இறைவனால் எழுதப்பெற்ற திருவாசகம்

மாணிக்கவாசகர் பாட இறைவனால் எழுதப்பெற்ற திருவாசகம் ஓலைச்சுவடி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் கனக சபையில் இருந்தது இந்த சுவடி நூலை யாரிடம் ஒப்படைப்பது என்ற பிரச்சனை வந்தது. ஒவ்வொருவரும் தாங்களே இந்நூலை வைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தனர். அப்பொழுது ஒரு அசரீரி கேட்டது. இந்நூலை நம் சிவகங்கையில் விடுங்கள். அது கங்கையை சுற்றியிருக்கும் யாரிடம் போய் சேருகின்றதோ அவரிடம் இருக்கட்டும் என்றது. அவ்வாறே அந்நூல் சிவகங்கையில் விடப்பட்டது. ஆத்ம சாதகரும் சிவநேசச்செல்வருமாகிய ஒரு பெரியவரிடம் அந்நூல் வந்து நின்றது. அவர் அந்நூலை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு சிவ பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டே வீட்டிற்கு சென்றார். அன்று முதல் அந்த இடம் ஸ்ரீ பாதபூஜை அம்பலத்தாடையார் மடம் என்று பெயர் பெற்றது. பெரியவர்க்கு பின் அவருடைய மடத்தின் வாரிசுகள் ஒருவர் பின் ஒருவராக திருவாசகத்திற்கு சிவபூஜை செய்து பாதுகாத்தனர்.

இச்சமயம் கர்னாடகா நவாப்கள் தமிழகம் மீது யுத்தம் தொடுத்தனர். கோவில்களும் மடங்களும் இடித்து நாசமாக்கப்பட்டன. யுத்தம் சிதம்பரம் வரை பரவியது. அப்பொழுது அம்பலத்தாடையார் மடத்தை பத்தாவது தலைமுறையாக ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் தலைமை வகித்து வந்தார். யுத்தம் பரவி வருவதும் கோவில்கள் இடிக்கப்பட்டு நாசமாக்கப்படும் செய்தியை கேள்விப்பட்டு அதிர்ந்தார். கண் கலங்கினார். இறைவனால் எழுதப்பட்ட தெய்வத் திருநூலுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று பயந்தார். பரம்பொருளிடம் சென்று அழுதார். உண்பதை விட்டு சிவபெருமானை நோக்கி சிவபஞ்சாட்சர தியானத்தினுள் ஆழ்ந்தார். நாட்கள் கடந்தன. யுத்தம் கடுமையாகியது. அழிவுச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன.

சுவாமிகள் சிவதியானத்தை தீவிரமாக்கினார். உலகியல் நினைப்பொழித்தார். திருவாசகத்தை காக்க வேண்டுமே என்ற ஒரே சிந்தனையில் இருந்தார். ஓம் சிவாய நம என்ற நாமத்தில் ஆழ்ந்திருந்தார். இறைவன் நாகலிங்க சுவாமிகளின் நெற்றிப்பொட்டில் பூரணமாய் பரிணமிக்கும் இடத்தை சுட்டி காட்டினார். இறைவன் சுட்டிக் காட்டிய இடம் புதுவை என்பதனைக் கண்டு மகிழ்ந்தார். ஆத்மசாதனைக்கு மிகவும் உகந்த இடமா புதுவை திருவாசகத்தை பாதுகக்க சரியான இடம் என்ற இறைவன் உத்தரவை கண்டு வியந்தார். இறைவன் கருணையை எண்ணி மகிழ்ந்தார். திருவாசகம் கொண்ட வெள்ளி பெட்டகத்தை பட்டுத் துணியால் மூடி சிரத்திலே சுமந்து தொண்டர்கள் இருவரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் புதுவைக்கு. புயலினின்றும் தப்பித்து கடலூர் வழியாக புதுவை வந்து சேர்ந்தார். புதுவையில் ஒரிடத்தில் சிறு குடில் அமைத்து திருவாசகப்
பெட்டகத்தை வைத்து சிவபூஜை செய்து வந்தார்.

ஆழ்ந்த சிவத்தியானத்தில் ஈடுபட்ட நாகலிங்க சுவாமிகளுக்கு சக்திகள் பெருகின. அவை சித்துக்களாக மாறின. அன்பர்கள் பலரும் சுவாமிகளை தேடி வந்து குறைகளைக் கூறி போக்கிக் கொண்டனர். சுவாமிகளின் பெருமைகளை பலரும் உணர்ந்தனர். இப்படியே பல ஆண்டுகள் கடந்தன. சுவாமிகள் இறைவனோடு கலக்கும் நாளை எதிர்ப்பார்த்திருந்தார். ஒருசமயம் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது அருகிலிருந்த பட்டத்து தம்பிரான் எதிர்கால நிகழ்ச்சியை சூசகமாக தெரிவிக்க சீடன் பக்குவ நிலைக்கு வந்திருப்பதை உணர்ந்து, அக்கணமே தமது 10 வது பட்டத்தை 11வது பட்டமாக சீடனுக்கு அளித்து பீடத்தில் அமர்த்தினார். அன்றிரவே தாம் இறைவனோடு கலக்கும் செய்தியை இறைவனின் திருக்குறிப்பின் மூலம் உணர்ந்தார். இரண்டாம் நாள் தெய்வீக நிலையிலேயே சென்றது. சுவாமிகள் மௌனத்தையே கடைப்பிடித்தார். தம் சீடர் செய்ய வேண்டிய முறைகளை மட்டும் விளக்கினார். மூன்றாம் நாள் சிவத்தோடு ஐக்கியமாகி ஜீவன் முக்தி பெற்றார்.

உலகம் உய்ய இறைவன் அருளிய திருவாசகத்தைப் போற்றி பாதுகாத்து புதுவைக்கு கொண்டு வந்த பெருமை ஸ்ரீ நாகலிங்க சுவாமிகளையே சாரும். சுவாமிகள் தங்கியிருந்த இடத்தினுள்ளே அவரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. சமாதி மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இத்தெய்வீக இடத்திற்கு அம்பலத்தாடையார் மடம் என்று பெயர். இம்மடம் அமைந்துள்ளதால் அத்தெருவிற்கு அம்பலத்தாடையார் மடத்து வீதி என்று பிரஞ்சு அரசு பெயர் சூட்டியுள்ளது. திருவாசகம் அமைந்த வெள்ளிப் பெட்டகம் அன்றாடம் பூஜிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் சிவராத்திரியன்று இரவு பெட்டகம் திறக்கப்பட்டு பூஜை செய்யப்படுகின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.