற ஒன்று உள்ளதா?

மாந்தி இருக்கிறது. இன்னும் சில காலம் கழித்து இன்னும் பல கிரகங்கள் சேர்க்கப் போகிறார்கள். ஆனால் எத்தனை சேர்த்தாலும் அது ஒன்பதின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். சனியின் பலன்கள் அத்தனையும் மாந்திக்கும் பொருந்தும் என்பதால் மாந்தியை சேர்த்து பார்த்தாலும் தவறில்லை. அதை சேர்க்காவிட்டாலும் தவறில்லை.

சுலோகம் -52

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #5

மேன்மை பொருந்திய பெரியவர்களை கொல்வதை விட இவ்வுலகில் பிட்சை எடுப்பதால் கிடைக்கும் அன்னத்தை உண்பது சிறந்தது அல்லவா? இவர்களை கொன்ற பின்னர் அவர்களுடைய உடமைகள் அனைத்தும் அவர்களின் ரத்தத்தால் நனைந்திருக்கும். அதனை நாம் எவ்வாறு அவர்கள் இருந்த இடத்திலேயே நின்று அனுபவிக்க இயலும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சத்திரியர்கள் பிட்சை எடுத்து சாப்பிட்டு உடலை வளர்க்கக் கூடாது என்பது நியதி இவ்வாறு செய்வது இகழ்ச்சியான செயல். மேன்மை பொருந்திய பெரியவர்களை எதிர்த்து யுத்தம் செய்து அவர்களை கொல்வதை விட சத்திரிய தர்மத்தை விட்டு விட்டு பிட்சை எடுத்து உண்பது மேல் என்றும் யுத்தம் செய்து அவர்களை கொன்ற பிறகு அவர்கள் இருக்கும் இந்த மண்ணில் அவர்களின் ரத்தக் கறை படிந்து இருக்கும். இந்த இடத்தில் மகிழ்ச்சியாக எப்படி இருக்க முடியும் என்று அர்ஜூனன் தன் கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 76

கேள்வி: புலனடக்கம் குறித்து விளக்குகள் ஐயனே தாம்பதிய உறவை விட்டதால்தான் ஞானமார்க்கம் சித்திக்குமா?

அப்படியெல்லாம் நாங்கள் கூறவில்லை. இறைவன் அருளாலே ஒன்றை நன்றாக புரிந்து கொள். எது குற்றமாகிறது? எது தவறாகிறது? எது பாவமாகிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறர் மீது ஆதிக்கமும் பிறர் மனதையும் பிறர் உடலையும் பிறர் உடைமைகளையும் பாதிக்கும் வண்ணம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் போது பாவத்திற்குண்டான ஒரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லறம் நடத்துவது என்பது நேர்மையான முறையிலே ஒருவன் நடத்துகிற இல்லறம் கட்டாயம் இறைவனுக்கு எதிரானது அல்ல. ஆனால் தாரமாக இருந்தாலும் கூட உடலும் உள்ளமும் சோர்ந்திருக்கும் நிலையிலே அவளைக் கட்டாயப்படுத்தி நீ கூறிய அந்த நிலைக்கு ஆட்படுத்துவது ஒருவிதமான பாவத்திற்கு கணவனை ஆட்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. எங்கு கட்டாயம் இல்லாத நிலை இருக்கிறதோ எங்கு இயல்பாக அனைவரும் ஒத்துப் போகிறார்களோ அந்த உணர்வுகள் எதுவும் இறைவனுக்கு எதிரானது அல்ல.

சுலோகம் -51

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #4

அர்ஜூனன் கூறுகிறான். பகைவர்களை அழிப்பவனே மதுசூதனா நான் போர்க்களத்தில் எவ்வாறு அம்புகளினால் பாட்டனார் பீஷ்மரையும் ஆச்சாரியார் துரோணரையும் எதிர்த்துப் போரிடுவேன்? அவர்கள் இருவரும் பூஜிக்கத் தக்கவர்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பூஜிக்கத் தக்க பெரியவர்களை சொல்லால் கூட துச்சமாக நினைத்து பேசுவது பாவம் என்று சொல்லப்படுகின்ற போது அவர்கள் முன் எதிர்த்து நின்று அவர்களின் மீது கூரான அம்புகளை ஏவி எப்படி யுத்தம் புரிவேன்? இந்தப் பெரியவர்களை எதிர்த்து யுத்தம் செய் என்று எப்படிச் சொல்கிறாய்? இந்த பாவத்தை எப்படி நான் செய்வேன்? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 75

கேள்வி: சிறுநீரகங்களை இழக்காமல் அவற்றை செயல்பட செய்ய சித்த மருத்துவத்தில் வழி உள்ளதா?

அப்படியொரு மாற்று சிகிச்சை பெறவேண்டும் என்ற விதி இருக்கும் பொழுது அவன் எத்தனை பிராத்தனை செய்தாலும் அந்த சிகிச்சையிலிருந்து தப்பிப்பது கடினம். இருந்தாலும் கூட ஆதி நிலையிலே இருப்பவர்கள் முறையான தெய்வ வழிபாட்டையும் தர்மத்தையும் செய்வதோடு சந்திரனுக்கு உகந்த ஸ்தலங்களுக்கு சென்று முடிந்த வழிபாடுகள் செய்வது கூடுமானவரை மாற்று சிகிச்சையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இது போன்ற குறைகள் வருவதற்கு எத்தனையோ பாவங்கள் காரணமாக இருந்தாலும் முறையற்ற இடத்தையெல்லாம் மனிதன் ஆக்கிரமிப்பு செய்து அசுத்தப்படுத்துவதால்தான் இது போன்ற நோய்கள் மனிதனைப் பற்றுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தை அதற்கென்று ஒதுக்கிவிட்டால் அந்த இடத்தை அதற்கென்றுதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்யாமலும் மிக அநாகரீகமாக நடந்து கொள்வதும் குறிப்பாக புனித தீர்த்தம் ஆலயம் புண்ணிய நதிகளையெல்லாம் அசுத்தப்படுத்துகிறான். எல்லா வகையான தொழிற்சாலை கழிவுகளையும் புண்ணிய நதியில் கலக்கிறான். இப்படி பூமியை அசுத்தப்படுத்த அசுத்தப்படுத்த மனிதர்களின் உடலில் அசுத்தங்களை சுத்தப்படுத்தும் உறுப்புகள் செயலிழக்கத் துவங்கும். இதையும் சரி செய்து கொண்டால் மனிதனுக்கு இதுபோன்ற பிணிகள் வராமல் இருக்கும்.