திருதராஷ்டிரர் எதனால் கண் தெரியாமல் பிறந்தார்

குருசேஷத்திர போர் முடிந்தவுடன் திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம் நான் குருடனாக இருந்தபோதும் விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர். உனக்கு நான் ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்னால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன் என்றார்.

நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாக சமைப்பது அவரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான். அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்து கொடுத்து பரிசு பெறும் நோக்கில் அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது. அதன்படி அரண்மணை குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர் அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார். திருதராஷ்டிராரே இப்போது பதில் சொல்லுங்கள். அரசன் சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார் என்று கிருஷ்ணர் கேட்டார்.

ஒரு முறை வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து அவனுக்கு சாபமிட்டார். அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே. சமையல்காரன் பணம் பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன் தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரர்.

புன்னகைத்த கிருஷ்ணர் திருதராஷ்டிரரே நீங்களும் ஓர் அரசனாக இருந்து நியாயம் தவறாமல் மன்னன் செய்ததே தவறு எனக் கூறினீர்கள். அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அரசனாக அமர்த்தியது. நல்ல மனைவி நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. ஆனால் நான்சொன்ன கதை உன்னைப் பற்றியது தான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். அந்த அன்னங்கள் அதன் தாயார் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய். ஆனால் தினம் தினம் கண் இருந்து அதனை பார்த்தும் உனக்கு சைவ அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அதனாலேயே நீ கண் தெரியாதவனாய் பிறந்தாய். தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும் என்றார். தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்தார் திருதராஷ்டிரன்.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் காலை உதயத்தின் போது பிரம்மபுரீஸ்வரருக்கு சூரிய வழிபாடு நடைபெறும் காட்சி. இதுபோல் வருடத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து சூரிய வழிபாடு நடக்கும்.

தர்மம்

ஒருமுறை ஆதிசங்கரர் ஒரு ஊர் வழியாக சென்று கொண்டிருந்தார். ஒரு சின்னக் குட்டையில் தண்ணீர் குறைவாக இருந்ததினால் அதிலிருந்த மீன்கள் தண்ணீருக்காகப் பரிதவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த வழியாக தண்ணீர் எடுத்துக் கொண்டு போன கிராமத்து ஜனங்களிடம் மீன்களுக்காக கொஞ்சம் தண்ணீர் கேட்டார். அதற்கு ஊர்மக்கள் சாமி உனக்கு வேறு வேலை வெட்டி இல்லை என்று நினைக்கிறோம். பத்து வருடமாக எங்கள் ஊரில் தண்ணீரே இல்லை. நாங்கள் குடிப்பதற்காக எவ்வளவோ மைல் நடந்து போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறோம். நீ மீன்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறாயே அதெல்லாம் தர முடியாது என்றார்கள்.

தண்ணீர் எங்கே கிடைக்கும் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டு பத்து மைல் நடந்து போய் தன் கமண்டலத்தில் தண்ணீர் கொண்டு வந்து குட்டையில் கொட்டினார். அங்கே இருந்த மீன்கள் எல்லாம் தண்ணீரில் சந்தோஷமாக நீந்தின. உடனே இடி இடித்து மழை பெய்தது. இந்த மாதிரி ஒரு சிறிய தர்மத்திற்கே மழையை வரவழைக்க முடிகிறதே பத்து வருடமாக தண்ணீரே இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு தானதர்மம் செய்யத் தவறி விட்டீர்கள் என்றார்.

நீதி: எங்கு தான தர்மங்கள் சரியாக செய்யப்படுகறதோ அங்கு தண்ணீர் பஞ்சம் உணவு பஞ்சம் வராது.

பார்பரிகா

பார்பரிகா இவருக்கு காட்டுஜி பார்பரிகா என்ற பெயரும் உண்டு. இவர் பீமனின் மகன் கடோற்கஜனுக்கும் யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பர்பரிகன் மனிதனாக மறுபிறவி எடுத்தவன். குழந்தை பருவத்தில் இருந்தே மிகப்பெரிய போர் வீரனாக திகழ்ந்தான் மகாபாரத போரின் முன்பு போரை முடிக்க எத்தனை நாள் தேவைப்படும் என அனைத்து போர் வீரர்களிடமும் கிருஷ்ணர் கேட்டார். அனைவரும் சராசரியாக 15 முதல் 20 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர். பார்பரிகாவை கேட்ட போது தான் ஒரு நிமிடத்தில் போரை முடித்து விடுவதாக கூறினார். அனைவரும் அது எப்படி சாத்தியமாகும் என கேட்க கிருஷ்ணர் அவரிடம் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும். பதில் கூறுமாறு பார்பரிகாவிடம் கூறினார்.

சிவபெருமானால் தனக்கு வரமாக அளிக்கப்பட்ட மூன்று அம்புகளின் ரகசியத்தை பற்றி அவர் கூறினார். இந்த அம்புகளை கொண்டு ஒரு நிமிடத்தில் மகாபாரத போரை முடிவிடுவதாக பார்பரிகா கூறினார். பார்பரிகா சிவபெருமானின் தீவிர பக்தனாகவும் விளங்கினார். சிவபெருமானை குளிரச் செய்யும் நோக்கில் அவர் கடுமையான தவத்தில் ஈடுபட்டார். அதற்கு பலனாக மந்திர சக்தி அடங்கிய மூன்று அம்புகளை வரமாகவும் பெற்றார். முதல் அம்பு தான் அழிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளையும் முதலில் குறி வைக்கும் பின்பு மூன்றாம் அம்பை பயன்படுத்தும் போது குறியிட்ட அனைவரையும் அது அழித்து விட்டு மீண்டும் அவரின் அம்புக்கூட்டிற்குள் வந்து விடும். மூன்றாம் அம்பை தனியாக பயன் படுத்தினால் குறிப்பிடப்படாத அனைத்தையும் மொத்தமாக ஒரே அம்பில் அழித்து விடும். தான் காப்பாற்ற நினைக்கும் அனைத்து பொருட்களையும் மக்களையும் காப்பதற்கு இரண்டாம் அம்பு பயன்படும். அதனால் பார்பரிக்காவை தீன் பந்தரி மூன்று அம்புகளை கொண்டவன் என்று பெயர் பெற்றான்.

இந்த வரத்தை பற்றி கேட்ட கிருஷ்ணர் அனைவருக்கும் அவனது திறமையை காண்பிக்க முடிவெடுத்தார். அதனால் வெறும் மூன்று அம்புகளை கொண்டு பார்பரிகா போர் புரிவதை பற்றி கிண்டல் செய்த அவர் அவரின் சக்தியை வெளிப்படுத்த செயல்முறை விளக்கம் கேட்டார். கிருஷ்ணருடன் காட்டிற்கு சென்ற பார்பரிகா ஒரு மரத்தில் உள்ள அனைத்து இலைகளையும் எடுக்க முடிவெடுத்தார். பார்பரிகா கண்களை மூடிக்கொண்டிருந்த போது மரத்தில் இருந்து ஒரு இலையை எடுத்த கிருஷ்ணர் தன் பாதத்திற்கு அடியில் அதை மறைத்து வைத்துக் கொண்டார். இலைகளை குறி வைக்க முதல் அம்பை பார்பரிகா எய்திய போது அந்த மரத்தின் கடைசி இலையை குறிக்க வைக்க அது இருந்த இடமான கிருஷ்ணரின் பாதத்தை நோக்கி சென்றது. கிருஷ்ணர் தன் பாதத்தை தூக்கினார். உடனே அந்த இலையின் மீதும் குறி வைக்கப்பட்டது. அதன் பின் மூன்றாம் அம்பை எய்தியவுடன் அனைத்து இலைகளும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்தில் போடப்பட்டது. இதனை கண்ட அனைவரும் வியந்தனர். பார்பரிகா பெற்ற வரத்தின் போது சிவன் இரண்டு நிபந்தனைகள் விதித்தார். முதல் நிபந்தனை தன் சொந்த பகைக்காக இந்த அம்புகளை அவர் பயன்படுத்த கூடாது. இரண்டாம் நிபந்தனை போர்களத்தில் பலவீனமான பக்கத்தில் இருந்து சண்டை போடும் போதே இந்த அம்புகளைப் பயன்படுத்த வேண்டும். வெற்றி பெரும் பக்கத்தில் இருந்தால் இந்த அம்பை உபயோகிக்க கூடாது. இது தவிர எந்த அணி தோற்கின்ற நிலையில் உள்ளதோ அந்த அணியுடன் சேர்ந்து போர் புரிவது என்று தனது குருவுக்கு தட்சிணையாக வாக்குறுதி ஒன்றை அளித்திருக்கின்றான்.

பார்பரிகாவின் சக்தியை பார்த்த கிருஷ்ணர் குருஷேத்ர போரில் யாருக்கு ஆதரவாக சண்டை போடப்போவதாக எண்ணியிருக்கின்றாய் எனக்கேட்டார். கௌரவர்களிடம் பீஷ்மர் துரோணர் கிருபர் கர்ணன் என அதிரவர்கள் இருக்கின்றார்கள். படைபலமும் கௌரவர்களுக்கே அதிகமாக உள்ளது. கௌரவர்களை விட பாண்டவர்களே பலவீனமாக இருக்கின்றார்கள். எனவே பாண்டவர்கள் அணியில் இருந்து தான் போரிட போவதாக தெரிவித்தார். இதற்கு கிருஷ்ணர் பாண்டவர்களுடன் பார்பரிக்கா சேர்ந்து கொண்டால் தானாகவே அவர்கள் அணி வலுவடையும் சிறிது நேரத்தில் பாண்டவர்கள் வெற்றி அடையும் நிலைக்கு வருவார்கள். கௌரவர்கள் தோற்கும் நிலை அடைவார்கள். உன்னுடைய யுத்த நியதியின் படி தோற்கும் பக்கம் நின்று நீ யுத்தம் செய்ய வேண்டும். அதன்படி பின்பு நீ கௌரவர்கள் பக்கம் சேரவேண்டும். பின்பு கௌரவர்கள் வெற்றி அடையும் நிலைக்கு வருவார்கள். இப்படி நீ மாறி மாறி இரு அணிக்கும் போரிட்டுக்கொண்டே இருந்தால் இறுதியில் நீ மட்டும் தான் இருப்பாய் இரு அணியிலும் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். யுத்தம் வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்துவிடும் என கிருஷ்ணர் கூறினார். இதனால் பார்பரிகா குழப்பமடைந்தார். இந்த வரத்தின் நிபந்தனையை நிறைவேற்ற அவர் அணியை மாற்றிக்கொண்டே இருக்க நேரிடும். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றான்.

அப்போது கிருஷ்ணர் வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும் என்றார் கிருஷ்ணர். யார் அவன் சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன் என்றான் பார்பரிகா. உன் உறவினர்களுக்காகவும் போரின் முடிவுக்காகவும் உழைக்க எண்ணாமல் குருவிற்கு கொடுத்த தட்சணைபடியும் சிவபெருமான் விதித்த நிபந்தனைப்படியும் போர் செய்ய வேண்டும் என்று நினைத்த நீதான் அந்த ஆள் என்று அவன் தலையைக் கேட்டார் கிருஷ்ணர். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி அவனுக்கு வரம் ஒன்று கொடுக்க சித்தம் ஆனார். அவனோ தான் இறந்தாலும் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும் என்று வரம் கேட்டான். கிருஷ்ணரின் ஆசையை ஏற்றுக் கொண்ட பார்பரிக்க தன் தலையை துண்டித்துக் கொண்டார். இறப்பதற்கு முன்பு கிருஷ்ணரிடம் இருந்து ஒரு வரத்தை கேட்டார். அதாவது மகாபராத போரை தன் கண்களால் பார்க்க வேண்டும். அந்த வரத்தை அவருக்கு அளித்தார் கிருஷ்ணர். அவரின் தலையை மலையின் உச்சிக்கு எடுத்துக் சென்று வைத்தான் பீமன். அதனால் மகாபராத போர் முழுவதையும் கிருஷ்ணரின் அருளால் பார்பரிகா கண்டார். ராஜஸ்தானில் பார்பரிக்காவை காட்டு ஷ்யாம்ஜி யாக இன்றும் வணங்குகின்றனர்.

சோம்நாத் கோயில்

குஜராத் மாநிலத்தின் மேற்கு கரையில் பிரபாஸ் பட்டணம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது இந்த சோம்நாத் கோயில். இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பை பெற்றுள்ளது இக்கோயில். சோமநாதர் ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதிகாலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது. தனது 27 மனைவியரில் ரோஹினியிடம் மட்டுமே அளவு கடந்த பாசம் வைத்து மற்றவர்களை புறக்கணித்து வந்திருக்கிறான் சந்திரன். இதனால் கோபம் கொண்ட மற்ற 26 மகள்களின் தந்தையான தட்சப்பிரசாபதி என்பவர் சந்திரன் காச நோயால் அவதிப்படட்டும் என்று சபிக்கிறார். காச நோயினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தேய்ந்து வந்த சந்திரன் கடைசியாக இந்த திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக தோன்றிய சிவ லிங்கத்தை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான். இதன் காரணமாகவே சந்திரனின் பெயர்களுள் ஒன்றாக சோமன் என்கிற பெயரால் இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.

ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதான இக்கோயிலில் இருக்கும் சிவலிங்கமானது சூரியனை விட பிரகாசமானது என்றும் அது பூமிக்கடியில் மறைந்திருக்கிறது. அதேபோல கிருஷ்ண பகவான் அவதார முடிவிற்காக இந்த சோமநாதர் கோயில் அமைந்திருக்கும் பிரபாஸ பட்டினத்திற்கு வந்து வேடனின் அம்புக்கு இரையாகி தனது உயிரை விட்டிருக்கிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. உருவ வழிப்பாட்டை எதிர்த்த இஸ்லாமிய மன்னர்கள் பல முறை இக்கோயிலின் மீது படையெடுத்து வந்து அடியோடு அழித்திருக்கின்றனர். கி.பி. 1025 டிசம்பர் மாதம் கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன் ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று 20000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள் தங்கம் வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றான் கஜினி முகமது. பல முறை அழிக்கப்பட்டாலும் வரலாற்று காலம் நெடுகிலும் மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டு வந்திருக்கிறது இக்கோயில். முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னரால் இக்கோயில் சீரமைத்து கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் இறுதியாக சுதந்திர இந்தியாவில் அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் முன்னெடுப்பில் இப்போது நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இன்று நாம் பார்க்கும் சோமநாதர் கோயில் சாளுக்கியர் கட்டிடக்கலை அமைப்பின்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணர் ஏன் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணர் அந்த கீதையை உபதேசித்தது பற்றிய ஒரு சந்தேகத்தை அர்ஜுனன் கிருஷ்ணரிடம் எழுப்பினான். மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை சொல்ல ஏன் என்னை தேர்ந்தெடுத்தாய். பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். அண்ணன் யுதிஷ்டிரர் இருக்கிறார். ஐவரில் மூத்தவர் தர்ம நீதிகளை உணர்ந்தவர். அண்ணன் பீமன் மிகச் சிறந்த பக்திமான் பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இவர்களை விட்டு என்னை புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக தேர்ந்தேடுத்தது ஏன் என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டன்.

அர்ஜுனா நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. பீஷ்மர் அறங்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் உணர்ந்தவர். சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது கடைப்பிடித்தால் தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்று தெரிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும் போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். எண்ணம் சொல் செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. யுதிஷ்டிரர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர் தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. யுதிஷ்டிரர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும் கூட ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அதிகம்.

அர்ஜுனா நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. உன்னைவிட வயதான அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து அவர்களுக்காக நீ என்னிடம் வாதிடுகிறாய். போர்க்களத்திலே நின்றபோதும் உற்றார் உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய். அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும் களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்ய மனவலிமை தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இதெல்லாம் தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள் தனிச்சலுகை எதுவுமில்லை என்றார் கிருஷ்ணர். அர்ஜுனன் அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

பரமாத்மா

அந்தக் காலத்தில் புனித யாத்திரையாக கங்கையிலிருந்து காவடியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதருக்கு அபிஷேகம் செய்வார்கள். பின் ராமநாதபுரத்தின் கடற்கரை மண்ணை எடுத்துக் கொண்டு போய் காசியில் சேர்ப்பார்கள். ஏகநாதர் சில பிராமணர்களுடன் கங்கா ஜலத்தைக் காவடியில் எடுத்துக்கொண்டு ராமநாதபுர மாவட்டத்தை நோக்கி இரண்டாயிரம் மைல் வரை வந்து விட்டார். ராமநாதபுரம் இன்று மாதிரியே அந்த காலத்திலும் தண்ணீரில்லாமல் வெறும் மணல்வெளியாக பாலைவனமாகத்தான் இருந்தது. அங்கே ஒரு கழுதை வெயில் தாங்க முடியாமல் தண்ணீர் தாகத்துடன் தண்ணீருக்காக வாயை ஆ வென்று திறந்து கொண்டு மணலில் புரண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

ஏகநாதர் தன்னுடைய காவடியில் இருக்கிற கங்கா ஜலத்தை எடுத்து அந்தக் கழுதையின் வாயில் ஊற்றி கழுதையின் தாகத்தை தீர்த்து அதனை காப்பாற்றினார். அவருடன் வந்தவர்கள் நீ மகாபாவி எங்களுடைய கூட்டத்திலிருந்து உன்னை விலக்கப் போகிறோம். ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய அவ்வளவு தூரத்திலிருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை ஒரு கழுதைக்குக் கொடுத்து விட்டாயே என்று திட்டினார்கள். அதற்கு ஏகநாதர் உங்களுக்கு இன்னும் அஞ்ஞானம் போகவில்லை. நான் எந்த ராமநாதேஸ்வரரைத் தேடி வந்தேனோ அவர் நான்கு மைல் முன்னாலேயே வந்து என்னிடம் இருக்கிற கங்கைத் தீர்த்தத்தை வாங்கிக் குடித்தார் கடவுள் இல்லாத வஸ்து உலகத்தில் எதுவுமே இல்லை. உலகத்தில் உள்ள எல்லாமும் எல்லோரும் பரமாத்மாதான் என்றார்.

கிருஷ்ணர் கொடுத்த குறிப்பு

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போரிட்டனர். ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். இருபக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த உடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.

தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார் என நினைத்த யுதிஷ்டிரர் சமையர்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். அதன்படிதான் சமைப்போம் என்றனர். உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார். அதற்கு அவர் நான் தினமும் கிருஷ்ணருக்கு பாயாசம் வழங்கும் போது அதில் உள்ள முந்திரிப் பருப்பில் எத்தனை சாப்பிடுகிறார் என கவனிப்பேன். அதனை கணக்கில் கொண்டு அத்தனை வீரர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சமைக்கச் சொல்வேன். ஒவ்வொரு முந்திரி பருப்பிற்கும் ஆயிரம் வீரர்கள் என கணக்கிடுவேன். சில நேரம் கிருஷ்ணர் பாதிப் பங்கு கால் பங்கு முந்திரிப் பருப்பு கூட சாப்பிடுவது உண்டு என்றார். கிருஷ்ணர் தினமும் கொடுக்கும் குறிப்பையும் அதை உடுப்பி அரசர் கவனிக்கும் விதத்தையும் கேட்ட யுதிஷ்டிரர் தான் ஒரு நாள் கூட இதைக் கவனிக்கவில்லையே என நினைத்துக்கொண்டார்.

நீதி : கடவுள் ஒவ்வொரு நொடியும் குறிப்பு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். அதனை உணரும் போது வாழ்வின் காரியம் சாத்தியமாகும்.

பைரவர்

மகா பைரவர்கள் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட பைரவர்களாகவும் அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாக விளங்குகின்றனர்.

  1. ‪‎அசிதாங்க பைரவர்‬ அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர். இவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள் செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.
  2. ‪‎ருரு பைரவர்‬ அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஸ்வரி விளங்குகிறாள்.
  3. சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.
  4. குரோதன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.
  5. உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள் செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராஹி விளங்குகிறாள்.
  6. கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள் செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.
  7. பீஷண பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
  8. சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள் செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன. திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

மகாபாரதம் 18. சுவர்க்க ஆரோஹன பருவம் பகுதி -2

யுதிஷ்டிரன் தன் போக்கில் பேச்சை முடித்தவுடன் தர்மராஜன் யுதிஷ்டிரன் முன்னிலையில் தோன்றினார். யுதிஷ்டிரனுடைய தெய்விக தந்தையாகிய தர்மராஜார் வேண்டுமென்றே மூன்றாவது தடவையாக யுதிஷ்டிரனை பரிசோதனை செய்திருந்தார். அதிலும் யுதிஷ்டிரன் வெற்றி பெற்றான். தர்மராஜன் தோன்றியதும் அங்கு இருந்த காட்சி திடீரென்று மறைந்து நரகம் சொர்க்கமாக மாறியது. இது யுதிஷ்டிரனுக்காக வேண்டுமென்றே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வெறும் தோற்றம் ஆகும் தர்ம மார்க்கத்தில் இருந்து இம்மியளவும் பிசகாது இருந்த யுதிஷ்டிரனுக்கு இந்த கொடிய காட்சியானது சிறிது நேரத்திற்கு வேண்டுமென்றே காண்பிக்கப்பட்டது. நரக வேதனை என்ன என்பதை அறியாது இருந்தால் யுதிஷ்டிரன் வாழ்க்கையை பற்றிய அனுபவங்கள் பூர்த்தியடையாது. தான் வேண்டுமென்று செய்யாமலேயே துரோணருக்கு போர்க்களத்தில் சிறிது குழப்பத்தை உண்டு பண்ணி துரோணர் இறப்பதற்கு யுதிஷ்டிரனும் ஒரு காரணமாக இருந்தான். அறியாமல் செய்த குற்றத்திற்கு சிறிது நேரம் நரகத்தில் இருக்க வேண்டும் என்ற சிறு தண்டனை அவனுக்கு அளிக்கப்பட்டது.

ஒருவன் எவ்வளவு தான் தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்தாலும் அவர்கள் சிறிதேனும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருப்பார்கள். இந்த வகையில் பீஷ்மர் கர்ணன் பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் திரௌபதி யுதிஷ்டிரனும் சிறிது நேரம் தண்டனையை அனுபவித்தார்கள். சிறிது நேர நரக தண்டனை முடிந்ததும் இப்போது அவர்கள் இருந்த இடம் சொர்க்கமாக மாறி பேரின்பத்தில் வாழ்வார்கள். ஒருவன் எவ்வளவு தவறு செய்தாலும் அவன் சிறிது நன்மை செய்திருப்பான் அதன்படி துரியோதனன் செய்த சிறிது நன்மைக்காக சிறிது நேரம் சொர்கத்தில் வாழ்ந்தான். செய்த நன்மைக்கான பலன் சொர்க்கத்தில் முடிவடைந்ததும் அவன் இருந்த இடம் நரகமாக மாறியது. இப்போது அவன் செய்த தவறுக்கு நரகத்தில் அதற்கான தண்டனை அனுபவிப்பான்.

மண்ணுலகில் தர்மத்தை கடைபிடித்து தர்மன் என்று பெயர் பெற்ற யுதிஷ்டிரன் விண்ணகத்திலும் தர்மத்தை கடைபிடித்து தர்மராஜன் பெற்ற மகனாக விளங்கினார். யுதிஷ்டிரன் கடைபிடித்து வந்த தர்மத்தை சொர்க்கபதவியை காட்டியும் நரக வேதனை காட்டியும் அவனை கடைபிடிக்காமல் செய்ய இயலவில்லை. அனைத்து சோதனைகளிலும் அவன் வெற்றி பெற்று விண்ணுலகிலும் தர்மன் என்னும் பெயர் பெற்றான்.

யுதிஷ்டிரன் தேவலோகத்தில் இருந்த கங்கா நதியில் நீராடினான் அதன் விளைவாகத் விண்ணுலகிற்கு உரியவனான். அதன் பிறகு அவன் தனது சகோதரர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் உடன் பிறந்தவர்கள் திரௌபதியும் ஏற்கனவே விண்ணுலக வாசிகளான அவர்களோடு சேர்ந்த அவனது பேரானந்தம் பன்மடங்கு அதிகரித்தது. நெடுநாள் சொர்க்க பதவியை அனுபவித்தை பிறகு சிலர் பரம்பொருளில் இரண்டறக் கலந்தனர். வேறு சிலர் தங்கள் புண்ணிய கர்மாக்களை முடித்துக் கொள்ளுதல் பொருட்டு மீண்டும் மண்ணுலகில் பிறந்தனர்.

மகாபாரதம் முற்றியது.