இறைவன் சாப்பிடும் நைவேத்யம்

சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். இறைவனுக்கு நாம் செய்யும் நைவேத்யத்தை அவர் சாப்பிட்டால் பாத்திரத்தில் சிறிதளவாவது காலியாகி விடவேண்டும் ஆனால் உணவு அப்படியே இருக்கிறது. நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினான். இதனை கேட்ட குரு பதில் எதுவும் சொல்லாமல் அவனை ஊடுருவி பார்த்துவிட்டு நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன் என்றார். பாடம் ஆரம்பித்த குரு அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட பூர்ணமிதம் எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார். அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். கேள்வி கேட்ட சிஷ்யனை அருகில் அழைத்தார் குரு. குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா என்று கேட்டார். முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே என்றான். எங்கே ஒரு முறை சொல் என்றார். கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தை கூறி முடித்தான். அனைத்தையும் கேட்ட குரு நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லை நான் கூறிய போது நீ எழுதிய சுவடியை காட்டு என்றார். பதட்டம் அடைந்த சிஷ்யன் சுவடியை எடுத்து காண்பித்தான். பிறகு குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் நீங்கள் சொல்லி சுவடியில் எழுயிருப்பதை போலவே கூறினேன் என்றான்.

இந்த சுவடியில் இருப்பதை படித்து உன் மனதில் உள்வாங்கினாய் என்றால் சுவடியில் மந்திரம் இருக்கிறதே சுவடியில் இருக்கும் மந்திரத்தை நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா என்றார். சிஷ்யன் குழப்பமாக பார்த்தான். குரு தொடர்ந்தார். உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. சுவடியில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ உள்வாங்கிய பின் சுவடியில் இருக்கும் மந்திரம் அளவில் குறையவில்லை. அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம் என்றார்.

கிருஷ்ண லீலை

ஒரு முறை அஞ்ஞாத வாசத்தில் பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்த பொழுது ஏகாதசி அன்று கிருஷ்ணர் நீண்ட நாட்களாக வரவேயில்லையே என்று எண்ணினாள். அவனுக்கு பிடித்த பால் பாயசத்தை செய்து ஏகாதசியான இன்று நைவேத்யம் செய்வோம் என்று சுவையான பால் பாயசத்தை செய்து தான் வழிபடும் கிருஷ்ண விக்ரஹத்திற்கு நைவேத்யம் செய்ய முற்படும் பொழுது குடிலின் வாயிலில் நின்று அத்தை என்று கிருஷ்ணர் கூப்பிட்டார். குந்திதேவி அந்த பாயச பாத்திரத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு என்று அன்போடு வரவேற்றார்.

அத்தை நீ என்னை நினைத்து பாயசம் வைத்தவுடன் வந்துவிட்டேன். பாயசத்தை விட உன் அன்பு என்னை இழுத்து வந்துவிட்டது என்றார் கிருஷ்ணர். உனக்காக செய்த பால் பாயசத்தை கொண்டு வருகிறேன் என்று கொண்டு வந்தாள். அனைவரும் எங்கை என குந்திதேவியிடம் கிருஷ்ணர் கேட்டார். அதற்கு கிருஷ்ணா அவரவர் வேலைகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்றாள். அரண்மனையில் இருக்க வேண்டியவர்கள் காட்டில் இருக்கின்றார்கள். இன்னும் சில காலம் தான் அத்தை எல்லாம் மாறும் என்றார். குந்திதேவி கர்ம வினையை அனுபவிக்கிறோம். எப்பொழுது நீ எங்களுடன் இருப்பதே எங்களுக்கு அரண்மனை வாழ்க்கை வாழ்வதுபோல் இங்கும் சந்தோஷமாக இருக்கிறோம். எதோ பேசி பாயசத்தை மறந்துவிட்டேன் இதோ ஒரு நிமிடம் என்று பாதி பாயசத்தை தனக்கும் தன் புதல்வர்களுக்கும் திரெளபதிக்கும் எடுத்து வைத்துவிட்டு மீதியை கிருஷ்ணருக்கு எடுத்து வந்தார் குந்திதேவி. கிருஷ்ண பரமாத்மா புன்சிரிப்புடன் அதை வாங்கி சுவைத்து குடித்து முடித்து ஆஹா என்ன சுவை அத்தை உன் கைவண்ணமே என்றும் சுவைதான். எனக்கு இன்னும் இதே அளவு வேண்டும் எனக் கேட்டார். தாய் என்கிற சாதாரண மானுட புத்தியால் குந்திதேவி செய்வதறியாமல் புதல்வர்களுக்கு பாயசம் இல்லையே என்று நினைத்துக் கொண்டே கிருஷ்ணரிடம் கொடுத்தாள். அதை வாங்கிய கிருஷ்ணர் கொடு என்று வேகமாக வாங்கி குடித்துவிட்டு இப்போதுதான் திருப்தியானேன் என்று கூறி மேலும் பல விஷயங்களை பேசிவிட்டு கிளம்பிவிட்டார்.

குந்திதேவி கிருஷ்ணா என் புதல்வர்களுக்கு ஒரு துளி பாயச பிரசாதம் கூட வைக்காமல் சென்று விட்டாயே. நான் எதேனும் தவறு செய்து விட்டேனா என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது உடனே தாமதிக்காமல் அசரீரி குரலில் வந்தது. அத்தை நீ எனக்கு பிடிக்கும் என்றுதானே பாயசம் செய்தாய். அதனால்தான் அவ்வளவு பாயசத்தையும் குடித்தேன். என்னுடையவர்களான உங்கள் 7 பேரையும் விடுவேனா. உள்ளே சென்று பார் நான் சாப்பிட்ட அதே பாத்திரத்திலும் தனியாக பீமனுக்கும் சேர்த்து வைத்திருக்கிறேன். இதுவும் என் லீலைதான் என்றது கிருஷ்ணரின் குரல் அசிரீரீயாக. இதைக்கேட்ட குந்திதேவி ஆனந்தக் கண்ணீருடன் பகவானே சாதாரண மனுஷியாக உன்னிடம் பாயசத்தை மறைத்தேன். என்னை மன்னித்துவிடு என்று கூறி உள்ளே சென்று பாயசத்தை எடுத்து கிருஷ்ணா என்று பருகினாள். பிறகு பஞ்ச பாண்டவர்களுக்கும் கொடுத்தாள். பீமனுக்கு ஒரே சந்தோஷம் தனி அண்டா பாயசத்தை ருசித்து சாப்பிட்டான்.

பெரியவாளின் சமையல் விளக்கம்

காஞ்சி பெரியவர் பக்தர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? அங்கிருந்த பக்தர்கள் சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம் அதுதான் வித்தியாசம் என்றார்கள். குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம் என்றார். இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னார்.

தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால் நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல் ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம். இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் தான் என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பங்கள் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை ஆனந்தம் அவைதான் பாயசம், மோர், பட்சணம், இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. உணவு அருந்துவதில் மோர்தான் கடைசி. அதன் பிறகு வேறு எதுவும் சாப்பிடுவது இல்லை. பரமாத்மாவைக் கலந்தபின் மேலே செல்ல ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்று பதில் சொன்னார் காஞ்சி பெரியவர்.

குழம்பு-குழப்பம்
தான்-அகங்காரம்
ரசம்-தெளிவு
பாயஸம்-இனிமை
மோர்-ஆனந்தம்

ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் பெற்ற சகாதேவன்

காட்டில் இருந்த பாண்டு மன்னன் தன் உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் மாறாக பிய்த்து தின்று விடும்படியும் அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ணர் வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் உங்களுக்கு என்ன ஆனது யாராவது பிணத்தை தின்பார்களா வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார். மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் விறகு எடுக்க சென்றதும் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது. அது மற்ற‌வர்கள் கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார். அவரருகில் சென்ற சகாதேவன் கிருஷ்ணரிடம் எல்லோரும் விறகை சுமந்து வந்தீர்கள். சகோதரர்கள் நால்வரும் க‌ளைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்து தானே வந்தது. நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய் என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான். எதிர்காலம் தேவ ரகசியம் என்றும் இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார். சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் எவரிடமும் சொல்லகூடாது என்று சகாதேவனிடம் சத்தியம் கிருஷ்ணர் வாங்கிக் கொள்கிறார். தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகி விட்டது.

துரியோதனன் பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க சகாதேவனும் நாளைக் குறித்துக் கொடுக்கிறான். அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான் கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது. இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று ஜோதிடத்தில் சற்று நம்பிக்கை இழக்கிறான். 18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படிகூறலாமா என்று கேட்கிறார். ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு என்று கேட்டார். இந்த பதிலைகேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் அனைத்தும் கடவுளின் பிடியில் மட்டுமே இருக்கும் என்பதை உணர்ந்தான். அடங்கியது அவன் கர்வம்.