தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 24 மேலைத்திருமணச்சேரி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 24 வது தேவாரத்தலம் மேலைத்திருமணச்சேரி. புராணபெயர் எதிர்கொள்பாடி. மூலவர் ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர். அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை, மலர்க்குழல் நாயகி, மலர்குழல்மாது. மிகச்சிறிய திருமேனி சுகாசனத்தில் அம்பாள் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.தலமரம் கொடிமரம். தீர்த்தம் ஐராவததீர்த்தம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோவில் 3 நிலை கோபுரத்துடன் கிழக்கு நோக்கியுள்ளது. ராஜகோபுரம் பண்டைக் காலத்தில் மல்லப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. உள்பிராகாரத்தில் நால்வர், பிட்சாடனர், பாலகணபதி, நடராசர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, ராகு, துர்க்கை, கங்காவிசர்ஜனர் ஆகியோர் உள்ளனர். இக்கோவிலில் பிரம்மோற்ஸவம் கிடையாது. பரத முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. சுவாமி சன்னதியில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள். விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர் சந்நிதிகள் உள்ளன.

இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் உள்ள திருமணத்தலமான திருமணஞ்சேரியில் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை கோலத்தில் இக்கோவிலில் எழுந்தருள்வார். அவரை கோயில் அர்ச்சகர் தன்னை அம்பாளின் தந்தையாகப் பாவித்து பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார். மருமகனுக்குரிய நியாயமான சீரும் தருவார். இந்த உபசரிப்பை ஏற்றபின்பு சுவாமி திருமணஞ்சேரிக்கு மீண்டும் சென்று அம்பிகையை மணந்து கொள்வார்.

சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை சிவனை பூஜித்து துர்வாச முனிவர் பிராதமாக பெற்று கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அம்மலரை தன் வாகனமான ஐராவதத்தின் தலை மீது வைக்க அது அம்மலரை கீழே போட்டு தன் காலால் மிதித்து அம்மலரை அவமரியாதை செய்தது. இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். யானையும் பூமியில் பிறக்குமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க இந்திரனின் தலைக்கு வருவது தலைமுடியோடு போகும் என்று சாபவிமோசனம் தந்தார். துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் ஐராவதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும் இறைவியையும் வரவேற்க பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் எதிர்கொள்பாடி என அழைக்கப்பட்டது. தற்போது மேலக்கோயில் என்று அழைக்கிறார்கள்.

பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம் பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன் அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.

சுந்தரர் தனது பதிகத்தில் மதத்தையுடைய யானையின் மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே நீங்கள் இறந்தால் அப்போது உங்களோடு துணையாய் வருபவர்கள் இவர்களுள் ஒருவரும் இல்லை இறைவன் ஒருவனே உங்களுக்குத் துணையாய் வருவார் என்றும். இவ்வுலகில் பிறந்தோர்க்கு இறப்பும் ஒருநாள் உண்டு. அதற்கிடையில் வரும் இல்வாழ்க்கையும் துன்பம் தருவதே ஆகும். உலகியலில் உழன்று மாவடுவின் வடிவைக் கொண்ட கண்களையுடைய மாதரது மயக்கத்தில் மயங்காது இருக்கவும். மணம் நிறைந்த கூந்தலையுடைய மகளிரது வஞ்சனையையுடைய மனைவாழ்க்கையில் உள்ள ஆசையைத் துறந்து இருக்கவும். எக்காலத்திற்கும் நமக்குத் துணையாய் வருபவர் இறைவன் ஒருவனே என்றும் கூறி 10 பதிகம் பாடியுள்ளார். எதிர்கொள்பாடி இறைவனை வணங்கி தனது திருபதிகத்தின் 10 பாடல்களையும் பாடி வழிபடுபவர்கள் இறைவனின் திருவடியை அடைந்து வணங்கியிருப்பர் என்று சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 23 திருவேள்விக்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 23 வது தேவாரத்தலம் மூலவர் கௌதகேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர். இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் பரிமளசுகந்தநாயகி, கௌதகேசி, நறுஞ்சாந்து நாயகி. தீர்த்தம் கௌதகாபந்தன தீர்த்தம். மணவாளேஸ்வர சுவாமி திருமணக் கோலத்துடன் திகழ்கிறார். இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார். சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவிக்கு கங்கணதாரணம் செய்தபடியால் இதற்குக் கௌதுகாபந்தன க்ஷேத்திரம் என்றும் பெயர்.

கோவில் 3 நிலையுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களும் உடையதாய் திகழ்கிறது. கருவறைக்கு முன்னே அர்த்த மண்டம், மகாமண்டபம் உள்ளது. இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலாஉருவில் அம்பாளுக்கு வலதுபுறமும் இறைவனுக்கு இடதுபுறமும் உள்ளார். அர்த்த மண்டபத்தில் நடராஜர் மற்றும் விநாயகர் இருக்கின்றார்கள். அகத்தியருக்கும் இத்தலத்தில் அர்த்த மண்டபத்தில் தனி சந்நிதி இருக்கிறது.

அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி நின்ற திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டான். சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தார். சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தனது குஷ்டத்தை போக்கிகொண்டார். சிவன் தன்னில் ஒரு பகுதி பாகத்தை சக்திக்கு அளித்த தலம் இதுதான்.

ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற அம்பிகை திருவேள்விக்குடியின் அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக அவதாரம் செய்தாள். அவள் தன்னை திருமணம் செய்ய வேண்டி பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மண்ணில் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17வது திங்களில் ஈசன் மணவாளேஸ்வரர் ஆக தோன்றி அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். அதன்படி அம்பாளுக்கு கங்கணம் கட்டி வேள்விகள் செய்து பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் திருவேள்விக்குடி என அழைக்கப்பட்டது. தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள்.

அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது. செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவன் மணவாளநம்பி, மங்கலநக்கர், திருவேள்விக்குடி உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளார். திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 22 பொன்னூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 22 வது தேவாரத்தலம் பொன்னூர். புராணபெயர் திருஅன்னியூர். இத்தலத்திற்கு லிகுசாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம், பானுக்ஷேத்திரம் என வேறு பெயர்கள் உள்ளது. மூலவர் ஆபத்சகாயேசுவரர், லிகுசாரண்யேஸ்வரர், அக்னீசுவரர், பாண்டதவேசுவரர், ரதீசுவரர். இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். ஆண்டுதோறும் பங்குனி மாதம் 25 ஆம் தேதி முதல் 29 தேதி வரை 5 நாட்கள் காலையில் சூரியக் கதிர்கள் சுவாமி மீது விழுகிறது. இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் உள்ளார் எனவே இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது. பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் பிருகந்நாயகி, பெரியநாயகி. ஒரே மகாமண்டபத்தில் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமையப் பெற்றுள்ளது. தலமரம் எழுமிச்சை. தீர்த்தம் வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம். பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் அக்கினிக்குக் காட்சித் தந்த மூர்த்தி உள்ளார்.

கிழக்கு முகம் கொண்ட சிறிய ஆலயமாக திகழ்கிறது. இவ்வாலயத்திற்கு கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு தோரண வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலின் மேல் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. முகப்பு வாயிலுக்கு எதிரில் வருண தீர்த்தம் அக்னி தீர்த்தம் (இரண்டும் ஒன்று) உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ஒரு சிறிய விமானத்துடன் கூடிய நந்தி மண்டபமும் அதையடுத்து இறைவன் கருவறைக்குச் செல்லும் மற்றொரு நுழைவு வாயிலும் உள்ளன. இந்த இரண்டாவது நுழைவு வாயில் மேற்புரத்திலும் அழகிய சுதை வேலைப்பாடுகள் கொண்ட உருவங்கள் காணப்படுகின்றன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கருவறை முன் உள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் பிருஹந்நாயகி சந்நிதி உள்ளது. கருவறை அர்த்த மண்டபத்தில் விநாயகர் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை உள்ளனர். வள்ளி தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர் காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருகிறார். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். ஆதிசங்கரருக்கும் சன்னதி உள்ளது. இங்கு அருகருகே இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது.

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை வேண்டச் சென்றனர். அவர் யோகத்தில் இருந்ததால் மன்மதனின் உதவியால் அவரது யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவன் மன்மதனை திருக்குறுக்கை திருத்தலத்திலே எரித்து விட்டார். மனம் கலங்கிய ரதிதேவி சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். அவர் தகுந்த காலத்தில் மன்மதன் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்றார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். அவளுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்து ஈசன் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனுக்கு மீண்டும் வாழ்வு அளித்தார். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். கணவனை இழந்து வாடியிருந்த ரதியின் மீது இச்சை கொண்டான் சூரியன். பதிவிரதையான ரதியோ சூரியனின் வலக்கரம் பின்னமாக சாபமிடுகிறாள். மனம் வருந்திய சூரியனோ சாபவிமோசனம் பெற அன்னியூரை அடைந்து வழிபடுகின்றான். ஈசனது பேரருளால் சூரியன் தனது இழந்த கையை மீண்டும் பெற்று விமோசனம் பெற்றான்.

தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்டதால் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட அக்னிதேவன் தனது சாபம் தீர ஈசனை பல தலங்களில் வழிபட்டான். அதில் திரு அன்னியூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தன் பெயரில் தீர்த்தம் உண்டாக்கி ஈசனை இங்கு வழிபட்டுள்ளான். இத்தீர்த்தமே அக்னி தீர்த்தம் என்ற் பெயரில் ஆலயத்திற்கு வெளியே நுழைவாயிலுக்கு எதிரே உள்ளது. தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து ஆபத்சகாயரை வணங்கி வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார். சமஸ்கிருதத்தில் லிகுசாரண்ய மகாத்மியம் என்ற பெயரில் தலபுராணம் உள்ளது. அரிச்சந்திரன், வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர்கள் வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

This image has an empty alt attribute; its file name is image-37.jpeg

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 21 திருநீடூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 21 வது தேவாரத்தலம் திருநீடூர். மூலவர் சோமநாதர், அருள்சோமநாதேஸ்வரர், நிருத்தகானப்பிரியர், கானநிர்த்தனசங்கரர், பத்ரகாளீஸ்வரர், கற்கடேசுவரர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. அம்பாள் ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தரநாயகி, வேயுறுதோளியம்மை. அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார். எனவே இவளுக்கு ஆதித்ய அபயவராதம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. தலமரம் மகிழ மரம் தீர்த்தம் செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம் உட்பட 9 தீர்த்தங்கள் உள்ளது. மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது.

ஊழிக் காலத்திலும் இக்கோவில் அழியாமல் நீடித்திருக்கும் ஆகையால் நீடூர் என்று பெயர் பெற்றது. இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில் ரிஷபாரூடனர், முருகர், விநாயகர் ஆகியோரின் வண்ண சுதையாலான திருமேனிகள் உள்ளது. வாயிலைக் கடந்தவுடன் தலமரம் மகிழம் உள்ளது. நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் உள்ளது. இந்த ஆலயம் இரண்டு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. பிரகாரத்தில் சிவலோகநாதர், கைலாசநாதர், காசிவிஸ்வநாதர், ஆனந்த தாண்டவமூர்த்தி, சின்மயானந்த விநாயகர், முருகன், சப்தகன்னியர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. நடராஜர் சுதை வடிவில் தனியே இருக்கிறார். கருவறையின் கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, பிரம்மா, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கை உருவங்கள் உள்ளன. அம்பாளின் சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும் சனீஸ்வரரையும் தரிசிக்கலாம். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் விநாயகரே பெரியவர் பழையவர் புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர் செல்வமகா விநாயகர் சிவானந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர் இத்தலத்தில் சிவனை வழிபட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி தன்மசுதன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி சிவனை வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி கொடுத்து தனக்குள் ஐக்கியமாவதற்கு வசதியாக லிங்கத்தில் துளையை ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன் லிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான். நண்டு சென்ற துளை தற்போதும் லிங்கத்தில் இருக்கிறது. ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு கற்கடக பூஜை நடக்கிறது.

ஒருசமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோது சிவபூஜை செய்ய விரும்பினான். அருகில் லிங்கத்தை தேடியும் கிடைக்கவில்லை. எனவே காவிரி ஆற்றின் மணலை அள்ளி லிங்கமாக பிடித்து பூஜை செய்தான். பின் சிவனது நடன தரிசனம் வேண்டி ஒரு பாடலை பாடினான். மகிழ்ந்த சிவன் அவனுக்கு நடனக்காட்சி அருளினார். எனவே இவருக்கு கானநர்த்தன சங்கரன் என்றும் பெயர் உண்டு. பாடலுக்கு இறங்கி ஆடிய தேவர் என்பது இதன் பொருள். பூஜை முடிந்தபின்பு இந்திரன் லிங்கத்தை அப்படியே விட்டு சென்றுவிட்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. லிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம். கிருத யுகத்தில் இந்திரனும் திரேதா யுகத்தில் சூரியனும் துவாபர யுகத்தில் பத்திரகாளியும் கலியுகத்தில் நண்டும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்,

தன் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஈசன் அடியார்கட்கு உதவியும் பல்சுவை விருந்தளித்து வழித்தொண்டாற்றிய முனையடுவார் நாயனார் அவதரித்து தொண்டு செய்து முத்தி பெற்ற தலம். இங்கு முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது. வடமலை நாரணக்குடை மன்னர் என்பவரால் இயற்றப்பட்ட திருநீடூர் தல புராணம் 14 சருக்கம் 400 பாக்களுடன் மிக அரிய செய்திகளைக் கொண்டுள்ளது. சோழ மன்னர்களில் முதல் குலோத்துங்கன், இரண்டாம் ராசராஜன், மூன்றாம் ராசராஜன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன. முதற்குலோத்துங்கன் காலக் கல்வெட்டுப் பாடலால் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள உமையொடு நிலாவின பெருமானுக்கு மிழலை நாட்டு வேள்கண்டன் மாதவன் உத்தம விமானத்தை அமைத்த செய்திப் பெறப்படுகிறது. 3 வது ராசாதிராசன் காலத்திய கல்வெட்டில் இவ்வூர் ராஜசிகாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்திரன், சூரியன், காளி, நண்டு, சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர், திருநாவுக்கரசர் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியுடன் இணைத்துப் போற்றிப் பாடியுள்ளார். திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 20 திருப்புன்கூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 20 வது தேவாரத்தலம் திருப்புன்கூர். மூலவர் சிவலோகநாதர். மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும். சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார். புணுகு சட்டம் சார்த்தும் நாளில் மட்டும் கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம். அம்பாள் சொக்கநாயகி, சௌந்தர நாயகி. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அம்பாள சொக்கநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது. தலமரம் புங்க மரம். இந்த ஊர் புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் திருப்புன்கூர் என்றும் புங்க மரத்தடியின் கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால் திருப்புன்கூர் என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது. தீர்த்தம் ரிஷப தீர்த்தம். தேவேந்திர தீர்த்தம், நந்தனார் தீர்த்தம், கணபதி தீர்த்தம். இந்த கணபதி தீர்த்தம் விநாயகர் நந்தனாருக்காக வெட்டியதாகும்.

கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடனும் 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும் சுப்பிரமணியர் சந்நிதியும் தலமரமும் பிரம்மலிங்கமும் உள்ளன. கவசமிட்ட கொடிமரத்தையும் சற்று விலகியுள்ள பெரிய நந்தியை கடந்து சென்றால் உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் வண்ணச்சுதையில் பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர். துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால் உள்பிராகாரத்தில் இடப்பால் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி. சுந்தரவிநாயகர் சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர் பெரிய திருமேனியுடன் உள்ளார். அடுத்து சூரியன், அக்கினி வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக இருப்பதால் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாலை 8.30 மணிக்கு குவளை எடுத்துவிட்டு புனுகு சட்டம் சாத்தி வழிபடுகிறார்கள். சுவாமியை திருக்குவளை சாத்தியுள்ள நிலையில்தான் தினசரி பக்தர்களால் காணமுடியும். எல்லாக் கோயில்களிலும் நந்திக்கு நாக்கு இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு இருக்காது.

துவார பாலகர்கள் எல்லாக் கோயில்களிலும் நேராக இருப்பர். இங்கு தலை சாய்த்து இருக்கின்றார்கள். சுவாமியிடம் தரிசிக்க நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று இறைவனிடம் கூறியதால் இவ்வாறு அமைந்துள்ளளது. குளம் வெட்டிய பிள்ளையார் என்பவர் இங்கு பிரசித்தம். நந்தனாருக்காக அவர் சிவபெருமானை தரிசிக்கும் முன் குளித்து விட்டு வர வசதியாக இந்த பிள்ளையார் ஒரே இரவில் பூதங்களை கொண்டு குளம் வெட்டினார் என்பது வரலாறு.

மேல ஆதனூர் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார் மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. நாளை போகலாம் நாளை போகலாம் என்றே இருந்தார். அதனால் அவருக்கு திருநாளைப்போவார் என்ற பெயர் ஏற்பட்டது. ஒருநாள் சிதம்பரம் செல்கையில் திருப்புன்கூர் தலத்திற்கு வருகிறார். அப்போது அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால் கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது. கோயில் வாசலில் இருந்தபடியே எட்டி எட்டி உள்ளே பார்க்கிறார். சுவாமி தெரியவில்லை. முன்னால் இருக்கும் பெரிய நந்தி மறைத்துக் கொண்டிருந்தது. என்ன செய்வேன் இறைவா என்று மனமுருகுகிறார். மலைபோல் நந்தி படுத்திருக்கே என்று பாடுகிறார். துவார பாலகர்கள் மூலவரிடம் நந்தனார் வந்திருக்கிறார் என்று கூற சிவபெருமான் நந்தானாரின் பக்தியை மெச்சி தனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்தியை சற்றே விலகி இருக்குமாறு பணித்தார். இறைவன் சொல்படி நந்தி விலக இறைவன் நந்தனாருக்கு காட்சி தந்தார்.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அழகில் யார் சிறந்தவர் என்ற போட்டி வந்து விடுகிறது. போட்டி வரும் போது பூலோகத்தில் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு இருவரில் யார் உருவம் தோன்றுகினதோ அவரே அழகில் சிறந்தவர் என்று சுவாமி சொல்ல அதற்கு அம்பாள் சம்மதிக்கிறாள். அதன்படி சுவாமி தர்ப்பையை கீழே போட தர்ப்பை இந்த இடத்தில் கீழே விழுந்து பஞ்சலிங்கமாக ஆகிவிடுகிறது. அந்த பஞ்ச லிங்கங்கள் இங்கு உள்ளது.

ராசேந்திரசோழன் தன் நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதால் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபட்டால் மழை உண்டாகும் என்று கூறினார். மன்னனும் திருப்புன்கூர் வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர் அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி மழை வர செய்யுமாறு வேண்டினான். சுந்தரரும் மழை வரவழைத்தால் சுவாமிக்குப் பன்னிரு வேலி நிலமளிக்க வேண்டும் என்று மன்னனுக்கு கட்டளையிட்டு விட்டுப் பாடினார். மழை பெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை அதிமகா பெய்வதை கண்ட மன்னன் அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப் பார்த்து மழை போதும் என்று கூறினார். சுந்தரர் கோவிலுக்கு பன்னிருவேலி நிலம் கேட்டார். மன்னனும் உடனே தர சுந்தரரும் இறைவனை பாடினார் மழையும் நின்றது. ராஜேந்திர சோழன் கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளான். சுந்தரர் கோவிலுக்கு வந்த போது ஏயர்கோன் கலிக்காமர் நாயனாரும் உடன் வந்து இறைவனை வழிபட்டுள்ளார். இந்த வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

சிவபெருமான் திரிபுரத்தை எரித்தபோது அழியாமல் பிழைத்த அசுரர்கள் மூவரில் இருவரை தனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தார். மற்றொருவனை தான் நடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை இசைக்கும்படி அருள் செய்தார் என்ற வரலாற்றை சுந்தரர் தனது பாடலில் பாடி திரிபுர அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார். சுந்தரரின் பாடலில் உள்ள வரலாற்றுப்படி இக்கோவிலில் உள்ள நடராஜ சபையில் உள்ள நடராஜரின் பாதத்தில் தேவர் ஒருவர் தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை அடித்து இசை எழுப்புகின்றபடி அமர்ந்துள்ளார்.

இத்தலத்துக் கல்வெட்டுக்களில் இறைவனுடைய திருமஞ்சனத்திற்கும் திருப்பள்ளியெழுச்சிக்கும் பூமாலைகள் கட்டிச்சார்த்துதற்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் இவ்விறைவன் சிவலோகமுடைய நாயனார் என்று குறிக்கப்படுகின்றார். பிரமன், இந்திரன், அகத்தியர், சந்திரன், சூரியன், அக்கினி, பதஞ்சலி, வியாக்ரபாதர், சப்தகன்னியர், ஏயர்கோன் கலிக்காமர், ராசேந்திர சோழன் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 19 திருநின்றியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 19 வது தேவாரத்தலம் திருநின்றியூர். புராண பெயர் திரிநின்றவூர். மூலவர் மகாலட்சுமீசர், லக்ஷிமிபுரீஸ்வரர். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் லோகநாயகி, உலகநாயகி. தலமரம் விளாமரம், வில்வம். தீர்த்தம் லட்சுமி தீர்த்தம், நீலப்பொய்கை.

கோவில் 3 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தியும், கொடிமரத்து விநாயகரும் உள்ளார். வெளிப் பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதியுள்ளது. அனுஷம் நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அடுத்து பரசுராமர் வழிபட்ட லிங்கமும், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. அடுத்து நவக்கிரக சந்நிதியும், பைரவர், சந்திரன் உருவங்கள் ஒரு சந்நிதியிலும் உள்ளன. பிரகார வலம் முடித்து துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டு துவாரபாலகர்களைத் தொழுது உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதியும் வலதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கையில் நாகத்துடன் இருக்கிறான். சுவாமி தன் இடது கையால் அவனுக்கு அருள் செய்யும் கோலத்தில் இருக்கிறார்.

சிதம்பரம் நடராஜரை தினமும் தரிசித்து வந்த சோழ மன்னன் ஒருவன் இத்தலம் இருக்கும் ஊர் வழியாகவே சென்று திரும்புவான். ஒருசமயம் அவன் சிதம்பரம் சென்ற போது காவலாளிகள் கொண்டு வந்த விளக்கு திரி அணைந்து விட்டது. அதனை மீண்டும் எரிய வைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்தபோது திரி தானாகவே எரியத்துவங்கியது. இதைப் போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதற்கான காரணத்தை அவனால் கண்டறிய முடியவில்லை. ஒருசமயம் இப்பகுதியில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இடையனிடம் இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் ஏதேனும் நிகழுமா எனக்கேட்டான். அவர் ஓரிடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தில் பசு பால் சொரிவதாக கூறினான். மன்னனும் அவ்விடம் சென்றபோது சிவலிங்கத்தை கண்டார். அதனை வேறு இடத்தில் வைத்து கோயில் கட்டுவதற்காக தோண்டியபோது ரத்தம் வெளிப்பட்டது. பின் இங்கேயே கோயில் எழுப்பி வழிபட்டார். இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் கோடரி வெட்டிய தழும்பு இருப்பதைக் காணலாம். திரி அணைந்த தலம் என்பதால் திரிநின்றியூர் என்று பெயர் பெற்றது. நவக்கிரகத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி உள்ளார்கள்.

பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக இருக்கிறார். அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் ஜமதக்னீஸ்வரராக சிறிய பாண வடிவிலும் பரிக்கேஸ்வரர் பெரிய பாண வடிவிலும் அருகில் மகாவிஷ்ணுவும் இருக்கின்றனர். மகரிஷியான ஜமதக்னியின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை நீரில் கண்டு வியந்ததால் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமரிடம் கூறினார். பரசுராமனும் தாயை வெட்டினான். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று அவளை உயிர்ப்பித்தான். தாயைக்கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் அவன் வழிபட்டு மன அமைதி பெற்றான். ஜமதக்னியும் தான் அவசரத்தில் செய்த செயலுக்கு வருந்தி இங்கு சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிவன் இருவருக்கும் காட்சி தந்து அருள் செய்தார். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே இத்தலத்து சிவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோவில் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டனர். லட்சுமி, பரசுராமர், அகத்தியர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

சுந்தரரின் இரண்டு பதிகங்களில் 1 முதல் 7 பாடல்களே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 8, 9, 10 பாடல்கள் சிதைந்து போய் விட்டன. இப்பதிகத்தின் முதல் பாடலில் சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்ததைக் குறிப்பிடுகிறார்.

2 வது பாடலில் 4900 பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசருக்கும், சண்டேசுர நாயனாருக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் அருள் செய்ததை குறிப்பிடுகிறார்.

3 வது பாடலில் இத்தலத்தின் புராணத்தைக் குறிப்பிடுகிறார். பரசுராமர் தனக்கு காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க அவருக்கு தன் திருவடியை அளித்த இறைவன் என்று குறிப்பிடுகிறார்.

4 வது பாடலில் பசு ஒன்று தன் மடியாகிய கலசத்திலிருந்து பாலைச் சொரிந்து வழிபட்டு இறைவன் திருவடியை அடைந்ததைக் குறிப்பிடுகிறார்.

5 வது பாடலில் இத்தலத்திலுள்ள இறைவனை இந்திரன் வழிபட அவனுக்கு வான நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை வழங்கியதையும் அகத்தியருக்கு பொதியமலையில் வீற்றிருக்க அருள் புரிந்ததையும் குறிப்பிடுகிறார்.

7 வது பாடலில் துர்வாசர் சாபத்தால் காட்டு யானையாகி திரிந்த தேவலோக யானை ஐராவதம் இறைவனை வழிபட அதற்கு முன்பு இருந்த வடிவத்தையும் விண்ணலகம் அடையும் பேற்றையும் வழங்கியதைக் குறிப்பிடுகிறார்.

இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல மூன்று குளங்கள் உள்ளது. இத்தலத்து தீர்த்தத்தை நீலமலர் பொய்கை என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம் பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் தனது பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 18 கீழையூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 18 வது தேவாரத்தலம் கீழையூர். புராணபெயர் திருக்கடைமுடி, கிளுவையூர், கீழூர். மூலவர் கடைமுடிநாதர் அந்திசம்ரக்ஷணீஸ்வரர். அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள். தீர்த்தம் கருணாதீர்த்தம், தலமரம் கிளுவை. பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ் கிளுவைநாதர் இருக்கிறார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக சற்று உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறார். இவர் பதினாறு பட்டைகளுடன் சோடஷ லிங்க அமைப்பில் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தல கடைமுடிநாதர் பெயர் வடமொழியில் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்று பெயர். கடைமுடிநாதரை நாம் நமது ஆயுளின் கடைசி காலத்தில் அவரைப் பற்ற வேண்டும் என்றும் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்ற பெயர் நமது இறுதிக் காலத்தில் நம்மைக் காப்பவர் என்றும் பொருள். உலகம் அழியும் இறுதிக்காலத்திலும் காப்பாற்றுபவராக இங்கு சிவபெருமான் அருளுகிறார். எனவே இவருக்கு கடைமுடிநாதர் என்று பெயர்

கோவில் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது .ராஜகோபுரமில்லை. இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. ஏழு ஊர்கள் சேர்ந்து மிகப் பெரிய ஊராண இவ்வூர் ஏழூர் என்று பெயர் பெற்றிருந்தது. பின் மருவி கீழூர் ஆனது. மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது. இத்தலத்தில் காவிரி நதி வடக்கு முகமாக வந்து மேற்கு நோக்கி ஓடுகிறது. வந்தது. பிரகாரத்தில் உள்ள நவக்கிரகம் வலது புறம் திரும்பிய ஆவுடையார் மீது அமைந்திருக்கின்றன. எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் கிரகங்கள் ஒவ்வொன்றும் நேர்வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாகவும் அமைந்திருக்கின்றது. இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும் வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருக்கிறார். இங்கு அம்பாள் வரப்பிரசாதியாக இருக்கிறாள். தெற்கு நோக்கியிருக்கும் இவளது சன்னதி எதிரேயும் ஒரு வாசல் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியை தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர்.

ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்தில் இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழிபட்டார். இந்த பிரம்ம தீர்த்தம் ஆலயத்தின் நேர் எதிரில் அழகுற விசாலமாக அமைந்துள்ளது. மகிழ்ந்த சிவன் அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். பிரம்மா தனக்கு விமோசனம் கேட்டபோது தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என்று ஆறுதல் கூறினார். பின் பிரம்மாவின் வேண்டுதல்படியே அவர் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை கண்வ மகரிஷி இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வமஹான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு விளங்குகிறது. பிரமன், கண்வமகரிஷி ஆகியோர் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 17 குறுமாணக்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 17 வது தேவாரத்தலம் குறுமாணக்குடி. புராண பெயர் திருக்கண்ணார்கோயில். கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சஹஸ்ரநேத்ரேஸ்வரர். இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பாணம் சற்று உயரமாக உள்ளது. பெயருக்கேற்பத் திருமேனி முழுவதிலும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. அம்பாள் முருகுவளர்கோதை, சுகந்தகுந்தளாம்பிகை. தெற்கு நோக்கிய சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு வெளியே மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் உரிய கட்டமைப்பில் வடிக்கப்பட்டுள்ளன. தலமரம் சரக்கொன்றை. தீர்த்தம் இந்திர தீர்த்தம். மூலவர் மண்டபத்தில் சந்திரசேகர் திருமேனி உள்ளது. சுவாமிக்குத் தீபாராதனை செய்து அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து அதற்குப்பிறகே திருநீறு குங்குமம் வழங்கும் மரபு இக்கோயிலில் இருந்து வருகின்றது.

கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை. ஒரு கட்டைக்கோபுர வாயிலும் இரண்டு பிராகாரங்களும் உள்ளது. கோவிலுக்கு வெளியே எதிரில் இந்திர தீர்த்தம் உள்ளது. தீர்த்தக் கரையில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. கட்டைக்கோபுர வாயிலின் முகப்பின் மேல் ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் சுதை வடிவில் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. உள்நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் உள்ளது. வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. 2 வது வாயில் வழியே உள்ளே சென்றால் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி பலிபீடங்கள் உள்ளன. உள்மண்டபத்தில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியை அடுத்தாற்போல் சித்திவிநாயகர் சந்நிதி தனிக்கோயிலாகவுள்ளது. பிராகாரத்தில் நால்வரையடுத்து கன்னி விநாயகர் உள்ளார். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி உள்ளது. அதனால் எதிர் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தின் வலதுபுறம் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன.

மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் (குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி மாபலியிடம் சென்று மூன்றடி மண் கேட்டார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான். அப்போது வாமனர் திரிவிக்கிரம வடிவெடுத்து மண்ணை ஓர் அடியாலும் விண்ணை ஓர் அடியாலும் அளந்தார். மூன்றாவது அடியாக மாவலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறு மாண் வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக்கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்குக் குறு மாணக்குடி என்று பெயர் வந்தது.

தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே சென்ற சமயம் அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். இந்திரன் முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை பார்க்க சென்றான். இதற்குள் முனிவர் திரும்பி வர இந்திரன் பூனை வடிவமெடுத்தான். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் பெண்களுக்கான பெண் உறுப்பு உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன் சில கோவில்களில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். அக்கோவில்களில் குறுமாணக்குடி ஒன்று. இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட அவனது ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறி இறைவன் ஏற்றுக்கொண்டார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் கண்ணாயிரமுடையார் ஆனார்.

திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை. இத்தல இறைவனை வழிபடுபவர்கள் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர். இத்தல பதிகப் பாடல்கள் பத்தினாலும் இறைவனை போற்றி வழிபடுபவர்கள் தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் கூறியுள்ளார். திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 16 வைத்தீஸ்வரன் கோவில்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 16 வது தேவாரத்தலம் வைத்தீஸ்வரன் கோவில். புராணபெயர் திருப்புள்ளிருக்குவேளூர். புள் – சடாயு என்ற பறவையும், இருக்கு – ரிக் என்ற வேதமும் வேள் – முருகப்பெருமானும், ஊர் – சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்குவேளூர் என்று பெயர் வந்தது என்று புராண வரலாறு உள்ளது. மூலவர் வைத்தியநாதர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் தையல்நாயகி, தைல நாயகி. தலமரம் வேம்பு. தீர்த்தம் சித்தாமிர்த குளம். இத்தலத்தீர்த்தம் நோய் நீக்கும் ஆற்றல் உடையது. வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.

நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும் மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும் ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்கு காணப்படும் வேப்பமரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும். இந்த மரத்தினடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சந்நிதி. அடுத்து இடப்பால் சித்தாமிர்தகுளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவன் கோவிலை தரிசித்த பலன் கிடைக்கும். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத் தரும் என்கிறது புராணம். பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன் மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். பிறவிப்பிணி வைத்தியராகிய வைத்தியநாதப்பெருமான் தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும் அமிர்தசஞ்சீவியும் வில்வத்தடி மண்ணும் வைத்து 4448 வியாதிகளையும் தீர்க்கின்றார். இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது.

மூலவருக்கு முன் தங்கம் வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது. வீரபத்திரர், அண்ணபூரணி, தட்சினாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்காலம்மையாரும் உள்ளனர். ரிக் முதலிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும் சஹஸ்ரலிங்கமும் வரிசையாகவுள்ளன. முருகப் பெருமான் செல்வமுத்துக் குமாரசுவாமி என்னும் நாமத்துடன் அருள்கின்றார், சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேச பூஜைகள் சந்தன அபிஷேகம் நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குகின்றார்கள். மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன்(செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயிலின் கிழக்கே பைரவர் மேற்கே வீரபத்திரர் தெற்கே விநாயகர் வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர்.

தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு வருபவர்கள் உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர். 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு திருச்சாந்து எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும், செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும். இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு தவளை இருப்பதில்லை.

முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். ராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம். இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி ராமபிரான் இத்தலத்தில் சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தி என்ற வியாதியினால் பீடிக்கப்பெற்ற சித்திரசேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான். நவகிரக தலங்களில் அங்காரகன் தலமாகும் அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. செவ்வாய் கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. முருகர், சூரியன், ரிக் வேதம், அங்காரகன்(செவ்வாய்), ராமர், லட்சுமணன், அநுமான், ஜடாயு, சம்பாதி, பிரம்மன், சரஸ்வதி, லட்சுமி, துர்கை, பரசர், துருவாசர், சிவசன்மன் வணங்கியுள்ளனர், திருஞானசம்பந்தர், அப்பர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 15 திருக்கோலக்கா

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 15 வது தேவாரத்தலம் திருக்கோலக்கா. புராணபெயர் சப்தபுரி, திருத்தாளமுடையார் கோவில். மூலவர் சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் ஓசை கொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள். அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது. தலமரம் கொன்றை. தீர்த்தம் ஆனந்த தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிளார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசனம் உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம் நுழையும் போது நால்வர், அதிகார நந்தி சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன, நடராஜ சபை உள்ளது. திருஞானசம்பந்தர் பொன் தாளத்தை இரு கைகளிலும் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோயிலின் நுழைவு வாயிலிலேயே திருஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும் ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது.

சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று திருஞானசம்பந்தருக்காக இத்தலத்து இறைவன் திருஞானசம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் என்ற தாளங்களை கொடுத்து அருளினார். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் என பெயர் பெற்றார். இறைவன் கொடுத்த தாளங்களை தட்டிப்பார்த்தார் திருஞானசம்பந்தர். அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆகையால் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். திருஞானசம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தை இறைவன் அருள அதற்கு தெய்வீக ஓசையை இறைவி தந்து அருள் செய்த தலம் இதன்பொருட்டே இக்கோயில் திருத்தாளமுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது.

பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற மகிழ்ந்து கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள பொற்றாளம் கோயிலில் உள்ளது. அகத்தியர் கண்வர் வழிபட்டுள்ளனர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

Sapthapureeswarar Temple,Thirukolakka,Nagapattinam district ...